வாளுக்கும் தங்கத்திற்குமானப் போர்..

தென்னாப்பிரிக்காவின் அப்பாவி கருப்பின மக்களை தங்கத்திற்காகவும் கொலை செய்த… சிலுவைக்கும் ஆமென்…

*

சென்னை துரைப்பாக்கத்தில், குப்பையில் கிடந்த வெள்ளியை பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறு, மூன்று பேரின் கொலையில் முடிந்திருக்கிறது.

வெறும் நூறு ரூபாய் மதிப்புள்ள அந்த மலிவான உலோகம், மகத்தான மூன்று மனித உயிர்களை பலிவாங்கி இருக்கிறது. வெள்ளியே இந்தப்பாடு படுத்தியிருக்கிறதென்றால், தங்கம் என்ன என்ன செய்யும்?

நடுத்தர வர்க்கத்தை ஆட்டிப்படைகிறது தங்கம். அதன் விலையேற்றம் பல பெண்களின் திருமணத்தை நிறத்தியிருக்கிறது, தாமதப்படுத்தியிருக்கிறது. திருமணமான பல பெண்களை புகுந்த வீட்டிலிருந்து விரட்டியடித்திருக்கிறது.

மாப்பிள்ளையாக தங்கத்தை பார்த்து மகிழும் ஆண் – ஒரு பெண்ணின் தந்தையாக – சகோதரனாக இருக்கும் போது தங்கத்தை பார்த்து பயந்து நடுங்குகிறான்.

ஆம், பெண் – ஆண் என்ற வேறுபாடு இல்லாமல் மனிதர்களின் மூலையை பெருமளவில் ஆக்கிரமித்திருக்கிற ஒரே உலோகம் தங்கம் தான். இது ஆட்டுகிற பேயட்டத்திற்கு நம் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவருமே ஆடத்தான் செய்கிறார்கள்.

காரணம், ‘சொத்து’ என்ற வடிவத்துக்கு வீடு, நிலம் போக பெரிய பங்காற்றுவது தங்கம்தான். தங்கம் பணத்தின் மதிப்பைப் பெற்றதால் அது மனிதர்களின் உறவை முடிவுசெய்கிறது. அவர்களின் மகிழ்ச்சியை, துன்பத்தைத் தீர்மானிக்கிற உலோகமாக தங்கம் உருமாறியிருக்கிறது.

சில நேரங்களில் அது மனிதர்களை அற்பமானவர்களாகவும் மாற்றிவிடுகிறது.

‘தங்கள் உறவை விட தங்கம்தான் உயர்ந்தது’ என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தி, உறவுகளைப் பகையாக்கி, நட்பை விரோதமாக்கி, மனிதர்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது தங்கம்.

‘தங்கம் தனக்கு பாதுகாப்பு’ என்ற நிலையில் ஆரம்பித்து ‘தங்கமே தனக்கு பகையாக` மாறிய கதைகளும் ஏராளம்.

தங்கத்தை பறிப்பதற்காக உயர்த்தப்பட்ட வாள், `உயிரை பறித்தால்தான் தங்கம் கைக்கு வரும்’ என்ற நிலையில், உலகெங்கிலும் பல போர்களை நடத்திருக்கிறது.

வரலாற்றில் வாளுக்கும், தங்கத்திற்கும் நடந்த இந்தச் சண்டையை புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் புஷ்கின் தன் கவிதையில் இப் படிக் குறிப்பிடுகிறார்.

‘‘எல்லாம் என்னுடையது’’ என்றது தங்கம்.

‘‘எல்லாம் என்னுடையது’’ என்றது வாள்.

‘‘என்னால் எல்லாவற்றையும் வாங்க முடியும்’’ என்றது தங்கம்.

‘‘என்னால் எல்லாவற்றையும் பறிக்க முடியும்’’ என்றது வாள்.

ஆம், மன்னர் காலத்தில் இருந்து இன்றைய ஜனநாயக காலம் வரை போரில் வெற்றி பெற்ற நாடு, தோல்வியடைந்த நாட்டில் புகுந்து குறி வைத்து சூறையாடியது தங்கத்தைதான். தங்கம் எந்த நாட்டில் அதிகம் இருக்கிறதோ, அந்த நாட்டை நோக்கி படையை நகர்த்துவது வலுத்த நாட்டினர் வழக்கம்.

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த கஜினி முகமது, ‘ இந்து கோயிலுககுள் புகுந்தார்’ என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. உண்மையில் அவர் நோக்கம் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பதல்ல. இந்தியாவில் பெருமளவிலான தங்கம் கோயிலுக்குள் இருந்ததே காரணம். இந்தியாவின் இந்து மன்னர்கள் கூட இன்னொரு இந்து நாட்டின் மீது படையெடுத்து சென்றபோது, அந்த ஊர் கோயிலுக்குள் புகுந்து தங்க நகைகளை சூறையாடி இருக்கிறார்கள் என்பது வரலாறு.

இப்போதுகூட, தனிநபர்களின் பெரும்பான்மையான கொலைகளுக்கு மதம், ஜாதி, உறவு என்ற நிலைகளை எல்லாம் தாண்டி, தங்கமே அந்தக் கொலைகளை செய்திருக்கிறது.

தங்கம் மஞ்சள் நிறத்தில் மினுமினுப்பாக இருந்தாலும் வரலாற்றில் அதன் நிறம் ரத்தக் கறை படிந்தே கிடக்கிறது. தங்ம் மனித உறவுகளை சிதைத்து, ரத்தக்களறியை ஏற்படுத்தியதை மனதில் கொண்டு, தலைவர் லெனின் 1921 ஆம் ஆண்டு இப்படிச் சொன்னார்:

‘‘உலகளவில் நாம் வெற்றி பெற்ற பின்னர், உலகத்தின் மிகப் பெரும் நகரங்களில் சிலவற்றின் தெருக்களில் பொதுக் கழிப்பிடங்களைக் கட்டுவதற்கு தங்கத்தை பயன்படுத்துவோம் என நினைக்கிறேன். 1914-18ம் வருடங்களில் நடைபெற்ற யுத்தத்தில் தங்கத்துக்காக பத்து மில்லியன் மக்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்? முப்பது மில்லியன் மக்கள் எப்படி ஊனப்படுத்தப்பட்டார்கள் என்பதை இன்னும் மறந்துவிடாத தலைமுறைக்கு மிக ‘நியாயமான’ முறையில் மிகவும் அறிவுட்டுகிற வகையில் தங்கத்தை பயன்படுத்துவது..’’

ஆம், தங்கம இன்றைய மனிதர்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பொருளாக மாறியிருக்கிறது. பணம் கொடுத்து தங்கம் வாங்குங்கள். அதைப் பத்திரமாக பாதுகாத்தும் வையுங்கள்.

தங்கமா? மனிதமா? என்று வரும்போது , மனிதர்கள் பக்கம் நில்லுங்கள்.

தங்கத்தை விட மட்டுமல்ல, எந்த உலோகததை விடவும் உயர்ந்தவர்கள மனிதர்கள்.

*

1.3.2006 தினகரன் நாளிதழுக்காக எழுதியது.

மனிதர்களுக்கு, மனிதர்களைவிட தங்கத்தின் மேல் மோகத்தை, வெறியை கிளம்பும் ‘அட்சய திரிதியை‘ என்கிற அநாகரிகத்தை கண்டித்து மீண்டும் மூன்றாவது முறையாக பிரசுரிக்கப் படுகிறது.

தொடர்புடையவை:
‘அட்சய திரிதியை‘ நகை வாங்கினால் நல்லது

6 thoughts on “வாளுக்கும் தங்கத்திற்குமானப் போர்..

  1. நல்ல கட்டுரை. நம் மக்கள் சுயநலக்காரர்கள், மூடர்கள்.

  2. “உன்னை மாற்றும் சக்தி” என்று எல்லா பிரச்சினைக்கும் ஒரே தீர்வை தருகிறார்களே. உங்கள் கருது குவியலை எதிர் பார்க்கிறேன்.

  3. ‘அட்சய திரிதியை‘ என்றல்ல, இந்த சுரண்டல் உலகில் மக்களை மேலும் மேலும் ஏமாற்ற இது போலானா மதப் பித்தலாட்டங்கள் புது (தங்க) சாயம் பூசிக்கொள்கின்றன. மத மாயை மடிய வேண்டும். மக்கள் தெளிவு பெற வேண்டும். யார் பிழைக்கின்றார்களோ இல்லையோ, கொழுத்த பணக்காரன்களுக்கும், மூடநம்பிக்கை வணிகர்களுக்கும் இது போன்ற ‘அட்சய திரிதியை‘ பயன்படுகிறது. மனிதர்களுக்கு, மனிதர்களைவிட தங்கத்தின் மேல் மோகத்தை, வெறியை கிளம்பும் ‘அட்சய திரிதியை‘ என்கிற அநாகரிகத்தை கண்டித்து மீண்டும் மூன்றாவது முறையாக வெளியிடப்பெற்றுள்ள இக்கட்டுரை காலத்தின் தேவை; உரைகல், மீண்டும் உரையுங்கள், இந்த மக்கள் சுரணை பெறட்டும்.

  4. Nalla Katturai,
    Enakku Siruvayathilirunthu nagai aniyum pazhakkam illai,aanaalum en kudumpatthinarai maatra mudiyavillai.

  5. thangame manithanai nirnayeekirathu. manithan irendam patcham than, nandri thozhar.

Leave a Reply

%d bloggers like this: