மகளிர் தினத்தை முன்னிட்டு மூன்றாவது முறையாக…

தெய்வக் குத்தம்

கனவில் அவள் வந்தாள்
கனவிலும்
தூங்கிக் கொண்டிருந்த
என்னைத் தட்டியெழுப்பி
எனக்கொரு
பிரச்சினை என்றாள்.
.
நான்கு கைகளோடு நின்ற
அவளைக் கண்டு மிரண்டு,
யார் நீங்கள்? என்றேன்.
என் பெயர் காமாட்சி
ஊர் காஞ்சிபுரம் என்றாள்.
.
அய்யோ கடவுளா!
கடவுளுக்கே பிரச்சினையா?
ஆச்சரியத்தோடு
கணவனாலா என்றேன்.

கணவனால்
பிரச்சினை இல்லை
பிரச்சினைகளைப்
புரிந்து கொள்ளாமல்
கல்போல் நிற்பவன்
கணவனா என்றாள்.
.

புரியவில்லையே என்றேன்.

தினம் தினம்
நான் அவமானத்தால்
செத்துப் பிழைக்கிறேன்
என் பெண்மை
கேவலப்படுத்தப்படுகிறது
என்று உடைந்தாள்.

நான் பதட்டமாகிப் போனேன்
அய்யோ உங்களையா?
யார் அவன்? என்றேன்.

கோயில் குருக்கள் என்றாள்.

குருக்களா!
என்ன செய்தார் அவர்?
அதிர்ச்சியாகக் கேட்டேன்.
.
தினம் தினம்
கருவறையின் கதவுகளை
உட்பக்கமாக சாத்திக்கொண்டு
என்னை நிர்வாணப்படுத்தி அபிஷேகம்…
என்று சொல்லிக்
கொண்டிருக்கும்போதே
அவமானத்தால் கதறி விட்டாள்.
.
பின் நிதானித்து
குருக்கள் வாயில்
மந்திரம் இருக்கலாம்
மரியாதை இருக்கலாம்
ஆனால்
இதை
பெண்ணின் மனநிலையில்
புரிந்து கொள்
அவமானம் புரியும் என்றாள்.
.
சரிதான், ஆனால்
இதற்கு என்ன செய்ய முடியும்
என்றேன்-மிகுந்த வருத்தத்தோடு.

ச்சீ… இப்படிக் கேட்க
உனக்கு வெட்கமாக இல்லை?

உக்கிரமாகிப் போனாள் காமாட்சி

கோபத்தோட தொடர்ந்தாள்
எல்லாத் துறைகளிலும்
பெண்களுக்கு உரிமையும்
ஒதுக்கீடும் வேண்டும் என்று
கேட்கிறீர்களே
கோயில் கருவறைக்குள்
குருக்களாக
அர்ச்சகர்களாக
பெண்களை அனுமதித்தால்
உங்கள் புனிதம் என்ன
நாறி விடுமோ? என்று
காறித் துப்புவது போல் கேட்டு
நிலம் நடுங்க
சலங்கை உடைய
தீயைப் போல் போனாள்
காஞ்சி காமாட்சி

***

சமீபத்தில் (2006) சபரிமலை அய்யப்பன் பெண்களுக்கு எதிராக எடுத்த அவதாரத்தை முன்னிட்டு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

‘கர்ப்பக் கிரகத்திற்குள் பெண்கள் நுழைந்து விட்டார்கள்’ என்பதை ஏதோ சிலைத் திருடன் நுழைந்து விட்டான் என்பதை விடவும், கேவலமாக விவாதிக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டார்கள், பெண்கள்.

(பெரியார் இதற்காகத்தான் சாமியை செருப்பாலடித்தார்)

நாடாளுமன்றத்தில் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு 33% இட ஒதுக்கீடும் கிடைக்க இருக்கிறது. இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் கூட உள் ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கையைத்தான் பெயரளவிலாவது முன் வைக்கிறார்கள்.

உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் `இதுல ஜாதியெல்லாம் பார்க்கக் கூடாது. முதலில் அமலாகட்டும்` என பெண்களுக்குள் ஜாதி வேறுபாடு இல்லாதது போல் பேசுகிறார்கள்.

ஒரு பெண் பிரதமராக முடிகிறது. அர்ச்சகராக முடிவதில்லை.உள் ஒதுக்கீடு கூட வேண்டாம். அர்ச்சகராவதற்கு முழுக்க முழுக்க அய்யர், அய்யங்கார் பெண்களை மட்டுமாவது அனுமதிப்பார்களா? நாடாள முடிகின்ற பெண்ணால்- கேவலம் அர்ச்சகராக முடியாதா?

சட்டம் சந்து பொந்துகளில் நுழைகிறது. சிலர் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து விடுகிறார்கள். ஆனால் கர்ப்பக் கிரகம் என்ற சந்துக்குள் எந்தச் சட்டம் நுழைய முடிகிறது?

பரந்து விரிந்த அந்த நாடாளுமன்றம் சின்ன கர்ப்பக் கிரகத்திற்கு முன் மண்டியிடுவது, பக்தியினால் அல்ல.

சுதந்திர இந்தியாவின் நவீன சட்டங்கள், மனுவின் சட்டங்களுக்கு முன் மண்டியிடுவதைப் போல.

நாடாளுமன்ற உறுப்பினர் என்பது அதிகாரம்.

கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைவது சுயமரியாதை.

அதிகாரத்தை விடவும், சுயமரியாதை முக்கியம் அல்லவா!

`தீட்டு` என்று காரணம் சொல்லி பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றனர்.

தந்தை பெரியார் கேட்டார்:

“மலம் கழித்துவிட்டு கோயிலுக்குள் வரலாம்.

மலத்தை விடவா, மாதவிலக்கு தீட்டு”

**

விழிப்புணர்வு,2006 நவம்பர் இதழுக்காக,  2002 தலித் முரசில் வெளியான கவிதையை, புதியதாக இந்தப் பின்னுரையோடு   எழுதி தந்தேன். இதன் தேவைக் கருதி மறுபிரசுரம் செய்த அதன் ஆசிரியர் கு. காமராஜ் அவர்களுக்கு நன்றி.

**

மூன்றாவது முறையாக வெளியிட்டு இருக்கிறேன்.

தொடர்புடையவை:

‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’

4 thoughts on “மகளிர் தினத்தை முன்னிட்டு மூன்றாவது முறையாக…

 1. அடிக்கிற கப்பு நாற்றத்தில் சாமிக்கல்லே பறக்கும் சந்து மதத்தில்.. மன்னிக்கணும், இந்து மதத்தில் இந்தப் பார்ப்பன பிணந்தின்னிகள் செய்யும் இந்த அலங்கோலச் செயலை யாரும் கண்டு கொண்டதாகவேத் தெரியவில்லை. ஆத்தாவை இந்தப் பாடு படுத்தும் அர்ச்சகப் பூசாரி யை யாரும் நையப் புடைப்பதுமில்லை. தனியறைக்குள் கடவுள் பெண்ணை நிர்வாணப் படுத்தி செய்யும் இந்தச் அசிங்கத்தை மடக் கடவுள்களை நம்பும் கூமுட்டைகள் பக்தியின் பெயரால் தணிக்கை செய்து தவிர்த்து விடுகிறார்கள்! புனிதமான சந்து மதத்தின் யோக்கியதை இப்படி இருக்கையில், கிறித்தவ மதத்திலோ… பாதிரி கூட கோயிலினுள் அவன் நம்புவதாக நடிக்கும் மேரி அன்னையின் புடவையை உருவுவதில்லை! பாதிரியின் தனியறைக்குள் மேரி வந்தால் அவள் என்ன கதியாவாள், என்பது பாதிரியாலேயே உறுதியாகச் சொல்ல முடியாது! என்றாலும் இந்த விடயத்தில், கோயில் பணியாளனே மேரியின் புடவையை மாற்றிக் கொடுக்கிறான். ஆனால், இங்கு பூசை செய்பவனே அவளின் புடவையையும் உருவுகிறான். இசுலாமில் நல் வாய்ப்பாக இந்த மாதிரி பெண் தெய்வங்கள் இல்லை, இருந்திருந்தால்.. அங்கிருந்து கிளம்பும் நாற்றம் இதைத் தூக்கியடிக்கும் விதமாகத்தான் இருந்திருக்கும்! இதுக்கெல்லாம் காரணம், இந்த மாதிரி சாமிகளையெல்லாம் நம்பும் களிமண்ணு மண்டையர்களைத்தான் சொல்ல வேண்டும்!
  நண்பர் மதியின் இந்த மீள் பதிவு இப்போதும் பொருந்தக் கூடிய இளிவான நிலைதான் தொடர்கிறது. காசிமேடு மன்னாரு.

 2. கவிதை மிக அருமை.
  இதனை ‘எனக்குப் பிடித்த வலைப்பூ படைப்புகள்-1’ என்று தலைப்பிட்டு,
  உங்கள் வலைப்பூ தொடர்பும் தந்து
  எனது வலைப்பூவில் எடுத்து வெளியிட்டிருக்கிறேன்,
  உரிய முறையில் படைப்பை எடுத்துப் பயன்படுத்துவதை விட
  சிறந்த பாராட்டு வேறில்லை என்பதால்.
  நன்றி, வணக்கம்.
  தோழமையுள்ள,
  நா.முத்துநிலவன்,
  புதுக்கோட்டை.
  பார்க்க: http://valarumkavithai.blogspot.com/2011/03/1.html

Leave a Reply

%d bloggers like this: