பாவம் அவர்கள் எழுத்தாளர்கள்…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு. மதனுக்கு பாராட்டு விழா நடத்தியதை கேள்வி பட்டது மிகுந்த மன வருத்தமாக இருக்கிறது. என்ன காரணத்திற்காக மதனுக்கு பாராட்டு விழா நடத்தினார்கள்?

-டி. ரமேஷ்.

 

அன்பே சிவம் படத்திற்கு ‘சிறப்பான முறையில்’ வசனம் எழுதினாராம். அதற்காக பாராட்டு விழா என்று சொல்லிக் கொண்டார்கள்.

 பொதுவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த முன்னணி எழுத்தளார்கள், கலைஞர்களுக்கு ‘பிரபலமாக வேண்டும்’ என்ற எண்ணமும், சினிமா ஆர்வமும் தீவிரமாக இருக்கிறது.

 மதன் – பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா பிரபலங்களிடம் மிகுந்த செல்வாக்கு மிக்கவர். அவரை பாராட்டினால் ‘அவர் நம் வாழ்க்கையில் ஒளி ஏத்தி வைப்பார்’ என்கிற எண்ணம் தான் அவருக்கு நடத்திய பாராட்டு விழாவிற்கு காரணமாக இருக்கும்.

அதை நிரூபிப்பது போல் இந்த எழுத்தளார்கள் ஆனந்த விகடன், குமுதம் போன்ற கிசு கிசு பத்திரிகைகளைப் பற்றி எந்த விமர்சனமும் செய்வதில்லை.

இது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தாரின் நிலை மட்டுமல்ல, முற்போக்காக எழுதுவாதக சொல்லிக் கொள்கிறவர்களும் – தகுதி, திறமையான இலக்கியவாதிகளின் நிலையும் இதுவே. 

வெகுஜன பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்களில் பலர், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களோடு அவர்கள் பழகுகிற தன்மை மிகுந்த ‘கலை நுட்பம்’ வாய்ந்ததாக இருக்கும். அன்பு மழை பொழிவார்கள். 

எந்த சமரசமும் இல்லாமல் நேர்மையாக எழுதுகிறவர்களை காரணமே இல்லாமல் குறை சொல்லுகிற இவர்கள், சம்பந்தப்பட்ட பத்திரிகையில் கிசு கிசு எழுதுகிற பத்திரிகையாளராக இருந்தாலும் அவருடைய எழுத்தை புகழ்ந்து அவரிடம் அவர்கள் பேசுகிற தன்மை அவ்வளவு ‘இலக்கிய செறிவு’ உள்ளதாக இருக்கும். 

என்ன பண்ணறது பாவம். அவர்கள் எழுத்தாளர்கள் ஆயிற்றே!

11 thoughts on “பாவம் அவர்கள் எழுத்தாளர்கள்…”

 1. //என்ன பண்ணறது பாவம். அவர்கள் எழுத்தாளர்கள் ஆயிற்றே
  madhan is a mainstream writer who has no idea about Tha Mu E Sa.

 2. பிற்ப்போக்கு சிந்தனையாளர்கள் வைத்திருப்பது ஒரு முற்ப்போக்கு சங்கம். என்ன கொடுமை தோழர்.

 3. அண்ணா, மதனுக்கு தமுஎச அமைப்பு நடத்திய பாராட்டுவிழா என்ற தங்களின் பதிவைப் படித்தேன். அது எங்கு நடைபெற்றது, எந்த நாளில் என்றும் கூறியிருந்திருக்கலாம். ஏனென்றால் அன்பே சிவம் திரைப்படத்திற்கு தமுஎச அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பாரீசில் உள்ள ஒரு புகழ்பெற்ற அரசங்கில் ஒரு பாராட்டு விழாவை நடத்தியது. அந்த விழாவுக்கு நான் சென்றிருந்தேன். நீங்கள் சொல்வது அந்தவிழாவா என்று தெரியவில்லை. ஒருவேளை அதுவாக இருந்தால் நான் உங்களிடம் சொல்வதற்கு சில விஷயங்கள் உண்டு. தமுஎச அன்று நடத்திய விழா, மதனுக்கான பாராட்டு விழா அல்ல. அது அன்பே சிவம் திரைப்படக் குழுவினருக்கான பாராட்டு விழா. சிறந்த ஒரு கருவை எடுத்து சோதனை முயற்சியாகச் செய்துபார்த்து ஒரு தரமான திரைப்படத்தை வழங்கியதற்காக அளிக்கப்பட்ட பாராட்டு விழாதான் அது. வசனகர்த்தா என்ற அடிப்படையில்தான் மதன் அங்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் மகஇக&வினர் அரங்கின் வெளியே மதனுக்கும் தமுஎசவிற்கும் எதிராக கோஷமிட்டனர். அப்போது மேடையேறிய மதன், தன்னால் ஏற்பட்ட சங்கடத்திற்கு வருந்துவதாகத் தெரிவித்தார். அதற்கு தமுஎசவின் மாநிலத் தலைவர் செந்தில்நாதன், யார் யாரை எந்த விழாவிற்கு அழைக்க வேண்டும் என்று மகஇகவோ அல்லது வேறு யாருமே எங்களுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை என்று கூறி இறுக்கத்தை உடைத்தார். சிறப்பான அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரை அங்கு கௌரவித்தார்கள். வணிக ரீதியில் அது தோல்விப்படம்தான். ஆனால் தரத்த்தின் அடிப்படையில் அது ஒரு வெற்றிப்படம் என்றே மேடையேறிய அனைவரும் பேசினார்கள். அந்த விழாவில் மதனை அழைத்தது சினிமா வாய்ப்பு தேடுவதற்காகத்தான் என்று நீங்கள் சொல்வது எந்த ஆதாரத்தின் அடிப்படையில்? அந்த விழாவுக்கு அடுத்தபடியாக எப்போது, எந்த தமுஎச நிர்வாகிகள் அல்லது உறுப்பினர்கள் மதனின் உதவியுடன் சினிமா வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? போகிற போக்கில் ஒரு விமர்சனத்தை வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெகுஜனப் பத்திரிகைகளும் முற்போக்கு எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாங்கிப் போட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அதற்காக வெகுஜனப் பத்திரிகைகளுக்கு எல்லா எழுத்தாளர்களும் கால்பிடித்து விடுவதாக நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பல்வேறு விஷயங்களில் ஆழமான ஆய்வுப் பார்வையோடு பதிவுகளை எழுதும் நீங்கள், சில விஷயங்களை மேம்போக்காக விமர்சிப்பது நன்றாக இல்லை. மதன் பற்றிய கட்டுரை படிக்க சுவையாக இருக்கிறது. வெகுஜனப் பத்திரிகை கட்டுரையின் (?) தரத்தோடும், மணத்தோடும். ஆனால் அதில் ஆய்வுதான் இல்லை. இதனைப்பற்றி யோசிக்க வேண்டுகிறேன். (
  Some technical errors in my system. Thats why im sending it through mail. pls consider it)
  yoursDurai

 4. திரு. துரை அவர்களே!

  ராசா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வுக்கு நேரில் சென்று வந்த பிறகும் நீங்கள் இவ்வாறு கேட்பது கேலிக்குரியது. நடந்த விசயத்தை அப்படியே திரித்து மாற்றி எழுதுகிற திறமை முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னனி எழுத்தாளர்களுக்கே உரியது. அந்த சாயல் உங்களது எழுத்திலும் வெளிப்படுகிறது. ஒன்று நீங்கள் தமுஎச உறுப்பினராக இருக்க வேண்டும், இல்லையென்றால் தமுஎசவின் தயாரிப்பாக இருக்கவேண்டும்.

  அது அன்பே சிவத்திற்கு நடந்த விழா அன்று. அன்பே சிவம் திரைப்படத்தின் வசனகர்த்தா என்கிற முறையில் மதனுக்கும், இயக்குனர் சுந்தர்.’ச்சீ…..’க்கும் நடைபெற்ற பாராட்டுவிழாதான். அவ்விழாவில் தமுஎச முக்கிய தலைவர்களில் ஒருவரானா மேலாண்மை பொன்னுசாமி (பாப்பாப்பட்டி, கீரிப்பட்டிக்கு உண்மையறியும் குழுவின் சார்பாக சென்று வந்து ஆதிக்க சாதிவெறியை நியாயப்படுத்தியவர்….) மதனே வெட்கித் தலைகுனியும் அளவிற்கு அவனை ஒரு கம்யூனிஸ்டைப் போலவும் பார்ப்பன எதிர்ப்பாளரைப் போலவும் உருவகப்படுத்தி புகழ்ந்து தள்ளினார்.

  அன்பேசிவம் திரைப்படம் மிகவும் தரமான படம் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அது உங்களது ரசனையின் தரத்தைத்தான் காட்டுகிறது. அப்படத்தில் நடித்த தமுஎச காரர்களுக்கும் ஒரு சில சிபிஎம் கட்சியினருக்கும் மட்டும்தான் அப்படம் பிடித்திருக்கும். ஏனெனில் அப்படம் சிபிஎம் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலை நியாயப்படுத்திய ஒரு படம்.

  /////தமுஎசவின் மாநிலத் தலைவர் செந்தில்நாதன், யார் யாரை எந்த விழாவிற்கு அழைக்க வேண்டும் என்று மகஇகவோ அல்லது வேறு யாருமே எங்களுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை என்று கூறி இறுக்கத்தை உடைத்தார். /////// என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

  உண்மையில் மகஇக வின் துண்டுப் பிரசுரம் தமுஎசவின் சந்தர்ப்பவாத தலைமையின் மீது வீசப்பட்டது என்பதை உணர்த்துவதாக இருந்தது, செந்தில்நாதனுடைய பேச்சு. (தமுஎச இளைஞர்களுக்கு நாம் என்ன பதில் சொல்வது! என்ற பதற்றத்தை உள்ளடக்கிய) அது எந்த இறுக்கத்தையும் உடைக்கவில்லை, மாறாக செந்தில்நாதனின் இறுக்கத்தைத்தான் வெளிப்படுத்தியது.

  ///////அந்த விழாவில் மதனை அழைத்தது சினிமா வாய்ப்பு தேடுவதற்காகத்தான் என்று நீங்கள் சொல்வது எந்த ஆதாரத்தின் அடிப்படையில்? அந்த விழாவுக்கு அடுத்தபடியாக எப்போது, எந்த தமுஎச நிர்வாகிகள் அல்லது உறுப்பினர்கள் மதனின் உதவியுடன் சினிமா வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?/////// என்று நீங்கள் மதிமாறனைக் கேடிருக்கிறீர்கள்.

  தோழர் மதிமாறன் இவ்வாறு குறிப்பிட்டிருந்திருந்தால் இது சரியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அது கிடைக்கப் போகும் வாய்ப்புக்கான பாராட்டுவிழா மட்டுமல்ல (மேலாண்மை பொன்னுச்சாமிக்கு வேண்டுமானால் இது பொருந்தும்) ஏற்கெனவே பெற்ற வாய்ப்புக்கானா நன்றியை வெளிப்பாடுத்திய பாராட்டுவிழாவாகவும் இருந்தது.

  தமுஎச வின் முக்கியத் தலைவரான பிரளயன் என்பவரை கமல்ஹாசனிடம் அறிமுகம் செய்துவைத்தது மதன்தான் என்று பிரளயனே நன்றி பொங்க குறிப்பிட்டுள்ளார். அதுபோக அந்த படத்தில் நடித்த தமுஎசவினரின் பட்டியலே உங்களுக்குப் போதுமானது. இன்னும் கமல்ஹாசனின் அலுவலகத்துக்கு முன்பாக தமுஎச நபர்கள் நடிக்க, பாடல் எழுத, துணை இயக்குனராக வாய்ப்புக்காக வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  இது போக, தமுஎசவின் முன்னனி பேச்சாளர்களாக பாரதி கிருஷ்ணகுமார் தன்னுடைய வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்க நடவடிக்கைகளைக் பலநாள் முடக்கிவிட்டு என்ன புரட்சியா செஞ்சாரு? பாரதி ராஜாகிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

  பார்த்துக்கிட்டிருக்கிற வேலையை விட்டுவிட்டு கட்சிப் பணிகள் பார்க்க முழுநேர ஊழியராக வரவிரும்பாத இவர்கள், சினிமா வாய்ப்புக்காக வேலையையே விடத்துணியிகிறார்கள் என்றால் இவர்களெல்லாஅம் ஒரு முற்போக்கா? கம்யூனீஸ்ட்டா?

  – கலைவேந்தன்.

 5. துரை அவர்களுக்கு மேலும் சில கேள்விகள்!

  தோழர் மதிமாறன் தனது பதிவில் பம்பாய் திரைப்படத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். மணிரெத்தினத்தின் இந்துவெறிக் கண்ணோட்டத்தைக் கிழித்து கோவை மாவட்ட தமுஎசவின் சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடந்து முடிந்தவுடனேயே வேறொரு தமுஎச மேடையில் அதே பம்பாய் திரைப்படத்தைப் பாராட்டி மணிரெத்தினத்துக்கும் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. இதுபற்றிய உங்களது கருத்துக்களையும் நீங்கள் பதிவு செய்தீருக்கலாம்!

  இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ என்ற ஆபாச திரைப்படத்துக்காக மதுரை தமுஎச சார்பில் கண்டனங்கள் வெளிவந்தவண்ணமிருந்த அதேவேளையில் சென்னை தியாகராயநகரில் அதே தமுஎச சார்பில் சங்கரை மேடையேற்றி பாராட்டியதோடு விருதுகளும் வழங்கினார்கள். இதுபோல ஏராளமான செய்திகளை அடுக்கிக் கொண்டே போகலாம். தமுஎசவாக இருக்கட்டும் அல்லது அதன் அரசியல் தலைமையான சிபிஎம் கட்சியாக இருக்கட்டும் அவற்றின் கீழ்மட்ட ஊழியர்கள் பார்ப்பனீயத்துக்கு எதிராக சரியான நிலைப்பாட்டிலிருந்தால், அவர்களின் முகத்திலறைவதைப்போல் அவ்வமைப்புகளின் தலைமைகள் இதுபோன்று நேர்மாறாக நடந்து கொள்வது வாடிக்கையானதொரு செயலே!

  எனவே, லயன்ஸ் கிளப், போன்ற அல்லது நீங்கள் குறிப்பிட்ட தமுஎசவின் தலைவர் செந்தில்நாதனைப் போன்றவர்கள் நிர்வாகிகளாக இருக்கும் ரோட்டரி சங்கம் போன்ற மனமகிழ் மன்றம்தான் தமுஎச கூடாரமும் என்ற தோழர் மதிமாறனின் விமர்சனம் மிகவும் சரியானதே.

  -கலைவேந்தன்.

 6. முண்டம் மதிமாறன்,மற்றும் முண்டம் கலைவேந்தன்,

  உங்களைப் போன்ற ம க் இ க வெறி நாய்களை பாராட்டினாத் தான் அவங்க எழுத்தாளர்களா?என்ன அயோக்யத்தனம் இது?சி பி எம் குப்பையை விட கேவலமான குப்பை இந்த ம க் இ க.

 7. அன்புமிகு நண்பர் கலைவேந்தன் அவர்களே,

  நான் எழுதியிருந்த கடிதம் மீதான தங்களின் விமர்சனத்திற்கு நன்றி. உங்கள் கடிதத்தின் பிற்பகுதியில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் முற்பகுதியில் முரண்பாடுகள் உள்ளன. நான் தமுஎச உறுப்பினரா அல்லது தயாரிப்பா என்று கேட்கிறீர்கள் இல்லையா? கேள்விக்கு பதில் சொல்வதுதான் நியாயம். நான் தமுஎசவில் உறுப்பினராக இருந்தேன். 2000ல். இப்போது இல்லை. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேன் இல்லையா? நல்லது. ஆனால் இந்தக் கேள்வியும் பதிலும் தேவையற்றவை என்பது எனது கருத்து.

  தமுஎச எடுத்த ஒரு நிலைபாட்டை ஆதரிப்பவன் ஒரு தமுஎச உறுப்பினராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எனவே தங்களது ஆய்வுப் பார்வையை எனது அடையாள அட்டை மீது செலுத்தாமல் எனது கருத்தின்மீது மட்டும் வைக்க வேண்டுகிறேன்.

  மேலாண்மை பொன்னுச்சாமி நல்ல எழுத்தாளரா என்றால் நான் ஆம் என்றுதான் சொல்வேன். எளிமையான நடையில் யதார்த்தவாதத்தை எழுதுகிறவர் அவர். குறைந்த படிப்பறிவுடையவர். அவரது சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் என்ற நூல் அறிமுகப் படைப்பாளிகளுக்கு மிகவும் நல்ல கையேடு என்று நம்புகிறேன். அதற்காக அவர் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று நான் சொல்லவில்லை. மதன் ஒரு கம்யூனிஸ்ட் அல்லர் என்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். மதனுக்கும் தெரியும். மதனைத் தவறாகப் புரிந்துகொண்டால் அது நிச்சயம் மேலாண்மை அவர்களின் தவறுதான். மறுக்கவில்லை.

  அன்பே சிவம் திரைப்படம் ஒரு தரமான படம் என்று நான் மட்டும் சொல்லவில்லை. நல்ல திரைப்படத்தைப் பார்த்து ரசிக்கிற அனைவரும் சொல்கிற கருத்துதான் அது. அதற்காக அந்தப்படத்தை ரசிக்கிற அளவுக்கு எனது ரசனை மட்டமானது என்று நீங்கள் சொல்வது நாகரீகமான விமர்சனமா என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். நான் ஒரு மட்டமான ரசனைக்காரன் என்று நீங்கள் தனிப்பட்ட முறையில் என்னைப்பற்றி ஒரு கருத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டு விமர்சனம் செய்தால் அதன்பின் என்னைப்பற்றி நீங்கள் என்ன சொன்னாலும் அது எனக்கு எதிராகத்தானே இருக்கும்? பரவாயில்லை. (நான் சிபிஎம் கட்சியில் உறுப்பினரா என்று அடுத்த கடிதத்தில் அவசியம் கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்).

  பாரதி கிருஷ்ணகுமார் வங்கிப்பணியை விட்டுவிட்டு பாரதிராஜாவிடம் தாஜ்மகால் படத்திற்கு உதவி இயக்குநராகப் பணி புரிந்தது அனைவருக்கும் தெரிந்ததே. கட்சிக்காகவோ அல்லது கொள்கைக்காகவோ வேலையைத் துறக்காமல் பிழைப்புக்காக மட்டும் துறந்திருப்பது என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்தான். மற்றபடி தமுஎச உறுப்பினர்கள் கமல்ஹாசன் அலுவலகத்தில் தவம் கிடப்பது குறிப்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. இதுகுறித்த மேலதிக விபரங்கள் தெரியவந்தால் அவசியம் நான் எழுதுவேன்.

  எனக்கு இயல்பாகவே ஒரு சந்தேகம். அதனைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். தமுஎச புள்ளிகள் அன்பே சிவம் படத்தில் நடித்திருந்தார்கள் அல்லவா? அதற்காக அந்தப் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது என்கிறீர்கள். சரி. ஆக, இனி வரப்போகிற வாய்ப்புகளை எதிர்நோக்கியும் , கொடுத்த வாய்ப்புக்கு நன்றி தெரிவிக்கவும் பாராட்டு வழங்கப்பட்டது. சுந்தர்சி&க்கும், கமல்ஹாசனுக்கும் தமுஎசவை அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளைக் குளிர வைத்துப் படம் எடுக்க வேண்டிய தேவை என்ன என்பது எனக்குப் புரியவில்லை. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

 8. திரு. துரை அவர்களே!

  தங்களுடைய மறுப்பைத் தவறாமல் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. இது ஒன்று மட்டும் போதுமானது நீங்கள் சிபிஎம் கட்சியைச் சார்ந்தவரில்லை என்பதற்கு! ஏனெனில் சிபிஎம், தமுஎச காரர்கள் எந்தக் கேள்விக்கும் பதிலளித்து பழக்கமில்லாதவர்கள். மேற்கண்ட தோழர் மதிமாறன் அவர்களுடைய கட்டுரையை அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நான் அனுப்பினேன். இதுவரை எந்த விதமான மறுப்பும் வரவில்லை. தமுஎசவின் ஒரேயொரு தோழர் மட்டும் இவ்விமர்சனம் மிகவும் சரியானது என்று பதிலளித்திரூந்தார்.

  தமுஎச, சிபிஎம் பிழைப்புவாதிகளில் பாரதி கிருஷ்ணகுமாரையும் மேலாண்மை பொன்னுச்சாமியையும் மட்டும் நீங்கள் கண்டித்து ‘Same side Goal’ போட்டுள்ளீர்கள் அதற்கு நன்றி.

  ////////தமுஎச எடுத்த ஒரு நிலைபாட்டை ஆதரிப்பவன் ஒரு தமுஎச உறுப்பினராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எனவே தங்களது ஆய்வுப் பார்வையை எனது அடையாள அட்டை மீது செலுத்தாமல் எனது கருத்தின்மீது மட்டும் வைக்க வேண்டுகிறேன். /////////

  ஆதிக்கசாதி வெறியை பகிரங்கமாக ஆதரிக்கும் மேலாண்மை பொன்னுச்சாமியை தலைவராகக் கொண்டிருக்கும் அவ்வமைப்பை ‘முற்போக்கு’ எழுத்தாளர்கள் என்று நீங்கள் குறிப்பிட்டது; அன்பேசிவம் என்கிற சிபிஎம் கட்சியின் பிரச்சார படத்தை வெகுஜன ரீதீயிலான ‘தரமான’ படம் என்றும் குறிப்பிட்டது; எல்லாவற்றுக்கும் மேலாக அவ்விழா மதனைப் பாராட்டுவதற்காக நடத்தப்பட்டதன்று என்றெல்லாம் நீங்கள் மேலே திரித்துக் கூறியவற்றை வைத்துப் பார்க்கையில் என்னைப் போன்ற எளியோரின் பார்வைக்கு தமுஎச, சிபிஎம் காரராகத்தான் தோன்றியது. ஒருவேளை ‘முற்போக்கு’ பார்வையுடையவர்களுக்கு மட்டும்தான் உங்களது ‘நடுநிலை’ தெரியும் போலிருக்கிறது!

  //////////எனக்கு இயல்பாகவே ஒரு சந்தேகம். அதனைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். தமுஎச புள்ளிகள் அன்பே சிவம் படத்தில் நடித்திருந்தார்கள் அல்லவா? அதற்காக அந்தப் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது என்கிறீர்கள். சரி. ஆக, இனி வரப்போகிற வாய்ப்புகளை எதிர்நோக்கியும் , கொடுத்த வாய்ப்புக்கு நன்றி தெரிவிக்கவும் பாராட்டு வழங்கப்பட்டது. சுந்தர்சி&க்கும், கமல்ஹாசனுக்கும் தமுஎசவை அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளைக் குளிர வைத்துப் படம் எடுக்க வேண்டிய தேவை என்ன என்பது எனக்குப் புரியவில்லை. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?/////////

  தொடர்ச்சியாக உங்களது ‘இயல்பான’ இந்த சந்தேகத்துக்கு வருவோம். அப்படத்திற்கு “தமுஎசவின் பிரளயன் உதவி இயக்குனராக வந்த பிறகுதான் திரைக்கதையிலேயே பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தோம்” என்று மதனே சொல்லியிருக்கிறார். இது அவர்களுக்குள்ளான ஒரு Give and Take Policy மட்டுமே!

  -கலைவேந்தன்

 9. அன்புமிகு கலைவேந்தன் அவர்களே,

  நமது விவாதம் ஆரோக்கியமாகச் செல்வது குறித்து மகிழ்வடைகிறேன். தமுஎச&வாக இருந்தாலும் சரி, வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் சரி அவர்களுக்கென்று ஒரூ நியாயம் வைத்திருக்கிறார்கள். அதையும்தாண்டி பொதுவான நியாயம் என்று ஒன்று உண்டல்லவா? அதன் அடிப்படையில்தான் நான் எனது கருத்துக்களை முன்வைக்கிறேன். மேலாண்மை மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோரை மட்டும் தான் மறுப்பதாக எழுதியிருந்தீர்கள். இல்லை. இந்த விவாதத்தில் அவர்களைப் பற்றிப் பேசியதால் நானும் என் கருத்தைச் சொன்னேன். முற்போக்கு கொள்கையிலிருந்து பிறழ்கிற எவரையும் எதற்காகவும் ஆதரிக்கத் தேவையில்லை என்பதுதான் எனது கருத்து. மணிரத்னம் குறித்த தங்களின் கருத்து எனக்கு உடன்பாடு உடையதுதான். அவர் எப்போதும் வானத்தில் இருந்துகொண்டே பூமியைப் பார்ப்பவர். அதனால்தான் யதார்த்தம் என்பதே மிகக்குறைச்சலாக இருக்கும் அவர் படங்களில். பம்பாய் திரைப்படம் குறித்த உங்கள் கருத்தைக் கூற வேண்டுகிறேன். சங்கருக்கு எந்தத் திரைப்படத்திற்காக சென்னையில் பாராட்டு விழா நடந்தது என்பது குறித்து எழுத வேண்டுகிறேன். நல்ல செயல்களை ஒருவர் செய்யும்போது பாராட்டுவதும் அவரே தவறு செய்யும்போது கடுமையாக எதிர்ப்பதும் சரிதானே? (நான் பாய்ஸ் படத்தை நல்ல படம் என்று சொல்லவில்லை). அன்பே சிவம் படத்தை தாங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்று விளக்க வேண்டுகிறேன். நானும் அந்தக் கோணத்தில் அப்படத்தைப் பார்த்துப் பிறகு எழுதுகிறேன்.

Leave a Reply