விஸ்வரூபம் தடை; கமலுக்கு ஆதரவான நடவடிக்கை!

427878_181733301951720_562371049_n

‘விஸ்வரூபம் சிறப்பு காட்சி பார்த்த இஸ்லாமிய தலைவர்கள், ‘படம் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கிறது அதை தடை செய்யவேண்டும்’ என்று தமிழக அரசிடம் நேற்று மனு கொடுத்திருக்கிறார்கள்.

அவசர அவசரமாக கோவை மாவட்ட ஆட்சியாளரும், ‘கோவையில் படத்தை வெளியிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்’ என்று அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்.

பல விசயங்களில் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் செவி சாய்க்காத தமிழக அரசு இரவோடு இரவாக விஸ்வரூபத்திற்கு 15 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.

‘சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்’ என்று காரணம் சொல்லியிருக்கிறது.

ஆனால், இந்தத் தடை ‘திரையரங்குகளில் படத்தை வெளியிடக்கூடாது’ என்பதாகத்தான் இருக்கிறது. மாறாக, டி.டி.எச். ல் வெளியிடுவதை பற்றி எந்த தகவலும் இல்லை.

கமல்ஹாசன் கூட திரையரங்குகளில் வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.

‘படம் இஸ்லாமிய எதிர்ப்பாக இருப்பதால் இது வெளியானாலும், எதிர்ப்பின் காரணமாக மூன்று நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடாது’ என்பதால்தான் அவர் டி.டி.எச். ல் ஒளிபரப்ப அதிக ஆர்வம் காட்டியிருக்கக் கூடும்.

தியேட்டர்களில் வெளியான பிறகு டி.டி.எச். ல் ஒளிபரப்பினால், அந்த நிறுவனங்களிடம் லாபமான வர்த்தகத்தை கமல்ஹாசனால் பெற முடியாது. நிச்சயம் முதலுக்கே மோசம் ஏற்படும். அதனால்தான் அவர் முதலில் டி.டி.எச். என்பதிலேயே உறுதியாக இருந்தார்.

ஆனால், திரையரங்க உரிமையளார்களின் எதிர்ப்பினாலேயே முதலில் தியேட்டர்களில் வெளியிடலாம் என்கிற முடிவுக்கு பல போராட்டங்களுக்கு பிறகு வந்தார்.

‘முன்கூட்டியே படத்தைப் பார்த்தால் இஸ்லாமிய அமைப்புகள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள், அதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும்’ என்கிற  எண்ணம் கமலுக்கு இல்லாமலா இருந்திருக்கும்.

பத்திரிகையாளர்களுக்கு கூட முன்கூட்டி படத்தை போட்டுக் காட்டாமல், இஸ்லாமிய கட்சி தலைவர்களுக்கு, போட்டுக்  காட்டியதின் காரணம் என்ன? (21ஆம் தேதி)

இதில் வேறு ஏதோ உள் நோக்கம், (டி.டிஎச். ல் ஒளிபரப்பு) இருக்குமோ என்கிற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.

‘விஸ்வரூபம் தியேட்டர்களில் வெளியானால்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை  ஏற்படும்; டி.டிஎச். ல் ஒளிபரப்பானால் ஏற்படாதா?’ என்கிற கேள்வியும் எழுகிறது.

ஆக, விஸ்வரூபம் ஏற்கனவே கமல் அறிவித்ததைப் போல், பிப்ரவரி 2 ஆம் தேதி டி.டிஎச். ல் ஒளிபரப்பபடுமா? தடை விதிக்கப்படுமா? அல்லது டி.டிஎச். ஒளிபரப்புக்கு பிறகு தடை நீக்கப்படுமா?  இப்போது விதிக்கப்பட்டிருக்கிற தடை டி.டி.எச். ஒளிபரப்புக்கும் பொருந்துமா?

 என்கிற கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைத்தால்தான், தமிழக அரசின் நடவடிக்கை, இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பை ஏற்று செய்யப்பட்டதா? அல்லது கமலுக்கு ஆதரவானதா? என்பதை உறுதியாக சொல்லமுடியும்.

*

குறிப்பு:

‘விஸ்வரூபம்’ பற்றி அநேகமாக எல்லோருமே கருத்துச் சொல்லிவிட்டார்கள்; நம்ம ‘கருத்து சுதந்திர’ ஞாநி யை தவிர.

டாக்டர் அம்பேத்கரை கேலி செய்த கார்ட்டூனுக்கு ஆதரவாகவும், இன்னும் பலர் கருத்துச் சொல்ல தயங்குகிற பல விசயங்களிலும், தமிழக அரசுக்கு எதிராக கூட துணிச்சலோடு கருத்து சொல்கிற ஞாநி விஸ்வரூபம் விவகாரத்துல என்ன ‘கறாரா’ கருத்து சொல்லுவாருன்னு காத்துக்கிட்டு இருக்கேன்.

ஒருவேளை எதிராக சொல்ல வேண்டியிருந்தால்;  பாரதி, அசோகமித்ரன், கமல்ஹாசன் இவர்களுக்கு எதிராக நான் எப்போதும் எதுவும் பேசமாட்டேன் என்று அமைதியாக இருந்துவிடுவாரா? பார்ப்போம்.

இன்னொரு குறிப்பு;

கமலின் இஸ்லாமிய துருப்புச் சீட்டான Master of All subject மனுஷ்யபுத்திரன், ஏற்கனவே ‘உன்னைபோல் ஒருவன்’ என்ற கமலின் இஸ்லாமிய எதிர்ப்பு படத்தில், பாட்டெழுதி, நடிகர் நாசரைப்போல் மணிரத்தினம், கமல் மனதில் இடம் பிடித்துவிட்டார். அதனால் அவர் கருத்து தெரிந்ததுதான்.

***

விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்

Tamil

23-1-2013 அன்று எழுதியது

றுதியாக, உறுதியாக அல்லது ஒருவழியாக ‘விஸ்வரூபம்’ வெள்ளிக்கிழமை (25-1-2013)  வெளியாக இருக்கிறது.

‘விஸ்வரூபம்’ படத்தை திரையிடுவதில் ஏற்பட்ட சர்ச்சையில், ‘தியேட்டர், டி.டிஎச்’ என்று கமல் செய்த திரைக்கதை; ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவிற்கு பரபரப்பாக அமைந்தது.

‘தமிழ் சினிமாவின் பல புதுமைகைளுக்கு முன்னோடி’ என்று கமலை புகழ்கிறார்கள்; அவரின் ரசிகர்களாகவும் இருக்கிற இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள்.

அதோடு இதையும் அவர்கள் சேர்த்து சொல்லலாம்; ‘படம் வெளியாவதற்கு முன் இதுபோன்ற விளம்பர யுக்திகளை ஹாலிவுட்டில் கூட இதுவரை யாரும் செய்ததில்லை. உலக சினிமாக்களுக்கே புதிய விளம்பர யுக்தியை அறிமுகம் செய்திருக்கிறார் உலக நாயகன்’ என்று.

‘விஸ்வரூபம்’ படத்தின் முதல் விளம்பரம் தினத்தந்தியில் வெளியினாபோது, அந்தப் படத்தின் அரசியல் கண்ணோட்டம், இப்படித்தான் இருக்கும் என்று எழுதியிருந்தேன். (6-6-2012)

அதை தொடர்ந்து ஒரு கேள்விக்கான பதிலையும், இன்னொரு கட்டுரையையும் எழுதியிருந்தேன். அவைகளை இங்கு மீண்டும் பிரசுரிக்கிறேன். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்; நான் எழுதிய படிதான் படம் இருக்கிறதா? என்று. (இருக்கும்)

‘அப்படி இல்லாமல், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக படம் இருந்தால் நீ என்ன செய்வாய்?’ என்கிறார்கள் என்னிடம் பலர்.

நிச்சயம் வருத்தம் தெரிவிப்பேன்.

சரி, அது இருக்கட்டும்; ‘நான் எழுதியபடி படம் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்,?’ நான் கேட்கிறேன்.

**

வேறு வேலைகள் இருப்பதால், எனக்கு இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் சினிமா பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. வாய்ப்பிருக்கிற தோழர்கள் பார்த்துவிட்டு எழுதுங்களேன்.

**

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

Kamal-Hassan-Viswaroopam

 6-6-2012 அன்று எழுதியது

கமல்ஹாசனின் புதியபடம் விஸ்வரூபம்.

சமீபத்தில் வெளியான இதன் விளம்பரத்தில், விஸ்வரூபம் என்கிற வார்த்தை அரபி எழுத்து வடிவத்தில் வெளியாகி இருந்தது.

இந்த வடிவம் இந்த படத்தின் அரசியலை புரிந்து கொள்வதற்கான குறியீடாக எனக்கு பட்டது.

‘தசாவதாரம்’ என்று கடந்த முறை படம் எடுத்த கமல், இந்த முறை அதன் தொடர்ச்சியாக, ‘விஸ்வரூபம்’ என்று வருகிறார்.

வைணவக் கடவுளான திருமால், தசாவதாரத்தில் ஒரு அவதாரத்தின் போதுதான் விஸ்வரூபம் எடுக்கிறார்.

மகாபலி மன்னனின் ஆணவத்தை அடக்க அபூர்வ சகோதரர்கள் அப்பு கமலாக (வாமனராக) அவதாரம் எடுத்த திருமால், மகாபலி மன்னனிடம் சென்று தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் எனக் கேட்கிறார்.

‘தருகிறேன்’ என்று மகாபலி மன்னன் கூற, உடனே அப்பு கமலாக இருந்த திருமால், தசாவதார கமலாக விஸ்வரூபம் எடுத்து தனது ஒரு அடியால் பூமியையும் இன்னொரு அடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாவது அடிக்கு காலை உயர்த்தி மகாபலி மன்னன் தலைமீது வைத்ததாகப் புராண கதை இருக்கிறது.

அதுபோல், இந்த முறை ‘விஸ்வரூப’த்தில் கமல், இஸ்லாமியர்கள் தலையில் காலை வைத்திருப்பார் என்றுதான் அந்த விளம்பரம் உணர்த்துகிறது.

அரபி எழுத்து வடிவம், இஸ்லாமியர்களை குறிக்கிறது. விஸ்வரூபம் என்பது இந்து அடையாளமாக இருக்கிறது.

‘இது என்ன நியாயம்? படம் வருவதற்கு முன்னே இப்படியெல்லாம் எழுதுவது மோசடியல்லவா?’  என்று கமல் ஆர்வலர்கள் கொதிக்கக் கூடும்.

கமலின் முந்தைய படங்களில் உள்ள அரசியலே, இந்த படத்தின் முன்னோட்ட விமர்சனத்திற்கு காரணமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, ஒரு படத்தின் கதையை யூகித்து, பாராட்டி முன்னோட்டமாக எழுதும்போது, அதே முறையில் அதை விமர்சித்து எழுதினால் தப்பா?

உன்னை போல் ஒருவன் படத்தில், தமிழகத்தை இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றிய கமல், இந்த முறை சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதிகளிடமி ருந்து அமெரிக்காவை காப்பாற்றுவார் என்று நினைக்கிறேன்.

தலையில் முக்காடிட்ட கமல், பின்னணியில் அமெரிக்க நகரம், அரபி எழுத்தில் விஸ்வரூபம்… நடுநிலை நாடகத்திற்கு சமாதானப்புறா (சமாதானத்தை வறுத்து தின்பவனே அமெரிக்காகாரன்தான்)

இந்த விஸ்வரூபம் அமெரிக்காவை பாதுகாக்குமா..?

நல்லவனைப்போல் நடித்து கழுத்தறுப்பதில் கில்லாடியான திருமால், அன்று வாமன அவதாரத்தில் இரண்டே அடியில் இன்றைய அமெரிக்காகாரனைப்போல் உலகத்தை பிடித்தான்.

தனது ‘ஜனநாயகம்’ என்கிற அவதாரம் கொண்டு உலகையே வளைக்க துடிக்கிறது இன்றைய வாழும் திருமாலான, அமெரிக்கா என்கிற ஏகாதிபத்திய சர்வாதிகாரம்.

அப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய, கிறித்துவ அமெரிக்காவை, சர்வதேசிய இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து, இந்தியாவை சேர்ந்த  ஒரு வைணவ இந்து காப்பாற்றுகிறார் என்பது கூட கதையாக இருக்குமோ என்கிற எண்ணத்தை ‘விஸ்வரூப’ விளம்பரம் ஏற்படுத்துகிறது.

அந்த வைணவ இந்து, தசாவதாரம் படத்தில் வந்த, சோழர்காலத்து ரங்கராஜ நம்பி  என்கிற நேரடியான அய்யங்கார் அம்பியாகவும் இருக்கலாம்; அல்லது அதே படத்தில், அமெரிக்காவில் இருந்து வந்த விஞ்ஞானி பார்ப்பனரல்லாத வைணவர் கோவிந்த் நாயக்கராகவும் (நாயுடு) இருக்கலாம்.

பார்க்கலாம். நாயகன் அய்யங்காரா? இல்லை அய்யங்கார்களுக்கு அடியாளாக நடக்கிற நாயுடுவா? என்று.

ஆனால், தீவிரவாதி கண்டிப்பாக முஸ்லிமாகத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது. ஒரு வேளை, முழுக்கதையும் தீவிரவாதியை அல்லது கெட்டவனை மய்யமிட்டு இருந்தால், சிகப்பு ரோஜாக்கள் கமல் போல், அந்த பாத்திரத்தில் கமல்ஹாசனே நடிக்கலாம்.

இந்திய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு காரணம், இந்திய இந்து தீவிரவாதம். சர்வதேசிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு பொறுப்பு, அமெரிக்க அரசின் தீவிரவாதம்.

இந்திய இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து, உன்னை போல் ஒருவன் என்று படம் எடுத்தபோது, இந்திய இந்து தீவிரவாதம் பற்றி வாய் திறக்கவில்லை ரங்கராஜ நம்பி.

அதனால் ‘மகா நடிகன்’ என்று மனதார பாராட்டப்பட்டார்.

சர்வதேசிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு காரணம், அமெரிக்க பயங்கரவாதம் என்பதை மறைத்து விஸ்வரூபம் எடுத்தால்,

‘உலகநாயகன்’ என்று உரத்து அமெரி்க்காவிற்கு கேட்கும்படி அழைக்கப்படுவார்.

அவரின் ஆஸ்கர் கனவும் நிஜமாகலாம்.

சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்க சார்பு படமாக விஸ்வரூபம் இருந்தால், அதனால் உடனடியான நன்மை என்னவென்று கேட்கிறீர்களா?

கமல்ஹாசனுக்கு இனி அமெரிக்காவிற்கு விசா உடனே கிடைக்கும்.

இந்திய இஸ்லாமியார் என்பதற்காகவே அப்துல்கலாம், ஷாருக்கான் போன்ற பெரிய தில்லாலங்கடிகளையே பேண்டை அவிழ்த்து சோதனை செய்யும் அமெரிக்கா, இனி கமல்ஹாசனை விருந்தினராக உபசரிக்கும்.

அதை நம்மஊர் அறிஞர்கள் ‘உலக நாயகனை ஹாலிவுட் அழைக்கிறது, இனி ஹாலிவுட் படங்களின் தரத்தை நம்மவர் உயர்த்துவார்’ என்று மொழி மாற்றம் செய்வார்கள்.

‘ஹாசன்’ என்பது இஸ்லாமிய பெயர் என்பதால், கமல்ஹாசனை தன் நாட்டினுள் அனுமதிக்க ஆட்டம் காட்டிய அமெரிக்கா,

‘ஹாசன்’ என்பது இஸ்லாமிய பெயர் அல்ல, அது நம் அடிமையின் பெயர் என்று  புரிந்து கொள்ளும்.

*

6-6-2012 அன்று எழுதியது

*

விஸ்வரூபம் படத்தின் டிரைலரும் கவுண்டமணி வசனமும்

Goundamani

18-07-2012 அன்று எழுதியது

விஸ்வரூபம் திரைப்படத்தின் முதல் டிரைலரைப் பார்த்துவிட்டு நீங்கள் எழுதிய விமர்சனம் உண்மைதான் என்ற எண்ணத்தை, அதற்கடுத்து வந்த டிரைலர்களும் கமலஹாசன் பேட்டியும் ஏற்படுத்தியது.

உங்களுக்கு படத்தின் கதையை யாராவது முன்பே சொல்லிவிட்டார்களா? எப்படி எழுதினீர்கள்?

சையது அலி.

கவுண்டமணி அடிக்கடி பேசுற வசனம், “மொச புடிக்கிற நாய் மூஞ்ச பாத்தா தெரியாதா ”.

அதுபோல் ஒரு படத்தோட டிரைலரை பார்த்த அந்தப் படத்தின் கதைய சொல்றது பெரிய விசயமா?

ஆனாலும் விஸ்வரூபம் படத்தின் முதல் டிரைலரை வழக்கு எண் 18/9 படத்தை பார்த்த  திரையரங்கில்தான் பார்த்தேன்.

முக்காடிட்ட கமல், அரபி வடிவத்தில் விஸ்வரூம், பின்னணியில் அமெரிக்கா, இதைத் தவிர வேறு ஒன்று இல்லை.

அதற்கு முன்பே, தினத்தந்தியில் வந்த விஸ்வரூபம் முதல் விளம்பரத்தை பார்த்தபோதே அந்தக் கதை இதுவாகத்தான் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது.

காரணம், கமல்ஹாசனின் முந்தைய படமான ‘உன்னைப் போல் ஒருவன்’.

*

18-07-2012 அன்று எழுதியது

*

விஸ்வரூபம் வெளியீடு; பிரியாணி கிடைக்குமா?

dsc02240

 11-12-2012 -அன்று எழுதியது

“விஸ்வரூபம்’ படம், வெளியாவதற்கு, 8 மணி நேரத்திற்கு முன்பாக, டி.டி.எச்., முறையில், ஒரே ஒரு காட்சி, “டிவி’யில் வெளியிட, கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். கமலின் இந்த முயற்சி, தமிழ் சினிமாவை அழித்துவிடும் எனவும், இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனவும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்கத்தைச் சேர்ந்தவர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.

இன்னும் சிலரோ, ‘கமல் இந்திய சினிமாவின் வர்த்தகத்தை எங்கேயோ கொண்டு சென்று விட்டார்.’ என்று வரவேற்கிறார்கள்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு போல், ‘சினிமா வியாபாரத்தில் திரையரங்குகளைத் தாண்டிய ஒரு வருமானம்’, என்கிற பாணியில் குதித்திருக்கிற கமலின் இந்த முயற்சிக்கு,

இயக்குநர்களும், தயாரிப்பாளார்களும் ‘படம் ரிலீசாவதற்கு முன்பே நமக்கு லம்பா கிடைக்கும்போல..’ என்ற கனவில், அவர்களும் இதை வரவேற்று இருக்கிறார்கள்.

ஆனால், எனக்கென்னவோ இது கமல்ஹாசனின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் தெரிகிறது.

“விஸ்வரூபம்’ படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு தீவிரமாக இருக்கலாம். அதனால் இந்தப் படத்தை திரையிட்ட முதல் நாளே அதற்கான எதிர்ப்பு அதிகமாகி படத்தில் உள்ள முக்கிய காட்சிகளை நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் ஒட்டுமொத்த படத்தையுமே நிறுத்த வேண்டியிருக்கும் என்பதால், அதை டி.டி.எச் முறையில் டிவி’யில் வெளியிடுவதின் மூலம், தன் பணத்திற்கான ‘மினிமம் கேரண்டி’ என்ற பாணியில்தான் இந்த டி.டி.எச் சேவை.

‘துப்பாக்கி’ படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பிற்கு பின்னேதான் கமலுக்கு இப்படி ஒரு யோசனை வந்திருக்க வேண்டும். ஏனென்றால் அதற்கு முன் வரை, குறிப்பாக நவம்பர் 7 தேதி, தனது பிறந்தநாள் அன்று,

“விஸ்வரூபம்’ படம் தான் ஆசியாவிலேயே ஆரோ 3டி என்ற புதிய சவுண்ட் தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல்படம். சாதாரணமாக இருக்கும் ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலி இரு பக்கவாட்டிலும் இருந்து கேட்கும்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் தலைக்கு மேலிருந்தும் கூட ஸ்பீக்கர்களில் ஒலி கேட்கும். படம் பார்க்கும் போது தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும்.

சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் மட்டும் இந்த தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் 30 தியேட்டர்களில் இந்த தொழில்நுட்பம் உள்ளது. அதேபோல ‘விஸ்வரூபம்’ படம் மூலம் தமிழ்நாட்டிலும் குறைந்தது 30 தியேட்டர்களிலாவது இந்த தொழில்நுட்பம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.” என்று விஸ்வரூபம் காலமாதத்திற்கான காரணம் சொன்னார் கமல்.

விஸ்பரூபம் படத்தை இன்றைய நவீன திரையங்குகளில்கூட பார்ப்பதற்கான வசதிக் கிடையாது. என்று சொன்ன கமல்தான் இப்போது அதை டி.வியில் பார்ப்பதற்கு தீவிரமாக பரிந்துரைக்கிறார். முயற்சிக்கிறார்.

இதில் வெறும் வர்த்தகம் மட்டும் பின்னணியாக இல்லை. நாம் முன்பே குறிப்பிட்டதைப் போல் சர்வதேசிய ‘இஸ்லாமிய தீவிரவாத்திற்கு’ எதிராக அமெரிக்க சார்பு கொண்ட ஒரு அய்யங்கரின் அதிரடி ஆக்ஷன் படமாகத்தான் இருக்கு வேண்டும். வைணவ டச்சஸோடு.

‘என் படத்தை பார்த்து முஸ்லீம்கள் மனம் மாறி, தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே’ என்று, வருத்தப்படுவர் என, கமல்ஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஒரு விசயத்தைக் குறித்து ஆயிரம் விளக்கங்களை விட, ஒரு செயல் அதை தெளிவாக விளக்கிவிடும்.

முக்கியமான இஸ்லாமியத் தலைவர்களுக்குப் படத்தை போட்டுக் காண்பித்தால் அவர்களே படத்தை வரவேற்று அறிக்கை கொடுத்துவிட்டு போகிறார்கள். ஏன் இந்த தேவையில்லாத பதட்டம்? விளக்கம்?

உண்மையிலேயே கமல்ஹாசன் சொல்வதுபோல், விஸ்வரூபம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இல்லை என்றால்..?

ரொம்ப மகிழ்ச்சி.

‘படத்தில் முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் இல்லையெனில், கமல்ஹாசன் முன்னிலையில் பத்தாயிரம் ஏழைக் குழைந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்படும்’ என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

நம்மளும் வரிசையில் நின்னு உலக நாயகன் கையால, ஒரு பிரியாணி பொட்டலத்த வாங்கி சாப்பிட்டு வரவேண்டியதுதான்.

எனக்கென்னமோ, பிரியாணி தானம் நடக்காதுன்னுதான் தோணுது.

பாப்போம் நம்ம ‘அதிர்ஷ்டம்’ எப்படின்னு?

*

11-12-2012 -அன்று எழுதியது.

தொடர்புடையவை:

கமல்ஹாசன் பிராமணர் என்பதாலா…..

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

10 thoughts on “விஸ்வரூபம் தடை; கமலுக்கு ஆதரவான நடவடிக்கை!

 1. உங்களை போன்றவர்கள் ஜாதியை தூக்கி பிடிக்கும் அரசியல் செய்வதால்தான் இஸ்லாமிய தீவிரவாதம் இங்கே தலை தூக்குகிறது. கமலை உங்களுக்கு பிடிக்கவில்லை என்பது வேறு அதற்காக இந்தியாவில் உள்ள கருத்து சுதந்திரத்தை கொல்லும் உங்கள் இஸ்லாமிய ஆதரவு எழுத்து பிற்காலத்தில் பலவிதமான எதிர் வினைகளை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் உணர மறுப்பது ஆபத்தானது. மதிமாறன் அவர்கள் கொஞ்சம் சமூக அக்கறை கொண்டு தன் படைப்புக்களை வெளியிடுவது நலம்.

 2. //‘அப்படி இல்லாமல், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக படம் இருந்தால் நீ என்ன செய்வாய்?’ என்கிறார்கள் என்னிடம் பலர்.

  நிச்சயம் வருத்தம் தெரிவிப்பேன்.

  சரி, அது இருக்கட்டும்; ‘நான் எழுதியபடி படம் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்,?’ நான் கேட்கிறேன்.//

  “”நிச்சயம் வருத்தம் தெரிவிப்பேன்.”” he he. yaen oththukka maatteengalaa??!!

 3. சென்சார் போர்ட் சான்றிதழ் அளித்த ஒரு திரைப்படத்தை தடை செய்வது சரி தானா என்பது பற்றி உங்கள் கருத்து என்ன? ஒரு குழுவினரும், அவர்களது ஆதரவாளர்களும் ஏற்கவில்லை என்பதனால் ஒரு படம் தடை செய்யப் படலாமா?

 4. தோழர் விஸ்வரூபம் பற்றி பல மாதங்களுக்கு முன்பே மிகச்சரியான முன் கணிப்பை எழுதியது நீங்கள் மட்டுமே. உங்கள் பணி தொடருட்டும்; வாழ்த்துகள்.

 5. நண்பர் தாகம் செங்குட்டுவன் ‘ (Thaagam Senguttuvan)
  விஸ்வரூபத்தின் பின்னணியில் காங்கிரஸ் !’என்று தனது facebook ல் ஒரு பேட்டியை வெளியிட்டிருந்தார். அதில் நான் பதிவு செய்த என் கருத்து:

  தங்கர் பச்சான் நடிகைகள் பற்றிய சர்ச்சையில் சிக்கியபோது, மன்னிப்புக் கேட்காவிட்டால் படம் வெளியாவதில் பிரச்சினையாகும் நஷ்டம் ஏற்படும் என்று, தயாரிப்பாளராக மன்னிப்புக் கேட்டார்.

  ஆனால், 100 கோடி முதலீடு என்று சொல்கிறா்கள் விஸ்வரூபத்திற்கு, அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தொடர்ந்து சர்ச்சையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார் கமல்.

  உண்மையில் முதலீடு அவருடையதுதனா? ………? படத்தை வெளியிட வேண்டும்.. வெற்றிக்கரமாக ஒட வைக்க வேண்டும் என்பதையும் தாண்டி, வேறு ரூபத்திற்கு பிரச்சினை மாறிக் கொண்டிருக்கிறது.

  இஸ்லாமியர்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஊடகங்கள் காட்டி, இந்துக்கள் மத்தியில் அவர்களை பற்றி வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், விஸ்வரூபத்திற்கு ஆதராவகவும் இந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக மாற்றுகிற… பிரச்சினையாக திசை திருப்பப்படுகிறது.

  பெங்களுரில் இந்தப் படத்தை இந்து அமைப்புகள் ஆதரித்து இருக்கிறார்கள்.
  சன் டி.வி. செய்தியாளருக்கு பின்‘ பாரத் மாதாக்கி ஜே.. ’ என்று முழக்கமிடுகிறார்கள்.
  இந்தப் பிரச்சின வேறு வடிவத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது.
  அது மிக அபாயகரமானதாக அறிகுறியாக தெரிகிறது.

 6. விஸ்வரூபம் விவகாரத்தில் ஊடகங்கள் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான கண்ணோட்டதை்தையும், கமல் மீது பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறது.

  இந்தப் படம் பற்றிய விவாதங்களில் கூட, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மத சார்ப்பற்றவர்களின் பங்களிப்பை தவிர்த்து, இஸ்லாமியர்களிடமே கருத்து கேட்கிறது.

  ஆனால், கமலுக்கு ஆதரவாக ‘முற்போக்காளர்கள்’, கமல் சார்பு கொண்ட இஸ்லாமிய துருப்புச் சீட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
  இது என்ன நியாயம்?

 7. venkatesan (08:09:35) :
  சென்சார் போர்ட் சான்றிதழ் அளித்த ஒரு திரைப்படத்தை தடை செய்வது சரி தானா என்பது பற்றி உங்கள் கருத்து என்ன? ஒரு குழுவினரும், அவர்களது ஆதரவாளர்களும் ஏற்கவில்லை என்பதனால் ஒரு படம் தடை செய்யப் படலாமா?

  http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/visvarupam-aduthathu-enna/

Leave a Reply

%d bloggers like this: