ராஜாவின் ‘புத்தம் புதுக் காலை’ படமாகிறது; என் கற்பனைகள் களவுப் போகிறது
அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம்பெறாத ‘புத்தம் புதுக் காலை’ பாடல் பற்றி தனது Facebook ல் தோழர் கவின்மலர் எழுதியதும் அது தொடர்பாக என் அனுபவத்தை நான் பகிர்ந்ததும்:
கவின்மலர்:
அலைகள் ஓய்வதில்லை படத்தில் ‘புத்தம் புது காலை’ பாடலை பாரதிராஜா பயன்படுத்தவே இல்லை. என்ன மனுஷன்யா இவர் என்று இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் தோன்றும்.
இப்படியொரு பாடலை எப்படி படத்திலிருந்து தூக்கினார் என்று வியப்பாகவே இருக்கும். 1981ல் வெளியான இந்தப் பாடல் இத்தனை ஆண்டுகள் கழித்தும் புதுசாக நெஞ்சை அள்ளுகிறது. ராஜாவின் பாடலை நல்லவேளையாக அவரே ரீமிக்ஸ் செய்திருக்கிறார். அதே இசைக்கருவிகளை இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் கேட்கும் சுகம் எஸ்.ஜானகியின் குரல் இல்லாத குறையைப் போக்குகிறது. எத்தனை காலம் ஆனால்தான் என்ன? மேகா திரைப்படத்தின் இந்த ‘புத்தம் புது காலை’ கேட்கும் சுகம்…அடடா…!
வே. மதிமாறன்:
//‘புத்தம் புது காலை’ பாடலை பாரதிராஜா பயன்படுத்தவே இல்லை.// நல்லவேளை அவர் படமாக்கல..அந்த பாடலின் சிறப்புக்கு அவர் செய்த மரியாதை அதுவே.
‘புத்தம் புதுக் காலை’ பள்ளிப் பருவ நாட்களிலிருந்து இந்த பாடலோடு நான் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறேன். இருக்கிறேன்.
நண்பர்கள்கூட என்னை திட்டமிட்டு புறக்கணித்தபோதும் அவமானபடுத்தியபோதும் ‘அவுனுங்க கடக்குறானுங்க.. கவலைப்படாதே நான் இருக்கிறேன்.’ என்று என்னை அரவணைத்துக் கொண்ட ராஜாவின் பலப் பாடல்களில் இந்தப் பாட்டுக்கு முக்கிய இடமுண்டு.
ராஜாவின் பாடலை கண்களால் பார்க்காமல், கண்களை மூடி கொண்டு கேட்டால், மூடிய கண்களுக்குள் அலைஅலையாய் விரியும் காட்சிகள். ஒவ்வொருவருக்கும் சொந்தமான உன்னத உலகத்தை சிருஷ்டித்து தருவார் ராஜா.
‘புத்தம் புதுக் காலை’ இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் ஒரு உன்னத உலகத்தை எனக்கு பரிசளிப்பார் ராஜா.
ராஜாவின் இசையை ஏறக்குறைய கொஞ்ச நெருக்கத்தில்கூட படமாக்கிய இயக்குநர்கள் ஒருவரும் இல்லை. மற்றவர்களோடு ஒப்பிட்டால் இயக்குநர் மகேந்திரனும் இயக்குநர் பாரதிராஜாவுதம்தான் கொஞ்சம் முயற்சித் திருக்கிறார்கள்.
என் கற்பனைகளில் விதவிதமாய் விரிந்த ‘புத்தம் புதுக் காலை’ பாடல் களவாடபடப்போகிறது என்பதை நினைக்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. அதற்காகவே அந்தப் படத்தை நான் நிச்சயம் பார்க்கமாட்டேன். தொலைக்காட்சியல் ஒளிபரப்பானாலும் தப்பி ஓட வேண்டியதுதான்
ஏற்கனவே இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் இசையை அப்படியே ‘லிரில்’ சோப்புக்கு ஒரு பெண் குளிப்பது போன்று பயன்படுத்தி பாடாய் படுத்தினார்கள் என்னையும்.
வருத்தமாக இருக்கிறது.‘புத்தம் புதுக் காலை’ பாடல் படமாக போகிறது என்பது.
*
2.9.2013 அன்று Facebook ல் எழுதியது.
தொடர்புடையவை:
‘வீடு’; இளையராஜா-ஜெயகாந்தன் – ‘பெரியார் என்கிற பேய்’
தியாகராஜ சுவாமிகள் சக்கிலியராகவோ, நாயுடுவாகவோ இருந்திருந்தால்…?
நீங்கள் இந்தப் பாடலில் லயித்தது போலவே ராஜ இசையில் எனக்கும் ஒரு பாடல் உண்டு. சந்தத்தில் பாடாத கவிதை என்ற ஆட்டோ ராஜா பாடல் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு விதமாக ஒளி வீசியது. 1. தமிழ் – ஆட்டோ ராஜா: சந்தத்தில் பாடாத கவிதை, 2. மலையாளம் – ஓலங்கள்: தும்பி வா, தும்பக் குடத்தில் துஞ்சத்தா… 3. தெலுங்கு – நிரீக்ஷணா: ஆகாஷம் ஏனாட்டிதோ அனுராகம் ஆனாட்டிதே… 4. இந்தி – ப்பா – கும்சும் கும் கும்சும் ஹுக்யூ தும்… 5. இந்தி – ஔர் ஏக் ப்ரேம் கஹானி: மண்டே தோ உத்கர்…
பொதுவாக இயக்குனர்கள் இசையமைப்பாளர்களிடம் அரைச்ச மாவையே அரைக்காதே என்று சொல்லுவது தான் வழக்கம். ஆனால் மேற்கூறிய பட்டியலில் ப்பா (இயக்கம்: ஆர். பால்கி) மற்றும் ஆட்டோ ராஜா (இயக்கம்: கே. விஜயன்) படங்கள் தவிர்த்து மீதமுள்ள மூண்றும் பாலுமகேந்திரா இயக்கிய படங்கள்! வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் 38 கிலோமீட்டர் தூரம் தினமும் பயணித்த காலங்களில் இந்தப் பாடல்களில் ஏதாவது ஒன்றை ரிப்பீட் மோடில் ஓடவிட்டு கண்களை மூடிக் கொள்வேன். பயணக் களைப்பில்லாமல் வீட்டுக்குக் கொண்டு போய் இறக்கிவிடுவார் ராஜா.
புத்தம் புது பூ பூத்ததே… என்று தொடங்கும் ‘தளபதி’ படப்பாடல் ஒன்றும் இதே போல் தான் தோழரே.
‘புத்தம் புது’ என்று தொடங்கும் பாடல்கள் என்றும் புதியவையாக இருக்க அந்த பாடல்கள் படமாகததுதான் காரணமோ..
நல்ல ரசனை. என் நெஞ்சத்தொட்டு சொல்லு ராசா என்ற பாடலும் இந்த பட்டியலில் உண்டு.