பெரியார் திராவிடர் கழத்தினர் மீதான திமுக அரசின் ஒடுக்குமுறையும்-ஈழத்தாயும்

_mg_82821

பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் மற்றும் தோழர்கள்

ழத்தமிழர்களுக்கு எதிராக  இந்திய ராணுவம், இலங்கைக்கு ஆயுதம் கொண்டுபோவதாக கேள்விப்பட்டு ராணுவ லாறிகளை வழி மறித்து, மறியல் செய்த பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலார் அண்ணன் ராமகிருட்டிணனும், பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஈழத்தமிழர்கள் மீது நடக்கும் தாக்குதலை கண்டித்து மத்தியஅரசு அலுவலகங்களுக்கு பூட்டு, பாஸ்போர்ட் அலுவகம் மீதான தாக்குதல், ராணுவ லாறி மறியல் என்று  பல புரட்சிகரப் போராட்டங்களை நடத்துகிற, ஈழத்தமிழர்களுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்கிற அண்ணன் கு. ராமகிருட்டிணனுக்கும், பெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கும் நமது வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

“நான் வெற்றிப் பெற்றால் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனிஈழம் அமைப்பேன்” என்று சவடால் விடும் ஈழத்தாய் ராணுவ லாறிகளில் ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு, கொச்சின் வழியாக இலங்கைக்கு சென்றதாக வந்த செய்திகளை இன்று வரை  மறுக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை.

(‘ஈழத்தாய்’ டைட்டில் ரொம்ப நல்லா இருக்கு. ‘புரட்சி’த் தலைவரோடு ஜோடியாக நடித்த ஒரு படத்துக்கு பெயர் ‘கன்னித்தாய்’ அந்த டைட்டில் ரொம்ப பொறுத்தமா இருக்கு. ஆனால் ‘ஈழத்தாய்’ பட்டமோ தேர்தல் நேரத்திற்கு ஏற்றாற் போல் ரொம்ப கேச்சிங்கா இருக்கு.)

‘அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள்’ என்ற காரணத்திற்காகவும் திமுகவினராலும், காவல் துறையினாராலும் கடுமையான ஒடுக்குமுறைககு உள்ளாகிறார்கள் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள். பல நிர்வாகிகள் விரட்டி விரட்டி கைது செய்யப்படுகிறார்கள்.

திமுக அரசின் இந்த அடக்குமுறையை எதிர்த்து, ‘ஈழத்தாய்’ இன்று வரை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. (அவருக்கு அந்த மல்டி நேஷன் – ஹெய்டெக்  சாமியார் ரவிசங்கர் வந்து இன்னும் ஆலோசனை சொல்லவில்லை போலும்.  அந்தப் பார்ப்பன சாமியார் பெரியார் திராவிடர் கழகத்திற்கு ஆதரவாக எப்படி ஆலோசனை சொல்வார்? அது சரி, இவ்வளவு தலைவர்கள் இருககும் போது, மைலப்பூர் ரவிசங்கர் சுவாமிகள் ‘ஈழத்தாயிடம்‘ மட்டும் அந்த ஈழப்பிரச்சினைக்குறித்த சிடியை தருவானேன்?)

தமிழர்கள் மீதான இலங்கை அரசின் கொலை வெறித் தாக்குதலை கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தக் கூட  வக்கற்ற ஈழத்தாய்தான், “தனிஈழம் அமைய தான் வெற்றி பெற்றால் ராணுவத்தை அனுப்புவேன்” என்கிறார்.

_mg_83701

பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் கைது செய்யப்பட்டபோது

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த சமூக விரோதிகள் பெரியார் சிலையை சேதப்படுத்தியபோது – சென்னை மேற்கு மாம்பலம் ராமர் மடம், ஆத்தூர் ராமர் கோயில், சேலம், ஈரோடு என்று பல இடங்களில் மிக சிறந்த முறையில் எதிர்வினை ஆற்றினார்கள் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள். அப்போது பெரியார் திராவிடர் கழத்தை கண்டித்து, மேற்கு மாம்பலத்திற்கு ஆதரவாக அறிக்கை விட்டவர்தான் ஈழத்தாய்.

இந்த மனநிலை கொண்ட ஈழத்தாயிற்கு பெரியார் திராவிடர் கழத்தின் மீது நடக்கும் வன்முறைகளும் கைதுகளும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். இதில் ‘ஈழத்தாய்-பிராமணர் சங்கம்-ஜெயேந்திரன்-ரவிசங்கர்’ இவர்கள் எல்லோரும் திமுகு-பெதிக மோதல் குறித்து இப்படிக் கூட கருதலாம் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

ஆகவே தோழர்களே, பெரியார் திராவிடர் கழகத்தினர் இந்தப் போராட்டத்தில் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். அவர்களின் மீது நடக்கும் இந்த ஒடுககுமுறைக்கு எதிராக முற்போக்காளர்கள் குரல் கொடுக்க வேண்டியது கடமை. ஈழ விடுதலை ஆதரவாளர்கள், முற்போக்காளர்கள் ஒன்று சேர்ந்து அரசின் இந்த அடக்குமுறையை அம்பலப்படுத்துவோம்.

26 thoughts on “பெரியார் திராவிடர் கழத்தினர் மீதான திமுக அரசின் ஒடுக்குமுறையும்-ஈழத்தாயும்

 1. இந்திய ராணுவத்திற்கெதிரான முதல் தமிழர் போர் இது.

  வாழ்க கு. ராமகிருஷ்ணன் அவர்கள்!

  புரியாத தமிழனுக்கும் இப்போது புரிகிறது பல விடயங்கள். இன தமிழகம் மாறும் விரைவாக. புதியதோர் அரசியல் காணப்போகிறது தமிழகம்.

  தமிழனுக்கு ஒரு காலம் நிச்சயமாக வரும்.

  பாரப்பனீயம் ஒரு மூலையில் உட்கார்த்தப்படும்.

 2. உண்மையில் மிகச்சிறப்பான, தேவையான நிகழ்ச்சிதான்.

  பார்ப்பன பாசிசத்தாயினை ஆதரித்தவாறு எப்படி தனி ஈழத்தை பெறமுடியும்.பெதிக அதிமுகவை ஆதரிப்பதற்கு பதில் ஈழத்தில் போரை நிறுத்து அப்புறம் தமிழகத்தில் தேதலை நடத்து என அறிவித்திருந்தால் தேர்தலை புறக்கணித்திருந்தால் இன்னும் அதிகமாய் இந்தியத்தை திரை கிழித்திருக்கலாமே.ஏதோ சோனியாவுக்கு துணையில்லாததால் அக்கோபத்தால் இப்போர் நடைபெறவில்லை,இதில் இந்தியாவின் மேலாதிக்க ஆளும் வர்க்க நலனே காரணம். இதை அம்பலப்படுத்துவதற்கு என்ன தயக்கம்.உண்மையில் காங்கிரசு மட்டும் எதிரி அல்ல ஓட்டு பொறுக்கிகள் எல்லாமே ஈழமக்களுக்கு எதிரானவையே.

 3. யார் பேச்சைக் கேட்டாலும் சரி ஜெயலலிதாவின் ஈழ ஆதரவு வரவேற்கத்தக்க மாற்றமாகும். எந்த மரத்தின் கீழ் இருந்து ஞானம் பெற்றால் என்ன? அம்மாவுக்குப் பயந்துதான் அய்யா தமிழீழ விடுதலையை ஆதரிக்க முன்வரவில்லை. இப்போது தமிழீழ விடுதலையை ஆதரிக்கப் போவதாக அறிக்கை விடுகிறார். முதலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடித்துக் காட்டுங்கள். மிகுதியைப் பின்னர் பார்ப்போம்.

 4. எத்தனையோ தலைவர்கள், வந்தார்கள் வாழ்ந்தார்கள், ஆளுக்கொரு கொள்கையை விட்டு சென்றார்கள்…

  தொண்டரென வந்தவர்கள் தலைவரையும் மறந்தார்கள், தலைவனின்
  கொள்கையையும் மறந்தார்கள்…

  ஈரோடு பெருசு மட்டும் வாழ்கிறார்…

 5. அஞ்சா நெஞ்சன் அண்ணன் ராமகிருட்டிணன் வாழ்க. வாழ்க பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள்.

 6. 1996-2001 காலக்கட்டத்தில் ஜெயலலிதாவை ஆதரித்த திராவிடர் கழகம் இப்போது திமுக வின் பிரசாரப் பிரிவாக மாறியிருக்கிறது. தற்போது ஜெயலலிதாவை ஆதரிக்கும் பெரியார் திராவிடர் கழகமும் அப்படி ஒரு அமைப்பாக ஆகிவிடக் கூடாது என்பதே என் கவலை. பொடா போன்று தேசப் பாதுகாப்புக்காக அம்மையார் ஆதரவுடன் அமையும் அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வரலாம். அதே சட்டத்தில் பெ.தி.க. தோழர்களும் கைது செய்யப்படலாம். தமிழ்நாட்டில் எதுவும் நடக்கும்.

 7. ////1996௨001 காலக்கட்டத்தில் ஜெயலலிதாவை ஆதரித்த திராவிடர் கழகம் இப்போது திமுக வின் பிரசாரப் பிரிவாக மாறியிருக்கிறது. தற்போது ஜெயலலிதாவை ஆதரிக்கும் பெரியார் திராவிடர் கழகமும் அப்படி ஒரு அமைப்பாக ஆகிவிடக் கூடாது என்பதே என் கவலை.//////

  அப்படி ஒரு நிலை வராது , இந்திராவின் மிசாவிலும், ஜெயாவின் தடாவிலும் கொடும் சிறைவாசம் கண்டவர்தான் கு.ராமகிருடிணன் அவர்கள்

 8. தோழர் மதி,
  பெரியார் தி க, தன் பெரியாரிய வேலைதிட்டதில் இருந்து ஒரு போதும் பின் வாங்காது

 9. ///யார் பேச்சைக் கேட்டாலும் சரி ஜெயலலிதாவின் ஈழ ஆதரவு வரவேற்கத்தக்க மாற்றமாகும். எந்த மரத்தின் கீழ் இருந்து ஞானம் பெற்றால் என்ன? அம்மாவுக்குப் பயந்துதான் அய்யா தமிழீழ விடுதலையை ஆதரிக்க முன்வரவில்லை. இப்போது தமிழீழ விடுதலையை ஆதரிக்கப் போவதாக அறிக்கை விடுகிறார். முதலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடித்துக் காட்டுங்கள். மிகுதியைப் பின்னர் பார்ப்போம்.///

  ஐயா, ஜெவின் ஈழ ஆதரவை நீங்கள் நம்புவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஈழ ஆதரவுக் காட்சி என்பது ஜெ நடத்துகிற தேர்தல் நாடகத்தின் ஒரு அங்கம். ஈழத்தைத்தான் ஆதரித்துவிட்டாரே, புலிகளால் இவரது உயிருக்கு ஆபத்து வரப் போகிறதா என்ன? இன்னும் ஏன் புலிகள் மீதான தடையை நீக்கக் குரல் கொடுக்கவில்லை? இந்த மூண்றாவது அணி தேர்தலோடு செத்துப் போகும். ஜெ, நாயுடு, நவீன் பட்நாயக் போன்றோர் பல்டியடித்த காட்சிகளைப் பலமுறை பார்த்தாகிவிட்டது. சீட்டுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து காங்கிரசுடன் கூட ஜெ கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. பாஜாக, காங்கிரஸ் இரண்டுமே தனி ஈழம் அமைவதற்கு ஒரு நாளும் ஒப்புக்கொள்ளாது. இது புரியாமல் சிவாஜிலிங்கம் என்ற இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர், இல. கனேசனுக்காகத் தென்சென்னையில் பிரச்சாரம் செய்கிறாராம். சுயலாபத்தைக் கருதி நிச்சயம் ஜெ இந்த இரு அணிகளில் ஒன்றுடன் சமரசம் செய்துகொள்வார். ஈழத்தைக் கைவிடுவார், அப்போது நிச்சயம் வருத்தப்படுவீர்கள்.

 10. பெ.தி.க, காங்கிரசு எதிர்ப்பை முன்னிட்டே அதிமுக அணிக்கு தேர்தல் ஆதரவை தெரிவித்துள்ளார்கள். தேர்தலில் ஆதரவளிப்பதால் அதிமுக வின் அத்தனை நிலைப்பாடுகளையும் ஆதரிப்பதாக பொருள் கொள்ள வேண்டியதில்லை. ஓட்டுப்பொறுக்க, ஈழ ஆதரவு நிலைப்பாட்டிற்கு தற்காலிகமாகவாவது செயலலிதா வந்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். நாளைக்கே செயா மாறிவிட வாய்ப்பு உண்டு என்பதை அறியாதவர்கள் அல்ல பெதிகவினர் .தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்படும் தோல்வி ஈழத்தமிழர்களுக்கு மூச்சு விட்டுக்கொள்ளவாவது சிறிது அவகாசத்தை அளிக்கும் .இப்போதைய தேர்தலில் காங்கிரசிற்கு கொடுக்கும் அடி , இந்த அமைப்பிற்குள் ளாக , நமக்கு சொரணை இருக்கிறது என்பதை காண்பித்துக்கொள்ள வேண்டுமானால் உதவும்.செயா தன்னுடைய ஈழ ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து மாறினால் முதலில் அவரை எதிர்ப்பது பெதிக ஆகத்தான் இருக்கும்.

 11. அண்ணன் கு. ராமகிருட்டிணன் அவர்களுக்கும், மற்றும் பே.தி.க தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்,

  பே.தி.க தோழர்கள் இந்திய அரசுக்கெதிராக தங்களது எதிர்ப்பை மிகக் கடுமையாகவே பதிவு செய்கிறார்கள் மீண்டும் வாழ்த்துக்கள்,
  ஆனால் அவர்களின் ஆ.தி.மு.க ஆதரவு நிலைப்பாடு சற்று வேதனையாக உள்ளது,

  இதுவரை தேர்தல் பிரசாரத்தில் செயலலிதா கருணாநிதிக்கு எதிராக மட்டுமே பேசிவருகிறார் காங்கிரசை எதிர்த்து எந்த அறிக்கையும் விடவில்லை, மற்றும் ராகுல்காந்தியின் பேட்டியையும் சற்று கூர்ந்து கவனிக்கவேண்டும், இப்போதே ஆ.தி.மு.க மற்றும் காங்கிரசு கூட்டணிக்கான பணிகள் தொடங்கிவிட்டன, தமிழக தேர்தலில் காங்கிரசு தோற்று ஆ.தி.மு.க வெற்றிபெற்று மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் பே.தி.க தோழர்களின் அத்துணை உழைப்பும் வீண் மற்றும் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான், அதன் பிறகு அந்தக் கூட்டணியை எதிர்த்து ஒரு பயனுமில்லை ஏனென்றால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மீண்டும் காங்கிரசு பாசிச ஆட்சி தொடரும், இப்போது தி.மு.க செய்யும் அடக்குமுறைகளை நடுவணரசின் துணையுடன் செயலலிதா எனும் பாசிச மிருகம் தொடங்கிவிடும்.
  தோழர்கள் இப்போதாவது 49O பற்றி சிந்திக்கலாம்.

  கோகுலகிருட்டிணன்

 12. காங்கிரசுக்கு எதிர்ப்பு என்பதற்காக ஜெ வை ஆதரிப்பது என்ற பெதிக வின் நிலை வருத்தம் அளிக்கிறது.

  இது தற்காலிக முடிவு என்றாலும் ஜெ வை ஆதரிப்பதற்கு பதிலாக காங்கிரசு எதிர்ப்பை மட்டும் தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 13. ”கருப்பனைக் கட்டிவைத்து அடிக்கிற அடியில் வேலன் வேலியைப் பிய்த்துக் கொண்டு ஓட வேண்டும்” தோழர்.கொளத்தூர் மணி – தலைவர் பெ.தி.க.
  அந்த அளவில்தான் தேர்தல் நிலைப்பாடு.இனி வருங்காலத்தில் தமிழினத்திற்கு எதிராக நிலைப்பாடு எடுக்கும் யாருக்கும் இவ்வெதிர்ப்பு அவர்களுக்குப் பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்நிலைப்பாடு.
  பெ.தி.க.வின் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பியதற்கு நன்றி!!நன்றி!!!!நன்றி!!!!!!

 14. பெ.தி.க. மீது காவல்துறையினர் அடக்குமுறை: கொளத்தூர் மணி கண்டனம்

  பெரியார் திராவிடர் கழகத்தின் மீது காவல்துறை கையாண்டு வரும் அடக்குமுறை எல்லை மீறிச்சென்று கொண்டிருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  ஈழத் தமிழர் இனப் படுகொலைக்குத் துணை போகும் காங்கிரசை தோற்கடிக்கும் முழக்கத்தை முன்வைத்து பெரியார் திராவிடர் கழகம் நடத்தி வரும் பரப்புரையை முடக்குவதற்குத் தமிழகத் காவல்துறை கையாண்டு வரும் அடக்குமுறை எல்லை மீறிச்சென்று கொண்டிருக்கிறது.

  குறுந்தகடுகள், துண்டறிக்கைகள் பறிமுதல், குறுந்தகடுகள் வைத்திருந்த தோழர்கள் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது, பிரச்சார வாகனம் பறிமுதல், பரப்புரை மேற்கொண்ட பெரியார் தி.க. தோழர்கள் கைது எனத் தொடரும் நடவடிக்கைகளோடு, தற்போது சென்னையில் வன்முறை கும்பல் துணையோடு இராயப்பேட்டையில் பெரியார் படிப்பகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கர், கலைஞர் நூல்கள் உள்பட நூற்றுக்கணக்கான நூல்கள் வன்முறைக் கும்பல்களால் அங்கிருந்து களவாடிச் செல்லப்பட்டன.

  அடக்குமுறையின் உச்சக்கட்டமாக, பெரியார் சிலையைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்திய தமிழ்ச்செல்வி, சுதா என்ற இரு பெண்கள் காவல்துறையினரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  மத்திய சென்னை தொகுதி – மற்றொரு ‘மதுரை’யாகி அறிவிக்கப்படாத அடக்குமுறையை சந்தித்துக்கொண்டிருக்கிறது. சிலைகளைச் சேதப்படுத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று எச்சரித்து வரும் தமிழக காவல்துறை. ராயப்பேட்டையில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்திய திமுக ஏவிய வன்முறை கும்பலைக் கைது செய்யாதது ஏன் என்று கேட்க விழைகிறேன்.

  காங்கிரஸ் தலைவர் சோனியா வருவதையொட்டி, முன்னெச்சரிக்கை கைது என்ற பெயரில் மே 5ஆம் தேதி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வன்முறையில் ஈடுபட்டதாக பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சோனியா வருகை ரத்து செய்யப்பட்ட செய்திக்குப் பின்னரும் உடல் ஊனமுற்ற தோழர் சேத்துப்பட்டு ராஜன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  கோவையில் ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த நிகழ்வில் தொடர்பே இல்லாதவர்களும், அச்சம்பவத்தின் போது ஊரிலேயே இல்லாத பெரியார் தி.க. தோழர்களையும்கூட காவல்துறை கோவையில் கைது செய்து வருகிறது. பல ஊர்களில் இரவிலும் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தி வருகிறது.

  பெரியார் இலட்சியங்களுக்காக சமரசமின்றி வீரியத்துடன் போராடி வருகிற பெரியார் திராவிடர் கழகத்தை, வன்முறை கும்பல்போல சித்தரிக்க முற்படும் காவல்துறையின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  எல்லை மீறி காவல்துறையும், ஆளுங்கட்சி ஆதரவு வன்முறை கும்பலும் நடத்தும் இந்த வன்முறை வெளியாட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சட்டத்தை காற்றில் பறக்கவிட்டு, அராஜகத்துக்குத் துணை நின்று அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 15. அரசின் அடக்குமுறைகள் பெதிக வுக்கு புதியதல்ல. அதை எளிதாகச் சந்திப்போம். மதிமாறன் போன்ற வெறும் எழுத்துவியாபாரிகள் பெ.திக வைக் கொச்சைப் படுத்துவதைத் தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வஞ்சப்புகழ்ச்சிஅணி பாணியை மதிமாறன் என்றுதான் விட்டுத் தொலைப்பாரோ? தனது நடிப்பை நம்புகிறவர்கள் பெ.தி.க வில் இன்னும் இருக்கிறார்கள் என மதிமாறன் நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதையே இக்கட்டுரை காட்டுகிறது.

 16. //‘அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள்’ என்ற காரணத்திற்காகவும் திமுகவினராலும், காவல் துறையினாராலும் கடுமையான ஒடுக்குமுறைககு உள்ளாகிறார்கள் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள். பல நிர்வாகிகள் விரட்டி விரட்டி கைது செய்யப்படுகிறார்கள். திமுக அரசின் இந்த அடக்குமுறையை எதிர்த்து, ‘ஈழத்தாய்’ இன்று வரை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.//

  ஜெயலலிதாவிடம் பெ.தி.க விலைபோய்விட்டது என்றும், பெட்டிவாங்கியது என்றும் வாய்கூசாமல் மொட்டைக் கடுதாசி போடும் உங்கள் இரகசிய ஸ்னேகித அமைப்பான மகஇக பார்வைக்கு இவற்றை அனுப்பவும். அவர்கள் கூட பெதிக சந்திக்கும் அடக்குமுறைக்கு எதிராக எந்தக் கருத்தும் கூறவில்லை.

  நீங்களும் இன்றுதான் திடீரென அரசு அடக்குவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறீர்கள். இந்தத் தேர்தல்வாடை வீசத் தொடங்காத காலம் முதற்கொண்டே பெ.தி.க தோழர்கள் தொடர்ந்து ஆறு மாதமாக கருணாநிதி அரசின் அடக்குமுறைகளைச் சந்தித்துதான் வருகிறார்கள்.

  ஜெயலலிதாவை பெதிக ஆதரித்தபின் தான் உங்களுக்கும் ஞானோதயம் தோன்றி அய்யோ அடக்குமுறை, ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை என்கிறீர்கள். இந்த ஆறுமாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

  ஒரு பக்கம் ஜெ விடம் பெதிக விலைபோய்விட்டது என மகஇக போடும் மொட்டைக் கடுதாசிகளை வெளியிடுவது, மறுபக்கம் பெதிக வினர் மீதான அடக்குமுறைகளை ஜெ கண்டிக்கக்கூட மனமில்லாமல் இருக்கிறார் என கட்டுரை வெளியிடுவது. நல்ல நாடகம். வாழ்த்துக்கள்.

  //ஆகவே தோழர்களே, பெரியார் திராவிடர் கழகத்தினர் இந்தப் போராட்டத்தில் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். அவர்களின் மீது நடக்கும் இந்த ஒடுககுமுறைக்கு எதிராக முற்போக்காளர்கள் குரல் கொடுக்க வேண்டியது கடமை. ஈழ விடுதலை ஆதரவாளர்கள், முற்போக்காளர்கள் ஒன்று சேர்ந்து அரசின் இந்த அடக்குமுறையை அம்பலப்படுத்துவோம்.//

  பெதிக வை யாரும் தனிமைப்படுத்த முடியாது. உங்களைப் போல கூட இருந்தே குழி பறிக்கவும் முடியாது. வை.கோ, தா.பாண்டியன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் உள்ள தலைவர்களும் எண்ணற்ற முற்போக்காளர்களும் பெதிக சந்திக்கும் அடக்குமுறைகளுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்கள். பாரதிராஜா, தோழர் சீமான் போன்ற தோழர்கள் பெதிக வுக்கு துணையாக இருக்கிறார்கள். உங்கள் நீலிக் கண்ணீரைக் கொஞ்சம் துடைத்துக்கொள்ளுங்கள்.

 17. மதிமாறனைப்போல தமிழச்சி அம்மாவும் ரொம்ப நீலிக்கண்ணீர் விடறாங்க படிச்சு பாருங்க :

  பெரியார் சிலை உடைப்பும், பெரியாரிஸ்ட்டுகளின் வீரியத்தை நீர்த்துப் போகச் செய்யும் தலைமைகளும்!

  http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1229

 18. வை.கோ, தா.பாண்டியன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் உள்ள தலைவர்களும் எண்ணற்ற முற்போக்காளர்களும் !!!

  wov super

 19. வை.கோ, தா.பாண்டியன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் உள்ள தலைவர்களும் எண்ணற்ற முற்போக்காளர்களும் !!!

  சரி இது அவங்களுக்கெல்லாம் தெரியுமா?

  ————————————-

  ஏன் நிலா, இப்படி ஓட்டு பொறுக்கிகளுக்கு சப்பைகட்டு கட்டுறீங்க. தயவு செய்து கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க.

  நீங்க தமிழ் தேசியம் தான பேசுறீங்க பின்ன எதுக்கு இந்தியத்த பலப்படுத்தும் தேர்தல் முறைக்கு மக்களை ஓடு போடச்சொல்லுறீங்க,

  இது வெறும் தேர்தலுக்கு மட்டும் தானா என்னங்க

  ராமதாஸ், பாண்டி மாதிரி ஆயிட்டீங்களே.ராமதாசு பாண்டிச்சேரி நியமட எம் எல் ஏ வை ஏன் ராஜினாமா செய்யலன்னு கேட்டதுக்கு அது தேர்தல் கால ஒப்பந்தம் இப்ப அதப்பத்தி கேக்காதீங்கன்னு சொன்னாரு.நீங்களும் அப்படியே சொல்லுறீங்களே.

 20. /////நன் நிலா////

  உங்களின் பின்னூட்டம் பொறுப்பற்று முட்டாள்தனமாக இருக்கிறது. இதுபோன்று பின்னூட்டங்கள்தான் தேவையற்று விவாதத்தை திசை திருப்புவதாக இருக்குறது.

  முற்போக்களர்கள் மீது அவதூறுகள் பேசுவதும் பிற்போக்காளர்களை முற்போக்காளர்கள் என்று சொல்வதும் எந்த வகையில் நியாயம்?

  அண்ணன் ராமகிருட்டிணனும் தோழர்களும் சிறையில் இருக்கிறார்கள். அதுகுறித்து எழுதுங்கள். அந்த செய்தியை முடிந்து வரை இணையத்தில் பரப்புங்கள்.

  அதி அசுரன்போல் அநாகரீமாக நடந்துகொள்ளாதீர்கள். இந்த் நெடுமாறன் அண்ணன் ராமகிருட்டிணை கேவலமாக பேசியபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

  பெரியார் திராவிடர் கழகத் தலைவர்களிலேயே அண்ணன் ராமகிருட்டிணன் என்றால் இந்த நெடுமாறனுக்கு எப்போதுமே மட்டம்தான். அதுகுறிதது நம் தோழர்கள் கூட பேசுவதில்லை. அதுமட்டுமல்லாமல் அண்ணனை தவிர மற்றவர்கள் எல்லோரும் நெடுமாறினிடம் நல்ல உறவு வைத்திருக்கிறார்கள்.

 21. தோழர் சீமான் போன்றோரை பிற்போக்காளர் எனச் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி உள்ளது தோழர்?

  //இந்த் நெடுமாறன் அண்ணன் ராமகிருட்டிணை கேவலமாக பேசியபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?//

  அண்ணன் இராமகிருட்டினன் அவர்களே நெடுமாறன் குறித்து யாரும் எதுவும் வெளியிடக் கூடாது எனக் கண்டித்துள்ளார். அன்றே கண்டித்தார். நீங்கள் பெதிக தோழராக இருந்தால் தெரிந்திருக்கும். சிண்டு முடியும் மகஇக வின் உறுப்பினருக்கு அண்ணனைப் பற்றித் தெரிநந்திருக்க நியாயமில்லை.

  //பெரியார் திராவிடர் கழகத் தலைவர்களிலேயே அண்ணன் ராமகிருட்டிணன் என்றால் இந்த நெடுமாறனுக்கு எப்போதுமே மட்டம்தான்.//

  அதனால் தான் அந்த மாநாட்டில் அண்ணனைப் பேச அழைத்தாரா நெடுமாறன்?

  கலகம் அவர்களே

  நேபாள ஓட்டுப்பொறுக்கி பிரசந்தாவை முதலில் கண்டித்து விட்டு அப்புறம் வாங்க பெதிக விடம்.

  தேர்தல் புறக்கணிப்பு உட்பட அனைத்து நடவடிக்கைகளிலும் இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் மகஇக வின் லெவி தாரரான நீங்கள் தமிழ்தேசியத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டாம் தோழா. நிறைய பார்ப்பனர்களைப் பார்த்துவிட்டோம்.

 22. தோழருக்கு வணக்கம்

  தோழர் கோவை ராமகிருட்டிணன் மீதும் உங்கள் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட கோவையை சேர்ந்த ஒரு எழுத்தாளரும் அவருடைய நான்கு எடுபிடிகளும் உங்களையும் மகஇகவையும் – பெதிக பேரில் வந்து பொய்யான பின்னூட்டங்கள் இட்டு குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு… அதேபோல் மகஇகபேரில் வந்து பெதிகவைப்பறற்றி பொய்யான பின்னூட்டங்கள் இட வாய்ப்புண்டு.
  அதனால் பின்னூட்டங்களை அனுமதிப்பதில் கொஞசம் கவனமாக இருங்கள்.

  ஏற்கனவே இந்த எழுத்தாளரும் அவரின் நான்கு எடுபிடிகளும் ஆர்க்குட்டில் வந்து பெதிக மகஇக பற்றியும் உங்களை பற்றயும் கேவலமாக பேக்கில் புனைபெயரில் வந்து எழுதியபோது… மகஇக தோழர்களிடம் நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டு ஓடியவர்கள்…. ஆகையால் அவர்கள் கண்டிப்பாக குழப்பம் விளைவிப்பார்கள்… எச்சரிக்கையாக இருங்கள்.

 23. அதுமட்டுமல்ல… சில மாதங்களுக்கு முன் கோவையில் பெதிக நடத்திய சீமான் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் காரர்கள் வந்து கலவரம் நடத்தியதை கண்டித்து…. மகஇக பெதிக என்று ் பலர் சென்னையில் மிகப்பெரிய கண்டண ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். அப்போது சீமானை பற்றி மிக கேவலமாக புனைபெயரில் எழுதியது இந்த கும்பல். மகஇக தோழர்கள் அவர்களுக்கு நன்கு பாடம் கற்பித்தார்கள்.

  சீமானோடு பழகிக்கொண்டே அவரைப் பற்றி புனைபெயரில் மிக கீழ்த்தரமாக எழுதிய கும்பல்தான் இந்தக் கும்பல். உங்கள் புத்தக வெளியிட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார் என்பதினாலும் அந்தவிழாவை தோழர் ராமகிருட்டிணனும் பெதிகவும் நடத்தினார்க் என்பதினாலுமே… இந்த குழபத்தை அவர்கள் நடத்தினார்கள் என்று அந்த கும்பலில் இருக்கும் ஒருவரே இதை தெரிவித்து இருக்கிறார்.

  அதனால் நீங்கள் கூடுதல் எச்சரிகையாக பி்ன்னூட்டங்களை அனுமதியுங்கள்…. அது தேவையற்ற சண்டைகளை தவிர்க்கும்.
  தேவைஎன்றால் ஆர்குட்டில் இந்த கும்பல் நடத்துகிற விமர்சனதளம் என்பதில் இவர்கள் சீமானை உங்களை பெதிகவை மகஇகவை பற்றி கேவலமாக எழுதியதை அனுப்பி வைக்கிறென்.

 24. //

  மதிமாறனைப்போல தமிழச்சி அம்மாவும் ரொம்ப நீலிக்கண்ணீர் விடறாங்க படிச்சு பாருங்க :

  பெரியார் சிலை உடைப்பும், பெரியாரிஸ்ட்டுகளின் வீரியத்தை நீர்த்துப் போகச் செய்யும் தலைமைகளும்!

  http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1229
  ///

  தோழர்களே,

  இப்படி விமர்சனம் வைப்பவர்களையெல்லாம் திட்டினால் யாருக்கும் நல்லதல்ல.

  கலகக்காரன்

 25. தோழர் கலகக்காரன் நீங்கள் தமிழச்சியை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக கி.வீரமணியை தாக்கிக் கொண்டிருந்தவர் இன்று பெ.தி.க.வையும்
  விமர்சிக்கிறார். இதன் மூலம் பெரியார் விழிப்புணர்வு இயக்க தலைவி தான் மட்டுமே பெரியாரியலை
  நேர்மையான முறையில் கொண்டு செல்வதுபோல் ஒரு தோற்றத்தை உருவகப்படுத்த முற்படுகிறார்.

  பல இடங்களில் அவருடைய வரட்டு விவாதம் எப்படி செல்கிறது என்று பாருங்கள்.

  https://www.blogger.com/comment.g?blogID=4941973464235870324&postID=6533126629197597240

  இது தான் மாற்று கருத்தா? இரு அமைப்புகள் மீதும் அவதூறு செய்யும் அவர் எப்படி பெரியாரிஸ்டாக இருக்க முடியும்?

 26. கலகக்காரன்

  யார் தோழர்கள் யார் போலிகள் என்பதை தெரிந்து கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள். போலிகள் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர்கள். தமிழச்சி தி.க.வை விமர்சிப்பதே தனது பணியாக வைத்திருந்தார். இப்போது பெ.தி.க.வும் கணக்கில் வந்து விட்டதா? அப்படியானால் இவர் மட்டும் தான் பெரியாரியலை வளர்த்தெடுக்கிறாரா?

Leave a Reply

%d bloggers like this: