`அப்பாவி’களின் Atrocity

‘சனாதனவாதிகள் அப்பாவிகள். யார் மீதும் தாக்குதல் நடத்த மாட்டார்கள். ஜாதி வெறிகொண்டு எந்த மக்கள் மீதும் வன்முறை செய்யமாட்டார்கள். சாதுக்கள்’
என ஜாதிய வன்முறைகள் நடக்கும்போது சனாதனவாதிகளை நியாயப்படுத்துகிற போக்கு பரவலாகப் பார்க்கமுடியும்.
நேரடியாக அவர்களின் அதிகாரத்தில் கைவைக்கும்வரை அப்பாவிகள்தான்.
ஆனால, உரிமைகளுக்காகக் கோபத்தோடு எதிர்நிலையில் அல்ல,
பணிவோடு, பக்தியோடு சனாதனத்தின் அதிகாரத்திற்குள் நுழைய முயற்சி செய்து பாருங்கள் அவர்களை விடப் பயங்கரவாதிகளை வரலாறு நெடுக பார்க்க முடியாது.
அப்படிதான் அப்பாவியாக நந்தன் சிதம்பரம் கோயிலுக்குள் நுழைய முயன்றான். அவனை உயிரோடு கொளுத்திவிட்டார்கள். அதற்கு அவர்கள் அன்போடு வைத்த பெயர் ஜோதியில் ஐக்கியமாவது.
அதற்கு சாட்கியாக இன்றும் சிதம்பரம் கோயிலில் நந்தன் நுழைந்த வாயில் பூட்டிக் கிடக்கிறது. அதற்குள் நுழைய முயன்றால், தீட்சிதர்களின் ‘அன்பான அப்பாவி’தனத்தை உணரலாம்.
ஜெய் ஸ்ரீ ராம் முழுக்கத்தின் முன்னோடி ஹே ராம். ஜெய் ஸ்ரீ ராம் முழுக்கவாதிகள்கூட இந்த நாடு ராமராஜ்யமாக அமையவேண்டும் எனச் சொன்னதில்லை.
நின்றால், நிமிர்ந்தால், உட்கார்ந்தால் ‘ஹே ராம்’ எனச் சொன்ன காந்திதான் ராமராஜ்யம் அமையவேண்டும் என்பதை தன் மூச்சாக முழங்கினார்.
சனாதனத்தின் தீவிர ஆதரவாளரான காந்தி, தன்னை அறியாமல், தன் வெகுஜன அரசியல் அணுகுமுறையால் காங்கிரஸிலிருந்த தீவிரவாத, மிதவாத சனாதன பேஷ்வா தலைமையை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தி ஒட்டுமொத்தமாக தன் தலைமையின் கீழ் கொண்டுவந்தார்.
அதனாலேயே சனாதன பேஷ்வாக்கள் ஒன்றுகூடி காந்தியைக் கொன்றார்கள்.
இந்தியாவில் மிக மோசமான குறைந்தபட்ச மனிதத் தன்மையற்ற ஆட்சி என ஒரே ஓரே ஆட்சி சொல்லவேண்டுமானால் மராட்டியத்தை ஆண்ட சனாதனவாதிகளான பேஷ்வாக்களின் ஆட்சி.
அதிகாரம் தங்கள் கையிலிருந்தால் சனாதனவாதிகள் என்ன செய்வார்கள் என்பதற்கு அது சாட்சி.
வரலாற்றில் தலித் மக்கள் மீது கொடுமையான ஒடுக்குமுறையைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஒரே ஆட்சி சனாதன பேஷ்வாக்களின் ஆட்சி.
தங்கள் அதிகாரத்தைப் பாதுகாக்கும் ஆச்சார சனாதனத்திற்கு ஆபத்து என்றால் எந்த எல்லைக்கும் செல்வார்கள் அந்த ‘அப்பாவிகள்’ என்பதற்கு வெள்ளைக்கார ஆஷ் கலெக்டரை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுக் கொண்ட வாஞ்சிநாதன் சாட்சி.
வாஞ்சிநாதனுக்கு எது சாட்சி?
“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத சனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயர்களை துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்’_வாஞ்சின் கடிதமே சாட்சி.
வெள்ளைக்காரன் என்பதால் ஆஷ் கொலைக்குத் தேசப்பற்று காரணமாகச் சொல்லமுடிந்தது. காந்தி கொலைக்கு?
அவர்கள் எதையும் செய்வார்கள்.
இந்தியாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மேல் அதிகாரமில்லை. அவர் மீதே ஒரு சனாதனவாதி காலணியை வீசியிருக்கிறான்.
மாண்புமிகு நீதியரசர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் நாம் அதைப் பொருட்படுத்தாமல் விடமுடியாது.
வீசியவன் மீது கடுமையான நடவடிக்கை தேவை.
மரியாதைக்குரிய மாண்புமிகு நீதியரசர் B.R. கவாய் அவர்களின் துணிச்சல் டாக்டர் B.R. அம்பேத்கரை நினைவூட்டுகிறது. அவரை பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
எச்சரிக்கை. நாம் நந்தனார் காலத்தைவிடவும் காந்தி காலத்தைவிடவும் மோசமான சனாதன சங்கிகள்காலத்தில் வாழ்கிறோம்-வே. மதிமாறன்.