‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4

periyar-04

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1

‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3

கவி, சிங்கப்பூர்

மிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பெரியார்,

அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவ பெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்ட தென்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது. எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது.

இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது.

வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம் மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள் கேடு பயக்கும் கருத்துக்கள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால் தான் வடமொழியில் நம்மை மேலும் மேலும அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால் தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழை விட மேலான ஒரு மொழி இந் நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல.

தனித் தமிழ் குறித்தெல்லாம் பெரியார் இங்கு கூறியுள்ளார். இவற்றையயல்லாம் பெ.மணியரசன் படித்தாரா? இல்லையா என்ப தெல்லாம் தெரியவில்லை. ஆனால் தமிழ்க் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறியதை மட்டும் இவரும் தமிழறிஞர்களும் மேற்கோள்காட்டி கூறி வருவது இவர்களின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்பு கூட அல்ல. தமிழில், அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்கள் இல்லை. அற்புதச் சக்திகள் நிறைந்த மொழி என்பதைக் கூட அழகாக ஆனால் ஆழமாக மறுக்கிறார் பெரியார்.

இதே போல் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான். ஏன்? நம் தாய் நம்மைப் பெற்றெடுத்தும் நம்மை தெலுங்கன் வீட்டிலோ , துருக்கியன் வீட்டிலோ விட்டிருந்தால் நாம் தெலுங்கோ அல்லது உருது மொழியோ பேசுவோமா? அல்லது நம் தாய் தமிழ் பேசியதன் காரணமாக, நம்மைப் பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக வெளிவருமா? என்று தாய்மொழி என்ற கருத்துருவையே கேள்விக்குள்ளாக்கும் பெரியார்,

நம் தாய் குழந்தையாக இருந்த போது பேசியதென்ன? பாய்ச்சி குடிக்கி, சோச்சி தின்னு, மூத்தா பேய், ஆய்க்கு போ, என்றுதானே பேசியிருப்பாள்! இப்போது நாம் பாச்சி , சோச்சி, மூத்தா, ஆயி என்றா பேசுகிறோம்? இந்தக் காலத்தில் நம் தாய்கள் பேசுகிற மொழியே அதிசயமாயிருக்கும். ஆதலால் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும்  அறியாமை என்று தோன்றவில்லையா? என்று விளக்குவதையும் தமிழறிஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

https://i0.wp.com/www.periyar.org/html/Periyar.jpg?w=1170

தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் என்ற பேர்கள் வந்த பிறகு தானே நம் பெண்கள் கணவனின் கைப்பொம்மைகள் ஆனார்கள்? அதன் பிறகுதானே சிறிது சச்சரவு நேர்ந்து தன் வீட்டுக்கு வந்த தன் மகளைப் பார்த்து. ஆமாம்மா! உன்னைக் கன்னிகாதானம் செய்தாயிற்றே! உன்னை உன் புரு­னுக்குக் கொடுத்துவிட்டோம். தானம் செய்து விட்டோமே!  இனி, உனக்கு இடம் அவன் இருப்பிடம் தானம்மா என்று கூறும் தகப்பன்மார் தோன்றினார்கள். கன்னிகாதானம் என்பதற்குத் தமிழ் வார்த்தை ஒன்று கண்டு பிடியுங்களேன். திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை என்றுதானே கூறுகிறார். அதாவது புரு­னும் மனைவியும் சிநேகிதர்கள், நண்பர்கள் என்றுதானே அதற்கு பொருள்.

மோட்சம் என்பதற்குத் தமிழ் வார்தை ஏது? மோட்சத்தை நாடி எத்தனை தமிழர் காலத்தையும் கருத்தையும் பொருளையும் வீணாக்குகிறார்கள். கவனியுங்கள். மதம் என்பதற்குத் தமிழில் மொழியேது? மதம் என்ற வார்த்தையால் ஏற்பட்டதுதானே மதவெறி?  நெறி, கோள் என்றால், வெறி ஏது? பதிவிரதாத தன்மை என்பதற்காவது தமிழில் வார்த்தையுண்டா? பதிவிரதம் என்ற வார்த்தை இருந்தால், ‘சதி விரதம் அல்லது மனைவி விரதம் என்கின்ற வார்த்தையும் இருக்கவேண்டுமே! இதுவும் வடமொழி தொடர்பால் ஏற்பட்ட வினைதான். ஆத்மா என்ற வார்த்தைக்குத் தமிழில் மொழியேது? ஆத்மாவால் எவ்வளவு மூட நம்பிக்கைக் களஞ்சியங்கள் நம் புலவர்கள், அறிஞர்களிடையேயும் புகுந்துவிட்டன?

தமிழ்நாட்டு மக்களின் வழக்கங்கள் யாவும் பெரிதும் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை என்ற அடிப்படையின் மீதும், பகுத்தறிவு  என்ற அடிப்படையின் மீதும் அமைந்திருக்கக் காண்கிறோம். நம் நாட்டுச் சீதோஷ்ண நிலையைப் பொறுத்தும் கருத்துக்களின் செழுமையைப் பொறுத்தும் நமக்குத் தமிழ்தான் உயர்ந்த மொழியாகும். வடநாட்டானுடைய ஆச்சாரங்கள், தர்மங்கள், ஆசாபாசங்கள் முற்றிலும் நமக்கு மாறுபட்டவை.

மூட நம்பிக்கை மொழி என்று ஒன்று இல்லை என்று கூறிய பெ.மணியரசன் ஆங்கில மொழியிலும் மூட நம்பிக்கை கருத்துக்கள் என்று அடுத்த வரியிலேயே ‘பல்டி’ யடித்தவர் மேலே பெரியார் கூறியவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

தொடரும்

14 thoughts on “‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4

 1. இதையும் படித்து விட்டு தந்தை பெரியாரை மீண்டும் தமிழ் தேசியத்திற்கு எதிராக யாரவது நிறுத்தினால் அவர்கள் தமிழ் தேசியம் என்ற பெயரில் பார்ப்பன மற்றும் ஆதிக்க ஜாதி என்னும் வேசி தனத்திற்க்காக விலை போனவர்கள் இல்லையெனில் அதன்மேல் உள்ள குருட்டுதனத்தின் மேல் உள்ள விசுவாசமே (சுய இன்பம் காண்பது போல்) ..

  நன்றி தோழர் கவி மற்றும் தோழர் மதிமாறன் அவர்களுக்கு

  வாழ்த்துகள்..

  தோழமையுடன்

  முகமது பாருக்

 2. “மூட நம்பிக்கை மொழி என்று ஒன்று இல்லை என்று கூறிய பெ.மணியரசன் ஆங்கில மொழியிலும் மூட நம்பிக்கை கருத்துக்கள் என்று அடுத்த வரியிலேயே ‘பல்டி’ யடித்தவர்….” – என்று எழுதுகிறீர்களே, இதில் என்ன ‘பல்டி’ யைக் கண்டீர்கள்? நீங்கள் படித்தும், சிந்தித்தும், தெளிந்துந்தான் எங்களுக்காக எழுதுகிறீர்கள் என்று நாங்களும் உங்களுடைய எழுத்துக்களைப் படித்துக் கொண்டு வருகிறோம். என்ன ‘பல்டி’ யைக் கண்டீர்கள் ? எங்களுக்குச் சொல்லவும். மேடைகளில் வார்த்தைகளைப் போட்டு உருட்டி வித்தைக் காட்டுவது திராவிட இயக்கங்களின் அரசியல் வாழ்வு. அது, அறியாத பாமர மக்களை ஏய்ப்பதற்காகவும், அறிந்தவர்களின் பொழுது போக்கிற்காகவும் பேசப்படுவது. தங்களிடம் அவற்றை நாம் எதிர்பார்ப்பதில்லை. தாய்மொழி என்பது பிடிவாதம் அன்று; அது சுயமரியாதையின் முதன்மைப்படி; சுயமரியாதையின் இன்றியமையாத போர்வாள் ஆகும்; பெரியாரின் மொழிப்பார்வை குறைவு பட்டது; அறிவின் விசாலமன்று; அறிவின் இன்மை. ராமசாமி அவர்களுக்கு வாய்க் கொழுப்பு அதிகம். தேவையெனில் பிறகு எழுதுகிறேன்.
  – ஆ.தமிழ்ச்சுடர்

 3. இதை படித்த பிறகு சொலுங்க யார் தமிழுக்கு எதிரி??

 4. மொழி குறித்து பெரியாரை விமர்சனம் செய்வோர் “காட்டுமிராண்டி மொழி” என்பதை மட்டுமே பிடித்து தொங்குகின்றனர். பெரியார் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து கூறியுள்ளவை அருமை.

  இந்த பதிவு பெரியாரின் கருத்துக்கள்/எழுத்துக்களை தமிழக இளைஞர்களுக்கு அறிமுகம் செய்யும் விதத்தில் எளிமையாக, தெளிவாக உள்ளது.

 5. தமிழ்ச்சுடர் பினூட்டம் படித்தவுடன் கொஞ்சம் குளறுபடி இருப்பது புரிகிறது.
  எந்த மொழியுமே மூட நம்பிக்கை மொழி என்று இருக்க முடியாது.

  மொழியில் நல்ல, கெட்ட, அறிவார்ந்த, மூடத்தனமான, தரமுள்ள, தரங்கெட்ட கருத்துக்களை எழுத முடியும். ஒரு கட்டுரை, கவிதை எப்படிப்பட்டது என்பது அதை எழுதுபவரைப் பொறுத்தது. எனவே பெரியார் மொழியை மூடத் தனமானது என்றோ அல்லது என்றோ சொல்லி இருக்க மாட்டார் என நம்புகிறேன்.

  நீங்கள். முன்னமே கூறியது போலே மொழியை ஒரு கருவியாக மட்டும் பார்க்காமல் உயிரினும் மேல் என்றெல்லாம் பேசி உணர்வு உருவம் கொடுப்பது தான் தவறு.

 6. ஐயா தமிழ்சுடரே,

  யாருக்கு வாய்கொழுப்பு என்பது, தங்களின் பின்னூட்டத்தை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். பெரியாரை விமர்சனம் செய்யலாம். அதற்காக “வாய்கொழுப்பு” என கூறுவது அவதூறு.

  பெரியார் தாய்மொழி பற்றிருக்க கூடாது என கூறவில்லை. தமிழ் மொழியின் அருமை பெருமைகளை பட்டியலிட்ளார். இதை விட வேறு என்ன பெருமை வேண்டும் எம் தமிழ் மொழி பற்றி. முனைவர் பட்டம் பெற்றவர்கள், தமிழ் அறிஞர்கள் மட்டுமே தமிழை விமர்சிக்கலாம் என்பது குறுகலான வாதம்.

  பெரியாரின் கருத்துக்களையோ அல்லது செயல்பாட்டையோ ஆதாரத்துடன் விமர்சிக்கலாம். அது ஆக்கப்பூர்வமான விமர்சனம். அதை விடுத்து பெரியாருக்கு “வாய்க்கொழுப்பு” என கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

 7. பேர்ல மட்டும் சுடரை வச்சுக்கிட்டு , மத்ததை எல்லாம் (புத்தியை) அணைசுட்டுட்டார் போல..

  //ராமசாமி அவர்களுக்கு வாய்க் கொழுப்பு அதிகம். தேவையெனில் பிறகு எழுதுகிறேன்.//

  தோழர் சுனா பானா சொன்னதைப் போல வன்மையாக கண்டிக்கத் தக்க வரிகள்..

  தந்தை பெரியார் என்ற சமூக போராளியின் மேல் உங்களுக்கு (தமிழ்சுடருக்கு) ஏன் இந்த வன்மம்.

  நீங்கள் உண்மையில் தமிழ்சுடர் அல்ல தமிழ்ப்பார்ப்பணன் ( பார்ப்பணன் = மனிதம் உள்ள மனிதர்களை எதிர்க்கும் சக்தி ) ..நீங்களும் முனைவருனு போடலாமே.

  தோழமையுடன்

  முகமது பாருக்

 8. “இதே போல் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான். ஏன்? நம் தாய் நம்மைப் பெற்றெடுத்தும் நம்மை தெலுங்கன் வீட்டிலோ , துருக்கியன் வீட்டிலோ விட்டிருந்தால் நாம் தெலுங்கோ அல்லது உருது மொழியோ பேசுவோமா? அல்லது நம் தாய் தமிழ் பேசியதன் காரணமாக, நம்மைப் பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக வெளிவருமா?” என்று தாய்மொழி என்ற கருத்துருவையே கேள்விக்குள்ளாக்கும் பெரியார்,

  தாய்மொழி என்று பிடிவாதம் செய்வது தவறு என்று சொன்ன எனது தாத்தா ஏனோ அதற்க்கு சரியான விளக்கம் தரவில்லை!
  நம்மை பெற்றதும் நம் தாய் நம்மை தெலுங்கன் வீட்டில் விட்டாலும் நாம் தெலுங்கையே பேசினாலும் நம் தாய் பேசியது தமிழ் தானே.அவள் பேசிய மொழிதானே நம் மொழி.இல்லை அவள் கற்றுகொடுத்த வேற்று மொழியா நம் மொழி?
  ந்ம்மை தத்து எடுப்பவர்கள் நம் பெற்றோர்கள் ஆகிவிடுவார்களா என்ன, அப்படித்தான் இதுவும்.

 9. தோழர் தும்பி அவர்களே,
  மொழி ஒரு கருவியாக பயன்படவேண்டும் என்பதில் அய்யாவின் கருத்துக்கு மாற்று கருத்து இல்லை, அதர்க்காக நம் மொழி அழிந்து போக நாம் விட்டு விடலாமா அதைத்தான் அய்யா சொன்னாரா?
  நம்மை அழிப்பதும் நம் மொழியை அழிப்பதும் ஒன்றுதான் என்பதை தாங்கள் அறியவில்லையா?

 10. தந்தை பெரியார் என்ற சமூக போராளியின் மேல் உங்களுக்கு (தமிழ்சுடருக்கு) ஏன் இந்த வன்மம். //

  தெரியாத உங்களுக்கு?? தமிழ் தேசியம் பேசும் (பெரும்பான்மையினோர்) கருத்தின் வன்மம் அது.

 11. ”வாய்கொழுப்பு” என்பது வர்க்க வேறுபாடுகளை மறந்து, சாதிய வேறுபாடுகளை தெரிந்தே அவற்றை மறைத்து வழ வழ கொழ கொழ வென்று தமிழ் தேசியம் பேசும் தமிழ் வெறி கொண்ட தமிழ் சுடர், மணியரசன் போன்ற சிகாமணிகளுக்கே இருக்கும்.

  பெரியார் மொழிபார்வை குறைவு என்று கண்மருத்துவரை போல ஆராச்சி செய்தார்போல் கூறும் என் தமிழ் சுடரே! என் அறிவுச் சுடரே!
  உங்களுக்கு மொழி பார்வை அதிகமா? மொழி மட்டும் அன்று, இலக்கியம், கலை, பண்பாடு, நாகரீகம் இவற்றின் தேவை என்ன?இவற்றை பற்றிய உங்கள் பார்வை என்ன?

  இவையெல்லாம் மனித சமூகத்தை சுரண்டலற்ற, ஒடுக்குமுறையற்ற சமூகத்திற்க்கு இட்டு செல்லவேண்டும். மக்களின் பிரச்சனைகளை ஒட்டியே இவைகள் ஆராயபட வேண்டும். அவ்வாறே பெரியார் ஆராய்ந்தார்.

  மொழியை வெறுப்பது முட்டாள்தனம். ஆனால் மக்களின் நலனை தனிமைபடுத்தி மொழியின் பெருமையை மட்டும் பேசுவது வெறும் வரட்டுதனமாகும்.

  என் மொழி, என் இனம், என் மதம், என் சாதி என்பது மனிதனை பிரித்து பார்ப்பது பிற்போக்குதனம்.
  அதே வேளையில் ஒரு மொழியின் மீது ஆதிக்கம் ஏற்பட்டால் அதை எதிர்ப்பதே முற்போக்குதனம்.

  உதாரணம் :

  தமிழை வானளாவ புகழாத பெரியாரியல் தான்
  இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடத்தியது.

  கடவுள் நம்பிக்கையற்ற தோழர்கள் சிதம்பரத்தில் தமிழில் பாட கூடாது எனும் தீட்சிதனை எதிர்ப்பது.

  அனைவரும் சமம். ஆனால் ஒடுக்குமுறையின் போது, ஆதிக்கம் செலுத்தும் போது,ஒடுக்கும் சக்தியையும், ஆதிக்க சக்தியையும் எதிர்த்து போராட வேண்டும்.
  இதை தான் சமத்துவ தத்துவமும் கூறுகிறது. பெரியாரும் கூறினார்.

 12. தமிழர்கள் ஆண் பெண் சமம் என்று வாழ்ந்தவர்கள் என்று இதன் மூலம் தெரிந்து கொண்டேன்… நன்றிகள் பல அய்யாவிற்கு… வடநாட்டர்கள் மூலம் தான் ஆண் பெண் ஏற்றத்தாழ்வு வந்தது என்று நினைக்கிறேன்….
  தமிழ்நாட்டில் தாலி கட்டுவது என்பது சிலப்பதிகாரத்தில் இருந்து தான் நம் இலக்கியங்களில் தென்படுகின்றது…..

Leave a Reply

%d bloggers like this: