கடலை, ‘சோ’, வாஞ்சி, ஆஷ், எதார்த்த சினிமா?,பிடித்தப் பாட்டு, வசனத்தில் கில்லாடி, கடவுளின் தைரியம்!
ஆண்கள் அடிக்கடி கடலை போடுதல் என்கிறார்களே, அது என்ன கடலை போடுதல்?
–சுரேகா, சென்னை.
தன்னிடம் நட்பு ரீதியாக பழகும் பெண்களிடம், பாலியல் ரீதியாக பழகவும், பேசவும் விரும்பம் இருந்தும், அதற்கு வாய்பில்லாதபோது, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சம்பந்தமில்லாமல் ‘அப்புறம்… அப்புறம்’ என்று எதையாவது பேசிக் கொண்டிருப்பதின் மூலம் அடைகிற கிளர்ச்சிக்கு, ஆண்கள் வைத்திருக்கிற பெயர் கடலை போடுதல்.
ஒரு பெண் சொல்லும் கருத்தில் தனக்கு உடன்பாடோ இல்லையோ… பலகாரத்தின் மேல் மொய்க்கிற ஈக்களைப் போல், ஆண்கள் கும்பலாக சுற்றி வந்து ‘ஆமாம்’ போடுவதும் இதன் பொருட்டே.
ஆண்கள், பெண்ணின் அறிவார்ந்த கருத்தை விடவும் அவளின் உருவத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
நல்ல அறிவும் ஆளுமையும் கொண்டு பார்ப்பதற்கு ‘பரிதாபத்திற்குரிய’ தோற்றத்தோடு இருந்தால், அந்தப் பெண்ணை ஆண்கள் பெண்ணாகவே கணக்கில் வைத்துக் கொள்வதில்லை.
அதற்கு ஆண்கள் வைத்திருக்கிற பதில், ‘என்னடா கொஞ்சமாவது சுமாரா இருக்க வேணாமா?’
ஆண்களின் இந்த உருவ வழிபாட்டை, தனக்கான ‘முக்கியத்துவத்துமாக’ கருதுகிற சில பெண்கள், தன்னைவிட அழகான பெண்களை தனக்கு தோழியாகவோ,துணையாகவோ உடன் கூட்டி செல்ல விரும்புவதில்லை.
கூட்டி சென்றால், அப்புறம் என்ன, தோழியை நாயகியாக்கி, நாயகியை தோழியாக்கிடுவாங்க, ‘ஆண்கள்’.
`உயர்ஜாதிக்காரர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டணையாக மொட்டை அடித்துவிடவேண்டும்’ என்பதுதான் மனுநீதி வகுத்த சட்டமாமே?
–திராவிடன், விழுப்புரம்.
அய்யோ… அப்போ நடிகர் ‘சோ’ மாதிரி ஆளுங்கள என்ன பண்றது?
முந்தைய இயக்குநர்களைவிடவும், இன்றைய இளம் இயக்குநர்களின் எதார்த்த திரைப்படங்கள் மிகவும் மேம்பட்ட நிலையில் இருப்பதாக நான் கருதுகிறேன்.
–கே.எஸ். சிவபாலன், திருநெல்வேலி.
பழைய, புதிய இயக்குநர்கள் அனைவருமே, சோற்றுக்குள் பூசிணிக்காயை அல்ல, இமயமலையையே மறைக்கிற அளவிற்கு பெரிய கில்லாடிகள்.
இந்திய, தமிழக கிராமங்கள் ஊரு வேறு சேரி வேறு என்ற பாகுபாட்டோடுதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்குள் குளம், பொது சுடுகாடு, கிணறு, ஊர் கோயில் இப்படி பொது தளங்களுக்குள் இன்றுவரை அனுமதிக்கப்படுவதில்லை. அதில் தங்களின் உரிமையைக் கோரினால், அவர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்த்தப்படுகிறது.
இப்படி ஒரு பிரம்மாண்ட யதார்த்தம் சீர்கேடாய் முன் நிற்க, நம்ம ‘டைர..டக்கர்கள்’ ஜாதி இந்துக்களின் குடியிருப்புகளான ஊரை மட்டுமே கிராமங்களாக காட்டுகிறார்கள். ‘சேரி’ என்று ஒன்று இருப்பது தங்களுக்கு தெரியாதது போல்தான் நடிக்கிறது அவர்களின் திரைக்கதை.
வட்டார வழக்குல வசனம் பேசறது, பொம்பளய விரட்டுறது, விபச்சாரம் செய்யறது, திருடறது, வப்பாட்டி வச்சிக்கிறது, சோறு திங்கறது, சொறிஞ்சிக்கறது, இதற்கிடையில் சுயஜாதி பெருமை பேசுறது, இதுதான் இவுங்க காட்டுற யதார்த்த சினிமா.
மற்றபடி ஊரும் சேரியுமாய் பிரம்மாண்டமாய் பிரிந்து இருக்கிற கிராமங்களை அப்படியே யதார்த்தமாக காட்டுற ‘தில்’லு ஒருத்தருக்கும் இல்ல.
கவியரசு கண்ணதாசனைப் பற்றிய உங்களின் மிக கடுமையான விமர்சனத்தை படித்திருக்கிறேன். அவர் பாடல்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடிக்காதப் பாடல் என்றால் எதை சொல்வீர்கள்?
–எஸ்தர் ராஜன், சென்னை
‘மயக்கமா.. கலக்கமா..’ இந்தப் பாட்டுதான் கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடிக்காதப் பாட்டு.
‘சக்கரவள்ளிக் கிழங்கே நீதான் சமஞ்சது எப்படி? ’ என்று ஒரு பெண்ணைப் பார்த்து, பாடல் எழுதிய வாலி, தன் இளம் வயதில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாராம்.
அப்போது, ‘மயக்கமா.. கலக்கமா..’ இந்தப் பாட்டு காதில் ஒலிக்க, தன்னுடைய தற்கொலை முடிவை மாத்திக்கிட்டாராம் வாலி. JUST MISS.
கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள். கடவுள் உங்கள் முன்பு வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?
–கே. தாமரை, விழுப்புரம்.
ஓ… கடவுளுக்கு அந்த அளவுக்கு தைரியம் இருக்கா?
அதுவும் பெரியார் தொண்டன் முன்னால வர அளவுக்கு…
காலம் கெட்டு போச்சுங்க.
வீரன் வாஞ்சிநாதன் வெள்ளைக்கார ஆஷ் துரையை சுட்டுக் கொன்று நூற்றாண்டு ஆகிறது. அந்த மாவீரன் வாஞ்சிநாதனை பற்றி?
–சுந்தரவடிவேலன். திருப்பூர்
வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ராபர்ட் வில்லியம் ஆஷை சுட்டுக்கொல்வதற்கு முன்பு வரை எந்தவகையான சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை.
இத்தனைக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வ.உ.சியும், சுப்பிரமணிய சிவாவும் மூட்டிய தீ திகு திகுவென்று எரிந்து கொண்டிருந்தபோது, அதில் ஒரு சுள்ளியை கூட எடுத்து போட்டவர் இல்லை வாஞ்சி.
ஆஷ் மீது வாஞ்சிநாதன் கொண்ட வெறுப்பு சுதந்திர தாகத்தால் ஏற்பட்டதல்ல. வருணாசிரம மோகத்தால் ஏற்பட்டது.
பார்ப்பன ஜாதி உயர்வுக்கும். அதை பாதுக்காக்கிற சனாதன தர்மத்திற்கும் எதிரானவர்களாக ஆங்கிலேயர்களை தவறாக புரிந்துகொண்டதால் ஏற்பட்ட கொலையும் தற்கொலையும் அது.
வெள்ளைக்காரர்கள், தாழ்த்தப்பட்ட மக்களிடம் தீண்டாமையை கடைபிடிக்காமல் ராணுவம், சமையல் (மாட்டுக்கறியும் சமைப்பது) போன்ற தங்கள் வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்டதால், அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம்தான், வாஞ்சிநாதன் போன்ற சனதனவாதிகளின் காழ்ப்புணர்ச்சிக்கும், கோபத்திற்கும் காரணம்.
இதை நிரூபிப்பதுபோல், ஆஷை 17-6-1911 அன்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் எழுதி வைத்திருந்த கடிதம், வாஞ்சியின் சனாதனத்திற்கு சாட்சியாக இருக்கிறது.
அதில்,
“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கி லேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.
எங்கள் ராமன், கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலிய வர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ(பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.
அவன் (ஜார்ஜ்) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொரு வரும் செய்ய வேண் டிய கடமை.
இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்”
‘கோ (பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு’ என்ற இந்த வரி, வாஞ்சிநாதனை சுதந்திர போராட்ட வீரனாக அல்ல, ஜாதி வெறியனாகத்தான் காட்டுகிறது.
வெள்ளைக்காரனை திட்டுவதற்குக்கூட, தாழ்த்தப்பட்டவரை (பஞ்சமன்) இழிவான குறியிடாக பயன்படுத்துகிற, புத்திக்குப் பேர்தான், விடுதலை உணர்வா? தாழ்த்தப்பட்டவர்கள் இந்தியர்கள் இல்லையா?
காந்தியை கோட்சே என்ன காரணத்திற்காக கொன்றானோ, அதுபோன்ற ஒரு காரணத்திற்காகத்தான் ஆஷை வாஞ்சிநாதன் கொன்றான்.
நல்ல ஏற்ற இறக்கத்தோடு, அழுத்தம் கொடுத்து வசனம் பேசுவதில் சிவாஜிக்கு நிகர் அவர்தான். அவருக்குப் பிறகு இன்றைக்கு அப்படி வசனம் பேசுவதில் கில்லாடி என்று யாரை சொல்லுவீர்கள்?
–மீனாட்சி
இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியனை.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூலை மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
http://ebook.thangamonline.com/july2011/
தொடர்புடையவை:
காதலர் தின வர்த்தகம்-விஜயகாந்த்-கமல்ஹாசன்-கிரிக்கெட்-தமிழ்சினிமாவின் ஆதிக்கஜாதி உணர்வு
சந்திரபாபு, பின்லேடன், ஜாதியா? வர்க்கமா? விக்ரம்,கே.வி. மகாதேவன்
பெரியார் எதிர்ப்பு, திரை இசை, மகேந்திரன், ரஜினி, விஜய், ‘சரோஜா’ கவுதம், மிஷ்கின், சானிடரி நாப்கின்
சிவாஜி-கமல்-சேரன்-இளையராஜா-எம்.எஸ்.வி-ராகுல் காந்தி
பானுமதியும் பாபாவும், பெண்களும் ஆண்களும், கொடிய மிருகம், சமச்சீர் கல்வி, வைரமுத்து
JUST MISS.சிரிப்பு தாங்கமுடியவில்லை.
வாஞ்சி அய்யரைப்பற்றிய புகழுரை சான்றுக்கு நன்றி!