தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை

ckmt054.jpg

புரட்சிக்கு முந்தைய சோவியத்தில் ‘ஸ்னேனியெ’ என்கிற புகழ்பெற்ற பதிப்பகம் மூடப்பட்டது. மேற்கத்திய இலக்கியம், ருஷ்ய இலக்கியம், பண்பாட்டின் வரலாறு இவை பற்றியெல்லாம் நிறையப் புத்தகங்கள் கொண்டு வந்த பதிப்பகம் அது. அந்தப் பதிப்பகம் மூடப்பட்டதில் மாக்சீம் கோர்க்கிக்கு மிகுந்த மனவருத்தம். மீண்டும் அதுபோல் ஒரு பதிப்பகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கோர்க்கிக்கு. “ஸ்னேனியெ” பதிப்பகம் மூடப்பட்டது குறித்தும், புது பதிப்பகத்தின் தேவைக் குறித்தும் வலியுறுத்தி, தலைவர் லெனினிடம் மாக்சீம் கோர்க்கி முறையிடுகிறார். அதற்குத் தலைவர் லெனின்:

இலக்கியத்தில் நல்ல எதார்த்தவாதியாக இருக்கிறீர்கள். மக்களைப் பற்றிய மதிப்பீட்டில் கற்பனாவாதியாக விளங்குகிறீர்கள். பருத்தப் புத்தகங்களை வெளியிட இது சமயம் அல்ல. பருத்தப் புத்தகங்களை ஆர்வத்துடன் படிப்பவர்கள் அறிவுஜீவிகள்தாம். அவர்களோ சோஷலிசத்திலிருந்து பின்வாங்கி மிதவாதத்தை நோக்கிச் செல்வதைக் காண்கிறோம். (தமிழ்நாட்டில் தன்னை “முன்னாள் எம்.எல்.” என்று சொல்லிக் கொள்கிற அறிவுஜீவிகள் எல்லாம் இப்போது காந்தியவாதியாக இருப்பதுபோல்) அவர்கள் தெரிந்தெடுத்துக் கொண்ட பாதையிலிருந்து அவர்களை நம்மால் அகற்ற முடியாது. நமக்குத் தேவையானைவை செய்திதாளும், துண்டு பிரசுரங்களும்தான்

1907 வாக்கில் கோர்க்கியிடம் தலைவர் லெனின் சொன்னது, இங்கே தமிழகத்தில் தந்தைபெரியாரின் காதுக்கு 1925 ல் வந்து சேர்ந்தது போலும். 1925 ல் ஆரம்பித்து 1973 வரை பெரியார் – 25 பைசவிற்கு, 50 பைசாவிற்கு, ஒரு ரூபாய்க்கு, இரண்டு ரூபாய்க்கு என்று நிறைய மலிவுப் பதிப்பில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய எளிய மக்களின் உயர்வுக்காக அந்த மக்களின் மொழி நடையினிலேயே புத்தகங்களை வெளியிட்டார். குடியரசு, விடுதலை, உண்மை என்று பத்திரிகைகளை நடத்தினார். பெரியாரின் இயல்பு லெனின் சொன்னதற்கு பொருத்தமாக இருந்தது.

periyar.png

பத்திரிகையின் பணி என்ன என்பதற்கான வரையறை தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார் நடத்திய பத்திரிகைகளே உதாரணம். அவரிடம் இந்த ‘நடுநிலை’ என்ற நாடகம் ஒரு போதும் இருந்ததில்லை. மதம், சாதி இவைகளின் இறுக்கமான பிடியிலிருந்து தமிழர்களை தளர்த்த தனது பத்திரிகைகளை பெரிதும் பயன்படுத்தினார் பெரியார்.

***

ன்னொரு புறம் சுதேசமித்தரன். இந்தப் பத்திரிகை அப்படியே பெரியார் பத்திரிகைகளுக்கு நேர் எதிர். பெரியார் ஒடுக்கப்பட்ட எளிய மக்களுக்காக பத்திரிகை நடத்தினார் என்றால், சுதேசமித்திரன் பார்ப்பன மேல் தட்டு வர்க்கத்திற்கான பத்திரிகை. இதன் ஒரே நோக்கம‘சுதந்திர தாகம்’.

இந்து பார்ப்பனத் தத்துவ அடிப்படையில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது. ஏகாதிபத்தியத்திற்கு மாற்று முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி. கேவலத்திற்கு மாற்று கழிசடை. இந்தப் பத்திரிகைக்கு பாரதியார் ஆசிரியராக இருந்திருக்கிறார் என்கிற ஒன்றே போதும் இதன் யோக்கியதையை புரிந்து கொள்ள. பெரியார் நடத்திய பத்திரிகைகளை விட மூத்தப் பத்திரிகை சுதேசமித்திரன். இந்த முற்போக்கு பார்ப்பனியப் பத்திரிகைகளைப் பற்றி நீதிக்கட்சித் தலைவர்களிலேயே போர் குணமிக்க தலைவரான டி.எம். நாயர் 7.10.1917 அன்று சென்னை ஸ்பர்டங் சாலை உரையில்,

தேசியத் தலைவர்கள் எல்லோருமே பார்ப்பனர்கள்தாம். அவர்களால் நடத்தப்படும் செய்திதாள்களில் ஆசிரியர்களும், அவற்றின் நிருபர்களும் பார்ப்பனர்களே. அவர்கள் தங்களின் சுயநல அரசியல் செல்வாக்கையும், தலைமையையும் வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களுடைய பொய், பித்தலாட்ட இந்து’ ‘சுதேசமித்திரன்’, ‘’பிரபஞமித்திரன்போன்ற சாக்கடைச் செய்தித்தாள்கள் பெரிதும் உதவுகின்றன. என்று சான்றிதழ் தந்திருக்கிறார்.

காலம் மாறியது. சுதேசமித்திரன் விருப்பப்படியும், பெரியாரின் கணிப்புப் படியும் முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி ஏற்பட ஆயத்தமானது.சுதேசமித்திரன் சிந்தனை, முதலாளித்துவ வடிவம் பெற்றது. அது தன்னிடம் இருந்த ஜோதியை, ராம்நாத் கோயாங்கா என்கிற ஒரு முதலாளிக்கும் பகிர்ந்து கொடுத்தது. அந்த முதலாளி சுதேசமித்திரன் சிந்தனைக்கு முதலாளித்துவ முலாம் பூசினார்.

பனியா முதலாளி. பார்ப்பன ஆசிரியர் குழு. இதோ தயாராகிவிட்டது, பார்ப்பன – பனியாவுக்கான ஒரு நடுநிலை நாளிதழ், தினமணி.

dinamani.jpg

***

அன்று சுதேசமித்திரன் கொடுத்த ஜோதி, அப்படியே இன்றும் பிரகாசிக்கிறது.1.8.2007 தேதியிட்ட தினமணியில் ‘சேது பந்தனம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை,

தென்னிந்தியர்களுக்கு காசி எவ்வளவு புனித ஸ்தலமோ, அவ்வாறே வட இந்தியர்களுக்கு ராமேஸ்வரம். ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள கோடியக்கரை, தனுஷ்கோடி, சேதுக்கரை, தேவிபட்டினம் போன்ற புனித இடங்களுக்கும் புதிய இடர் வரலாம். . . . . . . . . . . . . . . . . . .11-9-2001-ல் நியூயார்க்கில் வணிகவளாகத்தை அல் காய்தாக்கள் கொய்து விட்டனர். ஆப்கானிஸ்தான் பாமியானில் இயற்கையான பாறையில் குடைந்து செதுக்கப்பட்ட 60 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலையை தலிபான்கள் குண்டு வைத்துத் தகர்த்தார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை குறிப்பாகத் தமிழ்நாட்டில் பாரம்பரியப் பெருமையுள்ள ராமர்பாலம் () சேது அணையைத் தகர்க்கும் வளர்ச்சிப்பசிஉண்மையில் தலிபான் போர் வெறியைவிடக் கொடுமையாக உள்ளது. அந்தப் பரமபிதாவாகிய சேதுமாதவன் மகாவிஷ்ணுதான் மீண்டும் ஓர் அவதாரம் எடுத்து மன்னார்வளைகுடாவில் உள்ள சேது பந்தனத்தைக் காப்பாற்ற வேண்டும்.

இந்தக் கட்டுரையை எழுதியவரின் பெயர் ஆர்.எஸ். நாராயணன் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் உண்மையில் அவர் ஆர்.எஸ்.எஸ். நாராயணனாக இருக்கிறார்.எப்போதுமே பார்ப்பனர்கள் தங்கள் நலன் சார்ந்த அரசியலை நேரடியாக சொல்லமாட்டார்கள். நாட்டின் மீதும் மக்களின் மீதும் உள்ள அக்கறையில் சொல்வது போலவே நடிப்பார்கள்.

“இடஒதுக்கிட்டை வசதிப் படைத்த பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களுமே அனுபவிக்கிறார்கள். ஏழை தலித் புறக்கணிக்கப்படுகிறார்கள். அதனால் பொருளாதார ஓதுக்கீடே அவசியம்.” என்று பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பார்கள். அப்படித்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். நாராயணணும், ‘இயற்கை வேளாண்மை நிபுணர்’ என்கிற போர்வையில் இந்த ‘விஷ விதையை தூவி’ இருக்கிறார்.(இயற்கை ஆர்வலர் என்றால் சேது கால்வாய் திட்டம், சுற்று சூழலுக்கு பாதகமானது என்று மட்டும்தானே இவர் விளக்கி இருக்க வேண்டும்)

‘’ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் புத்தர் சிலையை தகர்த்தார்கள்’’ என்று வருத்தப்படுகிறார். அது இருக்கட்டும். இந்தியாவில் இருந்த புத்தர் சிலைகளைத் தகர்த்து யார்? உங்கப்பன் சேதுமாதவன்-மகாவிஷ்ணுவும் அவனுடைய குரங்கு கூட்டமும்தானே. இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை நாராயணனின் தனிப்பட்டக் கருத்துகள் அல்ல. அதுதான் தினமணியின் உள்ளார்ந்த உணர்வும்.”ராமர் பாலத்துக்கு ஆபத்து” என்று தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு ஜெயலலிதாவிற்கே பாயிண்ட் எடுத்து தந்துக் கொண்டிருக்கிறது, புவர் சர்குலேஷன்தினமணி.

***

1939 ஆம் ஆண்டு ஜுலை 8 ம் நாள் எ. வைத்தியநாத அய்யர் என்பவர் தாழ்த்தப்பட்டவர்களோடு மதுரை மீனாட்சி கோயிலுக்கு பிரவேசம் செய்தார், என்பதை “எங்க ஜாதிக்காரருக்கு ஜாதிய உணர்வே கிடையாது” என்று ஒரு ஜாதி வெறியன் பெருமைபடுவதைப் போல ‘உயர்ஜாதி பெருந்தன்மையாக’ ஆலயப் பிரவேசத்தைத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறது, 2007 ஜுலை 8ல் தினமணி. இதில் தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுனுள் நுழைந்தார்கள் என்பதைவிடவும், “அது ஒரு பிராமணர் தலைமையில் செய்யப்பட்டது” என்பதுதான் அந்த செய்திக்குத் தருகிற முக்கியத்துவத்தின் பின்னணி.

பார்ப்பன ஜாதி வெறிபிடித்த ராஜாஜியின் ஆலோசனையும் ஆதரவோடும்தான் இந்த ஆலயப் பிரவேசம் நடந்திருக்கிறது, என்ற ஒன்றே போதும் இதன் கபடத் தனத்தை புரிந்து கொள்ள. ஜெயேந்திரனையே கைது செய்தார் ஜெயலலிதா என்பதால், ஜெயலலிதாவை பார்ப்பன எதிர்ப்பாளராக எப்படி பார்க்க முடியாதோ? அதுபோல்தான் இந்த ஆலயப் பிரவேச மோசடியும்.சந்தடி சாக்கில் தினமணி இதுதான் முதல் அரிஜன ஆலயப் பிரவேசம் என்று இன்னொரு வரலாற்று திரிபையும் செய்திருக்கிறது..அய்யர்-அய்யங்கார்களின் கூட்டுத் தயாரிப்பான மதுரை மீனாட்சி ஆலயப் பிரவேசத்திற்குப் பத்தாண்டுகளுக்கும் முன்னாள், சுயமரியாதை இயக்கதின் ஆலயப் பிரவேசம் நடந்திருக்கிறது.

ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயில் தேவஸ்தான கமிட்டியின் தலைவராக இருந்த தந்தை பெரியார், 4-4-1929 அன்று “ஈசுவரன் கோயிலுனுள் தாழ்த்தப்பட்வரை அனுமதிக்க வேண்டும்” என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்று மாலையே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த அ. பொன்னம்பலனாரும், குத்தூசி குருசாமியும் – தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தோழர்கள் ஈரோடு கச்சேரி வீதி ஈசுவரன், மஞ்சைமேடு பசுபதி, கிருஷ்ணபாளையம் கருப்பன் ஆகியோரோடு கோயிலுனுள் நுழைந்தனர். ஆத்திரமுற்ற ஆதிக்க ஜாதியினர் அவர்களை கோயில் உள்ளேயே வைத்து பூட்டி விட்டனர்.

இரண்டு நாட்கள் கோயில் உள்ளேயேயிருந்த அவர்களுக்கு நாகமையார்தான் உணவு கொடுத்து அனுப்பியிருக்கிறார். வெளியூர் சென்றிருந்த பெரியார் திரும்பிய பிறகுதான் கோயில் சிறையில் இருந்து தோழர்கள் வெளியில் வந்தனர்.

1929 ல் தாழ்த்தப்பட்டவர்களோடு ஆலயப் பிரவேசம் செய்த குத்தூசி குருசாமி 1930 களில் இப்படி எழுதினார் : தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுடைய மனித உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்றால் முதலாவது தாங்களும் பொதுக்கோயில்களில் செல்ல வேண்டுமென்று நாம் வெகு நாட்களாகக் கருதியிருந்ததுண்டு. ஆனால் நாள் ஆக ஆக நமது அனுபவத்தில் இந்தக் கருத்து அவ்வளவு சரியாயிருப்பதாகத் தோன்றவில்லை. கோயில் பிரவேசம் செய்து விட்டதால் மாத்திரம் எல்லா விஷயங்களிலும் தீண்டாமைஒழிந்து விடும் என்பது பிழையென்பதையும் உணர வேண்டும். இவ்வுண்மையை டாக்டர் அம்பேத்கர் பல தடவைகளில் எடுத்துரைத்திருக்கிறார்.”

(குருவிக்கரம்பை வேலு எழுதிய குத்தூசி குருசாமி என்ற நூலில்)

***

ர்ணன்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. துரியோதனனின் அரசவைக்கு வர இருக்கிற கிருஷ்ணனுக்கு ‘யாரும் எழுந்து மரியாதை செய்யக் கூடாது’ என்பது மன்னன் துரியோதனனின் உத்தரவு. அப்படியிருந்தும் கிருஷ்ணனின் வருகையின்போது ‘விதுரன்’ எழுந்து மரியாதை செய்வது மட்டுமல்லாமல், கிருஷ்ணனை ஆதரித்தும் பேசுவார். உடனே துரியோதன், விதுரனைப் பார்த்துக் கோபத்துடன், “சிற்றப்பா, உடன் பிறந்த வியாதி நீ” என்பான். இந்த வசனத்தை கேட்கும் போதெல்லாம் எனக்கு இரா.செழியன் ஞாபகத்திற்கு வந்து விடுவார். இரா.செழியன் பற்றிய செய்திகளைப் பார்க்கும் பொதெல்லாம் இந்த வசனம் ஞாபகம் வந்து விடும்.

பின்னாட்களில் தேசிய கட்சிகளில் போய் சேர்ந்து கொண்டாலும், பழைய திராவிட இயக்கத் தலைவர் என்கிற காலி பெருங்காய டப்பாவை வைத்துக் கொண்டுதான் மீதி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார் செழியன். திராவிட இயக்கம் என்பதற்காக மட்டுமே திமுகவையும், கலைஞரையும் எதிர்க்கிற சோ போன்ற கழிசடைகள் – செழியனை, கலைஞருக்கு எதிரான ஒரு திராவிட இயக்க துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் போதெல்லாம் – “சிறந்த நாடாளுமன்றவாதி, நாணயமானவர், நேர்மையாளர்” என்றெல்லாம் புகழ்வார்கள்.நாணயம், நேர்மை என்பது ஊழல் இல்லாமல் வாழ்வதில் மட்டுமில்லை. தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதிலும்தான் இருக்கிறது. சோ, சுப்பிரமணிய சாமி மற்றும் திராவிட இயக்க எதிர்ப்பு கழிசைடகளோடு சேர்ந்து கொண்ட, திராவிட இயக்க எதிர்ப்பாளரான ‘விதுரன்’ செழியனுக்கு குறைந்தபட்ச நாணயம் கூட இல்லை என்பதுதான் உண்மை.

சொல்லவும் வேண்டுமோ? திமுகவிற்கு எதிர்ப்பு என்றால் அவர் தினமணிக்கு நண்பர் என்பதையும். செழியன் சேவையையும் மரியாதையோடு பயன்படுத்திக் கொள்கிறது நமது ‘நடுநிலை நாளேடு’. பொதுவாக அனைத்துக் கட்சி தலைவர்கள் பிரமுகர்கள் பற்றியான செய்திகளில் அவர்களின் அறிகைகள் பேட்டிகளின் மேல், தினமணி தன் கருத்தை நுழைத்து வெளியிடுவதில்லை. அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்களோ அப்படியே வெளியிட்டு விடுகிறது.ஆனால் கலைஞர், மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனமொழி இவர்களின் பேட்டியில், அறிக்கையில் இவர்களைப் பற்றியான செய்திகளில் தினமணி தன் ‘கருத்தின்’ பின்னணியில் இருந்துதான் செய்திகளை பிரசுரிக்கிறது.

சூசகமாகத் தெரிவித்தார்

என்று ஜுனியர் விகடன் போன்ற கிசு கிசு பத்திரிகைகளின் பாணியில்தான் கலைஞரின் அறிக்கையை, பேட்டியையே வெளியிடுகிறது.

அழகிரிக்கு கட்சிப் பதவி

தமது மகன் மு.க.அழகிரிக்கு கட்சியில் என்ன பொறுப்பு வேண்டுமானலும் தரத் தயார் என்று திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி சூசகமாகத் தெரிவித்தார். (தினமணி ஜுன் 30) ஆனால் உண்மை அதுவல்ல, “மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணியின் மகத்தான வெற்றிக்கு முழுமுதற் காரணமாக அழகிரி இருந்தார். என்று கூட்டணியில் உள்ள அனைவரும் கூறுகிறார்கள். அவரைப் பாராட்டும் வகையில் கட்சியில் அவருக்கு பொறுப்பு தரப்படுமா?” என நிருபர்கள் கேட்டனர். “அவருக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள்” என சிரித்தபடியே கூறினார். (தினமணி ஜுன் 30) இதைதான் தனக்கே உரிய தந்திரத்தோடு பிரசுரித்துள்ளது ‘டெய்லி டூப்.’

மீண்டும் ஸ்டாலின்அழகிரி பனிப்போர்

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும், மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த காலத்தில் ஏற்பட்டு, மறைந்துபோன பனிப்போர் தற்போது மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இது எந்த அளவுக்கு பெரியதாகும் என்பது விரைவில் நடைபெறஉள்ள கட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களின்போது தெரிய வரும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன” (தினமணி ஜுன் 30) என்று செய்தி பத்திரிகைகளுக்குரிய மரபை மீறி, தன் விருப்பத்தையே செய்தியாக வெளியிட்டுயிருக்கிறது ‘தகுதி-திறமை’

சத்தியமூர்த்தி பவன் செல்கிறார் கருணாநிதி

எந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தமது இளமைப் பருவத்தில் கொடி பிடித்து, கோஷமிட்டு தமது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டாரோ அந்தக் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு முதல் முறையாகச் செல்கிறார் முதல்வர் கருணாநிதி” (தினமணி ஆகஸ்ட் 4) பாராம்பரியமிக்க திமுக தொண்டரை போல் கவலைப்படுகிறது ‘நடுநிலை’. கலைஞர் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறாக பி.ஜே.பி. போன்ற மதவாதக் கட்சியோடு கூட்டணி வைத்தபோது கவலைப்படாமல் இப்போது கவலைப்படுகிறது. “பாவம் அந்த ஆடு நனையுது” என்கிற பாணியில்.

சொல்லட்டும் பார்க்கலாம்

தேவைப்படும் நேரத்தில் முதல்வரிடம் இருந்து பொறுப்புகளை ஏற்கத் தயாராக இருப்பதாக சூசகமாகத் தெரிவித்தார் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்” (தினமணி ஜுலை 5)ஆனால் உண்மை அப்பிடியில்லை.“முதல்வரிடமிருந்து பணிச்சுமையை எப்போது ஏற்றுக் கொள்ளப் போகறீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்ட்டது. (நிருபர்கள்) “முதல்வர் இதுவரை சுமை என்று சொல்லவில்லை. அவர் தனது சுமை பற்றிக் கவலைப்பட்டுக் கேட்கட்டும். அதற்குப் பிறகு பதில் சொல்கிறேன்” என்று கூறினார் ஸ்டாலின். (தினமணி ஜுலை 5) இந்தச் செய்தியைதான் தனக்கே உரிய ‘தகுதி-திறமையோடு’ பிரசுரித்திருக்கிறது புவர் சர்குலேசன் தினமணி.

கலைஞரையும் ஸ்டாலினையும் பற்றி திட்டமிட்டு குதர்க்கமாக செய்தி வெளியிடும் தினமணிக்கு தமிழ் நாட்டின் மிகப் பெரிய மக்கள் தலைவர்கள் யார் தெரியுமா? இல.கணேசன், ராம.கோபாலன், ப.சிதம்பரம். இவர்களைப் பற்றி மிகவும் கண்ணியமான முறையில்தான் செய்திகள் பிரசுரிக்கப்படுகிறது. ஆனாலும் மூணு பேருக்கு மட்டுமே தலைவரா இருக்கிற இந்த கணேசனுக்கு ‘நடுநிலை’ கொடுக்கிற பில்டப் ரொம்ப ஓவர். திருநாவுக்கரசுன்னு ஒரு நபர் அதே கணேசன் கட்சியில் (பா.ஜ.க) தலைவரா இருப்பது ‘நடுநிலைக்கு’ தெரியாது போலும்.சரி – இல.கணேசன், ராம.கோபாலன் இவர்களுக்கு தினமணி முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தினமணியின் ஜென்ம விரோதியான பிரதிபா பாட்டிலை ஆதரிக்கிற காங்கிரஸ்காரர் ப.சிதம்பரத்தை மட்டும் மிகப் பெரிய தேசப் பக்தராக சித்தரிக்கிறதே என்ன காரணம்? ஆமாமம், அதற்குக் காரணம் தினமணியின் நடுநிலைதான். பார்ப்பன-பனியாவுக்கான நடுநிலை.

***

“அதெல்லாம் சரிதான். தினமணியால் நாட்டுக்கு ஒரு நல்லது கூடவா இல்லை?” என்று நீங்கள் அலுத்துக் கொள்ளலாம். ஒரே ஒரு நன்மையிருக்கிறது. பரவலாக அந்தப் பத்திரிகை கடைகளில் கிடைப்பது இல்லை. புவர் சர்குலேசன்.

கருஞ்சட்டைத் தமிழர்செப்டம்பர் 2007 இதழுக்காக எழுதியது.

8 thoughts on “தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை

  1. வலையுலகிற்க்கு தங்களை வரவேற்கிறேன். வெகு அருமையான கட்டுரை. தினமணியின் பார்ப்பன் கொழுப்பெடுத்த குசும்புகளை நன்றாக அம்பலப்படுத்தியுள்ளது கட்டுரை. வாழ்த்துக்கள்.

    அசுரன்

  2. இந்தி பேசும் OBC ‘தமிழர்கள்’!!!!

    பார்ப்பான் ன்னு சொல்லறவங்க இந்தி ஜாதிகளுக்கு தமிழகத்துல இடஒதுக்கீடு கொடுக்கறத நியாப்படுத்தறாங்க!!!

    தமிழ் நாட்டுல பீஹார் போன்ற மாழிலத்திலிந்து சாலை போன்ற பணிக்கு வந்து பெருகிவறாங்க..

    பார்ப்பான் பார்ப்பான் கூவுற நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக இந்தி இந்திக்காரங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கறது …அதுக்கு என்ன சொல்லுவீங்க!!!

    தமிழ் பேசற பார்ப்பான் இல்லேனா தமிழ்நாடு நல்லா இருக்கும் சொல்லிறீங்க….இந்தி பேசுறவங்க வந்தா தமிழ்நாடு உருப்பிடுமோ??
    உன்ன வந்து ஆட்டிப்படைக்கிறவன் பாப்பான் இல்ல…இந்திக்கார..10 வருஷம் பொறுங்க…மஹாரஷ்டிரா ல நடக்குறுது வரும் தமிழ் நாட்டில…அப்பவும் பாப்பான் பாப்பான் ன்னு கூவினா, உன்ன இளிச்சவாயன் ஆக்கிடுவாங்க இந்திக்காரங்க… தமிழ் ன்னு சொல்லி இடஒதுக்கீடு வாங்கிடுவாங்க…

    இப்பவே 10 இந்தி ஜாதிகள் தமிழ் நாட்டுல இடஒதுக்கீடு வாங்கறாங்க…

    உத்தப்புரத்து பாப்பான் வரல…இரட்டை தம்ளர் முறைல பார்ப்பான் வரல…’தமிழ்’ கட்சிக ஏற்பாடு…இந்திகாரன் கூப்பிட்டு வேல தர்றாங்க நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக…Madras Airportக்கு போய் பார்!!!

  3. //தமிழ்நாட்டில் தன்னை “முன்னாள் எம்.எல்.” என்று சொல்லிக் கொள்கிற அறிவுஜீவிகள் எல்லாம் இப்போது காந்தியவாதியாக இருப்பதுபோல்// 🙂

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading