60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் பற்றி, NFDC மும்பை மேலாளரிடம் பேசியதை  தோழர் வேந்தன் இங்கே பதிவு செய்கிறார்.

***

அன்பார்ந்த  தோழர்களே!

நாம் தொடர்ந்து சாதிக்கெதிரான பிரச்சாரங்களை குறிப்பாக இளைஞர்களிடம் கருத்தரங்குகள், அண்ணல் அம்பேத்கர் உருவம் பொறித்த ஆடையை அணிதல் போன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக செய்து வருகிறோம்.

சில மாதங்களுக்கு முன்பு அண்ணல் உருவம் பொறித்த ஆடையை, சில எதிர்மறை அனுபவங்களையும் கடந்து வெற்றிகரமாக நாம் வெளிகொண்டு வந்ததை தோழர்கள் அறிந்ததே! இந்த வெற்றிக்கு தோழர்களுடன் தோள் கொடுத்து ஆதரவு அளித்த தோழர்கள் அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த வெற்றியை தொடர்ந்து  சாதிக்கு எதிராக அண்ணல் பற்றி பிரச்சாரங்களில் அடுத்த கட்ட நிகழ்வாக நாம் கூடி ஆலோசித்தது முதல் NFDC ஐ அணுகியது வரை உங்களுக்கு ஏற்கனவே  தெரிந்த தகவல்களே!

NFDC சென்னை  கிளையின் மேலாளரை சந்தித்த  போது அவர் மும்பையில் உள்ள NFDC யின் தலைமை  அலுவலகத்தின் மேலாளர்  திரு.ராமகிருஷ்ணன் அவர்களை  தொடர்பு கொள்ளும்படி அவருடைய தொலைப்பேசி எண்ணை கொடுத்தார். நாம் அவரிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.

டாக்டர். பாபா  சாகேப் அம்பேத்கர் படம்  இன்னும் தமிழில் வெளியாகாததன்  காரணம் பற்றி கேட்டபோது அதற்கான முழு காரணம் படத்தை தமிழில் வெளியிட வாங்கிய வினியோகிப்பாளரையே சாரும். என்றார்.

இந்த விஸ்வாஸ் சுந்தர் என்பவர் படத்தை வெளியிட எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவே இல்லை. இந்த படம் தமிழில் வெளியிட தயாராகி இருக்கிறது என்ற குறைந்தபட்ச தகவல் கூட பலருக்கும் தெரியவில்லை. பத்திரிகை துறையை சேர்ந்தவர்களுக்கே கூட தெரியவில்லை. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தினமலரில் ‘பாபாசாகேப் அம்பேத்கர் படம் இன்னும் தமிழ்நாட்டில் வெளிவரவில்லை’ என்று செய்தி வெளியிட்டது. இப்படம் தமிழில் தயாரித்தாகிவிட்டது பற்றியும் இப்படம் விஸ்வா சுந்தர் என்ற வினியோகிப்பாளரிடம் தான் முடங்கியுள்ளது என்ற தகவல் பத்திரிக்கை துறையினருக்கு கூட தெரியவில்லை.  இந்த அளவுக்கு விஸ்வாஸ் சுந்தர் என்பவர் படத்தை பற்றிய தகவல்களை வெளியே தெரியப்படுத்தவில்லை என்பது தான் இதன் பின்னணியில் உள்ள உண்மை. ஏன் இவர் தமிழ் சமூகத்திற்கு இப்படத்தைப் பற்றிய தகவல்களை தெரியபடுத்தவில்லை என்ற இந்த கேள்விகளை தலைமை அலுவலக மேலாளரிடம் கேட்ட போது,

இதற்கு NFDC எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என்றார்.

“அப்படியென்றால்  விஸ்வாஸ் சுந்தர், Dr.Babasaheb Ambedkar படத்தை தமிழில் வெளிக் கொண்டுவர முயற்சிக்காததால் ஒருவேளை அவர் படம் வெளிவராமல் முடக்கும் முயற்சியாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. அப்படி அவர் முடக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. அப்படி நேர்ந்தால் படத்தின் நிலையென்ன?” என்று கேட்டோம்.

அதற்கு  அவர், படம் வினியோகிப்பாளருக்கு  படத்தை வெளியிட உரிமம் குறிப்பிட்ட  காலத்திற்கு மட்டுமே இருக்கும். ஒருவேளை படம் வெளியாகவில்லையென்றால் உரிமம் மறுபடியும் NFDCக்கே திரும்பிவிடும் என்றார்.

சரி, படத்தை வெளியிட எத்தனை வருடங்கள்  அவருக்கு உரிமம் உண்டு என்று  கேட்டதற்கு 5 வருடங்கள் என்றார். எப்போது அவருடைய உரிமம் காலாவதியாகிறது என்று கேட்டதற்கு அவர் கூறிய தகவல் திடுக்கிட வைத்தது.

அவரின்  உரிமம் வருகிற டிசம்பர் 2010 த்துடன்  முடிகிறது.

“அடப்பாவி! அப்படின்னா அஞ்சு வருஷமா இந்த படத்தை வச்சிட்டு என்னடா பண்ண?” என்ற மனத்தின் கேள்வியுடன் திரு.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தொலைப்பேசி தொடர்ப்பை துண்டித்தோம்.

கடந்த ஐந்து  வருடங்கள் படத்தை பற்றி  வெளி உலகிற்கு தெரியாமல்  படத்தை மூடக்கிவைத்ததற்கு விஸ்வாஸ் சுந்தர் என்ன காரணங்கள் சொன்னாலும் ஏற்கத்தக்கதல்ல! ஏனெனில் ஒருவேளை அவருக்கு படத்தை வெளியிடுவதில் நிதிப் பிரச்சனை இருந்தாலும் அதைப் பற்றி கூட தெரியப்படுத்தவிலை.

கூடுதல் தகவல்: நண்பர் ஒருவர் விஸ்வாஸ் சுந்தரை தொடர்பு கொண்டு படத்தை வெளிகொண்டுவர என்ன பிரச்சன்னை என்று கேட்டதற்கு “படத்தை வெளியிட தேவையான நிதியில்லை. நிதி இல்லாததால் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை போன்றோரை கூட அணுகியிருக்கிறேன். ஆனால் அவர்கள் முடியாது என்று கையை விரித்துவிட்டனர்” என்று செண்டிமெண்டலாக பேசியிருக்கிறார்.

ஆனால், இன்னொரு திரைத்துறை நண்பரிடம் விஸ்வா சுந்தர், திருமாவளவன்  45 இலட்சங்கள் வரை விலை பேசியதாகவும், செல்வபெருந்தகை 40 இலட்சங்கள் வரை தரத் தயாராக இருந்ததாகவும், ஆனால், இவர் 60 லட்சம் தந்ததால் படத்தை தருவதாகவும் சொல்லியிருக்கிறார்.

ஒரு படத்தை வினியோக்கிப்பாளர் வாங்குவது எதற்காக?

அதை வெளிகொண்டு வர கடன் வாங்கியோ, அல்லது எப்படியாவது  பணத்தை போட்டு வினியோகிப்பாளர்கள் படத்தை வெளியிடுவார்கள். ஆனால்  இவருக்கு 60 இலட்சங்களும் தேவையாம்! அப்படி 60 இலட்சங்கள் கிடைத்தால் தான் படம் வெளியிட முடியுமாம்!

அப்படியென்றால்  இவரால் ஒரு ரூபாய் கூட  போட முடியாதா?

அப்புறம்  என்னத்து இவர் படத்தின் உரிமை  வாங்கினார்?

இவருடைய நோக்கம் தான் என்ன?

தோழமையுடன்

வேந்தன்.

***

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளியிடுவது தொடர்பான எங்களின் முயற்சியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும்  தோழர்கள், தோழர் லெமூரியனை தொடர்புகொள்ளுங்கள்.

பா.லெமூரியன் – செல்பேசி: 9940475503

தொடர்புடைய கட்டுரைகள்:

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்
*
அம்பேத்கர் என்னும் ஆபத்து
*
முற்போக்காளர்களின் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது
*
‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’
*
இந்து என்றால் ஜாதி வெறியனா?

9 thoughts on “60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…”

 1. வேந்தன் ஸார்..

  முதலில் விஸ்வாஸ் சுந்தர் எவ்வளவு தொகைக்கு NFDC-யில் இருந்து படத்தின் விநியோக உரி்மையை வாங்கியுள்ளார் என்பது தெரிந்தால்தான் மேற்கொண்டு பேச முடியும்..!

  இதனை மும்பை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டாலே தெரிந்துவிடும்..! அந்தத் தொகை எவ்வளவு என்பது தெரிந்தால் விஸ்வாஸ் சுந்தர் தற்போது கேட்கும் 60 லட்சம் ரூபாய் என்பது சுந்தருக்கு லாபமா? நஷ்டமா? என்று நமக்குத் தெரிய வாய்ப்புண்டு..!

  எனக்குத் தெரிந்து எந்தவொரு வியாபாரியும் தனது வியாபாரத்தில் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல்படமாட்டார். எனவே இந்தப் படத்தின் விநியோக உரிமையை ஐந்தாண்டுகளுக்கு 30 அல்லது 35 லட்சங்களுக்கு NFDC விற்றிருக்கும் என்று நினைக்கிறேன்.

  எப்படியிருந்தாலும் இந்தப் படத்தினை முடக்கி வைத்திருப்பதால் விஸ்வாஸ் சுந்தருக்குத்தான் நஷ்டம்..! வருகின்ற டிசம்பரோடு ஒப்பந்தக் காலம் முடிவடைவதால் அதற்குள்ளாக அவரால் வெளியிட முடிந்தால் படத்தின் வெற்றி, தோல்வியைப் பொறுத்து சிறிதளவு பணம் அவருக்குக் கிடைக்க வாய்ப்புண்டு.. வெளியிடவில்லையேல் அவருக்குத்தான் முழு நஷ்டம்..!

  ஆனாலும் நாம் காத்திருக்கலாம். அடுத்த ஜனவரியில் புதிய விநியோகஸ்தரை NFDC தேடும்போது நீங்களோ அல்லது தொல்.திருமாவளவனோ, செல்வப்பெருந்தகையோ NFDC-யிடம் பேசி குறைந்த விலைக்கு ஒப்பந்தம் செய்து படத்தை வாங்கி வெளியிடலாம்.. இதனால் காத்திருப்பதே நல்லது..!

  அதோடு தற்போதைய அரசியல் சூழலில் திருமாவளவனால் இந்தப் படத்திற்கு தமிழக அரசிடமிருந்து முழு வரிவிலக்கு பெற முடியும். அப்படிப் பெற்றால் படத்திற்கான பணச் சுமையில் இருந்து ஓரளவுக்கு விடுபடலாம்..!

 2. என்ன என்ன கூத்து பண்றாங்க பாருங்க..

  //ஆனால், இன்னொரு திரைத்துறை நண்பரிடம் விஸ்வா சுந்தர், திருமாவளவன் 45 இலட்சங்கள் வரை விலை பேசியதாகவும், செல்வபெருந்தகை 40 இலட்சங்கள் வரை தரத் தயாராக இருந்ததாகவும், ஆனால், இவர் 60 லட்சம் தந்ததால் படத்தை தருவதாகவும் சொல்லியிருக்கிறார்.//

  ம்ம்ம்…

  //அப்படியென்றால் இவரால் ஒரு ரூபாய் கூட போட முடியாதா?

  அப்புறம் என்னத்து இவர் படத்தின் உரிமை வாங்கினார்?

  இவருடைய நோக்கம் தான் என்ன?

  தோழமையுடன்

  வேந்தன்.//

  சொல்லித் தெரிய வேண்டுமா தோழர்.. நீதிமன்றத்தில் சிலை வைத்தாலும் சரி, திரைப்படமா வந்தாலும் சரி அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ன?..

  தோழர் லமூரியனிடம் பேசினேன்.. பார்ப்போம் முடிவு என்னனு?

 3. அம்பேத்கரை பற்றி இன்று யார் யாரோ பேசுகிறார்கள் என்று மூச்சுக்கு மூச்சு பேசி வரும் தமிழகத்தின் அக்மார்க் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு இது தெரியாமலா இருக்கிறது. தேர்தல் வரும் பொழுது தானே அவருக்கு அம்பேத்கர் நினைவே வரும்…..! வருமா ? அம்பேத்கர் திரைப்படம்! அம்பேத்கர் இயக்கங்கள் என்ன செய்கின்றன?

 4. வணக்கம்!

  டாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர் படத்தை தமிழில் கொன்டுவர பாடுபடும் அத்துனை தோழர்களுக்கு என் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

  நான் கேட்கிறேன் இந்த 60 லட்சத்தை ஏன் தமிழ்க அரசு கொடுக்க கூடாது? அதற்க்கு நாம் ஏன் தமிழக செய்தி & ஒளிபரப்பு அமைச்சகத்தை அனுககூடாது?

  40 ஆண்டுகள் கடந்த பின் ஒருவருடைய படைப்பு தானாகவே நாட்டுடமையாகிவிடும் பட்சத்தில், புத்தகங்களை நாட்டுடமையாக்கிறேன் பேர்வழி என்று கருணாநிதி பல கோடி ரூபாயை தன்னுடைய சாதிகரர்கள் மற்றும் அடிவருடிகளுக்கு கொடுக்கிறார் என்பது நாம் அறிந்ததே. இன்நிலையில் அம்பேட்கர் திறைப்படத்தை வெளியிட எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசைக் கன்டித்து தான் நாம் போராட வேண்டுமே தவிர NFDC
  முறையிடுவது இரண்டாம் பட்சம்தான்.

  உயர்நீதி மன்றத்தில் ஓர் PIL போட்டால் சில மர்மங்கள் அவிழக்கூடும்.

  தோழமையுடன்
  அப்ரகாம் லிங்கன்

 5. //40 ஆண்டுகள் கடந்த பின் ஒருவருடைய படைப்பு தானாகவே நாட்டுடமையாகிவிடும் பட்சத்தில்//
  இந்திய copyright சட்டத்தின் படி ஒருவர் இறந்து ஐம்பது ஆண்டுகள் வரை அவருடைய படைப்பின் உரிமை உண்டு. மற்றும் இன்றைய மகிழ்ச்சியான செய்தி,

  //அம்பேத்கர் படத்தை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

  அம்பேத்கார் படத்துக்கான வரிவிலக்கு சம்பந்தப்பட்ட உத்தரவை இன்னும் 2 வாரத்துக்குள் தமிழக அரசு தர வேண்டும் என்றும் இன்னும் 4 வாரத்துக்குள் படத்தை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.//

 6. நண்பரே இப்போதுதான் கோர்ட் வரிவிலக்கு கொடுக்க சொல்லிவிட்டதே
  கண்டிப்பாக வெளியாகி விடும்!
  மேலும் உங்களுக்காக பேசிய திரைத்துறை நண்பர் தயாரிப்பாளர் தேனப்பன் மூலமாக சுந்தரிடம் பேசினார் !

Leave a Reply