இது எந்த ஊரு நியாயம்?

அண்ணன் திருச்சி சிவா அவர்கள், அண்ணாமலையைக் கூட இழிவாகப் பேசமாட்டார். அப்படியிருக்கப் பெருந்தலைவர் காமராஜரைப் பேசுவாரா?

ஒரு திமுககாரராக கமாராஜருக்கு கலைஞர் செய்த சிறப்பை கண்ணியமான முறையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

காமராஜரைக் கலைஞருக்கு எதிராகச் சித்தரிக்கும் மூடர்களுக்குப் புரிவதற்காக.

சங்கி, தமிழ்த்தேசிய சங்கிகளைப் போல் இதை திமுகவிற்கு எதிராகக் காங்கிரஸ்காரர்கள் அரசியல் ஆக்குவது அநியாயம்.

காமராஜர் முதலமைச்சராகக்கூடாது எனச் சதி செய்தது ராஜாஜியும் காங்கிரசும். மறுத்த காமராஜரைக் கட்டாயப்படுத்தியவர் பெரியார். ஆனால் காமராஜரோ வரதராஜுலு நாயுடுவைப் பரிந்துரைக்க; பெரியார், வரதராஜ நாயுடு இவருவருமே அதைப் புறக்கணித்தனர்.

பிறகு இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்றால்தான் அவர் முதலமைச்சராக நீடிக்க முடியும். காமராஜரை குடியாத்தம் தேர்தலில் நிற்க வைத்து அவரை எதிர்த்து நிற்பவர்களை வாபஸ் வாங்கும்படி பெரியார் கேட்டுக் கொண்டார். கம்யுனிஸ்ட் கட்சி மறுத்தது.

ஆனால், பெரியார் அண்ணாவிடம் கேட்கவில்லை. அண்ணாவே ‘குடியாத்தம் தொகுதியில் திமுக வேட்பாளரை நிறுத்தாது. திமுகவினர் காமராஜருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

கம்யுனிஸ்ட் கட்சியின் கோட்டையான, காமராஜர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஓட்டே இல்லாத குடியாத்தம் தொகுதியில் அவரை வெற்றி பெற வைத்து முதல்வராக்கியது திராவிட இயக்கம்.

பிறகு விருதுநகர் தேர்தலில் கூட அண்ணா, காமராஜருக்கு எதிராகப் பலமான வேட்பாளரை நிறுத்தவில்லை. நாடார்கள் அதிகம் உள்ள தொகுதியில் நாடாரை நிறுத்தினால் காமராஜருக்கு விழுகிற ஓட்டு பிரிந்துவிடும் என நாடார் அல்லாதவரைத்தான் நிறுத்தினார்.

ஆனாலும் காங்கிரசின் தமிழ் விரோதபோக்கு காமராஜரையும் தோற்கடித்தது.

பின்னாட்களில் காமராஜரின் உடல்நிலை கருதி, அவர் எங்கெல்லாம் தங்குகிறாரோ அங்கெல்லாம் ஏசி வசதி செய்து கொடுத்தார் அன்றைய முதல்வர் கலைஞர்.

‘காமராஜ்’ என அறியப்பட்டவரை ‘காமராஜர்’ என அழைத்து ‘அரசு ஆவணங்களில் ‘கமாராஜர்’ என மாற்றியவர் கலைஞர். சென்னையிலும் கன்னியாகுமரியிலும் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியவர் கலைஞர்.

பெரியார் இயக்கம் அதிகமாக ஒடுக்குமுறைக்கு உள்ளானது காமராஜர் ஆட்சியில்தான். சட்ட எரிப்புப் போராட்டத்தின்போது ஏராளமான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும்கூட போலீசின் வன்முறையில் உயிர் இழந்தனர்.

ஆனாலும் பெரியார் காமராஜருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியவர் இல்லை.

அப்போதும் ‘பச்சைத் தமிழர்’ எனக் கொண்டாடியவர் பெரியார்.

காங்கிரசில் இருக்கும்போது திமுகவிற்கு அண்ணாவிற்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்ட காமராஜர் மீது எந்த வெறுப்பும் கொள்ளாமல் காமராஜரை ‘பெருந்தலைவர்’ எனக் கொண்டாடியது கொண்டாடுகிறது திமுக.

மாறாகக் காமராஜருக்கு ஆதரவாகக் காங்கிரஸ் செய்தது என்ன? எமெர்ஜென்சி கொண்டு வந்து அவரை ஹார்ட் ஹட்டாக்கில் கொன்றதைத் தவிர-வே. மதிமாறன்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading