இந்து மதத்திற்கு காந்தி முகமூடி; காந்திக்கு தேசப்பிதா முகமூடி

நீலவேந்தன்

 பேச்சாளர், கவிஞர்

பொதுவாக ஒரு புத்தகம் படித்து முடித்தவுடன் நமக்குள் ஏதேனும் ஒரு சலசலப்பையோ, மாற்றத்தையோ ஏற்படுத்த வேண்டும். சமீப காலத்தில் அவ்வாறு படித்து முடித்தவுடன் எனக்குள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம், எழுத்தாளர் வே,மதிமாறன் அவர்கள் எழுதியுள்ள காந்தி நண்பரா? துரோகியா? என்கிற புத்தகம்.

நாம் எல்லோருமே போருக்குப் போகிறோம் பெரும்பாலான சமயங்களில் ஆயுதம் ஏதும் இல்லாமலே! காந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி! அம்பேத்கரின் விரோதி!! ஏன்? எப்படி? என்று கேட்டால் தெரியாது. காந்தி நமக்கு எதிரி என்று உணர்ச்சியூட்டப்பட்டிருக்கிறோம். அறிவூட்டப்பட்டிருக்கிறோமா?

காந்தி எதிரிதான் என்று அறிவூட்டியிருக்கிறார் மதிமாறன்.

இன்றைக்கு ஒரு நபர் வெளிநாட்டுக்குப் படிக்கப்போனாலே பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துக்கொள்ளும் காலத்தில், இன்றைக்குச் சரியாக 96 ஆண்டுகளுக்கு முன்பாக 1916ம் ஆண்டில் தனது 25ம் வயதில் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மானுடவியல் துறை தொடர்பான கருத்தரங்கில் தன்னார்வமாக கலந்து கொண்டு முன்வைத்த இந்தியாவில் சாதிகள் – தோற்றம், வளர்ச்சி, அமைப்பியக்கம் எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையை முன்வைத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்.

இன்றைக்கும் சாதியம் பற்றிய எவரொருவரின் ஆய்வும் இந்தக்கட்டுரையைத் தொடாமல் முடிந்து விடாது. ஆனால் புரட்சியாளரின் இத்தகைய மேதைமைத்தனத்தையும், சாதி ஒழிப்புச்சிந்தனையையும் புறம் தள்ளிவிட்டு, அவர் சொந்த சாதியினர் என்பதற்காகவே தலித்துகள் அவரைப்போற்றுவதும், அவர் சொந்தசாதியினர் இல்லை என்பதற்காக பிறசாதியினர் அவரைப்புறந்தள்ளுவதும் புரட்சியாளருக்கு இழைக்கப்படும் மேலுமொரு அவமானமாகும்.

அத்தகைய புரட்சியாளர் அம்பேத்கர் அம்பலப்படுத்திய ராமராஜ்ஜியத்தை தூக்கிப்பிடித்த காந்தியின் அயோக்கியத்தனத்தை காந்தியின் வரிகளில் இருந்தே அம்பலப்படுத்தியுள்ள எழுத்தாளர் மதிமாறன் அவர்களின் சமூகக்கடமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

நூலின் 16ம் பக்கத்தில் சொந்த நாட்டு மக்களிடம் தீண்டாமையயும், வெளிநாட்டுக்காரர்களிடம் அடிமை உணர்வையும் காட்டுகிற பார்ப்பனர்களைப்போல தென்னாப்பிரிக்காவில் காந்தி நடந்து கொண்டார் என்று காணப்படுகிற வரிகள் ஆயிரமாயிரம் அர்த்தம் பொதிந்த செய்தியாகும்.

இந்த செய்திக்கு ஆதாரமாக தென்னாப்பிரிக்காவில் காந்தி மேற்கொண்ட பயணத்தின்போது, நடந்த நிகழ்வுகளை அதிலும் குறிப்பாக காந்தியின் வார்த்தைகளில் இருந்தே சுட்டிக்காட்டி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு பொய்யை வைத்து “மகாத்மா” என்கிற பிம்பத்தை கட்டியமைத்திருக்கிறார்கள் எனும் செய்தி அதிர்ச்சியானது மட்டுமல்ல! தெருத்தெருவாக எடுத்துச்செல்லப்பட்டு மக்களை விழிப்பூட்ட வேண்டிய செய்தியாகும்.

ஏதோ காந்தியைத் திட்டுவதினாலேயே நம் கொள்கை எதிரிகளான கோட்சே வகையறாக்கள் மகிழ்ந்து விடக்கூடாது என்று, காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்! பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்!! என்று இரு பெரும் கருத்தியல் எதிரிகளையும் சம தொலைவில் வைத்து பெரியாரின் பேரன் என்பதை நிரூபித்து விட்டார்.

கோவணம் கட்டிய காந்தி கோட் சூட் போட்ட பிர்லா போன்றவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்.

கோட் சூட் போட்ட அம்பேத்கர் தான் கோவணம் கட்டிய ஏழைகளின் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்தார் என்ற வரிகளில் முற்போக்கு முகமூடி போட்ட அதிமேதாவிகள் புரிந்து கொள்ள வேண்டியது ஏராளம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியத்துணைக்கண்ட அரசியலை சாரமாக்கி புரிந்துகொள்ள ஏதுவான வகையில் போட்டிருக்கிற அம்பேத்கர், பெரியார் காந்தி படங்களைத் தாண்டி எதுவும் சொல்வதற்கு இல்லை.

காந்தியின் எழுத்துக்களில் இருந்தே தான் எழுப்புகிற கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு காந்தியை ஆதரிக்கட்டும் என்று எழுத்தாளர் மதிமாறன் விடுக்கிற சவாலுக்கான பதிலை வாய்ச்சொல் வீரர் தமிழருவி மணியன் வகையறாக்களுக்கே விட்டு விடுகிறோம்.

இந்த புத்தகத்தை வாசிப்பதோடு நின்றுவிடாமல் தமிழகத்தின் சேரிகள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு அம்பேத்கரிஸ்டுகளிடம் இருக்கிறது. அது அவர்களின் கடமையாக கருத வேண்டியதில்லை. அது அம்பேத்கரிஸ்டுகளின் பணியை எளிமையாக்க வந்த வாய்ப்பு என்பதால்.

வன்கொடுமை ஒழிக்க தீண்டாமையை ஒழிக்க வேண்டும். தீண்டாமையை ஒழிக்க சாதியை ஒழிக்க வேண்டும். சாதியை ஒழிக்க இந்து மதத்தை ஒழிக்க வேண்டும். இந்து மதம் தனது கோரமான முகத்தை காந்தி முகமூடி அணிந்து மென்மையாகக் காட்டிக்கொண்டிருக்கிறது.

ஆக, காந்தியை அம்பலப்படுத்துவதே, தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்பதால், தங்கள் பணியைச் சுலபமாக்க வந்துள்ள கருத்தியல் ஆயுதமான இந்தப்புத்தகத்தை ஏந்திக்கொண்டு சாதி ஒழிப்புப்போருக்கு போவோம் வாருங்கள் என்று உரிமையுடனும் தோழமையுடனும் அழைக்கிறேன்!

போர் ஆயுதம் தந்த எழுத்தாளர் மதிமாறனுக்கு எங்கள் நன்றியை வார்த்தைகளால் சொல்லப்போவதில்லை. சாதி ஒழிப்புப்போரை முன்னைவிட வேகமாக எடுத்துச்செல்லும் செயலால் காட்டுவோம்!!

 என்றும் சாதி ஒழிப்புப் பணியில்
நீலவேந்தன்.
ஆதித்தமிழர் பேரவை
9443937063

தோழர் நீலவேந்தன் பேச்சாளர், கவிஞர்.

அதைவிட சிறப்பு தொடர்ந்து களத்தில் இறங்கி போராடுகிறவர். கூடங்குளம் அணுஉலையை ஆதரித்து தமிழக அமைச்சரவை அறிவித்தவுடன், அதை கண்டித்து தமிழகத்தின் முதல் போராட்டத்தை ஆதித் தமிழர் பேரவை சார்பாக நடத்தியவர். தோழர்களுடன் முதலில் சிறை சென்று, கடைசியாக ஜாமினில் விடுதலையானார்.

சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் பழ. நெடுமாறன், உலகத் தமிழர் மாநாடு நடத்தி அதில் உலகின் தலைசிறந்த தமிழருக்கான விருதை, தமிழ் விரோதியும், சமஸ்கிருதம்தான் சிறந்த மொழி என்ற கருத்துடையவரும், கோவை மாவட்டத்தில் இந்து அமைப்புகளுக்கும், கவுண்டர் ஜாதி சங்கங்களுக்கும் புரவலராக இருக்கும் பொள்ளாச்சி மாகாலிங்கத்திற்கு வழங்கினார்.

அதே மேடையில் பொள்ளாச்சி மகாலிங்கத்தை விமர்சித்து, அவருக்கு தருகிற விருது கண்டத்திற்குரியது என்று பேசிய காரணத்தால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

இவருடைய கவிதையை உள்ளடக்கமாக கொண்டுதான் தோழர் அ.ப.சிவா ‘துக்கம்’ குறும்படத்தை எடுத்திருந்தார்.

புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள:

‘அங்குசம்’ ஞா. டார்வின் தாசன் – 94443 37384

கோயம்புத்தூர்: வழக்கறிஞர் பாலா – 98942 30138 –

திருச்சி : நாக. குணராஜ் – பெரியார் நூல் நிலையம் – 98655 96940

தஞ்சை: தோழர் எழிலரசன் – 94885 45546

தொடர்புடையது:

காந்தி: பிம்பங்களை உடைத்தெறிவது வரலாற்றுக் கடமை

சாதி இந்து எதைச் செய்தாலும் அது புனிதமானதுதானா?;காந்தியம்: மலத்தில் பொறுக்கிய அரிசி

உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி

மகாத்மா: விமர்சனப்படுத்துவது தேவையானது, ஆரோக்கியமானது, சுவாரசியமானதும் கூட

17 thoughts on “இந்து மதத்திற்கு காந்தி முகமூடி; காந்திக்கு தேசப்பிதா முகமூடி

 1. பகிர்வுக்கு நன்றி.

  சாதி ஒழிப்பு போர் தேவைதான். ஆனால் அதை புத்திசாலித் தனமாக கொண்டு செல்லவேண்டும். சாதிகலற்ற சமத்துவம் நிலவும் தமிழினத்தை உருவாக்க போரைத் தவிர வேறு வழிகளையும் ஆராய்ந்து பார்த்து செயல்பட வேண்டும். போர்களில் பலவிதம் உண்டு. அதில் சில ஆக்கும் போரும் ஆகும். உதாரணத்திற்கு பொருளாதார போரை குறிப்பிடலாம். மேடையும் ஒலி பெருக்கியும் கிடைத்த உடன் உணர்ச்சி வசப்பட்டு வீர வசனங்கள் பேசி நியாயத்தையும் வழிகாட்டிகளையும் தாகத்துடன் தேடி அலையும் வஞ்சிக்கப் பட்ட இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லக் கூடாது.

  காந்தி எனபவர் ஒரு வடிகட்டின மடையர் எனற கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன். இது செத்துப் போனவரின் பழைய கதை. நமது இன்றைய காலங்கள் பல புதிய மாற்றங்களை கொண்டவை. நம் நவீன கால சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளும் எதிர்பார்ப்புகளும் மாறிவிட்டன. காலம் வெகு வேகமாக மாறிக் கொண்டு இருக்கின்றன. இதில் இன்றும் பழைய பஞ்சாங்கங்கள் பேசி நேரத்தை வீரியத்தை தவறான வழிகளில் வீணடிப்பது சரியாகுமா?
  கடந்த கால வரலாறுகளை ஆராய்ந்து ஆறிந்துகொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை. இவ்வரலாறுகளின் இருண்ட பாகம் நமக்கு ஒரு சுமை ஆகிவிடக்கூடாது. அச்சுமைகளை பக்குவப்படாத இளஞர்கள் முதுகில் ஏற்றிவிடவும் கூடாது.

  நாய் கடித்தது என்று நாம் நாயை திருப்பி கடிப்பதில்லை. நாம் பண் பட்டவர்கள் என்பதை நம் சீறிய செயல்களின் மூலம்
  செய்து காட்டி முன்னேற்றத்தை நோக்கி நகருதல் அதி அவசியம்.

  இதுவே நலமான எதிர்காலத்திற்கான வழி.

 2. தோழர் நீலவேந்தனின் தெளிவான எழுத்துநடை.

 3. ///புரட்சியாளரின் இத்தகைய மேதைமைத்தனத்தையும், சாதி ஒழிப்புச்சிந்தனையையும் புறம் தள்ளிவிட்டு, அவர் சொந்த சாதியினர் என்பதற்காகவே தலித்துகள் அவரைப்போற்றுவதும், அவர் சொந்தசாதியினர் இல்லை என்பதற்காக பிறசாதியினர் அவரைப்புறந்தள்ளுவதும் புரட்சியாளருக்கு இழைக்கப்படும் மேலுமொரு அவமானமாகும்.///

  சரியான வார்த்தை.

 4. தோழர் மாசிலா
  உங்கள் ஏற்கக் கூடியதே,
  ஆனால், காந்தியம் பல வடிவங்களில் அன்னாஅசாரே போன்றவர்களால் இன்னும் தீவிரமாக உயிர்வாழ்கிறது.

  பல முற்போக்கான விசங்களை இந்த காந்தியவாதிகள்தான் பின்னுக்குத்தள்ளுகிறார்கள்.
  காந்தி பற்றிய விமர்சினம் இன்னும் தேவை.

 5. ///திருப்பூரில் பழ. நெடுமாறன், உலகத் தமிழர் மாநாடு நடத்தி அதில் உலகின் தலைசிறந்த தமிழருக்கான விருதை, தமிழ் விரோதியும், சமஸ்கிருதம்தான் சிறந்த மொழி என்ற கருத்துடையவரும், கோவை மாவட்டத்தில் இந்து அமைப்புகளுக்கும், கவுண்டர் ஜாதி சங்கங்களுக்கும் புரவலராக இருக்கும் பொள்ளாச்சி மாகாலிங்கத்திற்கு வழங்கினார்.

  அதே மேடையில் பொள்ளாச்சி மகாலிங்கத்தை விமர்சித்து, அவருக்கு தருகிற விருது கண்டத்திற்குரியது என்று பேசிய காரணத்தால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.///

  வெட்கம். இதுதான் தமிழ்த் தேசியமா? திராவிட இயக்கத்தை விமர்சிக்கிற தமிழ்த் தேசியமா?
  திராவிட இயக்கத்தவர்களும் இதுபோன்ற தலித் விரோத சாதி வெறியர்களுக்கு துணைபோவது கண்டிக்கத் தக்கது.

 6. பெரியார்திக பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் அவர்களும், தோழர் நீலவேந்தன் அவர்களும் கண்டனத்தை தெரிவித்தனர்… தோழர் நீலவேந்தன் தனக்கு இரு தலைவர்கள் அதில் ஒருவர் கொளத்தூர் மணி என்றே பல மேடைகளில் பேசியுள்ளார்.. பழகுவதில் இனிமையான நண்பர்

 7. உள்ளப்படியே தோழர் நீலவேந்தன் அவர்களின் ” காந்தி துரோகியா நண்பரா ?” புத்தகம் பற்றிய விமர்சனம் ஏற்க கூடியது…சிறப்பாக அவரின் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

  //”வாய்ச்சொல் வீரர் தமிழருவி மணியன் வகையறாக்களுக்கே விட்டு விடுகிறோம்”//

  இந்த வாய்ச்சொல் & ஈழ போர்வீரர் 🙂 குறித்து உங்களின் பார்வையில் ஒரு கட்டுரையை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன் அண்ணா.

  ஸ்ரீதர்

 8. மிகச் சிறந்த மதிப்புரை. சாதி ஒழிப்பு போரில் ஈடுபடுகிற அத்துணை தோழர்களுக்கும், தோழர் மதிமாறனின் காந்தி நூல் ஒரு அறிவாயுதமாக பயன்படுகிறது. சிந்திக்க வைக்கும் மதிப்புரை எழுதிய தோழர்.நீலவேந்தனுக்கு தோழமை கலந்த பாராட்டுக்கள். நன்றி.

 9. சாதி என்ன என்பதை கூறத் தயங்க வேண்டாம்: கி.வீரமணி -தினமணி

  /ஊர் பொது காரியங்கள்/ பிரச்சினைகள் பற்றி பேசிட மக்கள் அனைவரும் பொதுஇடத்தில் கூடுகின்றனர்.

  அம்பி நீங்களெல்லாம் நாற்காலியில் உட்காரப்படாது.

  ஏன் சாமி? நிறைய பிராமனாள் சாமியெல்லாம் நாற்காலிகளில் உட்கார்ந்து இருக்கிறார்களே? நாங்கள் ஏன் உட்காரக் கூடாது?

  அவாள் எல்லாம் ஆண்டவனை நேரிடையாக தொடர்பு கொள்ளும் வரம் பெற்றவர்கள். அந்தத் தகுதியை இந்து மதம் உங்களுக்கு கொடுக்க வில்லைஎன்று நோக்குதெரியாதோ?

  படவா ராஸ்கல்ஸ் – ஐயர் சாமி கிட்டே வாக்குவாதம் பண்ணிகொண்டா இருக்கிறாய். நாம கீழே தான் இருக்கணும். அல்லது சாமி குத்தம் ஆயிடும்.சின்ன பசங்க பேசறதை எடுத்துக்காதீங் க சாமி.

  நீங்க பஜனையை/பிரசங்கத்தை ஆரம்பிங்க சாமி.//

  “ கோயில்களில் ஆண்டவனை பூஜை செய்வதற்கு பிராமணனுக்கு ஒரு நீதி- மற்றவர்களுக்கு ஒரு நீதியா??? வெட்கப்படவேண்டும் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும் இந்நிலை தொடர்வதற்கு.”

  ஹி..ஹி..ஹி.. வேலிக்கு ஓனான் அல்லவா சாட்சியாக உள்ளது.??? கூபு / ஏசுபாபு/ குயிலுக்கு உள்ள உரிமை கடலூர் சித்தனுக்கும் கிடைக்குமா??? வாழ்க பத்திரிகை தர்மம்.

  http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=587353&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%E0%AE%9A%E0%AE%BE%

 10. gandhiji is a national leader and his life is open and it is admired by all nationals.you hippocratics will not digest and your aim is only to give bad name for the famous people who born as brahmin(i am not abramin) a day will come to understand you people for this publicity stunt you make.People are the very alert now a days .dont waste time to get this cheap publicity.If you are a true social worker take back ward village adopt it and do service for its people. Otherwise go to bed and sleep well dont give any opinion about others.Again i tell a day will come to end to all this bullshit.-Siva-Dubai

 11. காந்தியை பற்றி பேசுவது இறந்த நிகழ்ச்சி. இன்றும் சாதி ஒழியவில்லை. சாதியை ஒழிக்க படித்த நாம் நம்மால் முயன்றதை செய்ய வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பது போல். சாதியை புதிய சாதியால் ஒழிப்போம். நாம் அனைவரும் இந்தியாவின் அனைத்து தலைவர்கள், தலைமை அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க வேண்டும். நாங்கள் இனிமேல் மதம் என்ற இடத்தில இந்தியன் என்றும் ஜாதி என்ற இடத்தில தமிழன் என்றும் கூறவும் எழுதவும் சட்டம் வேண்டும். யார் வேண்டுமானாலும் இவ்வாறு ஜாதி, மதம் மாறிக்கொள்ளலாம். மாறியாவர்கள் மீண்டும் பழைய சாதிக்கோ அல்லது விரும்பி வேறு சாதிக்கோ மாற முடியாது.

Leave a Reply

%d bloggers like this: