தீபாவளி நாகரீகம் எது?

கதையும் காரணமும்
*
ஒவ்வொரு பண்டிகைக்கும் அதைக் கொண்டாட காரணமாக ஒரு கதை உண்டு. அந்தக் கதை அந்த அந்த மத நம்பிக்கைச் சார்ந்த பின்னணி கொண்டதாக இருக்கும். ஆனால், தீபாவளிக்கு ஒரு கதையல்ல பல கதைகள் உண்டு

இராமன், சீதை, லட்சுமணன் தங்களது வனவாசத்தை முடித்து அயோத்திக்குத் திரும்பினார்கள். அவர்களை வரவேற்ற மிதிலை மக்கள் அந்த நாளை மகிழ்ச்சியுடன் விளக்கேற்றி கொண்டாடினார்கள்.

அந்த நகரமே மக்கள் ஏற்றிய ஒளியில் பிரகாசித்தது. அந்த நாளே தீபாவளி என்பது ஒரு கதை. இதற்கு ஆதாரம் வால்மீகி இராமாயணம்.

*பவுமன் என்ற இயற்பெயர் கொண்ட நரகாசுரனை திருமால் அழிக்க முடிவு செய்தார். திருமால் ஏன் அந்த முடிவுக்கு வந்தார்?

அவன் தேவர்களுக்கு பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்ததாகத் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.

தேவர்கள் என்பவர்கள் தேவலோகத்தில் வாழ்பவர்கள். அவர்களின் தலைவன் தேவேந்திரன்.
அந்த தேவர்களைக் காக்கவே திருமால் நரகாசுரனைக் கொல்ல முடிவு செய்தார்.

அவனுடைய தாய் பூமாதேவி. அவன் தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்படக்கூடாது என பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான். இதனால் அவனைக் கொல்வதில் திருமாலுக்குச் சிக்கலைத் தந்தது.

ஆகவே, மகாவிஷ்ணு தந்திரம் செய்து அவனை வீழ்த்த திட்டமிட்டார்.

நரகாசுரனுடன் போரைத் துவக்கினார். அவன் திருமால் என்கிற மகாவிஷ்ணு மீது அம்பை எய்தினான். அந்த அம்பு பட்டவுடன் அவர் மயக்கம் அடைவது போல் நடித்தார்.

தன் கணவன் மயக்கமடைந்து சாய்ந்ததைப் பார்த்த மகாவிஷ்ணுவின் மனைவி சத்தியபாமா கோபம் அடைந்து நரகாசுரனைப் போருக்கு அழைத்தார்.

இதில் சூட்சமம் என்னவென்றால், சத்யபாமாதான் போன ஜென்மத்தில் பூமாதேவி. அதை சத்யபாமாவும் உணரந்திருக்கவில்லை. நரகாசுரனும் அறிந்திருக்கவில்லை.
அதை அறிந்தவர் சாட்சாத் திருமால் மட்டுமே.

தன் தாய் எய்திய அம்பு, தாக்கப்பட்டதால் சரிந்தான் நரகாசுரன். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என தெரிந்தது. சத்தியமபாமாவும் தன் மகன்தான் நரகாசுரன் என அறிந்து துடித்தார்.

தாயிடம், நான் இறந்த நாளை மக்களும், தேவர்களும் இனிப்பு வழங்கி, விளக்கேற்றி கொண்டாட வேண்டும் என்று வேண்டினான் நரகாசூரன்.
சத்யபாமா மகாவிஷ்ணுவுடன் இணைந்து அவனுக்கு அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்தார்கள்.

இப்படிதான் நரகாசுரன் மறைந்த நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது கிருஷ்ண லீலை புராணம் சொல்லும் கதை.

நரகாசூரனின் தந்தை யார் தெரியுமா?
திருமால்தான்.

எப்போதும் திருமால் தேவர்களுக்காக அரசுரர்களை அழித்துக் கொண்டே இருப்பார்.
அப்படிதான் ஒருமுறை இரணியாட்சன் என்கிற அசுரன் பூமியை அதாவது பூமாதேவியை பாயாக சுருட்டி கடலுக்கடியில் ஒளித்து வைத்துவிட்டான்.

பூமாதேவியை மீட்க திருமால் பன்றி உருவில் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து இரணியாட்சன் என்ற அசுரனை அழிக்கச்சென்றார்.
வெள்ளைக்கார தம்பதிகளுக்கு கருப்பின குழந்தை பிறந்தது போல,

அப்போது ஏற்பட்ட திருமாலின் தொடுதலால் பூமாதேவிக்குப் பிறந்தவன் அசுரனான நரகாசுரன் எனவும் அதே கிருஷ்ண லீலை புராணம் சொல்கிறது.

* தீபாவளி சமணர்களின் பண்டிகை. மகாவீரர் பாவாபுரி நகரத்தில் அரசனின் அரண்மனையில் தங்கியிருந்தபோது, அங்குள்ள மக்களுக்கு இரவு முழுவதும் அறவுரை வழங்கினார்.
அவரின் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது.

இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல் ஆங்காங்கே உறங்கிவிட்டனர். மகாவீரரும் தனது இருக்கையிலேயே வீடுபேறடைந்திருந்தார்.

பொழுதுவிடிந்ததும் விழித்துப் பார்த்த மக்கள் மகாவீரர் வீடுபேறடைந்திருந்ததை உணர்ந்தனர். தகவல் அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அந்த அரசன் மற்ற அரசர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு ஞானஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும் பொருட்டு அந்த நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றிவைத்து விழா கொண்டாடும்படி செய்தான்.

மகாவீரர் விடியற்காலையில் வீடு பேறு அடைந்ததால்தான் தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி சமணர்களிடமிருந்து இந்துக்களிடம் வந்தது என்கிறார் ஆய்வாளர் சீனி. வேங்கடசாமி.

தீபாவளிக் குறித்து இப்படிப் பல கதைகள் சொல்லப்பட்டாலும் இன்று தீபாவளி உலகப் புகழ்பெற்ற பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்க போன்ற நாடுகள் தீபாவளிக்கு விடுமுறை அளித்து வாழ்த்தும் சொல்லுமளவிற்கு செல்வாக்கும் பெற்ற இந்துக்களின் பண்டிகையாக அறியப்படுகிறது.

இந்த நிலைக்குக் காரணம் இந்தியாவில் இங்கிலாந்துக்காரர்கள் ஆண்டபோது அவர்கள்தான் தொழிற்சாலையைத் துவங்கினார்கள்.

அடிமை முறையிருந்து மேம்பட்டு தொழிலாளி என்கிற வர்க்கம் உருவானது.
முதலாளித்துவத்தையும் வெள்ளையர்களே இந்தியாவிற்கு அறிமுகம் செய்தார்கள்.

வருடத்திற்கு ஒருமுறை தொழிலாளர்களுக்கு அவர்களின் உழைப்பில் உபரியாக கிடைத்த ஒரு தொகையை ஊக்கத் தொகையாக அதாவது போனஸாக தரப்பட்டது.

பின்னாட்களில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தந்ததால் தீபாவளிக்குப் பொருளாதார பின்னணி ஏற்பட்டது.

அந்த பின்னணியே தீபாவளிக்கு செல்வாக்கை ஏற்படுத்தியது.

தொழிலாளர்களின் போனஸைக் குறிவைத்தே நகைகள், ஆடைகள், புதிய பொருட்கள் எனப் பல நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களின் வழியாக ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தீபாவளியைக் கொண்டாட மக்களை தயார் செய்ய ஆரம்பித்தார்கள்.

தொழிற்சாலைகள் வளர வளர தீபாவளி சந்தை ஆண்டுக்கு ஆண்டு விரிவடைந்தது.
விளம்பரங்கள், பொருட்களை வாங்கியே ஆக வேண்டும் என மக்களைக் கட்டாயப்படுத்தியது.

நகரங்களில் மட்டும் இருந்த தீபாவளி கிராமங்களிலும் செல்வாக்குப் பெற்றது.

உலகம் முழுக்க ஆங்கிலப் புத்தாண்டும் இப்படிதான் சந்தை படுத்தப்பட்டது.
உலகெங்கும் பண்டிகைகளை வைத்து நடத்தப்படுகிற வணிகத்தை,
‘விழாக்கள், பண்டிகைகள் முதலாளிகளின் வேட்டை நாய்கள்’ எனக் காரல் மார்க்ஸ் அந்தக் காலத்திலேயே விமர்சித்திருக்கிறார்.

தீபாவளி பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலிக்கிற பண்டிகையாக விரும்பப்படுகிறது.

ஆனால், சில நேரங்களில் வசதியானவர்களுக்கு கொண்டாட்டமும் வறுமையில் உள்ளவர்களுக்குத் திண்டாட்டமுமாகவும் மாறிவிடுகிறது.

கடன் வாங்கி கொண்டாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறவர்கள், அந்த சுமையை ஆண்டு முழுவதும் சுமக்கிறார்கள்.

பட்டாசு வெடிப்பதின் மூலமாக ஏற்படுகிற ஒலி மாசும் காற்று மாசும் தீபாவளியைபோலவே பிரம்மாண்டமாக இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

ஒருநாளில் அதிகமான இனிப்பு உட்படப் பல பலகாரங்களை உண்பதால் தீபாவளிக்குப் பிறகு பல உடல் உபாதைகளுக்கு உள்ளாவதையும் பார்க்க முடிகிறது.
காலரா – பிளேக் போன்ற தொற்றுநோய்கள் தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பிறகே பரவி இருக்கிறது என வரலாறுசொல்கிறது.

தீபாவளி கொண்டாடப்படுதற்குப் பல கதைகள் இருந்தாலும் இன்றைய நிலையில் இந்துக்களையும் தாண்டி பிற மதத்தினரும் கொண்டாடும் அல்லது வாழ்த்துச் சொல்லும்பண்டிகையாக மாறியிருக்கிறது.

புது பொருட்கள் முதல் புது சினிமா வரை தீபாவளியைக் கொண்டாட அழைக்கிறது.

உங்களின் தீபாவளி ராக்கெட் குடிசைகளைக் கொளுத்தாமலும் தீபாவளி புகை குழந்தைகள் முதியவர்களின் மூச்சை முட்டாமலும் பட்டாசு நெருப்பு உங்கள் கைகளைச் சுடாமலும்
வெடிச் சத்தத்தின் பேரிடி காதுகளைத் துளைக்காமலும் தீபாவளியைக் கொண்டாடித் தாண்ட வேண்டியது உங்களின் பொறுப்பு.

அதைவிட வீதியில் ஒருநாளில் டன் கணக்கில் குவியும் பட்டாசுக் குப்பைகளை அப்புறப்படுத்தும் பெரிய சுமையைத் துப்புரவுத் தொழிலாளர்கள் மீது சுமத்தாமல் வெடித்தவர்களே அப்புறப்படுத்துவதான் மனிதாபிமானம். நாகரீகம்- வே.மதிமாறன்-20.10.2025.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading