தி.க.வின் பரிதாபத்திற்குரிய பெரியார் படமும் கம்யூனிஸ்டுகளின் போர்குணமிக்க புரட்சி படமும்

அய்சன்ஸடினின் அக்டோபர் படத்தின் போஸ்டர்

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்  -1

‘பேராண்மை’ விடும் ராக்கெட் – 2

கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள் 3

பகுதி – 4

‘நீ வந்து சினிமா எடுத்து பாரு, அப்ப தெரியும். வெளியில இருந்து பேசலாம். உள்ள வந்து பாத்ததான் அதன் சிரமம் தெரியும்’ அப்படின்னு இங்கவந்திருக்கிற சினிமாவை சேர்ந்தவங்க என் மேலே கோபப்படலாம். மீண்டும சொல்லிக் கொள்கிறேன்… நான் சினிமாவே எடுக்க வேணாம்ன்னு சொல்லல. அரசியல் ரீதியா எடுத்து குழப்பறதவிட கரகாட்டக்காரன் மாதிரி எடுக்கறது பிரச்சினை இல்லாதது.

தீவிரமான இந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணல் அம்பேத்கரோ, தந்தை பெரியாரோ சினிமா மூலமா தங்கள் கருததுகளை சொல்ல விரும்பல. ஏற்கனவே சொன்ன மாதிரி, ‘அது கூடாது’ என்பதால் அல்ல. ‘முடியாது’ என்பதினால்தான்.

தந்தை பெரியார் சினிமாவை முற்றிலுமாக தவிர்ததார். அல்லது எதிர்த்தார். அவர் செஞ்சது எவ்வளவு சரி என்று பின்னாட்களில் திராவிடர் கழகம் எடுத்த சினிமாக்கள் அதை நிரூபிச்சிச்சு. அவர்கள் எடுத்த புரட்சிக்காரன் திரைப்படத்தின், புரட்சிக்காரன் அதான் கதாநாயகன் பார்ப்பன அய்யங்கார் குடும்பத்தில் இருந்து வருவதாகத்தான் காண்பித்தார்கள். கதாநாயகன் பார்ப்பனர். வில்லன் முஸ்லீம். அதாங்க பின்லேடன்தான் வில்லன். கெட்ட சாமியாரா வருபவர் கூட ஜெயேந்திரன் மாதிரி பார்ப்பன சாமியார் அல்ல. பார்ப்பனரல்லாத சாமியார்தான். இது வேறயாரோ எடுத்தப் படமல்ல. திராவிடர் கழகம் எடுத்த படம்.

பெரியார் படத்தில் வந்த பெரியாரே, பார்ப்பன எதிர்ப்பே இல்லாம பரிதாபமாகத்தான் இருந்தார். அவரை பார்ப்பனர்களின் எதிரி அல்ல என்று காட்சி வைப்பதில்தான் அதிகம் கவனம் எடுத்துக் கொண்டார்கள். அதனால்தான் படத்தில் பெரும் பகுதி ராமசாமி நாயக்கராக இருந்த காலத்தை காண்பித்தார்கள். பார்ப்பன நண்பரோடு காசிக்கு போவது…. கதர் துணி விக்கறது…. கள்ளுக்கடை மறியல் பண்ணறது…. இதெல்லாம் தந்தை பெரியார் பண்ணல…ராமசாமி நாயக்கர்தான் பண்ணார்.

பெரியாரா காட்டின பகுதிகளில் கூட அவருடைய பார்ப்பன எதிர்ப்பு காட்டப்படவேயில்ல….அப்பக்கூட பிரசவ வலியில் துடிக்கிற பார்ப்பன பெண்ணுக்கு உதவி செய்வது… தன் மீது செருப்பை வீசிய பார்ப்பனர்களிடம் கூட நிதானமா நடந்து கொள்வது போன்ற சம்பவங்களுக்குத்தான் முக்கியததுவம் கொடுத்திருந்தார்கள்.

பிறகு தமிழக முதலமைச்சர்களாக இருந்த காமராஜர், அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர் இவர்கள் பெரியாரிடம் பிரியமாய்  நடந்துகொண்டது என்றுதான் இருந்தது. ஜாதிக்கு எதிராக, பார்ப்பனியத்திற்கு எதிராக பெரியாரின் போர்குணமிக்க போராட்டங்கள் படத்தில் இடம் பெறவே இல்லை.

தலைவர் லெனின் சினிமாவை பற்றி சொல்லும்போது, மிக சக்திவாய்ந்த ஊடகம். ஆனால் அதை எடுப்பதற்குத்தான் நம்மிடம் பணம் இல்லை என்றார். புரட்சி வெற்றி பெற்று தலைவர் லெனின் தலைமையில் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஏராளமான சினிமாக்களை கம்யூனிஸ்டுகள் எடுத்தார்கள். புரட்சியை சித்திரிச்சு எடுத்த அய்சன்ஸ்டினோட அக்டோபர், பொட்டம்கின் போன்ற படங்களுக்கு இணைய இன்னைக்கு வரைக்கும் யாரும் சினிமா எடுக்கல.

சிறந்த வடிவம் வானத்துல இருந்து வராது. தன் சொல்லவர செய்தியை தெளிவா சொல்லனும். புரியும் படி சொல்லனும்னு முயற்சிக்கும்போதுதான் சிறந்த நேர்த்தியான வடிவங்கள் உருவாகுது.

இன்றைய ஹாலிவுட் படங்களில் இருந்து தமிழ்படங்கள் வரை ரஷ்ய பட இயக்குநர் அய்சன்ஸ்டினோட வடிவங்களை காப்பியடிச்சுதான் எடுக்குறாங்க. பொட்டம்கின் படத்துல ஒரு காட்சி. புரட்சி முதலில் கப்பலிலதான் துவங்கியது. ஆனால், அது தோத்துப்போயிற்று. கப்பலில் வேலை செய்கிற தொழிலாளர்களுக்கு புழு நெளியும் உணவு தரப்படுகிறது. அதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடுகிறார்கள். அப்போ ஒரு தொழிலாளியின் முறுக்கேறிய கைக்கு ஒரு குளோசப் போட்டிருப்பாரு அய்சன்ஸ்டின்.

அந்த குளோசப் அப்படியே ஹாலிவுட்டுக்கு போயி, சுத்தி சுத்தி வந்து சில்வர் ஸ்டலோன் கையா மாறி, தமிழ் நாட்டுக்கு சரத்குமார் கையா வந்து, நாகார்ஜீனனுககு கோபம் வந்தவுடன் அவரு கையில் தனி நரம்புல ரத்தம் ஏறி…. இப்படி அதை கேவலப்பட்டுத்தினார்கள்.

அக்டோபர் படத்துல ஒரு காட்சி. ஜார் மன்னன் வீழ்த்தப்படுறான். அத குறிப்பால் உணர்த்துவதற்கு, ஜார் மன்னன் சிலை துண்டு துண்டாக உடைந்து கீழே விழுவது மாதிரி காட்டியிருப்பார் அய்சன்ஸ்டின்.

ஆனால், ஜார் மன்னனுக்கு பிறகு அதிகாரத்திற்கு வருபவர்கள் அறிவுஜீவிகளும் எதிர் புரட்சியாளர்களுமான மென்ஷ்விக்குகள். அவர்களும் ஜார் மன்னனைப்போல் மோசமானவர்கள் என்பதை காட்டுவதற்கு அல்லது மீண்டும் ஜார் மன்னன் ஆட்சியைதான் அவர்களும் தருவார்கள், என்பதை குறிப்பால் உணர்த்துவதுபோல், உடைந்த அந்த ஜார் மன்னனின் சிலை ஒன்றாகி மீண்டும் கம்பீரமாக பீடத்தில் அமவர்வதுபோல் ஒரு ரிவர்ஸ் ஷாட் போட்டிருப்பார்.

மிக ஆழ்ந்த, நூறு பக்கங்களுக்குமேலும் விவரித்து எழுதப்படவேண்டிய செய்தியை, மிக எளிமையாக, ஒரு சில வினாடிகளில் சொல்லியிருப்பார் அய்சன்ஸ்டின். இப்படி அறிவுப்பூர்வமாகவும் உணர்வோடும் சொன்ன உலகத்தின் முதல் ரிவர்ஸ் ஷாட் அதுதான்.

அந்த ஷாட்டை ஹாலிவுட்டிலிருந்து, பிரன்ச்சு சினிமா, ஜெர்மன் சினிமா வரை காப்பியடித்தார்கள். தனிமனிதர்களின் பிரச்சினைய உலகப் பிரச்சினையாக காட்டுகிற, பிரான்சு போன்ற முதலாளித்துவ நாடுகளின் சினிமாக்களை பற்றி சிலாக்கிற, பிலிம் சொசைட்டி வைச்சிருக்கிறவனுங்கு எவனும் கம்யூனிஸ்டுகளின் கலைவடிவத்தை காப்பி அடிச்சு சினிமா எடுக்கறத சொல்றதில்ல. அந்த படங்களின் பெருமையை பேசறதுக்கு வெக்கப்படறதுமில்ல.

தமிழில் இந்த ரிவர்ஸ் ஷாட் பல கொடுமைகளுக்கு உள்ளாகி இருக்கிறது. அநேகமா அத அதிகம் பயன்படுத்துனது கே. பாலச்சந்தர். அவருடைய சொல்லத்தான் நினைக்கிறேன் படத்துலதான் அத முதல்ல பயன்படுத்ததுனாருன்னு நினைக்கிறேன். அது ஒரு முக்கோணக் காதல். முக்கோணக் காதல்கூட இல்ல. அக்கா தங்கச்சிங்க மூணுபேரு ஒரு ஆணை காதலிப்பாங்க. மணியனோட கதை. அவரு குடும்ப கதையா என்னன்னு தெரியல. கடைசியில கதாநாயகன் கடைசி பொண்ணதான் காதலிப்பான். எப்போதுமே கதாநாயகன் அல்லது ஆண், வயசுல சின்னப்பொண்ணா பாத்துதானே காதலிப்பான்.

சிவகுமார் படிக்கட்டுல இறங்கி வரும்போதெல்லாம் ஸ்ரீவித்யா நாற்காலியில் இருந்து எழுந்து ஒடி வந்து நிப்பாங்க. காதல் தோல்வி அடைஞ்ச உடனே அப்படியே ரிவர்சுல போயி தொபக்கடின்னு நாற்காலியில விழுவாங்க. அப்புறம் உன்னால் முடியும் தம்பி படத்துல கீழ விழுந்திருக்கிற பூ வெல்லாம் திரும்பி மரத்துல போயி ஒட்டிக்கும். கீழே விழுந்திருக்கிற சைக்கிள் தானா எழுந்து நின்னுக்கும்… இப்படி கேவலப்படுத்தபட்டுது அயஸன்ஸ்டினோட ரிவர்ஸ் ஷாட்.

இன்றைய ஹாலிவுட் படங்களின் பிரமாண்டம், வடிவம் கம்யூனிஸ்டுகள் போட்ட பிச்சைதான். கப்பலில் துவங்குகிற புரட்சியை சித்திரிச்சு அயஸ்ன்ஸ்டின் எடுத்த பொட்டம்கின் படத்தோடு ஒப்பிடும்போது, டைட்டானிக் படம் எல்லாம் ஒன்னுமே இல்ல. உள்ளடக்கத்தை மட்டும் சொல்லல. டெக்னிக்கலாவே ஒன்னுமில்ல. டைடானிக் எல்லாம் டெஸ்க் ஒர்க்தான்.

பேராண்மையில் ஒரு வசனம் உறுதியா அழுத்தத்தோடு சொல்லப்படுது. ‘உயிரை கொடுத்தேனும் இந்திய தேசியத்தை பாதுகாப்பேன்’னு. இந்த வசனம் யதார்த்தமா இல்ல. யாதார்த்தமா இருக்கனும்ன்னா நடைமுறையில் எப்படி இருக்கோ அது மாதிரி இருப்பதுதானே எதார்த்தாம்.

‘காஷ்மிர் மக்களின் உயிரை குடித்தேனும் இந்திய தேசியத்தை பாதுகாப்பேன். அஸ்ஸாம் மக்களின் உயிரை குடித்தேனும் இந்திய தேசியத்தை பாதுகாப்பேன். மணிப்பூர் பெண்களை மானபங்க படுத்தியேனும் இந்திய தேசியத்தை பாதுகாப்பேன். ஈழத் தமிழர்களை கொன்று குவித்தேனும்  இந்திய தேசியத்தை பாதுகாப்பேன்’ னு வசனம் இருந்திருந்த எதார்த்தமா இருந்திருக்கும்.

ஆனால், அப்படி உண்மைய வசனமா வைக்க முடியாது. வைச்சா படம் வெளிவராது. ஈழத்தில் தமிழர்களை  கொலை செய்த ரத்தத்தின் ஈரம்கூட இன்னும் காயல, இந்த சூழலில் இப்படி இந்திய தேசியத்தை வலியுறுத்தி ஒரு படம், அதுவும் நம்ம ஆதரவாளர்ன்னு சொல்றவர்கிட்ட இருந்து.

இத இப்படி ஒரு அர்த்ததோடு சொல்லனும்னு இயக்குநர் நினைச்சிருக்க மாட்டார். அவரோட நோக்கம் அதுவாகவும் இருக்காது. ஆனால், அந்த ரஷ்ய படம் தன் நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்வதாகதான் படம் சொல்கிறது. அதை இந்திய சூழலுக்கு பொருத்தியதால் வந்த தவறு இது.

‘என் உயிரை கொடுத்தேனும் ரஷ்ய நாட்டிற்காக என்  உயிரை தியாகம் செய்வேன்’’ என்று சொல்லமுடியாது இல்லியா? அதான்.

பேராண்மையை பற்றி ஒரே வரியில் சொல்லனும்ன்னா, தேசியம் என்கிற வௌக்குமாத்துக்கு கட்டப்பட்ட பட்டுக் குஞ்சம்.

-முற்றும்.

தொடர்புடைய பதிவுகள்:

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்  -1

‘பேராண்மை’ விடும் ராக்கெட் – 2

கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள் 3

8 thoughts on “தி.க.வின் பரிதாபத்திற்குரிய பெரியார் படமும் கம்யூனிஸ்டுகளின் போர்குணமிக்க புரட்சி படமும்

 1. எதார்த்தமான பேச்சு நடை,
  சிற‌ப்பாக பேசியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழரே.

 2. மிக சரியான வார்த்தைகள், பாராட்டுக்கள் தோழரே !

 3. ‘உயிரை கொடுத்தேனும் இந்திய தேசத்தைப் பாதுகாப்பேன்’ என்னைப் பொறுத்தவரையில் இந்தப் படத்தில் இந்த வசனக் காட்சியைப் பார்த்த போது என் உடல் சிலிர்க்கவே செய்தது.நீங்கள் கூறும் சில குறைகள் இந்தப்படத்தில் இருக்கத்தான் செய்தது.துருவன் கனபதிராமை எதிர்ப்பது போல் காட்சி அமைத்திருக்கலாம்.என்னைப் பொறுத்தவரையில் பேராண்மை ஒரு நல்ல படமாகவே உணர்கிறேன்.

 4. கலைஞரிடம் 96 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு (ஏதோ தி.கவில் பணம் இல்லாதது போல், பெரியார் படம் எடுக்கவும் நன்கொடை திரட்டினார்கள் பெரியார் டி.வி ஆரம்பிக்கப் போவதாக சொல்லியும் நன்கொடை திராட்டினார்கள்) பெரியார் படம் எடுத்தால் பின்னர் எப்படி பார்ப்பன எதிர்ப்பை எதிர் பார்க்க முடியும். ஜெயலலிதா ஆதரவுடன் இருக்கும் போது புரட்சிக்காரன் படம் எடுக்கப்பட்ட்டது அப்போதும் வாய்ப்பு இல்லை வீரமணிக்கு கொள்கையை சொல்ல, எல்லா அரசியல் கட்சியிலும் நிரந்தர உறுப்பினர் அட்டை வைத்திருந்தால்(குறிப்பாக ஆளும் கட்சியாக வரும் கட்சிகளிடம்) நிலைமை இப்படிதான். பேராண்மை படம் பார்க்கும் போதும் எரிச்சாலாகத்தான் இருந்தது ஆகவேதான் குழந்தைகளை கூட்டிப்போகவில்லை ஏற்கெனவே பள்ளியிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், கிரிக்கெட்டிலும் தேசிய நஞ்சில் இருக்கும் அவர்களுக்கு மேலும் தேசிய போதை தரும் படமாக பேராண்மை இருக்கிறது என்பது உண்மை. அப்படத்தில் வரும் காடு, இடஒதுக்கீட்டு ஆதரவு கொள்கையை பிரித்து பார்க்கும் அளவுக்கு எந்த சினிமா ரசிகன் இருக்கிறான்.ஜனனாதனிடம் அடுத்த படத்தை சிறப்பாக எடுக்க சொல்லத்தான் முடியும்.

 5. ///இத இப்படி ஒரு அர்த்ததோடு சொல்லனும்னு இயக்குநர் நினைச்சிருக்க மாட்டார். அவரோட நோக்கம் அதுவாகவும் இருக்காது. ஆனால், அந்த ரஷ்ய படம் தன் நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்வதாகதான் படம் சொல்கிறது. அதை இந்திய சூழலுக்கு பொருத்தியதால் வந்த தவறு இது.///

  மிக சரி.

 6. ////இன்றைய ஹாலிவுட் படங்களின் பிரமாண்டம், வடிவம் கம்யூனிஸ்டுகள் போட்ட பிச்சைதான். கப்பலில் துவங்குகிற புரட்சியை சித்திரிச்சு அயஸ்ன்ஸ்டின் எடுத்த பொட்டம்கின் படத்தோடு ஒப்பிடும்போது, டைட்டானிக் படம் எல்லாம் ஒன்னுமே இல்ல. உள்ளடக்கத்தை மட்டும் சொல்லல. டெக்னிக்கலாவே ஒன்னுமில்ல. டைடானிக் எல்லாம் டெஸ்க் ஒர்க்தான்.////

  100 சதவீதம் உண்மை.

 7. inthiya thesiyam enbathu thun makkalai kondru adaku muraiyil uruvanathu. athu udaikapa vendum. nandri.

 8. பெரியாரா காட்டின பகுதிகளில் கூட அவருடைய பார்ப்பன எதிர்ப்பு காட்டப்படவேயில்ல….அப்பக்கூட பிரசவ வலியில் துடிக்கிற பார்ப்பன பெண்ணுக்கு உதவி செய்வது… தன் மீது செருப்பை வீசிய பார்ப்பனர்களிடம் கூட நிதானமா நடந்து கொள்வது போன்ற சம்பவங்களுக்குத்தான் முக்கியததுவம் கொடுத்திருந்தார்கள்//
  மதிமாறன் அவர்கள் சொல்வது உண்மை தான். அவ்வளவு பெரிய மனிதர் பெரியார் இல்லை என்று அவரே ஒப்பு கொள்கிறார்

Leave a Reply

%d bloggers like this: