பெரியாரின் மொழிக் கொள்கையிலும் தமிழரின் முன்னேற்றம்தான்

mozhikkolkai copy

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1

‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3

‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4

‘தமிழனை, தமிழைக் கெடுத்தவர்கள், தமிழ்ப்பண்டிதர்களே’-பெரியாரின் வீச்சு -5

‘புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன்’- பெரியார் வைக்கும் குட்டு – 6

கவி, சிங்கப்பூர்

பெரியார் மொழிக் கொள்கை வகுக்க வில்லை என்று கூறுகிறார் பெ.மணியரசன். மொழிக் கொள்கை என்றால் தனி நாடு பெற்றால் நாட்டில் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதிமன்ற மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது ஆகும். இது தொடர்பாக இங்கு பெரியார் கூறி பதிவு செய்துள்ளதை மணியரசன் கூர்ந்து கவனிக்க வேண்டும்,

தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, தமிழ் நாட்டைப் பற்றி நினைத்துக் கொண்டு தமிழ் நாட்டுக்கு அரசியலுக்கானாலும், இலக்கியத்திற் கானாலும் போதனைக்கானாலும் ஒரு மொழி வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது தமிழ் மொழி என்பதாகத்தான் தோன்றும்.

ஆனால் நாடு நம்முடைய சொந்த நாடு  ஆனாலும் ஆட்சி தமிழர் களல்லாத, அன்னியர்களுடைய ஆட்சியாக இருப்பதால் அந்த அன்னியர்கள் பல நாடுகளை ஒன்று சேர்த்து அடக்கி ஆள்பவராக இருப்பதனால், அவர்களுடைய ஆட்சி நிலைப் பிற்கும் வசதிக்கும் ஏற்றபடி ஏதோதோ காரணங்களைச் சொல்லிக் கொண்டு அன்னிய மொழியாகிய இந்தி மொழி என்பது தான் ஆட்சி  மொழியாகவும்  கல்லூரி போதனா மொழியாகவும் பள்ளிகளில் கட்டாய மொழி யாகவும் கூட இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களால் வலியுறுத்தும் படியான நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டுவிட்டது.

ஆங்கிலம் ஏன் என்பதற்கு பெரியார், தமிழ், வடமொழியை, இந்தி மொழியை விடச் சிறந்தது என்பதிலும் பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு அய்யமில்லை என்றாலும் நாம் இன்றைய நிலைமையை விட வேகமாக முன்னேற வேண்டுமானால், ஆங்கிலந்தான் சிறந்த சாதனம் என்றும் ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனா மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும் ஆங்கில எழுத்துக்களை தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும் ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று விளக்கினார். (‘மொழியும் அறிவும்’ 1957-1962).

1957 மற்றும் 1962 இல் பெரியார் கூறியதன் அடிப்படையில் தான் இன்று தமிழக மக்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில வழியில் கல்வி பயில அனுப்புவதற்கு காரணமாக உள்ளது. ஆங்கில வழி மழலையர் பள்ளிகள் ஏற்பட்ட பின்னர் தான் சேரி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகள் கழுத்தில் “டை” கட்டிக் கொண்டு கிழிசல் இல்லாத “டவுசருடன்” பள்ளிக்குச் செல்லும் அழகைப் பார்க்கிறோம்.

ஆரம்பக் காலங்களில் பாலிடெக்னிக் என்பது பார்ப்பனக் குழந்தைகளுக்கு என்றும் ஐ.டி.ஐ என்பது பிற சாதியினருக்கு என்று இருந்ததையும்  மாற்றி சேரி மக்கள் குழந்தைகளும் பிற்படுத்தப்பட்ட மக்கள் குழந்தைகளும் பாலிடெக்னிக் படிக்க முடிகிறது எதனால் என்பதையும் உணர வேண்டும்.

இன்று பெருமளவில் இன்ஜினியரிங் கல்லூரி வந்து அனைத்து வகுப்பினரும் இன்ஜினியரிங் படிப்பதால் ஏற்கனவே பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த இப்படிப்பு இப்போது எல்லா சாதியினருக்கும் பொதுவுடமை ஆக்கப்பட்டுவிட்டதே. இதற்கும் பெரியாரின் தொலை நோக்கு உணர்வுதானே காரணம்.(கல்வி வியாபாரமாக நடப்பது வேறு கதை)

தமிழ் வழிக் கல்வியை விரும்புகிறவர்கள் இன்றுவரை அதற்கான எந்த ஒரு சிறு முயற்சியையும் எடுக்கவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் திரு.டொமினிக் சுவாமிநாதன் அவர்களைக் கொண்டு தமிழில் மருத்துவம் படிப்பதற்கான குழு அமைக்கப் பட்டது. அவரும் அதற்கான வரைவுகளைத் தயார் செய்தார். அதை கணினியில் ஒரு வாரம் உடனிருந்து இரவில் அச்சிட்டுக் கொடுத்தவன் நான். ஆனால் தமிழறிஞர்கள் அவரையோ அவரின் செயல்பாட்டையோ கண்டு கொள்ளவே இல்லை. திரு. டொமினிக் சுவாமிநாதன் அவர்களுக்கு இருந்த தமிழ் ஆர்வத்தை  அக்கறையை நான் நேரில் பார்த்தவன்.

இப்போது திருவாரூரில் மருத்துவர் ஜெயசேகர் அவர்கள் இருக்கிறார்கள். எம்.டி. பட்டபடிப்புக்கான தேர்வை தமிழில் எழுதினார்கள். அவர்களுடைய தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் இன்று வரை போராடி வருகிறார். எந்த தமிழ் அமைப்புகளும் அவருக்கு எந்த ஆதரவும் தந்ததில்லை. ஆனால் அவரோ அதைப்பற்றியயல்லாம் கவலைப்படாமல் தமிழில் படிப்பதற்காக ஆங்கிலத்திலிருந்து அவரே மொழிபெயர்த்த எம்.டி படிப்பிற்கான அனைத்து தமிழ் பாடங்களையும் அச்சிட்டு புத்தகமாக வெளியிட்டு வருகிறார். அந்த பாட நூல்கள் அனைத்தும் மருத்துவத் துறைக்கு கருவூலங்கள். மருத்துவத்திற்கு தமிழில் நூல்கள் இல்லை என்று இனியும் யாரும் கூற முடியாது என்ற அளவிலான நூல்கள். இக்கருத்தை நான் முனைவர் கு.அரசேந்திரன் அவர்களிடம்  மருத்துவர் ஜெயசேகர் அவர்களை வைத்துக் கொண்டே கூறினேன். கு. அரசேந்திரன் அவர்களும் மகிழ்ந்து ஒவ்வொரு நூலின் ஒரு படியை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். இவை யெல்லாம் நான் கூற காரணம், மருத்துவர் ஜெயசேகர் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட தமிழ் அமைப்புகள் யாரும் முன்வரவில்லை என்பதால் தான்.

புதுச்சேரியில்  மருத்துவர் அரிமாமகிழ்கோ அவர்கள் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர். தமிழில் மருந்து சீட்டு எழுதி நோயாளிகளுக்கு கொடுத்தார் என்பதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  இதுவரை அவருக்காக எந்த தமிழ் அமைப்புகளும் போராட முன்வரவில்லை. இதையயல்லாம் பெரியார், அவர் காலத்தில்  செய்தார். மறைமலையடிகளுக்கு சிக்கல் என்றால் போரடினார். தமிழ் புலவர்களுக்கு சமஸ்கிருத புலவர்களைவிட சம்பளம் குறைவு என்றால் போராடி உரிமையையும் பெற்றுக் கொடுத்தார். ஆனால் பெ.மணியரசன் இதெல்லாம் மொழிக்கொள்கையாகாது என்று கூறுகிறார்.

அன்னக்காவடி பஞ்சாங்கப் பார்ப்பான் மகன் ஆங்கிலம் படித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகிறான் என்றார் பெரியார். உடனே பெ.மணியரசன் துள்ளிக் குதிக்கிறார். ஆகா பெரியார் மாட்டிக் கொண்டார் என்று. உடனே கேள்வி கேட்கிறார், “உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிதான் உயர்வின் எல்லையா?” என்று.

பெரியார் நன்றாகவே அடைமொழி போடுகிறார், அதாவது “அன்னக்காவடி பஞ்சாங்கப் பார்ப்பான்” என்று. இவனே ஆங்கிலம் ஒன்றைமட்டுமே படித்துவிட்டு வேறு எந்த தகுதியுமே யில்லாமல் உச்சநீதிமன்ற நீதிபதியாகிறான் என்றுதான் கூறுகிறார்.

தமிழறிஞர்களுக்காக வருத்தப்படுகிறார், “தமிழ் மொழிக் களஞ்சியங்களான ‘மாணிக்க வாசகர் காலம்’ எழுதிய காலஞ்சென்ற மறைமலையடிகள், பெரியபுராணத்திற்கு புதுஉரை எழுதிய திரு.வி.கலியாணசுந்தரம் முதலியோர் வாழ்வில், முக்கியத்துவத்தில் என்ன தரத்தில் இருந்து சென்றார்கள்?”

பெரிய அளவில் வாழ்க்கைத்தரத்தில் பெரும்வாழ்வு வாழவில்லை என்பதுதானே பெரியாரின் கவலைக்கு காரணம். இங்கு காலம் சென்ற அறிஞர்களைப் பற்றிக் கூறுகிறார். அவர்கள்  “சைவத்தை நிலை நிறுத்திய மூடநம்பிக்கைக் கeஞ்சியங்களாகத்தானே முடிவெய்தினார்கள்” என்று கவலைப்படுகிறார்.

காலஞ்சென்றவர்களைப் பற்றி கவலைப்பட்ட பெரியார், இப்பொழுது வாழ்கின்ற  அறிஞர்களைப் பற்றியும் கவலைப்படுகிறார்,

காலம் செல்லாத இன்றையத் தமிழ்க் களஞ்சியங்கள் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், டாக்டர்கள் சிதம்பர நாதன் செட்டியார், மு. வரதராசனார், இராஜமாணிக்கனார் மற்றும் ஒரு டஜன் உருப்படிகளின் இன்றைய நிலை என்ன? அவர்களால் ஒரு அளவுக்கு நன்றாய் பிழைக்கிறார்கள் என்பதை தவிர நாட்டிற்கோ மனித சமுதாயத்திற்கோ என்ன பயன்? அன்னக் காவடி பஞ்சாங்கப்பார்ப்பான் மகன் ஆங்கிலம் படித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகிறான் என்று வேதனைப்படுகிறார்.

பெரிய அறிஞர்கள் டாக்டர்கள் எல்லாம் சாதாரண வாழ்வே வாழ்கிறார்கள். அன்னக்காவடி பார்ப்பான் மகன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகிறான் என்றுதானே பெரியார் கவலைப்படுகிறார். பெ.மணியரசனுக்கு இது புரியவில்லையா? இல்லை. புரிகிறது. அதனால்தான் அடுத்து , பெரியார் குறிப்பிடும் தமிழறிஞர்கள் அத்தனைபேரும் மிகச் சிறப்பாக ஆங்கிலம் கற்ற ஆய்வாளர்கள். ஒருவர் ஆங்கிலம், தமிழ் அகராதி எழுதிய அறிஞர் குழுவுக்குத் தலைமை தாங்கியவர். இவர்கள் உயர் பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருந்து ஒளி வீசியவர்கள். இவர்களைக் காலஞ்செல்லாத தமிழ்க் களஞ்சியங்கள் என்று பெரியார் குறிப்பிடுவது நடப்புக்கு முரணான செய்தி. இவர்களைப் போன்ற ஒரு டஜன் உருப்படிகள் என்று பெரியார் கூறுவது தமிழ் அறிஞர்கள் என்றாலே வெறும் தமிழ்ப் பைத்தியங்கள் உலக நடப்பறியாத பண்டிதர்கள் என்ற கருத்தாகும். பெரியாரின் இக்கணிப்பு தவறு. என்று எழுதுகிறார் பெ.மணியரசன்

இறுதியாக தமிழறிஞர்களுக்கு ஆதரவான குரலையும் கவலையும்  பெரியார் தெரிவிக்கிறார்,

பார்ப்பனரல்லாத என்கின்ற உணர்ச்சிப் போராட்டம் இல்லாதிருந்தால் இந்த மேதாவி டாக்டர்கள் மகான்கள் நிலை இன்று எப்படி இருக்கும்? கிறுக்கன் பாரதிக்கு இருக்கிற மதிப்பில் நூற்றில் ஒன்று கூட இவர்களில் எவருக்குமே இன்று இல்லை. இவர்கள் தரத்தைவிடக் குறைந்த தரமுள்ள, ஆங்கிலத்தில் பேர் பெற்றவர்கள், சாதாரண அளவு ஆங்கிலப் படிப்பாளிகள் எவ்வளவு மேல் நிலையில் இருக்கிறார்கள்.(விடுதலை தலையங்கம் 5.4.1967)

பெரிய அறிஞர்கள் பொருளாதாரத்திலாவது பெரும் வாழ்வு வாழ்ந்திருக்க வேண்டாமா? என்பதுதான் பெரியாரின் கவலை. மேலும் “உருப்படிகள்” என்ற சொல்லையும் “காலஞ்செல்லாத” என்ற சொல்லையும் ஒன்றாக இணைத்து குழுப்பி பெரியார் மீது குற்றஞ்சாட்டுகிறார் பெ.மணியரசன்.

மேலும் பெரியாரோடு இருந்ததால்தான் சாமி.சிதம்பரனார், புலவர் குழந்தை, பொன்னம்பலனார் மற்றும் பாரதிதாசன் சமுதாய சிந்தனைகளில் ஈடுபட்டு செயல்பட முடிந்ததே தவிர பெ.மணியரசன் கருதுவது போல் தமிழறிஞர்கள் ஆய்வாளர்கள் என்பதால் அல்ல.

மறைமலையடிகளைப் பற்றியும் திரு.வி.க அவர்களைப் பற்றியும் குறிப்பிடும் போது பெரியார், மரியாதைக்குரிய பாராட்டத்தகுந்த தமிழ்ப் பெரியார்கள் மறைமலை அடிகள் முதல் திரு.வி.க.வரை உள்ள பெரியார்களிடம் அவர்கள் கருத்துக்களிடம் அவர்கள் நடந்து கொண்ட முறைகளில் இருந்து, இன்றைய நாட்டு முன்னேற்றத்திற்கு என்றோ மக்கள் முன்னேற்றத்திற்கென்றோ எடுத்துக் கொள்ளதக்க சாதனங்கள் என்ன இருக்கின்றன என்று அன்பர்கள் தோள் தட்டிக் கூற முடியுமா? (பெ.ஈ.வெ.ரா.சி. பக்.992) என்றுதான் குறிப்பிடுகிறார்.

மறைமலையடிகளைக் குறிப்பிடும் போதும் திரு.வி.க. அவர்களைக் குறிப்பிடும் போதும் தமிழ்க் களஞ்சியங்கள் என்றுதான் கூறுகிறார். சுப.வீ அவர்களை வாளாகக் கொண்டு பெரியார் மீது வீசுகிறார் பெ.மணியரசன். இவரும் இரவிக்குமார் மாதிரி சிந்தனை செய்கிறாரோ என்ற அய்யமும் அதனால் இரவிக்குமார் மாதிரி மக்களிடமிருந்து அன்னியப்பட்டு போய் விடுவாரோ என்றக் கவலையும் எனக்கு ஏற்பட்டுள்ளது.

-முற்றும்

தொடர்புக்கு

Periyar Pattarai
7/11 B, Alivalam Salai
Sundravilagam
Thiruvarur
610 001

6 thoughts on “பெரியாரின் மொழிக் கொள்கையிலும் தமிழரின் முன்னேற்றம்தான்

  1. பெரியார் எழுதிய – பேசியவை எல்லாம் வேதவாக்கு என்று கொண்டு அதனை ஆதரிப்பது இன்னொருவகை மூடத்தனம்தான். தமிழ்மொழி பற்றி திறனாய்வு செய்ய பெரியார் ஒன்றும் தமிழ்இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர் அல்லர். தாய் மொழியில் கற்பதே சிறந்தது என்பது கல்வியாளர்களின் முடிவாகும். யப்பானியர், ஜெர்மனியர் அப்படித்தான் செய்கிறார்கள். இன்று உயர் கல்வியில் தமிழ்மொழி ஒதுக்கப்பட்டு ஆங்கிலம் கொடிகட்டிப் பறப்பதால் தமிழ்மொழி வளர்ச்சி தடைபடுகிறது. பெரியாரின் சமூக சிந்தனைகள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால் தமிழ்மொழி பற்றிய அவரது கருத்துக்கள் அவரது அறியாமையைத்தான் காட்டுகிறது.

  2. Nakkeeran அவர்களே,

    ////“எவனைப் பக்குவப்படுத்தினாலும் மரியாதை, விளம்பரம் வந்தவுடன் தமிழைக் காக்க அல்லவா புறப்பட்டுவிடுகிறார்கள். புலவன் பொறுக்கித் தின்ன இலக்கியங்களைக் காப்பதுபோல் பொது தொண்டு மக்களும் இப்போது பலன் அடையத் தமிழைப் பயன்படுத்திக் கொண்டு வெட்கமில்லாமல் தமிழைக் காக்கிறேன் என்கிறார்கள். என்னைக் குடிகாரர் போல் வைவதில் சமாதானம் ஏற்பட்டு விடாது. கையிலுள்ள சரக்கைக் காட்ட வேண்டும்”.////

    என்று பெரியார் சொல்லியிருப்பது, உங்களைப் போன்வர்களுக்காகத்தான். பெரியாரைப் பற்றி சவடாலாக விமர்சிப்பதை விட்டு, உங்கள் கை சரக்கை காட்டுங்கள் நக்கீரனாரே?

  3. சிறப்பான தொடர். மொழிப்பற்றி பெரியாரின் சிறப்பான பார்வை தெரிந்து கொள்ள முடிந்தது.

    பெரியார் மீது அவதூறு செய்த தமிழ்தேசியவாதிகளுக்கும், பெரியார் பெயரில் சாதி உணர்வுகொண்ட தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்களுக்கும் நல்ல பாடம் இந்தக் கட்டுரை.

    நன்றி கவி அவர்களே.

  4. சிறப்பான தொடர். நன்றி கவி.

  5. தேவையான காலத்திலும் இன்றைய தலைமுறைக்கு மிகத் தெளிவாக தந்தை பெரியாரின் கருத்துகளை கொண்டுவந்தமைக்கு தோழர் கவி அவர்களுக்கும் தோழர் மதிமாறன் அவர்களுக்கும் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மருத்துவர் அரிமாமகிழ்கோ, மருத்துவர் ஜெயசேகர் , திரு. டொமினிக் சுவாமிநாதன் உண்மையிலேயே இவர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தகவலுக்கு நன்றி தோழர் கவி அவர்களே..

    உண்மையில் தமிழ் மொழிக்காக பாடுபடுகிறேன் என்று கூவிக்கொண்டு உள்ளவர்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்துடனே தன்னை காப்பதற்காக மொழியை பயன்படுத்திக் கொள்கிறார்கள் புலவர்கள், முனைவர்கள் போல..

    //
    1957 மற்றும் 1962 இல் பெரியார் கூறியதன் அடிப்படையில் தான் இன்று தமிழக மக்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில வழியில் கல்வி பயில அனுப்புவதற்கு காரணமாக உள்ளது. ஆங்கில வழி மழலையர் பள்ளிகள் ஏற்பட்ட பின்னர் தான் சேரி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகள் கழுத்தில் “டை” கட்டிக் கொண்டு கிழிசல் இல்லாத “டவுசருடன்” பள்ளிக்குச் செல்லும் அழகைப் பார்க்கிறோம்.

    ஆரம்பக் காலங்களில் பாலிடெக்னிக் என்பது பார்ப்பனக் குழந்தைகளுக்கு என்றும் ஐ.டி.ஐ என்பது பிற சாதியினருக்கு என்று இருந்ததையும் மாற்றி சேரி மக்கள் குழந்தைகளும் பிற்படுத்தப்பட்ட மக்கள் குழந்தைகளும் பாலிடெக்னிக் படிக்க முடிகிறது எதனால் என்பதையும் உணர வேண்டும்.

    இன்று பெருமளவில் இன்ஜினியரிங் கல்லூரி வந்து அனைத்து வகுப்பினரும் இன்ஜினியரிங் படிப்பதால் ஏற்கனவே பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த இப்படிப்பு இப்போது எல்லா சாதியினருக்கும் பொதுவுடமை ஆக்கப்பட்டுவிட்டதே. இதற்கும் பெரியாரின் தொலை நோக்கு உணர்வுதானே காரணம்.(கல்வி வியாபாரமாக நடப்பது வேறு கதை)//

    நிதர்சனமான உண்மை, நம் சம காலத்தில் நாம் அடைந்த மிகப் பெரிய முன்னேற்றம் (அனைவருக்கும் கல்வி கிடைத்தது)..

    மாபெரும் மனித (திராவிட = தமிழ்) சமுதாயத்திற்காக தன்னையே அர்ப்பணித்த தந்தை பெரியாருக்கு நாம் செய்யும் நன்றிகடன் அவரை போலவே வாழ்வதே அல்லது வாழ முயற்சி செய்வது..

    தோழமையுடன்

    முகமது பாருக்

Leave a Reply

%d bloggers like this: