சிறுமி பிரணதியின் மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை

உண்மையறியும் குழுவினருடன் அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத் தோழர்கள்
சென்னை எர்ணாவூர் பாரத் நகரைச் சேர்ந்தவர்கள் திரு.ரோசையா-திருமதி.மரியம்மா தம்பதி. இவர்களின் 3 வது மகள் சிறுமி பிரணதி. 13 வயது நிரம்பிய பிரணதி சென்னை வள்ளலார் நகரில் உள்ள காவலர் குடியிருப்பில், வசிக்கும் காவலர்கள் திரு.உலகநாதன்-திருமதி.துர்கப்பிரியா தம்பதியினரின் வீட்டில் வேலை பார்த்து வந்தார்.

12-3-2011 அன்று திரு.உலகநாதன்-திருமதி.துர்கபிரியாவின் வீட்டில் 13 வயதான சிறுமி பிரணதி தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை அறிவித்தது.

ஆனால், இது தற்கொலையல்ல, இந்த மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று பிரணதியின் பெற்றோர்களுடனும், அந்தப் பகுதி மக்களுடனும் இணைந்து அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இந்நிலையில், காவல் துறையில் விசாரணை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால், இதில் உண்மையறியும் பொருட்டு இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் சென்று விசாரிக்க, பேராசிரியர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர், எழுத்தாளர் என்று ஒரு உண்மையறியும் குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் விவரம்:

 பேராசிரியர். சரசுவதி (ஓருங்கினைபாளர் நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் தோழமை மையம்) பேராசிரியர். க.சிவக்குமார் (முன்னாள் முதல்வர்,அரசுக்கலைக் கல்லூரி குடியாத்தம்) தோழர். வே.மதிமாறன் (எழுத்தாளர்) தோழர்.சிவ.அமிர்தவள்ளி, தோழர். அங்கையர்கன்னி (எ) கயல் (பெண்கள் செயற்களம்,உயர்நீதி மன்ற வழுக்குறைஞர்) தோழர்.ஆர்.சுசீலா (மாநிலக்குழுத் தலைவர் இந்திய மாதர் தேசிய சம்மேளனம்) தோழர். இரா. அன்புவேந்தன் (மாநில அமைப்பாளர், இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம்)

இக் குழுவினர் பிரணதி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் சென்று விசாரித்த விவரங்களையும் அதனை ஒட்டி சில கேள்விகளையும், பரிந்துரைகளையும் அறிக்கையாக தரப்படுகிறது.

காவலர் குடியிருப்பு

முதலில் சென்னை வள்ளலார் நகரில் உள்ள காவலர் குடியிருப்பில், வசிக்கும் காவலர்கள் திரு.உலகநாதன்-திருமதி.துர்கப்பிரியா தம்பதியினரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு உலகநாதன் மட்டுமே இருந்தார். தன் மனைவி உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்குச் சென்று இருப்பதாகவும். இனிமேல்தான் அவரை சென்று அழைத்துவர வேண்டும் என்றும் கூறினார்.

‘பிரணதி யாரையோ லவ் பண்ணியிருக்கு, நானும் என் மனைவியும் காலையில் வேலைக்குப் போனபிறகு, வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில போயிடும். நாங்களே சிலநேரம் வீட்டு வாசலில் வந்து காத்திருப்போம்’ என்றார்.

‘ஒரு வேளை நீங்கள் சொல்வது போல், பிரணதி காதலித்திருந்து, காதலரை சந்திக்கத்தான் வெளியில் செல்வதாக இருந்தால், அதற்கு சரியான இடம் யாருமற்ற உங்கள் வீடுதான். ஏன் உங்கள் வீட்டை தவிர்த்து விட்டு வெளியில் செல்ல வேண்டும்?’ என்று கேட்டதற்கு எந்த பதிலும் தராமல், அமைதியா இருந்தார் திரு. உலகநாதன்.

‘சரி, அப்படி வெளியில் இருந்து எந்தப் பையனாவது, அந்தப் பெண்ணை தேடி வீட்டுக்கு வந்திருக்கிறானா? அக்கம் பக்கத்தில் யாராவது அதுபோன்ற உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா?’ என்று கேட்டதற்கு, ‘இல்லை’ என்றார் உலகநாதன்.

‘அப்படியானால், எதை வைத்து அந்தப் பெண் யாரையோ காதலித்ததாக சொல்கிறீர்கள்?’ என்றதற்கு,

‘பிரணதி, என் மனைவியிடம் அவுங்க வீட்டுக்கிட்ட சிவாவோ, செல்வமோ என்ற பெயர் கொண்ட ஒருவரை காதலிப்பதாக.. சொல்லியிருக்கு..’ என்றார்.

‘சரி, பிரணதி இறந்த விசயத்தை ஏன் நீங்கள் அவர்களின் பெற்றோர்களிடம் சொல்லவில்லை?’

‘நாங்க அவுங்களுக்கு போன் பண்ணோம்… நாட் ரீச்சபள்னு வந்தது.’
‘காவல் துறை மட்டும் எப்படி, அதே எண்ணில் தொடர்பு கொண்டு அவர்களிடம் பேசியிருக்கு?’

அமைதியாக இருக்கிறார் திரு.உலகநாதன். திரும்ப அதே பதிலலையே தருகிறார்.

‘சரி, காவல் நிலையம் வந்தபிறகும் பிரணதி பெற்றோர்களிடம் நீங்கள் தகவல் சொல்லமால், காவல்துறை அதிகாரி மூலமாக சொல்ல வைத்தது ஏன்?’

‘பிரணதியோட அப்பாவுக்கு, உடல்நிலை சரியில்லை. அவருக்கு ரத்தக் கொதிப்பு உண்டு. அதனால் அதை உடனடியாக சொன்னால், அவருக்கு பிரச்சினையாகிவிடும் என்பதால் நாங்கள் சொல்லவில்லை.’

‘அவருக்கு ரத்தக் கொதிப்பு இருப்பது, காவல் துறைக்கு தெரியுமா?’

‘தெரியாது’

‘அவர் நோயாளி என்பது தெரியாத, காவல் துறை அதிகாரி, அவரிடம் அக்கறையோடு எப்படி சொல்வார்? அவரின் உடல் நிலைக்குறித்து அக்கறையோடு பேசுகிற, நீங்கள்தானே அவரிடம் பக்குவமாக சொல்லி, ஆறுதல் படித்திருக்கவேண்டும். ஏன் அதை செய்யவில்லை?’

மவுனமாக இருக்கிறார் உலகநாதன்.

சிறுமி பிரணதி இறந்த செய்தி அவருக்கு காலை 11 மணியளவில்தான் தெரியும். அதையும் அவரின் மாமனார், திருமதி.துர்கப்பிரியாவின் தந்தை திரு.மனோகரன்தான் போனில் சொன்னதாகவும், அவர்தான் முதலில் பிரணதி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தை பார்த்ததாகவும் சொன்னார். அவரின் மாமனார் மனோகர் ஒரு தனியார் செக்யுரிட்டி நிறுவனத்தில் வேலை செய்ததாகவும், அவர் வாய்ப்புக் கிடைக்கும்பொது வீட்டுற்கு வருவார் என்றும், இந்த சம்பவத்திற்கு முதல்நாள் கூட வீட்டிற்கு வந்து சென்றதாகவும் சொன்னார்.

பிரணதியிடமும் அவரின் பெற்றொர்களிடமும் மிகுந்த அக்கறையாகவும், அன்பாகவும் இருந்ததாகவும், ஆனால், பிரணதி ஏன் இப்படி தற்கொலை செய்து கொண்டது என்பது தெரியவில்லை, என்று ஆரம்பத்தில் கூறியவர், பிறகு அவரின் காதல் பிரச்சினையை காரணமாக சொல்ல முயற்சித்தார். 11ஆம் தேதி, பிரணதி பெற்றோர்களைப் பார்க்க அவரின் வீட்டுக்குச் சென்று வந்த பிறகு மிகவும் சோர்வாக இருந்தாக சொன்னவர், பிறகு பிரணதிக்கு மாதவிலக்கு நாள் என்று தன் மனைவி தன்னிடம் சொன்னதாகவும் சொன்னார்.

இப்படி பல்வேறு காரணங்களை ஒரு கதம்பமாக திரு. உலகநாதன் சொன்னதின் நோக்கம் பிரணதி மனஉளைச்சாலால் தான் தற்கொலை செய்து கொண்டார், என்பதை சொல்வதற்காகவே.

H 1 காவல் நிலையம்

இந்த வழக்கில் காவல் துறையின் விசாரணயிலும் அவர்களின் அறிக்கையிலும் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள H1 காவல் நிலையம் சென்றோம்.

ஆய்வாளர் திரு. குணவர்மன், வெளியில் சென்றிருக்கிறார் வருவதற்கு மாலை யாகும் என்றார்கள். அதனால், DEPUTY COMMISSINER திரு. செந்தில் குமரனை சந்திக்க சென்றோம். அவரை பார்ப்பதற்காக காத்திருந்தபோது, ஒரு காவலர், ‘யார் நீங்கள்? என்ன வேணும்?’ அதட்டும் பாவனையில் கேட்டார். விசயத்தைச் சொன்னோம்.

‘இப்போது கரண்ட் இல்ல… அய்யாவ பாக்க முடியாது.’ என்றார்.

‘இல்லிங்க அவர் கிட்ட பேசறதுக்கும், கரண்ட் இல்லாம இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?’ என்றதும், ‘உங்கள் பெயரை எழுதிக் கொடுங்கள்’ என்றார். கொடுத்தோம். உள்ளே சென்றவர். பின் பக்கமாக வெளியே வந்து வேறு வேலையை பார்க்க போய்விட்டார்.

நாங்கள் சந்தேகப்பட்டு பின் வழியாக போய் பார்த்தபோது DEPUTY COMMISSINER வெளியில் புறப்பட்டு தன் வண்டியின் முன் வந்து நின்றுவிட்டார்.

நாங்கள் அவரை வழியில் சந்தித்து, பிரணதி வழக்கு விசயமாக பேசவேண்டும் என்றோம். தனக்கு இரண்டு நிமிடம் கூட நேரமில்லை என்பதை ஐந்து நிமிடத்திற்கும் மேல் விளக்கி பேசினார். தனக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்பதாக இருந்தது அவரின் அவசரமும் கோபமும்.

தேர்தல் முடிவுகளுக்கு முன் ஆய்வாளர் திரு.குணவர்மனை பார்க்க சென்றபோதும் பார்க்க முடியவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் சென்றோம். அப்போதும் ஆய்வாளர் திரு.குணவர்மன் எங்களை சந்திப்பதை தவிர்த்தார். காவல் துறையை பொறுத்த மட்டில், ஆட்சி மாறினாலும், காட்சி மாறாது போலும்.

காசிமேடு இடுகாடு

இடுகாட்டின் பொறுப்பாளரை சந்தித்துப்பேசினோம். அவருக்கு இந்த மரணத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இருப்பதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. காவல் துறை கொடுத்த தகவலின் பெயரிலேயே, செய்திருக்கிறார்கள். அதுவும் பிரணதிக்கு வயது 15 என்ற தவறான தகவலோடு.

முகப்பேர்

உலகநாதனின் மாமனார் திரு.மனோகர், வீடு சென்னை முகப்பேரில்தான் உள்ளது. அங்கு சென்றோம். 12ஆம்தேதி காலை 10.30 மணியளவில் தன் மகள் வீட்டுக்கு சென்றதாகவும், அப்போது வீடு உட்பக்கம் தாழ்பால் போடாமல், மூடியிருந்தது, வாசலில் திரை இருந்தது. நான் கதவை திறந்த உடன், அந்த அறையில் பேத்தி (உலகநாதன்-துர்கப்பிரியாவின் குழந்தை) கட்டிலில் படுத்திருந்தது.

‘படுக்கை அறையில் சென்று பார்த்தபோது, பிரணதி கட்டிலுக்கு மேல், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததது, நான் பதட்டமாகி உடனே என் மருமகனுக்கு (உலகநாதன்) போன் செய்தேன்’ என்றார் திரு. மனோகரன்.

‘சரி முதல்நாள் சாயந்திரம் வந்த நீங்கள் மறுநாள் காலையிலும் எதற்கு வந்தீர்கள்?’ .

‘முதல்நாள் மாலை நான் அங்கு போகவிலை்லை’ என்றார்.

திரு.உலகநாதன் சொன்னதிலிருந்து அவரின் இந்தத் தகவல் மாறுபட்டதாக இருந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு தான் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

அவர் வீட்டில் திருமதி.துர்கப்பிரியாவும் இருந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு துர்கப்பிரியா இங்குதான் இருப்பதாகவும் சொன்னார். இதுவும் உலகநாதன் சொன்னதிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. பிரணதியின் மீது மிகுந்த அன்பாக இருந்ததாகவும், அவர் ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை என்றார் துர்கப்பிரியா. திரு.உலகநாதன் ஏற்கனவே நம்மிடம் சொன்னதையேதான் இவரும் சென்னார். உள் அறையில் இருந்து திரு.உலகநாதனும் வெளியில் வந்தார்.

பிரணதி ஒருவரை காதலித்ததாக பிரணதியின் அம்மா தன்னிடம் சொன்னதாக துர்கப்பிரியா சொன்னார். பெயர் தெரியவில்லை என்றவர், உலகநாதனின் அலோசனைக்கு பிறகு, சிவா, செல்வம் என்ற பெயர்களை சொன்னார்.

ஆனால், சிவா, செல்வம் என்ற பெயர்கள், உலகநாதனுக்கு நினைவிருந்ததைப் போல், துர்கப் பிரியாவிற்கு இல்லை. இத்தனைக்கும் பிரணதியின் காதல் பற்றி தன் மனைவிதான் தன்னிடம் சொன்னதாக காலையில் நம்மிடம் சொன்னதே உலகநாதன்தான்.

‘இருவரும் பிரணதியியை தங்கள் வீட்டில் வேலைக்கு வைக்கவில்லை. ஒரு மகளைப் போல்தான் வளர்த்தோம்‘ என்றார்கள். மறக்காமல் பிரணதிக்கு 15 வயது இருக்கும் என்பதை திரு.உலகநாதன், திருமதி.துர்கப்பிரியா, திரு.மனோகரன் மூன்று பேரும் தொடர்ந்து சொன்னார்கள்.

பிரணதியின் பெற்றொர்கள்

தங்கள் மகள் தூக்குப்போட்டு கொள்கிற அளவிற்கு அவளுக்கு தெரியாது. இது தற்கொலையல்ல என்று உறுதியாக நம்புகிறார்கள். உலகநாதன்-துர்கப்பிரியா தம்பதிகள், எதுவாக இருந்தாலும் தன்னிடம் உடனுக்கு உடன் போன் பண்ணி பேசுவார்கள், ஆனால், ‘எங்கள் மகள் இறந்த செய்தியை ஏன் எங்களிடம் கடைசிவரை சொல்லவே இல்லை’ என்கிற கேள்வியை தொடர்ந்துகேட்டுக் கொண்டிருந்தார்கள், திரு. ரோசையாவும் திருமதி மரியம்மாவும்.

‘நாங்கள் கிறித்துவர்கள் ஆனால், எங்கள் மகள் உடலை எங்களிடம் கூட ஒப்படைக்காமல், ஏன் இந்து சுடுகாட்டில் போலிசா் அடக்கம் செய்தார்கள்?’ இந்தக் கேள்வி தொடர்ந்து அவர்கள் பேச்சில் இடம் பிடித்தது.

‘உங்கள் மகள் யாரையோ காதலித்ததாக, நீங்கள் சொன்னதாக துர்கப்பிரியா சொன்னார்‘ என்று கேட்டோம். அதை முற்றிலுமாக மறுத்தார்கள்.

‘என் மகள் இறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு, துர்கப்பிரியா எனக்கு போன் செய்து. உங்கள் மகள் இங்கு (போலிஸ் குடியிருப்பில்) யாரையோ காதலிக்கிறாள்’ என்றார். நான் கோபமாக அப்படி எல்லாம் என் மகள் செய்யமாட்டாள் என் பொண்ண உடனே என் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்’ என்றேன். அதற்கு உடனே துர்கப்பிரியா, ‘இல்லப்பா… சும்மாதான் சொன்னேன்.’ என்றார், என்று அதைப் பற்றி சொன்னார் திரு.ரோசையா.

நாங்கள் பிரணதியின் வீட்டைச் சுற்றி இருந்த அக்கம் பக்கத்திலும், பிரணதியின் தோழிகளிடமும் விசாரித்தபோது, பிரணதிக்கு, காதலோ, சிவா, செல்வம் என்ற பெயர் கொண்ட நபர்களோ இல்லை என்றே தெரிந்தது.

ஸ்டான்லி மருத்துவர்

பிரணதியின் உடலை போஸ் மார்டம் செய்த ஸ்டான்லி மருத்துவர் சுதர்சன், மிகுந்த தயக்கத்திற்கு பிறகு பேசினார். 12-3-20011 அன்று 3 மணிக்கு போலீஸ் போன் செய்து, ஒரு பாடி வரும் என்றார்கள், 4 மணிக்கு பாடி வந்தது 4.15 POSTMORTEM செய்தோம்’ என்றார்.

இப்படித்தான் எல்லா கேசுகளிலும் அவசரமாக செய்வீர்களா?’ என்றதற்கு தெளிவான பதில் இல்லை.

பிரணதியின் மரணத்தில் எந்த வித வன்முறையும் இல்லை. அது தற்கொலைதான் என்றார். தனது அறிக்கையில் என்ன இருக்கிறதோ அதை தாண்டி மருத்துவ ரீதியான சந்தேகத்தைக்கூட பேச மறுத்தார்.

‘ஒருவரை மயக்க நிலையில் ஆழ்த்தி அவரை தூக்கில் தொங்க விட்டால்கூட, அது தற்கொலைபோல் தெரியும் அல்லவா?’ என்று கேட்டதற்கு. ‘ஆம், தெரியும்’ என்றார்.

பதில்கள் அற்ற கேள்விகள்

1. உலகநாதன்-துர்க பிரியா இருவரும், பிரணநிதியின் பெற்றோர்களின் செல்போன் தொடர்பு கிடைக்க வில்லை அதனால் பிரணதி இறந்த செய்தியை சொல்ல முடியவில்லை என்கின்றனர். உண்மையிலேயே தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று சொல்ல ஏன் முயற்சிக்கவில்லை? செல்போன் டவர் கிடைக்கவில்லை என்பதால் விட்டுவிடுகிற செய்தியா இது?
ஆனால், 12.3.2011 மதியம் 1.30 மணியளவில் பிரணதியின் தந்தை திரு.ரோசையாவிடம் திரு.உலகநாதன் செல்போனில் பேசியிருக்கிறார். அதில், எந்த தகவலும் சொல்லாமல், உடனடியாக தங்கள் வீட்டுக்கு வர சொல்லியிருக்கிறார். ஏன் இதை மறைத்தார்?

2. ரோசையா வேலையாக இருந்ததால், தன் மனைவி மரியம்மாவை காவலர் குடியிருப்புக்கு அனுப்பி இருக்கிறார். ஆனால், அங்கு உலகநாதன்-துர்க பிரியா இல்லை. வேறு யாரோ இருவர், திருமதி.மரியம்மாவை H 1காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களும் பிரணதி இறந்த செய்தியை மரியம்மாவிடம் சொல்லவில்லை? யார் அந்த இருவர்?

3. H 1 காவல் நிலையத்தில் நீண்ட விசாரணைக்குப் பிறகு 4 மணியளவில் காவல் நிலையத்தில் இருந்த அதிகாரி, மரியம்மாவிடம் உங்கள் மகள் வயிற்று வலியால் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லியுள்ளார். மரியம்மாவிடம் உலகநாதன் சொல்ல வேண்டிய செய்தியை காவல் துறை அதிகாரி உலகநாதன் சார்பாக சொல்லவேண்டிய காரணம் என்ன?

4. பெற்றோருக்கு தெரியாமல், பிரணதியின் உடலை அவசரமாக POSTMORTEM செய்ய வேண்டிய அவசியம் என்ன?

5. ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடும் பழக்கம் உள்ள திரு.ரோசையாவிடம், வெள்ளைத்தாளில் கைரேகை வாங்கியது ஏன்?

6. POSTMORTEM முடிந்த பிறகு பிரணதியின் உடலை பெற்றொர்களிடம் ஒப்படைக்காமல்,காவல் துறையே முன்னிறுந்து அடக்கம் செய்தது ஏன்? எல்லா தற்கொலை வழக்குகளிலும் காவல்துறை இப்படித்தான் நடந்துகொள்ளுமா?

7. ரோசையா கிறித்துவராக இருக்க, பிரணதியின் உடலை உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி, இந்து மயானத்தில், காவல்துறையினர் அடக்கம் செய்தது ஏன்?

8. பிரணதியின் பிறப்பு சான்றிதழில் 31.10.1997 என்று இருக்க, திரு. உலகநாதன் குடும்பமும், DEPUTY COMMISSINER திரு. செந்தில் குமரன் உட்பட அனைத்து காவலர்களும் பிரணதியின் வயதை 15 என்று குறிப்பிடுவதின் நோக்கம் என்ன?

9. காசிமேடு இந்து மயான நகராட்சி என்று இறப்பு சான்றிதழில் இருக்க, காவல்துறையின் மரண அறிக்கையில் கிறித்துவ கல்லரை என்று குறிப்பிட்டதற்கான காரணம் என்ன?

10. திரு.உலகநாதன், திருமதி துர்கபிரியாவை குடும்த்தினரைத் தவிர வேறு யாரிடமும் பிரணதியை பற்றியும், அவரின் மரணம் குறித்தும் விசாரிக்காதது ஏன்?

11. சட்டத்திற்கு புறம்பாக, தன்வீட்டில் குழந்தை தொழிலாளர் முறையை கடைப்பிடித்த திரு.உலகநாதன், திருமதி. துர்கபிரியவின் வாக்குமூலத்தை உண்மை என்று நம்பியது ஏன்?

12. பிரணதி தூக்கில் தொங்கியதாக, சொல்லப்படுகிற திரு. உலகநாதனின் வீட்டில் உள்ள இடம் பொறுத்தமற்றதாக இருக்கிறது. ஆனால், அது குறித்து காவல் துறைக்கு சந்தேகம் வராமல் போனது ஏன்?

13. பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றதின் மூலமாக மனஉளைச்சலுக்கு ஆளான குழந்தைகள் கூட தீக்குளிப்பு போன்ற கொடுமையைத்தான் தேர்தெடுத்து இருக்கிறார்கள். 13 வயதே நிரம்பிய ஒரு சிறுமிக்கு, தூக்குப்போடுவது குறித்தான் முறைகள் எப்படி தெரியும்?

14. பிரணதி மர்மமான முறையில் இறந்த வீட்டில் உள்ளவர்களை தற்கொலைக்கு தூண்டியதாகக்கூட சந்தேகப் படாமல், யார் என்றே உறுதியாக தெரியாத யாரோ ஒருவரை காதலின் பேரில் குற்றவாளியாக முயற்சிப்பது ஏன்?

15. யாரோ ஒரு பையன்தான் பிரணதி தற்கொலைக்கு காரணம் என்றால், அதுயார் என்று அடையாளம் காண எந்த முயற்சியும் காவல் துறை செய்யாதது ஏன்?

இறுதியாக…

1. இது கொலையல்ல, தற்கொலை என்று காவல் துறை உறுதியாக சொல்கிறது. இது தற்கொலையும் அல்ல என்று நாங்கள் சொல்கிறோம். கொலைக்கான மோட்டிவ்வேசனோ, தடயங்களோ, ஆதாரங்களோ இல்லை என்று காவல்துறை சொல்வது போலவே, தற்கொலைக்கான காரணங்களும் சரியானதாக, தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வலுவானதாக இல்லை.

2. பிரணதியின் தற்கொலைக்கு மனஅழுத்தம் காரணம் என்பது, இறந்த பிறகு யூகித்து சொல்வததாகத்தான் இருக்கிறது. காவலர் குடியிருப்பில் உள்ளவர்களோ, பிரணதியின் எர்ணாவூர் வீட்டினறகே உள்ளவர்களோ பிரணதியின் மன அழுத்தம் குறித்து எதுவும் சொல்லவில்லை. திரு. உலகநாதன் குடும்பத்தினர்கூட அதை உறுதியாக சொல்லவில்லை.

3. இந்த வழக்கிற்கும் தனக்கும் சம்பந்தமில்லாததைப் போல் உண்மையறியும் குழுவிடம் நடந்து கொண்ட DEPUTY COMMISSINER திரு. செந்தில் குமரன், பிரணதியின் புதைக்கப்பட்ட உடலை RE – POSTMORTEM செய்ய வேண்டியதை மறுத்து, உயர்நீதிமன்றத்திற்கு அளித்த கடிதத்தில்,

திரு. உலகநாதன் உண்மையறியும் குழுவிடம் என்ன சொன்னாரோ, அதையேதான், கடிதமாக்கித் தந்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தை எழுதிக் கொடுத்து திரு. உலகநாதனோ அல்லது திரு. உலகநாதனுக்கு வழக்கு விசயமாக எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது DEPUTY COMMISSINER திரு. செந்தில் குமரனோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு DEPUTY COMMISSINER கடிதமும், திரு.உலகநாதன் எங்களிடம் சொன்ன விவரங்களும் பின்னிபிணைந்து இருக்கிறது. அதில் குறிப்பாக தனது கடித்தில் DEPUTY COMMISSINER பிரணதியை, Four months back Ms.pranidhi eloped with one boy… என்று குறிப்பிட்டு இருக்கிறார். eloped இந்த வார்த்தைக்கு திருட்டுத்தனமாக என்று அர்த்தம். எந்த ஆதாரமும் இல்லாமல், ஒரு 13 வயது சிறுமியைக் குறித்து இப்படி ஒரு கடுமையான வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் DEPUTY COMMISSINER.

4. பிரணதி, தாழ்த்தப்பட்ட அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த சிறுமி. அதனாலேயே கேட்க நாதியில்லை என்பதைப் போல் இந்த வழக்கில் மிக அலட்சியமாக நடந்திருக்கிறார்கள், H1 காவல் நிலைய ஆய்வாளர் திரு. குணவர்மனும், வண்ணாரப்பேட்டை, DEPUTY COMMISSINER செந்தில் குமரனும்.

ஆகவே இந்த வழக்கை விசாரிக்க, தொடர்ந்து நடத்த இவர்களுக்கு எந்த வகையிலும் உரிமையில்லை. ஏனென்றால், இவர்களே விசாரிக்கப்படவேண்டியவர்கள்தான்.

இவர்கள் தொடர்ந்து பிரணதியின் வழக்கை விசாரித்தால், இவர்களே சிவா அல்லது செல்வம் என்ற பெயரில் திரு. ரோசையாவின் உறவினரையோ அல்லது அந்தப் பெயர் கொண்ட யாராவது ஒரு இளைஞனையோ பிடித்து, மொத்தக் குற்றத்தையும் அவரின் தலையில் கட்ட வாய்பிருப்பதாக சந்தேகம் எழுகிறது.

ஆகவே இந்த வழக்கை H1 காவல் நிலையத்திலிருந்து மாற்றி சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டியின் விசாரணை வெளிப்படையாக நடத்தப்பட்டு, உண்மைகளை கண்டறியவேண்டும், என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
பிரணதி மரணம் குறித்த உண்மையறியும் குழு

7 thoughts on “சிறுமி பிரணதியின் மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை

  1. உங்கள் ஆய்வுக்கு மிகவும் நன்றி.இதன்படி பார்த்தால் திரு.உலகநாதன் உலகநாதனின் மாமனார் திரு.மனோகர் மற்றும் உயரதிகாரிகளுக்கும் நிச்சயம் தொடர்பிருப்பது தெரிகிறது.போராடுங்கள்.நீதி கிடைக்கவேண்டுமென்பதோடு அநியாயம் செய்தவர்கள் கடுமையாகத்தண்டிக்கப்படவேண்டும்.
    -குமரனும் நண்பர்களும்-
    லண்டனிலிருந்து

  2. ஒரு குழந்தைத் தொழிலாளியைத் துன்புறுத்திக் கொன்றிருக்கிறார்கள். கொலை மற்றும் குழந்தைத் தொழிலாளியை வேலைக்கமர்த்தியது ஆகியவற்றுக்குத் தனித் தனியாக வழக்குகள் தொடரப்பட வேண்டும்.

    நான் அறிந்து பல வீடுகளில் ஊர்புறங்களிலிருந்து பெண் குழந்தைகளை அழைத்து வந்து வேலைக்கு வைத்திருக்கிறார்கள். அவ்வாறானவர்கள் படிப்பறிவற்றவர்கள் கிடையாது. நிறைய படித்து நன்கு சம்பாதிக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் கற்ற கல்வி என்னத்தைக் கற்பித்ததோ!

  3. oh no. why do these animals target children. do any policeman has heart in this country. bastards.

Leave a Reply

%d bloggers like this: