பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்..?; ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

Shhh-Silence
‘திராவிட இயக்கம் தமிழகத்தைக் கெடுத்துவிட்டது’ என்று தொடர்ந்து சொல்லி வருகிற தமிழருவி மணியன், மணியரசன், நெடுமாறன் போன்றோர் இணைந்த கைகளோடு வைகோ வை ஆதரிக்கிறார்கள், அவர் நூல் வெளியிட்டு விழாவில் வைகோ கட்சிக்காரர்களே வெட்கப்படும் அளவிற்கு அவரைப் புகழ்ந்து…!

வைகோ வை இவர்கள் திராவிட இயக்கத் தலைவராகப் பார்க்கிறார்களா? இல்லை ‘திராவிட இயகத்தில் இருக்கிற கருணாநிதி எதிர்ப்பாளர்’ என்கிற அளவில் புழங்குகிறார்களா? புரியவில்லை.

சரி இதுஒருபுறம் இருக்கட்டும்.

சமீபத்தில், பாரதிராஜாவின் திராவிட இயக்க எதிர்ப்பு பேச்சுக்கு சீறிய வைகோ;

தமிழருவி மணியன், மணியரசன், நெடுமாறன் இவர்களின் மிக மோசமான முழுநேர திராவிட இயக்க எதிர்ப்பு குறித்து ஏன் மவுனம் காக்கிறார்?

குறிப்பாகக் காங்கிரஸ் மனோபாவம் கொண்ட, தமிழருவி மணியன் போன்ற தீவிர திராவிட இயக்க எதிர்ப்பாளர்களைத் தன்னுடைய தோழமையாக வைகோ கருதுவது ஏன்?

திராவிட இயக்க எதிர்ப்பை ‘கருணாநிதி வெறுப்பாக’ மட்டும் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதாலா?

அல்லது

தன்னைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று மிகுந்த தைரியத்தோடு, “2016 இல் வைகோ தமிழக முதல்வர் ஆவார்” என்று சொன்ன தமிழருவி மணியனின் துணிச்சலா?

நெடுமாறன், தமிழருவி மணியன், மணியரசன் போன்ற திராவிட இயக்க எதிர்ப்பாரளர்களின் கேள்விகளுக்கு அல்லது அவதூறுகளுக்குத் திராவிட இயக்கத் தலைவர் என்கிற முறையில் வைகோவின் பதில் என்ன? அல்லது கண்டனம் எங்கே?

திராவிட இயக்க எதிர்ப்பாளர்களான மணியரசன், நெடுமாறன், தமிழருவி மணியன் போன்றவர்கள் வைகோவை புகழ்வதும், வைகோ இவர்களைப் புகழ்வதற்குமான மர்மம் என்ன?

பெரியாரையே கடுமையாக எதிர்க்கிற மணியரசன்; வைகோவை மாபெரும் தலைவராகப் பார்ப்பதின் ரகசியம் என்ன?

பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு என்பது பெயரளிவில் கூட வைகோவிடம் இல்லை என்பதினாலா?

பெரியாரின் தாக்கம் துளிகூட இல்லாத அல்லது வாய் தவறிகூட இந்து மதம் குறித்தோ, பார்ப்பனர்கள் குறித்தோ தவறாக எதுவும் பேசிவிடக்கூடாது என்று ஒரு கம்பீரமான கட்டுபாடோடு, உறுதியான உள்ளத்தோடு வாழ்கிற வைகோவின் வீரமா?

வைகோவிடம் இருக்கிற எந்த அம்சம், இந்தத் திராவிட இயக்க எதிர்ப்பாளர்களை இப்படிக் கவர்ந்திருக்கிறது?

‘திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் – திராவிட இயக்க தலைவர் வைகோ’ இவர்களின் உயிருக்கு உயிரான ‘கொள்கை’ ரீதியான நட்பை,

தமிழகத் தமிழர்கள் அங்கிகரிக்கீறார்களா?

இல்லை வெளிநாட்டுத் தமிழர்கள் தீர்மானிக்கிறார்களா?

என்னவா இருக்கும்…?

ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

என்னமோ நடக்குது..

மர்மமா.. இருக்குது..
*
அக்டோபர்16, 2012

தொடர்புடையவை:

பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்!

குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே நடிகர்

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்

23 thoughts on “பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்..?; ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

  1. ஹ்ம்ம்… இவர்களில் ஒருவர் கூட பெரியாரைக் காட்டமாக விமர்சிப்பது இல்லையே.அப்படி விமர்சிப்போர் குணாவும் அவர் ஆதரவாளர்களும் தாம். திராவிடம் எப்படி 40 ஆண்டுகளாகத் தமிழ் தமிழ் எனப் பேசித் தமிழைக் கீழே தள்ளியது, மக்களை ஏமாற்றியது, ஊழற் கூடாரம் ஆனது என்பதைத் தான் இவர்கள் பேசுகிறார்கள். இன்னும் இந்தப் பெயரை சொல்லி பின்னோக்கிப் போகாது, மாற்றுவழி பற்றிச் சிந்திப்போம் என்கிறார்கள். வைகோவை திராவிடப் படிக்கட்டு வழி முற்போக்குத் தமிழியத்தைத் தலைமையேற்று நடத்திச் செல்லக் கூடியவராகக் காண்கிறார்கள்.இது தான் அந்த அம்சம்! வைகோ பேசிய பல மேடைகளில் பார்ப்பன எதிர்ப்பைக் காணலாம். பெரியாரை மேற்கோள் காட்டிப் பேசிய இடங்கள் பல. சங்கொலியில் பெரியாரைப் பற்றி வைகோ எழுதியது நிறைய.பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது.
    எதிர்ப்புக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் இதுவெல்லாம் தெரியக் கூடும்:) அது நடக்காதெனத் தெரிகிறது!
    தெர்மாமீட்டர் போல திராவிடமானி ஒன்றை உங்களைப் போன்றோர் வைத்துள்ளீர்களோ, பொது இடங்களில் எங்கே எத்தனை முறை திராவிடம், பெரியார் என்றெல்லாம் சொல்கிறார் என்பதைக் கணக்கெடுத்துக் கொண்டு அதை வைத்து எவ்வளவு திராவிடர் என ஒருவித ISO முத்திரை அளிக்க.. 🙂

    தமிழருவி மணியன் காங்கிரஸ் மனோபாவம் கொண்டவரா, காந்திய மனோபாவம் கொண்டவரா? அப்படியானால் பாரதிராஜா என்ன மார்க்சிய மனோபாவம் கொண்டவரா? அவரும் பேராய வழியினர் தான்! போற போக்குல வெளிநாட்டுத் தமிழர்களுக்கு வேற ஒரு சாத்து!

    சீறிய என்பதற்குப் பதில் சீரிய என்றெல்லாம் எழுதும் நீங்கள் தானா நூல்களெல்லாம் எழுதுகிறீர்கள்?

  2. அந்தக் கள்ள மௌனம் இருக்கட்டும் ஒருபுறம்… போன வார குமுதத்தில
    இசைஞானி கமலின் கடவுள் மறுப்புப்பை பற்றி விளாசித் தள்ளியிருந்தாரே…
    அதப் பத்தி ஒரு பதிவும் காணும்.. உமக்கு ஏன் கள்ள மௌனம்…
    கமல் தானே.. சந்தோசமா திட்டி கட்டுரை எழுதலாமே..

  3. உலகத்தை அபகரித்தவரே(OccupyGlobe)!

    பொதுவான பார்வையில் வை.கோ வின் மொத்த பேச்சுக்களில் பெரியார் பற்றியோ அல்லது பார்ப்பனியம் குறித்தான சொற்கள் குறைந்தளவிலே இருக்குமென்பதால் பதிவரின் கருத்து சரியானதே.

  4. கருணாநிதியின் சாதுரியம்,அரசியல் திருட்டுதனம்,அனைவரையும் அனுசரித்து செல்லும் தன்மை போன்றவை வை.கோவிடம் இல்லையென்ற போதிலும் தமிழகத்தின் மாற்று அரசியலுக்கான சூழலுக்காக வை.கோவை முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை.

  5. இது என்ன கேள்வி இது…வைகோ போன்ற தேச துரோகிகளுக்கு விடுதலைப்புலிகள் பிச்சை காசை எறிகிறார்கள்..அது அவருடன் ஒட்டி உறவாடும் மற்ற தேச துரோகிகளுக்கும் அந்த பிச்சை காசில் பங்கு வுண்டு..வேற என்ன ஒற்றுமை..

  6. வைகோ அவர்கள் திராவிட சிந்தனைகளை உள்ளடக்கிய தமிழ்தேசிய தலைவர் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். தமிழ் தேசியத்திற்கு எதிரானவரா என்பதையே அவர்கள் பார்க்கிறார்கள். தமிழருவி மணியன் அவர்கள் தெளிவாக ஒருமுறை சொல்லி இருக்கிறார், இருக்கும் தலைவர்களில் யார் நேர்மையானவர், தமிழினத்திற்காக உண்மையாக இருப்பவர் என்றுதான் பார்க்கிறேன் என்று.

  7. வைகோ-வை கிறிஸ்தவ ஆதரவாளர் என்று ஆரிய அடிவருடிகள் பேசுவது உங்களின் காதுகளில் எட்ட வில்லையோ…?
    இந்து மத எதிர்ப்புதான் திராவிடத்தின் தத்துவம் என்று உங்களுக்கு யார் சொன்னது..?
    கருணாநிதி இந்து மதத்தின் மீது சாடுவது போன்று நடிப்பாரே தவிர அதில் உண்மையில்லை என்பதை அரசியல் நோக்கர்கள்
    அறிவார்கள்….
    கருணாநிதி போன்றோர்கள் திராவிடம் பேசி பித்தலாட்டம் செய்வதனாலேயே…..திராவிட இயக்கம் அதன் தன்மையை
    இழந்து நிற்கிறது..
    நீங்கள் சொல்லிய யாருமே திராவிட இயக்கத்தை எதிர்த்து வைகோ-வை வைத்து கொண்டு பேசியதாக தெரியவில்லை….
    அப்படியே வாதத்திற்கு ஒப்புகொண்டாலும் கூட …திமுக ..கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் திராவிட இயக்கத்தை
    தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர்களா….?
    எவ்வளவு பெரிய மோசடியான ..கருத்து திணிப்பு….?

  8. தோழருக்கு வணக்கம்..!

    தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, ம.தி.மு.க. தலைவர் வைகோவை மட்டுமின்றி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன் உள்ளிட்ட தேர்தல் அரசியல் கட்சித் தலைவர்களுடனும், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட அனைவரிடமும் தொடர்ந்து, தோழமையைப் பேணி வந்துளளது. அவர்கள் நடத்துகின்ற நிகழ்ச்சிகளிலும், அவ்வப்போது பங்கேற்றுள்ளது. இதில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை.

    திராவிடம் மற்றும், தேர்தல் அரசியல் பங்கேற்பு உள்ளிட்ட சிக்கல்களில் மேற்கண்டவர்களுடன் த.தே.பொ.க.விற்கு நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இவர்கள் அனைவரும் தமிழ் இன உரிமைகளுக்காக அவ்வப்போது குரல் கொடுத்துப் போராடும் போது, த.தே.பொ.க. அவர்களுடன் இணைந்து களம் காணத் தயங்கியதில்லை.

    திராவிடம் என்ற கருத்தியலில் ஊன்றி நிற்கும், பெரியார் தி.க.,வுடன், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின் போது “தமிழர் ஒருங்கிணைப்பு” என்ற பெயரில் கூட்டமைப்பு ஏற்படுத்தி த.தே.பொ.க. தமிழீழ இன அழிப்புப் போருக்கு எதிராகப் போராடியது.

    பொடா சிறையில் வாடிவிட்டு, பின் சிறையிலடைத்த செயலலிதாவிடமே கூட்டணி பேசிய ம.தி.மு.க.வின் சந்தர்ப்பவாதத்தைக் கண்டித்து, “ம.தி.மு.க. – மற்றுமொரு தி.மு.க.” என தலைப்பிட்டு எழுதியது, த.தே.பொ.க.வின் ஏடான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்.

    முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்துவிட்டு, கேரளாவில் தமிழர்களையும் தாக்கிய மலையாளிகளுக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் மலையாள நிறுவனங்களை முற்றுகையிடும் போராட்டத்தை த.தே.பொ.க. நடத்தி பலர் கைதானார்கள். இப்போராட்டத்தை “கோழைத்தனம்” என்று இழிவுபடுத்தியவர் வைகோ. அதை அப்போது, த.தே.பொ.க.வின் ஏடான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் எழுதிக் கண்டனமும் வெளியிட்டிருந்தோம். இருந்த போதும், வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர், கேரளா செல்லும் சாலைகளை முற்றுகைப் போராட்டத்தில் நாங்களும் கலந்து கொண்டு கைதானோம்.

    மேற்கண்ட அமைப்புகளுடன் கருத்தியல் ரீதியாக பல கடும் விமர்சனங்களை தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழிலும், தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் தனது பேச்சிலும் வெளியிட்டு வந்தாலும், அவர்களது தமிழ் இன உரிமைப் போராட்டங்களுக்கு த.தே.பொ.க. துணை நிற்கத் தவறியதில்லை.

    அமைப்பு மற்றும் கருத்தியல் வேறுபாடுகளை விட, தமிழ்நாட்டின் உரிமைச் சிக்கல்களில் அனைவரும் ஒன்றுபட்டு நின்று போராடி உரிமைகளை மீட்க வேண்டும் எனப் போராடுபவர்கள் நாங்கள். அதனால், கருத்து வேறுபாடுகளைக் களத்தில் போட்டுக் குழப்பிக் கொண்டதில்லை.

    த.தே.பொ.க.வினர், இந்திய நாடாளுமன்றத்தில் அமரத் துடிப்பவர்கள் அல்ல என்றும், அந்நாடாளுமன்றத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான உறவை அறுத்தெறிய வேண்டுமென்ற கருத்துடையவர்கள் என்றும் வைகோ அறிவார். இருந்த போதும், அந்நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களை அழைத்த போது, அதில் கலந்து கொண்டார்.

    அக்கூட்டத்திலும், வைகோவை நாடாளுமன்றத்திற்கு வெளியே களம் அமைக்க முன் வாருங்கள் என்று தான் தோழர் பெ.மணியரசன் அழைத்தார் என்பதை அவரது பேச்சைக் கேட்டவர்கள் அறிவார்கள்.

    1989இல் கூடங்குளம் அணுஉலைத் திட்டம் அமைக்க இந்திய அரசு முற்பட்ட போதும், இராசீவ்காந்தியால் தமிழீழ ஆக்கிரமிப்புப் படை ஈழத்திற்கு அனுப்பப்பட்ட போதும், வைகோ நாடாளுமன்றத்தில், தன் கட்சி நலனை விட, இன நலனே முக்கியம் என நல்லமுறையில் வாதாடினார் என்பதைத் தான் தோழர் பெ.ம. தனது பேச்சில் குறிப்பிட்டார்.

    இந்தியத் தேசியத்திற்குள் நின்று தமிழ் – தமிழினம் என உரிமைக் குரல்கள் எழுப்புவர்களின் உணர்வை மதிக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டு விடுதலைக்கான தமிழ்த் தேசியக் களத்தை நோக்கி, அவர்களது பணி விரிவடையாவிட்டால், அவர்களது ஈகம் எதுவாயினும் அது விரையமாகும் என்றே நாம் சுட்டிக்காட்டி வருகிறோம்; இனியும் சுட்டிக்காட்டுவோம்! இது தவறல்ல!

    தோழமையுடன்,
    க.அருணபாரதி
    தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
    தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

  9. தங்களது புரிதல்கள் சரியானதே.
    வெளிநாட்டு தமிழர்கள், வசதிமிகுந்த தமிழர்கள் வைகோ எப்படி தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். அவர்கள் உத்தரவுபடி வைகோ இலங்கை தமிழர்களை வைத்து தமிழ் நாட்டில் அரசியல் செய்கிறார்.

  10. தமிழர்நலன் என்ற ஒற்றை விடயம் மட்டுமே , நேற்று வரை இந்திய தேசியம் பேசிய தமிழருவி மணியன் இன்று தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறார் . குலகல்வி முறையே தான் வாழ்நாள் இலட்சியமாக கொண்டிருந்த ராஜாஜி , பேரறிஞர் அண்ணாவோடு கரம் கோர்க்கவில்லையா? அதே அணியில் காய்தேமில்லத் இடம்பெறவில்லையா ? பயணம் செய்கிற குதிரை எதுவாக இருந்தால் என்ன , பயணிக்கற பாதையை மாற்றவில்லையே ! பாரதிராஜா பேசியது தவறில்லை அவருடைய கருத்தை அவர் தெரிவிக்கலாம் . ஆனால் பேசவேண்டிய இடம் மிகவும் முக்கியமானது ஒருவருடைய பிறந்தநாள் மேடையில் , அதுவும் ஒரு கம்யூனிஸ்ட் மேடையில் திராவிடத்தை பேசவேண்டிய அவசியம் என்ன ? கேள்வி தொடுத்தவர் பதில் கிடைக்கும் வரை காத்திருக்காமல் எதற்காக ஓடினார் ? இதே பாரதிராஜாவின் அலுவலகம் சூரையடப்பட்டப் போது சம்பவ இடத்துக்கே சென்று கடந்தை பதிவு செய்தவர் வைகோ , அதற்காக அவர் மீது போடாப்பட்ட வழக்கை வைகோ இன்றுவரை எதிர்கொண்டு வருகிறார் .

  11. வணக்கம் மதிமாறன் அவர்களே திராவிட எதிரான எத்தனையோ குட்டங்கள் இருந்தும் உங்களுக்கு ஏன்தான் வை கோ அவர்களை விமர்சனம் செய்கீரீர்களோ தெரிய வில்லை. வை கோ அவர்களை விமர்சனம் செய்து விட்டு யாரைத்தான் வழர்க்க விரும்பு கீருர்களோ தெரிய வில்லை

  12. நெடுமாறன், தமிழருவி மணியன் போன்றவர்கள் வெறும் வாய் பேச்சு மட்டுமே.
    கலைஞரை எதிர்பதால் இவர்கள் இருப்பது தெரிகிறது.
    நாடு எப்படி போனால் என்ன? கலைஞரை திட்டு, ஜெவுக்கு துதி பாடு.
    அப்படி செய்வதால் இவர்களை பார்பனியம் போற்றுகிறது.
    இவர்களால் என்ன உருப்படியான காரியம் நடந்துள்ளது.
    இவர்கள் இரண்டு பக்கங்களிலும் உள்ள தவறுகளை கண்டிக்க முன் வர வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: