தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை

scan0001

திரு. குளோரியஸ் ஸ்டீவ் ச.ச அவர்களை ஆசிரியராக கொண்டு, தொன்போஸ்கோ கல்வி நிறுவனத்தாரால், நடத்தப்படுகிற ‘சலேசியன் செய்தி மலர்’ ஜீலை மாத இதழில்  சிறப்புப் பேட்டியாக என்னுடைய பேட்டியை வெளியிட்டு இருந்தார்கள். தோழர் ஆ.புத்திரன் எடுத்தப் பேட்டியை அவரின் முன்னுரையோடு அப்படியே தருகிறேன்.

-வே. மதிமாறன்.

ன்றையு தமிழ் சூழலில் வே.மதிமாறன் பற்றி சொல்லவேண்டியவை நிறைய உள்ளன. மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனையாளர், எழுத்தாளார், ஆய்வாளர், சமூக ஆர்வலர் என்று பல பாரிமாணங்களில் தீவிரமாக இயங்கிவருபவர்.

பாரதியார் ஒரு பார்ப்பன இந்து கண்ணோட்டம் கொண்ட எழுத்தாளர் என்பதை தனது ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி என்ற நூலில் ஆதாரத்தோடு எழுதி பெரிய சர்சையை உண்டு பண்ணியவர். சமூக விழிப்புணர்வு மாத இதழில் வாசகர் கேள்விகளுக்கு இவர் அளித்த பதில்கள் அடங்கிய ‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகம் முற்போக்காளர்கள் மத்தியில் புகழ் பெற்றது.

டாக்டர் அம்பேத்கரை தலித் அல்லாதவர்கள் விரோதிகளாக பார்ப்பதை கண்டித்து, அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் நிறைய செய்திருக்கிறார் என்று பல ஆதாரங்களை காட்டி ‘நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கடிமை யாருமில்லை’ என்ற இவரின் புத்தகம் சமீபத்து பரபரப்பு.

இனி அவருடன்…..

1. கலாச்சாரம் என்றால் என்ன? இந்திய காலச்சாரம் பற்றி?

பெரியார் சொல்வதுபோல் ‘உன்னிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதுபோலவே நீ அடுத்தவரிடமும் நடந்துகொள்ள வேண்டும்’- என்பதைதான் கலாச்சாரம் – பண்பாடு -நாகரீகம் எனச் சொல்லவேண்டும். இந்தியாவிற்கு கலாச்சாரம் என்று ஒன்று இல்லை. ஆச்சாரம் தான் இருக்கிறது. சாதி ரீதியான ஏற்றதாழ்வுகளை கொண்ட ஆச்சாரம் தான் இருக்கிறதே ஒழிய சிறந்த பண்பாடு என்று ஒன்று இல்லை. இந்த மண்ணுக்கென்று ஒரு பண்பாடு இருந்ததில்லை. மாறாக ஒவ்வொரு சாதிக்குமான ஒரு வழிபாட்டுமுறை, வாழ்வுமுறை, பேச்சுவழக்கு, உணவுமுறை, உடை என்று இருந்ததே தவிர. பொதுவான கலாச்சாரம் என்று ஒன்று இல்லை. பிறமனிதனை தனக்கு கீழாக வைத்து துன்புறுத்துகிற, அவமானபடுத்துகிற, அசிங்கப்படுத்துகிற ஒரு ஆச்சாரம் தான் இங்கு இருக்கிறது.

2. காலச்சாரம் மற்றும் பண்பாடு என்று இரண்டு சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன…இதில் பண்பாடு என்பது என்ன? கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் வேறுபாடு உள்ளதா?

கலாச்சாரம் என்பது சமஸ்கிருத சொல்… பண்பாடு என்பது அதற்கான மாற்று தமிழ்சொல். பலபேர் கலாச்சாரம் என்பதும் பண்பாடு என்பதும் வேறு வேறு என்று கருதுகிறார்கள். ஆனால் இவை இரண்டும் வேறு வேறு அல்ல.. ஒரே விசயத்தை குறிக்கிற இரண்டு சொற்கள். ‘நடு சென்டர்’ என்று சொல்கிறோம் அல்லவா, அதுபோல்.

3. இந்திய பண்பாடு என்று ஒன்று இல்லை எனச்சொன்னீர்கள் அப்படியானால் தமிழ் பண்பாடு என்ற ஒன்றைப்பற்றி?

தமிழ் பண்பாடு என்றும் ஒன்று கிடையாது. தமிழர்களுக்கு அவர்களின் மொழியைத் தவிர பொதுவான பண்பாட்டு அடையாளம் ஒன்றை நான் இதுவரை கண்டதில்லை. மொழியில் கூட உடல்உழைப்பை மூலதனமாக கொண்ட மக்களை தாழ்த்தி பார்க்கின்ற சொல்லாடல்கள்தான் இருக்கிறது.

கீரை விக்ரவ வந்தாளா? ரிக்க்ஷாகாரன கூப்பிடு! உழைக்கும் எளிய மக்களை அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும், அவன், அவள் என்று மரியாதை குறைவாக விளிக்கிற மொழி, அதேவேளையில் ஒரு டாக்டரையோ, ஒரு எஞ்சினியரையோ, தொழில அதிபரையோ அப்படி அழைப்பதில்லை. அவர்கள் ஒரு சமூக விரோதியாக இருந்தாலும் – உ.தா: ஒரு டாக்டா; சிறுநீரகத்தை திருடுகிறவாராக இருந்தாலும் -அவர் இவர் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். இதை எப்படி ஒரு பண்பாடு என்று சொல்லமுடியும். மீடியா முதல் இந்த ஏற்றதாழ்வு தமிழ் சமூகத்தில் இன்னும் கட்டி காக்கப்படுகிறது.

4. ஆனால் ஆரிய பண்பாட்டுவழியில் தான் நீங்கள் சொல்லுகிற சமத்துவமற்ற ஒரு வாழ்வுமுறை இருந்துவந்தது என்பதும் தமிழர் பண்பாடு சாதிய பிளவுகளற்ற ஒரு சமத்துவ பண்பாடு என்பதும் உண்மையல்லவா?

நீங்கள் சொல்லுவது இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்வுமுறை. அதை பெருமைக்காக வேண்டுமென்றால் சொல்லிக்கொள்ளலாம். இன்றைககு அதை எப்படி கடைபிடிக்க முடியும்?

மேலும் அன்றைய தமிழ் சமூகத்தில் சாதிய ஏற்றதாழ்வுகள் (Caste Stertification) இருக்கவில்லை என்றாலும் வர்க்க வேறுபாடுகள் (Class Stertification) இருந்தது. உ.தா: மன்னர்கள், உழைக்கும் மக்கள் என்ற வேறுபாடு இருந்திருக்கும். இரண்டுபேரின் பழக்கம் வேறு வேறாகத்தான் இருந்திருக்கும். இதில் எதை நீங்கள் தமிழர் பண்பாடு என்று வகைபிரிப்பிரிகள்? கடைப்பிடிப்பீர்கள்?

தமிழன் என்றும் தமிழர்களின் அடையாளம் என்றும் நீங்கள் எதை சொல்வீர்கள்? இன்றைய தமிழர்கள் யாருடைய வாழ்முறையை கடைபிடிப்பது? மக்களின் முறையையா? மன்னரின் முறையையா?

5. தமிழ் பண்பாடென்று அதன் மொழியை தவிர ஒரு பொதுவான அடையாளம் இல்லை என்றுசொன்னீர்கள் அப்படியென்றால் பண்பாடு என்பதன் அடையாளம் என்னவாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

சக மனிதனின் துயரங்களை புரிந்துகொள்ளுதலும் சகமனிதனை துன்புறத்தாமல் இருப்பதுதான் பண்பாட்டிற்கான அடையாளம். ஆனால் இவர்களின் பண்பாட்டில் இதற்கு நேர்மாறாக ஏற்றதாழ்வுகள் நிறைந்த, சகமனிதனை கீழ்ப்படுத்தி, அசிங்கபடுத்தி (திண்ணிய நிகழ்வுகள்) வாழ்கின்ற நிலைதான் இருக்கிறது. ஜாதி வேறுபாடுகள்அற்ற வர்க்க வேறுபாடுகள் அற்ற ஒரு புதிய பண்பாட்டை உருவாக்கவேண்டும். உழைக்கும் மக்களின் கலைவடிவங்களில் இருந்து அவர்களின் வாழ்வியலில் இருந்து அவைகளை உருவாக்க வேண்டும்.

6. இவ்வாறு வெறும் “ஆச்சாரம்” மட்டுமே இருந்துவந்த சூழமைவில் இந்தியாவிற்கு வந்த கிறித்தவத்தின் நிலை, அணுகுமுறை எவ்வாறு இருந்தது? இப்பொழுது எவ்வாறு இருக்கிறது?

பிறப்பினால் ஏற்றதாழ்வுகளை உறுதிப்படுத்திய பண்பாட்டை அடிப்படையாக கொண்ட இந்துக்களிடையே வந்திறங்கிய கிறித்தவம் பெரும்பாலும் ஜாதியை உள்வாங்கிய ஒன்றாகத்தான் இருந்தது. மேல்சாதிக்கார்களை குறிப்பாக பார்ப்பனர்களை மதம் மாற்றிவிட்டால் மற்றவரை மதம் மாற்றுவது எளிது என்ற நோக்கில் ஆரம்பகால இந்திய கிறித்தவம் செயல்பட்டது. அன்றைய கிறித்தவ கல்வி நிறுவனஙகள் பெரும்பாலும் மேல்சாதி இந்துக்களுக்கே பயன்பட்டது. அதற்கு சாட்சிபோல் இன்றும் சில கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களுக்குள் தாழ்த்தப்பட்ட வசதி குறைந்தவர்கள் நுழைய முடியாது என்பது தொடர்கிறது.

ஆனால் பார்ப்பனர்கள், கிறிஸ்துவத்திற்கு மாறவில்லை என்பது மட்டுமல்ல, அதற்கு எதிராகவே இருந்தார்கள். டாக்டர் அம்பேத்கர் சொல்வார் ‘அவர்கள் கிறிஸ்துவ நிறுவனங்களை ஏமாற்றி விட்டார்கள்’ என்று. இன்னும் சொல்லப்போனால் மேல்சாதி இந்துக்கள் குறிப்பாக கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் படித்தப் பார்ப்பனர்கள் கிறித்தவத்திற்கு எதிராக செயல்படத்துவங்கினார்கள். இன்றும் செயல்படுகிறார்கள். இந்து கண்ணோட்ட அரசியல் அறிவாளிகள் பலர் கிறித்துவ நிறுவனங்களில்தான் படித்தவர்கள்தான். உதாரணத்திற்கு சோ, குருமூர்த்தி போன்றோர்.

இந்தனை நூற்றாண்டுகள் ஆனபிறகும் கிறித்துவர்களின் எண்ணிக்கை வெறும் 2 சதவீதம்தான். இதுகூட தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களால்தான். தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் கிறிஸ்துவ மதத்தின் மூலமாக பெற்ற 1 சதவீத உதவிக்கே அந்த மதத்திற்கு  100 சதவீதம் உண்மையாக நடந்து கொண்டார்கள். கிறிஸ்துவ மதததின் மூலம் 100 சதவீதம் உதவி பெற்ற பார்ப்பனர்கள், அதற்கு நேர் எதிர் கண்ணோட்டம் கொண்டார்கள். தலித் மக்களின் நன்றி உணர்வை, நேர்மையை ‘பால் பவுடருக்கு மதம்மாறிட்டான்’ என்று கொச்சை படுத்தினார்கள். படுத்துகிறார்கள்.

7. கிறித்தவரல்லாத ஒரு மார்க்சிய, பெரியாரிய சிந்தனையாளராக, இன்று கிறித்தவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

கிறித்தவம் என்பதைவிட கிறித்தவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் அல்லது இருக்கவேண்டும் என்றுதான் நான் பார்க்கிறேன்.

பகுத்தறிவளார்களாகிய எங்களின் கிறித்துவ மதம் பற்றிய விமர்சனங்களை கண்டு, நாங்கள் கிறிஸ்துவ மதத்திற்கு எதிராக செய்படுவதாக எங்கள் மீது கடுமையாக கோபப்படுகிறார்கள். ஆனால் அவர்களே கிறித்தவதிற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

ஜாதிய ஏற்றத் தாழ்வுகளும், பிறக்கும் போதே ஒருவன் உயர்ந்தவனாகவும், தாழ்ந்தவனாகவும் பிறக்கிறான் என்கிற இந்துமத தத்துவத்தை இந்துக்களைப் போலவே 100 சதவீதம் கிறித்துவர்களும் நம்புகிறார்க்ள். அதையே கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள். திருமணம் முடிப்பதுகூட அவர் கிறிஸ்துவரா என்று மட்டும் பார்க்காமல், அவர் நம்ம ஜாதிக்காரரா என்பதைத்தான் தீவிரமாக பார்க்கிறார்கள். கிறிஸ்துவராக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, ஆனால் நம்ம ஜாதிக்காரராக கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று தேடிப்பார்த்து திருமணம் முடிக்கிறார்கள்.

இது இந்துக்களின் பழக்கம். ஒரு இந்து இன்னொரு இந்துவோடு சம்பந்தம் வைப்பதற்கு அவர்கள் மதத்தை வைத்து முடிவு செய்வதில்லை. அவர்களின் ஜாதிதான் முடிவு செய்கிறது. அதுபோல்தான் கிறிஸ்துவர்களும். அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு நாள் குறிப்பது நல்லநாள் கெட்ட நாள் பார்ப்பது, தாலி அணிந்து கொள்வது என்கிற அவரிகளின் பழக்கம் இந்துக்களின் பழக்கமாகவே இருக்கிறது. மத சார்பற்ற தனித் தமிழ் பெயர்களை தன் குழந்தைகளுககு வைக்க தயங்குகிற கிறித்துவர்கள், தாராளமாக இந்து சமஸ்கிருத பெயர்களை வைக்கிறார்கள்.

இயேசுவை நம்புகின்ற இந்துவாகத்தான் கிறித்துவர்கள் இருக்கிறாகள். இந்து மதத்தில் இருக்கிற அத்தனை சமூக சீர்கேடுகளையும் கிறித்தவர்களும் பின்பற்றுகிறார்கள்.

அவர்களிடம்ஒரு மார்க்சியவாதியாகவோ, பெரியாரியவாதியாகவோ இல்லாமல் ஒரு சாராசரி மனிதனாக நான் எதிர்பார்ப்பது அல்லது எதிர்பார்ப்போடு விடுக்கும் அழைப்பு, சமூக அக்கறைக் கொண்ட ஒரு முற்போக்காளராக, பகுத்திறவாளராக நீங்கள் வர முடியாவி்ட்டாலும் பரவாயில்லை. ஒரு உண்மையான கிறித்தவராகவாவது வாழுங்கள் என்பது தான். கிறித்துவம் ஏற்றுக் கொள்ளாத அல்லது பரிந்துரைக்காத ஜாதி என்ற நஞ்சை கடைப்பிடித்து கிறிஸ்துவிற்கும், கிறித்துவத்திற்கும் துரோகம் செய்யாதீர்கள்.

8. கிறித்தவ மதம் ஒரு அந்நிய கலாச்சார மதம் எனவே கிறித்தவர்கள் அந்நியர்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது அதை பற்றி?

கிறித்தவம் எந்த நாட்டில் உருவானதோ, அங்கு அந்த மதம் முற்றிலுமாக இப்போது வழக்கத்தில் இல்லை. அதே போல் நம் நாட்டிற்கு சொந்தமானவர் புத்தர். ஆனால் புத்தமதம் இந்தியாவை தவிர சீனா, ஜப்பான், கொரியா, இலங்கை போன்ற நாடுகளில் இருக்கிறது. அப்படியென்றால் சீனா, ஜப்பான், கொரியா, இலங்கை மக்கள் எல்லாம் அவர்களுடைய நாட்டிற்கு அந்நியர்களா? அல்லது அவர்கள் அனைவரையும் இந்தியர் என்று சொல்லமுடியுமா?

இந்தியாவில் வந்து மதம் பரப்பிய வெள்ளையர்கள், ஜெர்மானியர்கள், இத்தாலியர்கள், போர்த்துகீசியர்கள் இப்படி பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கும் கிறித்துவ மதம் தோன்றிய இடத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களுக்கும் கிறித்தும் அந்நிய நாட்டில் இருந்து வந்தது என்றுதான் சொல்லமுடியும். இன்னும் நெருக்கி சொன்னால் அவர்களை விட இந்தியாவிற்கும் கிறித்துவத்திற்கும் இன்னும் கூடுதல் நெருக்கம் இருக்கிறது. இந்தியா இருக்கிற ஆசிய கண்டத்தில்தான் கிறித்துவ மதமும் தோன்றியது. வெள்யைர்களைவிடவும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் இந்தியர்களுக்குத்தான் அதிக நெருக்கம் கிறித்துவம்.

ஒரு மனிதன் சகமனிதனை கீழ்படுத்தி பார்ப்பது,அதை நியாயப்படுத்தி பல தத்துவங்களை எழுதி வைத்திருக்கிற மதம், இந்த மண்ணின் சொந்த மதம் என்றே வைத்துக்கொண்டாலும், அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆகவே இந்து மத தீவிரவாதிகள் கிறித்துவத்தை பற்றி சொல்லுகிற இந்த ‘அந்நிய’ என்கிற சொல்லாடலை பகுத்திவாளர்களான நாங்கள், மறுக்க மட்டும் செய்யவில்லை. கடுமையாக கண்டிக்கவும் செய்கிறோம்.

வீட்டு கூறைக்கு நெருப்பு வைக்கிறவன் நம்ம சொந்தக்காரன் என்பதற்காக அவனை நாம் விரும்புவதோ, என்னதான் நம்ம வீடு கட்டுவதற்கு பக்கத்து ஊருகாரன் உதவி செய்தாலும் அவன் அந்நியன் தானே என்று சொல்வது, நியாயம் அன்று எனபது மட்டுமல்ல, அது மோசடியானதும் கூட.

குறிப்பு:

நம்மை பொருத்தவரை நம்மீதுள்ள வெறுப்பினால் அல்ல மாறாக நம்மீது உள்ள பொறுப்பினால் சொல்லப்படுகின்ற விவாதங்களையும் விமர்சனங்களையும் சீர்தூக்கி பார்த்து நம் வாழ்விற்கு நம்பிக்கைக்கு அவற்றை உரங்களாக உள்வாங்கி உண்மைக் கிறித்தவர்களாய் வாழ்வோம்.

நம் வாழ்விற்கு நம்பிக்கைக்கு அவற்றை உரங்களாக உள்வாங்கி உண்மைக் கிறித்தவர்களாய் வாழ்வோம்.

சந்திப்பு : ஆ. புத்திரன்   – நன்றி : சலேசியன் செய்தி மலர்-ஜீலை 2009