ராக்கி – ஜாதி, மதத்தை கட்டிக் காப்பாற்றும் கயிறு

rb

-விஜய்கோபால்சாமி

வணக்கம் தோழர்,

நாளை (5-8-2009) இங்கே (அய்தராபாத்) ராக்கி கட்டும் கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. அதைக் குறித்த எனது சிந்தனைகளை ஒரு பதிவாகத் தொகுத்திருக்கிறேன். இந்தப் பண்டிகை வட்டிக் கடைக்காரர்களால் சென்னையிலும் இறக்குமதி செய்யப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது.

அதனால் சென்னை வாசிகளும் இதைப் பரவலாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பிரசுரிக்கத் தகுந்தது என்று கருதினால் தங்கள் தளத்தில் பிரசுரிக்கவும். இல்லையெனில் உரிய திருத்தங்கள் செய்து தந்தாலும் போதும். எனது தளத்திலேயே வெளியிட்டுவிடுவேன்.

நன்றி தோழர்.

விஜய்கோபால்சாமி

***

ய்தராபாத்தை சேர்ந்த் நண்பர் விஜயகோபால்சாமி, (http://vijaygopalswami.wordpress.com) இந்தக் கட்டுரையை ரக்சாபந்தன் அன்று வெளியிடுவதற்காக அனுப்பியிருந்தார்.

சிங்ப்பூரைச் சேர்ந்த நண்பர் கவியின், பெரியார் பற்றிய தொடர் இடம் பெற்றதால், விஜயின் கட்டுரையை அப்போது பிரசுரிக்க முடியவில்லை.கட்டுரை வளவளவென்று வார்த்தைகளை விரயப்படுத்தமால், எளிமையகாவும்,  சொல்ல வந்த செய்தியை குழப்பமில்லாமல், சுருக்கமாக நேரடியாக சொன்னதாலும் எந்தத் திருத்தங்களும், சேர்க்கையயும்  இல்லாமல் அப்படியே பிரசுரிக்கப்படுகிறது.

நன்றி விஜய்கோபால்சாமி.

-வே. மதிமாறன்

***

புளி என்ன விலை விற்றாலும் ஆண்டுக்கு ஒரு நாள் வயசுப் பசங்களின் வயிற்றில் செலவே இல்லாமல் கரைகிற நாள் ஒன்று உண்டென்றால் நிச்சயம் அது ரக்சா பந்தன் நாளாக மட்டுமே இருக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் வரக்கூடிய முழு நிலவு நாள் ரக்சாபந்தன்.

ரக்சா பூர்ணிமா என்ற பெயரில் வடமாநிலங்களிலும் வடமாநில மக்கள் மிகுதியாக வசிக்கும் பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. சொந்த சகோதரர்களுக்கும் இந்த நாளில் சகோதரிகள்  ரக்சை  கட்டிவிடுவார்கள். ரக்சையைக் கட்டாவிட்டாலும் அவர்களுக்குள் சகோதர உணர்வு இருக்கும் என்பதால் அதைக் குறித்து அதிகம் பேசப்போவதில்லை.

அன்பின் பெயரால் நடைபெறுகிற விழா என்று சொல்லப்பட்டாலும் காதலர் தினத்தைப் போலவே இதனுள்ளும் பல வர்த்தக நோக்கங்கள் ஒளிந்திருக்கிறது.

காதலர் தின வாழ்த்து அட்டைகளுக்கும், ரோஜாப் பூக்களுக்கும், காதலர்களோடு தொடர்புடைய பரிசுப் பொருட்களுக்கும் ஒரு சந்தையை உருவாக்கித் தருகிறது என்றால், ராக்கி கட்டும் நாள் விதவிதமான ராக்கி கயிறுகளுக்கும், இனிப்புப் பொருட்களுக்கும், சகோதர சகோதரிகளுக்குள் பரிமாறிக் கொள்ளக் கூடிய பரிசுப் பொருட்களுக்குமான சந்தையை உருவாக்கித் தருகிறது.

பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ, அலுவலகங்களிலோ உடன் பணிபுரிகிற ஆண்களுக்குப் பெண்கள் இந்த கயிறைக் கட்டுகிறார்கள். பதிலுக்கு அவர்கள் இனிப்புகள், புத்தாடைகள், பணம் போன்றவற்றைப் பரிசளிக்க வேண்டும். ஆழ்ந்து நோக்கினால் உள்முகமாகப் புதைந்திருக்கும் சில செய்திகளையும் புரிந்துகொள்ளலாம்.

பெண்கள் யாருக்கெல்லாம் கயிறு கட்டவேண்டும் என்று பட்டியலிடுகிறார்களோ, அந்த நபர்களில் பெரும்பாலோருக்கு அன்பு, நட்பு, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுவது வெகு குறைவே. இன்னாரிடமிருந்து எனக்குப் பாலியல் தொந்தரவுகள் வரக் கூடாது, அதற்கு இந்த நாளை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பே இப்படித் தேடித் தேடிக் கயிறு கட்டுவதற்கான காரணமாக இருக்க முடியும்.

இந்தக் கயிறு கட்டும் நாளுக்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க போன்ற மதவாத அமைப்புகளின் ஆசீர்வாதம் கிடைத்து வருகிறது. இவர்கள் மட்டுமல்ல அனைத்து மத அமைப்புகளும் பகிரங்கமாகவே இந்த நாளை ஆதரிக்கின்றன. இந்த அமைப்புகள் சொந்த சகோதரர்களுக்குக் கயிறு கட்டிவிடுவதை விட பிற மதத்தவர்களுக்கும், பிற சாதியாருக்கும் கயிறு கட்டிவிடுவதையே பாராட்டுவார்கள். இந்த நாளின் சிறப்பு என்று இவர்கள் சொல்லுவது “இந்த நாள் மத வேறுபாட்டையும் கடந்து சகோதர பாசத்தை வளர்க்கிறது” என்பதே. இதற்கான பதில் இறுதிப் பத்தியில் இருக்கிறது.

எத்தனைதான் ஒற்றுமை சகோதரத்துவம் என்றேல்லாம் கரகமெடுத்து ஆடினாலும், இவர்கள் தலைகீழாய் நின்று தண்ணீர் குடிப்பதெல்லாம் சாதி, மதக் கட்டுமானங்கள் உடைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். அடப் பாவி, மத வேறுபாடு இல்லாமல் தானேடா கயிறு கட்டுகிறான் என்று நீங்கள் கேட்கலாம்.

இதையே கொஞ்சம் மாற்றி யோசித்துப் பாருங்கள், பெண்கள் மத, சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சகோதரர்களைத் தேர்ந்துகொள்ள ஒரு நாளை உருவாக்கியவர்கள், மத, சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள ஒரு நாளை உருவாக்கவில்லையே? அப்படியே இருந்தாலும் அது ஒரே ஜாதியைச்சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களுக்கு உரிய கணவன்/மணனவியைத் தேர்ந்தெடுக்கக் கூடிய சுயம்வர விழாக்கள் மட்டுமே இருந்துவருகின்றன.

இந்த நாளுக்கான ஆதிவேர், இந்தியாவின் மீது அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்த காலத்தில் ‘மிலேச்சர்கள்’ தங்கள் வீட்டுப் பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதிலிருந்து காப்பாற்றிக் கொள்வது என்ற கருத்தியலில் ஆரம்பமாகிறது. ‘மிலேச்சர்களின்’ படையெடுப்புக்கு முன்பும் இந்தியாவில் படையெடுப்புகளுக்கும் போர்களுக்கும் பஞ்சமில்லை. அப்போது எவனாவது தங்கள் பெண்களைக் காக்க இப்படி ஒரு முயற்சி எடுத்தது உண்டா?

ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிற உரிமை அவளது சகோதரனுக்கு மட்டும்தான் இருக்கிறதா? ஏன், அவள் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கிறவர்களுக்குக் கிடையாதா? இதையெல்லாம் கூட ஒதுக்கி வைத்துவிடுவோம், ஒரு பெண்ணுக்கு, தன்னைத் தற்காத்துக் கொள்ளுகிற உரிமை கூடவா கிடையாது? ஆண்களால் மட்டுமே பெண்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கருத்தியலை நிறுவுகிற முயற்சியல்லவா இது.

ராஜபுத்திரப் பெண்கள் கற்பு நிலை தவறாதவர்களாம், அந்நியன் படையெடுத்து வரும்போது தோற்றுவிடும் நிலை ஏற்பட்டால் ராஜபுத்திர ஆண்கள் தங்கள் மனைவி, சகோதரி, குழந்தைகள் அனைவரையும் குத்திக் கொன்றுவிட்டு சண்டையிட்டு மடிவார்களாம்? அல்லது அவர்களே தீமூட்டி விழுந்து சாக வேண்டுமாம். அந்தப் பெண்களின் கையிலும் ஆயுதத்தைக் கொடுத்திருந்தால் அவர்களாவதுசண்டையிட்டுத் தங்களைக் காத்துக் கொண்டிருப்பார்களே. குறைந்தபட்சம் ஆண்களைப் போல சண்டையிட்டாவது மடிந்திருப்பார்களே. கயிறு கட்டும் பண்டிகை உருவான அதே வடநாட்டில்தான் இந்த அவலங்களும் நிகழ்ந்திருக்கின்றன. கயிறு கட்டும் பண்டிகை கொண்டாடப்படுகிற அளவுக்குப் பெண்களுக்கு எதிரான இந்தக் குற்றங்கள் ஏன் பெரிதும் பேசப்படவில்லை?

காதலர் தினத்தைக் கண்டிக்கிற கலாச்சாரக் காவலர்கள் யாரும் இந்தக் கயிறு கட்டும் நாளைக் கண்டிப்பதில்லை. ஏனெனில் சகோதரத்துவம் சாதி, மதக் கட்டுமானங்களை உடைக்காது. ஆனால் காதல் சாதி மதத்தை மீறிய சந்ததியை உருவாக்கிவிடும். கவனிக்கவும், “காதல்” சாதி, மதம் மறந்த சந்ததியை உருவாக்கும் என்று தான் சொல்லியிருக்கிறேன். காதலர் தினம் அப்படி உருவாக்கும் என்று சொல்லவில்லை.

தாலிக் கயிறு, ராக்கிக் கயிறு என்று ஏதாவது ஒரு கயிறு, பெண்களை காப்பாற்றுவதாக காலகாலமாக சொல்லிவருகிறார்கள்.

இந்தக் கலாச்சார கயிறுகளின் கட்டுகளில் இருந்து பெண்கள் தங்களை விடுவித்துக்கொள்ள நினைக்கும்போது, ஆணாதிக்க சமூகமும், இந்து சமூகமும் அவர்களுக்கு தூக்கு கயிறைதான் பரிசளிக்கிறது.

15 thoughts on “ராக்கி – ஜாதி, மதத்தை கட்டிக் காப்பாற்றும் கயிறு

  1. வட இந்திய வரலாறு தெரியாயாமல் உளராதீர்கள். ராஜபுத்ர பெண்கள் போரில் வீரமரணம் அடைந்துள்ளார்கள். பெண்களை அடிமை படுத்துவது எல்லா மதங்களிலும் உள்ளது. நீங்கள் இந்து மதத்தை mattum குறை கூர்வதற்காக ஒரு கட்டுரை எழுதிய மாதிரி தெரிகிறது.காமாலை கண்ணனுக்கு பார்க்கிறது எல்லாம் மஞ்சளாக தெரிகிறது. நமது ஊரில் தாய்மாமன் சீர் என்று ஒன்று இருக்கிறதே அது எதற்கு ? புருஷன் ஒன்னும் செய்ய மாட்டானா? நமது கலாச்சாரம் அழகிய உறவுகளால் பின்னபடுள்ளது, தயவு செய்து அதை ஜாதி மதம் என்று எதைவது கூறி கெடுத்து விடாதீர்கள்

  2. கலாச்சாரக் காவல்களே –

    //இதையே கொஞ்சம் மாற்றி யோசித்துப் பாருங்கள், பெண்கள் மத, சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சகோதரர்களைத் தேர்ந்துகொள்ள ஒரு நாளை உருவாக்கியவர்கள், மத, சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள ஒரு நாளை உருவாக்கவில்லையே? //

    ஆர்.எஸ்.எஸ் காரன் தோற்றான் பெரியார் பக்தனிடம். திருமணம் இருவரிடையே எற்பட வேண்டிய பந்தமா இல்லை ‘பகுத்தறிவாதிகள்’ வரையாரைக்கும் பாடமா? ரக்ஷா பந்தனை இந்த கட்டுரையைவிட கோணலான பார்வையில் பார்க்கவே முடியாது.

  3. “”நமது கலாச்சாரம் அழகிய உறவுகளால் பின்னபடுள்ளது, தயவு செய்து அதை ஜாதி மதம் என்று எதைவது கூறி கெடுத்து விடாதீர்கள்””

    வாருங்கள் கலாச்சார காவலரே உயரிரிரிரிய்யய கலாச்சார பிண்னணி கொண்ட இந்தியா எய்ட்சுல எத்தினியாவது இடம்?

  4. தமிழன் அவர்களே,

    // நமது கலாச்சாரம் அழகிய உறவுகளால் பின்னபடுள்ளது, தயவு செய்து அதை ஜாதி மதம் என்று எதைவது கூறி கெடுத்து விடாதீர்கள்//

    ஆம், இந்த அழகிய உறவுகளால் பின்னப்பட்ட கலாச்சாரம் ஏன் பெண்களை சாதி, மத வேறுபாடுகளுக்கப்பாற்பட்டு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க அனுமதிப்பதில்லை என்பதுதான் கேள்வி (எல்லா மதத்திலும்). மத ஜாதிய கட்டுமானத்தை உடைக்காத இந்த விழாவை ஆதரிக்கிற வரவேற்கிற எல்லா மத அமைப்புகளையும் பதிவில் குறிப்பிட்டுள்ளனரே, பார்க்கவில்லையா.

    //நமது ஊரில் தாய்மாமன் சீர் என்று ஒன்று இருக்கிறதே அது எதற்கு ? புருஷன் ஒன்னும் செய்ய மாட்டானா?//

    தாய்மாமன் சீர் இன்ஸ்டால்மென்ட் முறையில் வாங்கப்படுகிற வரதட்சணை. இன்னொரு வகையில் சொல்வதானால் உறவு முறைக்குள் நிகழ்கிற கொடுக்கல் வாங்கல். இந்தப் பழக்கம் பரிணாம வளர்ச்சி அடைந்து இப்போது கொடுக்கல் வாங்கலுக்காகவே நடத்தப்படும் மொய் விருந்துகளாக உருவெடுத்திருக்கிறது. மொய் விருந்தால் தற்கொலை செய்து கொள்கிறவர்களைப் பற்றியும் நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். தஞ்சை மாவட்ட சுற்று வட்டாரங்களில் திருமணம் மற்றும் இதர விழாக்களுக்கான அழைப்பிதழில் “கடந்த பத்து வருட மொய்க் கணக்கு வழக்குகளைச் சரி பார்த்து சீர் முறை செய்யவும்” என்றே அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    மேலும் வட இந்திய வரலாறுக்கு நீங்கள்தான் அத்தாரிட்டி என்று கருதிக்கொள்ள வேண்டாம். நானும் வரலாறு படித்தவன்தான். ராஜபுத்திரப் பெண்களுக்கு நடந்த இந்தக் கொடுமை ஆதாரப் பூர்வமானது. ஔரங்கசீபின் வரலாற்றை ஊன்றிப் படித்திருந்தால் ராஜபுத்திரர்கள் தங்கள் மனைவியர், குழந்தைகள் மற்றும் சகோதரிகளை குத்திக் கொன்ற, அவர்களைத் தீக்குளித்துச் சாகச் செய்த சம்பவங்களைக் குறித்து அறியலாம்.

    நீங்கள் ராஜபுத்திர வரலாறு குறித்து நன்கு அறிந்தவர் தானே! ஒரு சம்பவம் சொல்லுகிறேன். இது ஒன்றும் ஔரங்கசீப்,மராட்டிய சிவாஜி கால சம்பவம் இல்லை. 1987ல் நடந்த சம்பவம். ரூப்கண்வர் என்ற ராஜபுத்திரப் பெண் அவளது 18வது வயதில் கணவனின் சிதையில் உயிரோடு வைத்து எரிக்கப்பட்டாள். ஒரு தலைமுறைக்கு முன்னால் கூட இந்தக் கொடூரத்தை நிறைவேற்றிய பிற்போக்குத்தனம் நிறைந்த ஒரு சமூகத்துக்கு நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள். அடுத்த முறையாவது பின்னூட்டம் போடும்போது வேறு பெயரில் போடுங்கள். இந்தப் பெயர் வேண்டாம்.

    இந்துக்களால் தொடங்கி வைக்கப்பட்ட ஒரு பிற்போக்குத்தனத்தைக் கண்டித்தால், விமர்சித்தால் அது இந்து மதத்தை மட்டும் குறை சொல்கிறோம் என்று ஆகாது. இந்துத்துவப் பிற்போக்குத்தனங்களை கிறிஸ்தவனும் முஸ்லீமும் விமர்சிக்கக் கூடாது, ஒரு இந்துவும் விமர்சிக்கக் கூடாது. பிறகு யார்தான் வந்து விமர்சிக்க வேண்டும் என்று சொல்ல வருகிறீர்கள்? [இந்து என்கிற அடையாளம் நாங்கள் விரும்பாமலே எங்கள் மீது சுமத்தப்பட்டது. அதுவே இப்போது உங்களுடனான விவாதத்தில் கேடயமாகப் பயன்படுகிறது.]

  5. மதக்கலவரங்களில் நிறைந்து வழியும் வடநாட்டு கலாச்சாரங்கள (பண்பாடு இல்லை) என்னவென்று எங்களுக்கும் தெரியும்.
    தனக்கு கயிறு கட்டுகிற பெண்ணை இவன்கள் பாலியல் செய்வதில்லைதான் ஒப்புக்கொள்வோம் ஏனெனில் கலவரத்தின்போது கயிறு கட்டியவர்களை இங்கேயே விட்டுவிட்டு கயிறு கட்டாத வேற்று மத பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய கிளம்பிவிடும் கலாச்சாரமும் தெரியும் (மீண்டும் பண்பாடு இல்லை) சரிதானே கயிறுகட்டாதது அந்த பெண்களின் தவறுதானே.

    எனக்கு ஒரு கேள்வி கட்டுரையாளர் சொல்வதுப்போல் கயிறு கட்டினால் தான் இவன்களிடமிருந்து பாதுகாப்போ???
    இல்லாவிட்டால் எந்த வயது பெண்ணாயிருந்தாலும் விடமாட்டார்களோ!!!

    எல்லாவித்த்திலும் நம்மிடையே வியாபாரம் செய்து வயிறு கொழிக்கும் மார்வாடிகளுக்கு பிழைக்கும் இடத்தில் தங்கள் பெண்களை பாதுக்காக்கவும் (விரும்பி ஓடுவதை தவிர) அதிலும் தனக்கு பணம் சேர்க்கவும் தொடங்கியதுதான் இது. இன்னும் நிரைய எழுதலாம் இப்போதைக்கு இதுபோதும்.

    “கட்டுரையாளர் விஜய்கோபால்சாமிக்கும் தோழர் வே. மதிமாறனுக்கும் தாங்கள் அனுமதித்தால் என் வலைப்பூவில் மீள்பதிவிடுவேன்”

  6. //வாருங்கள் கலாச்சார காவலரே உயரிரிரிரிய்யய கலாச்சார பிண்னணி கொண்ட இந்தியா எய்ட்சுல எத்தினியாவது இடம்?//

    நம் நாட்டில் எயிட்சால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் யார்?

  7. உங்கள் எழுத்திலேயே வடக்கே இருந்து வந்த மொழிகள் நிறை இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தினம், நபர்… இதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமே!

  8. //வாருங்கள் கலாச்சார காவலரே உயரிரிரிரிய்யய கலாச்சார பிண்னணி கொண்ட இந்தியா எய்ட்சுல எத்தினியாவது இடம்?//

    நம் நாட்டில் எயிட்சால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் யார்?

    ******************

    அட கேள்வியே கேக்காம கொஞ்சம் பதிலும் சொல்லுங்கப்பா… தெரிஞ்சுக்கிறோம்

    //உங்கள் எழுத்திலேயே வடக்கே இருந்து வந்த மொழிகள் நிறை இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தினம், நபர்… இதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமே!

    //

    தினம் = நாள்,
    நபர் = ?

  9. எனக்கு ஒரு கேள்வி கட்டுரையாளர் சொல்வதுப்போல் கயிறு கட்டினால் தான் இவன்களிடமிருந்து பாதுகாப்போ?
    இல்லாவிட்டால் எந்த வயது பெண்ணாயிருந்தாலும் விடமாட்டார்களோ!!!

    உண்னைய்ன , நியாயமான கேள்வி.

  10. நல்ல கட்டுரை. இதற்கும் வக்காலத்து வாங்கும் ஆட்டோ சங்கர் போன்ற கழிசடைகள் உண்மையிலேயே ஆட்டோ சங்கர்தான்.

  11. எம் முருகா , பழனி ஆண்டவா – கழிசடை யார் என்று உலகறியும்.

  12. Vijaya, just got chance to read your article, you are rocking!!!! keep up the good work.

  13. நமது கலாச்சாரம் அழகிய உறவுகளால் பின்னபடுள்ளது, தயவு செய்து அதை ஜாதி மதம் என்று எதைவது கூறி கெடுத்து விடாதீர்கள் //
    இந்த தமிழன் ஒரு பச்ச மண்ணு இத அப்படியே விட்டுடுங்க கலாசாரமாம் கலாசாரம் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கலாசாரம் இருக்கிற நாட்டில் எது டே அழகியா உறவு .

    திரு விஜயகோபல்சாமி அவர்களின் பதிவு சிறப்பு பல புதிய விடையங்களை அறிந்துகொண்டேன் வாழ்த்துக்கள் நன்றி தொடர்ந்து எழுதுங்கள் .

Leave a Reply

%d bloggers like this: