ராவண தேசமும் இராவண காவியமும்

Ravana-Desam‘ராவண தேசம்’ என்ற பெயரில் சினிமா விளம்பரம் நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. சென்னை முழுக்க சுவரொட்டிகளும் இருந்தன.

தலைப்பை பார்க்கும்போது ‘இன்றைய சினிமா உலகில் திராவிட இயக்கப் பாணியில் எதிர்ப்பரசியல் தலைப்பா?’ என்ற வியப்புடன் ‘இது தமிழர் துயரத்தை ஈழத் தமிழர் நிலையிலிந்தே சொல்லுமா?’ என்கிற ஏக்கமும் கூடவே.

ஆனால் படம் எப்படி இருக்குமோ?
எதிர்பார்ப்புக்கு எதிராக இருந்தால் என்ன செய்ய முடியும்? இலங்கை கொடூரத்தின் குறியீடாக ராவணன் பெயர் இருந்தால்…?

இருந்தாலும் பெரியார் கண்ணோட்டம் கொண்ட ‘ராவண தேசம்’ என்ற எழுச்சிமிக்க அந்தத் தலைப்பு எனக்குள் ஒரு அலையை உருவாக்கியது.

‘இந்துப் பார்ப்பன மேன்மையும் அடிமைத் தனமும் நிரம்பி வழிகிறது’ என்று பெரியார் இயக்கம் தமிழ் இலக்கியங்களை ‘கந்தல்’ செய்தபோது, அதற்குப் பதில் சொல்ல வக்கற்றவர்கள்,
‘பெரியார் இயக்கத்திற்கு இலக்கிய அறிவே கிடையாது’ என்று தங்கள் இயலாமையை ரசனையாக மடை மாற்றி, இலக்கிய ரசிகர்கள் வேடத்தில், தகுதி-திறமைப் பேசினார்கள்.

பெரியார் இயக்கத்தை இலக்கிய ரசனையற்றவர்களாக சித்தரிப்பதில் தீவரம் காட்டிய தமிழறிஞர்கள் யாரும் இதுவரை தமிழ் இலக்கியத்திற்கு எந்த ஒரு சிறப்பான படைப்பிலக்கியத்தையும் செய்ததில்லை.

மாறாக அவர்கள் செய்ததெல்லாம்; ‘சிலப்பதிகாரத்தில், கம்ப ராமாயணத்தில், சங்க இலக்கியங்களில் ஆஹா.. ஓஹோ.. அடடடடா.. என்னமா எழுதியிருக்கான்யா…’ என்ற திண்ணை தூங்கிகள் பாணியிலான வெத்தலைப் பாக்கு வாய், வெட்டிப் பேச்சுகள்தான். பக்தி சார்ந்த இலக்கியத்தைக்கூட அவர்கள் செய்யவில்லை.
அதாவது பழம்பெருமையைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

ஆனாலும் நவீன காலத்திலும், சங்க இலக்கிய காலத்தின் தமிழுக்கு இணையாக பெரியார் இயக்கம் மட்டும் தான், தன் இலக்கியப் பணியை செய்தது.

சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் போன்ற காவியங்களுக்கு இணையாக; கம்ப ராமாயணத்திற்கு எதிராக ஒரு படைப்பிலக்கியத்தை தந்தது.
அந்த எழுச்சிமிக்க இலக்கியம், புலவர் குழந்தையின் ‘இராவண காவியம்’. பெரியார் இயக்கத்தின் இலக்கியச் சாதனையாக உயர்ந்து நிற்கிறது.

ஆனாலும் கொஞ்சமும் வெட்கமில்லாமல், அந்தக் காலத் தமிழறிஞர்களும் இந்தக் கால நவீன இலக்கியவாதிகளும் புலவர் குழந்தையின் காவியச் சாதனையை மூடி மறைக்கின்றனர். உண்மையில் அவர்களிடம் இருப்பது தமிழ் உணர்வு மட்டும்தான் என்றால், ஏன் இராவண காவியம் திட்டமிட்டு தவிர்க்கப் படுகிறது? ஆக, அது தமிழ் உணர்வல்ல, தமிழ்வழியில் இவர்கள் ஏற்றிக் கொண்ட மதஉணர்வே தமிழ் உணர்வாக வடிவம் பெற்றிருக்கிறது.

கம்பனின் தமிழைப் போல், பண்டார பார்ப்பன சார்பு கொண்ட அடிமைத் தமிழாக இருந்திருந்தால் கொண்டாடி இருப்பார்கள்.
ஆனால், புலவர் குழந்தையின் தமிழோ பெரியாரின் சுயமரியாதையை உள்ளடக்கமாகக் கொண்ட பகுத்தறிவுத் தமிழ்.
அறிவு எப்போதுமே பழைவாதிகளுக்கு மதவாதிகளுக்கு இனவாதிகளுக்கு அச்சமூட்டுவதாகவே இருக்கிறது.

**

Facebook ல் 11.10.2013 அன்று எழுதியது.

pulver kulanthaiபுலவர் குழந்தை

தொடர்புடையவை:

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

கம்பராமாயணத்தில் அறிவியல்!

‘இவர்கள்தான் நவீன எழுத்தாளர்கள்’ ; நல்லாயிருக்கு ராஜா நியாயம்!

5 thoughts on “ராவண தேசமும் இராவண காவியமும்

  1. ராமாயணம் பொய். ராமன் கற்பனை. ஆனால் ராவணன் மட்டும் உண்மை. இது திராவிடப் பகுத்தறிவு.
    ராமன் பெருமையை எழுத வந்த வால்மீகி ராவணனை ஒட்டுமொத்த அயோக்கியனாக ஏன் சித்தரிக்கவில்லை? வால்மீகிக்குப் பகுத்தறிவு கிடையாது. சுய மரியாதையும் கிடையாது.
    ராவணனின் பெருமையை சுயமரியாதை குழந்தை எழுதினதை விடப் பல மடங்கு கம்பீர அழகாக வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. தெரியுமா?

  2. மன்னிக்கவும். ஆனந்தம், ராவணன் சனாதன எதிர்ப்பின் குறியீடு. ராமனின் பெயரால் ஒரு தேசம் கூறு போடப்படும் போது ராமனையும் செங்கல் சுமந்த RSS சித்தாள்களையும் எதிர்க்க ராவணனை உயர்த்துவது அவசியம்.

  3. யாழ்நிலவன்,
    ராவணன் நான்கு வேதங்களையும் கற்றறிந்தவன். குறிப்பாக சாமவேதத்தைக் கரைத்துக் குடித்தவன். தனது சாமகானத்தால் சிவனைத் துதித்து கயிலை மலையையே இளக வைத்தவன். பிராமண மந்திரிகளின் ஆலோசனையுடன் ஆட்சி செய்தவன். இலங்கையின் நலனுக்காகப் பிரார்த்திக்கவென்றே வேதபண்டிதர்களை நியமித்து அக்னிஹோத்ரம் மற்றும் (பிராமணர்களுக்கான அடிப்படை அடையாளங்களில் ஒன்று.) வேதபாராயணமும் செய்ய ஊக்குவித்தவன். சிறந்த சிவபக்தன். (ஆதாரம்: வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம்) ஆஹா, சநாதன எதிர்ப்புக்குக் குறியீடு ராவணனைவிடப் பொருத்தமாக யாரும் இருக்க முடியாது.
    (பி.கு: வேதங்களைக் கற்றது, ஆதரித்து ஊக்குவித்தது பற்றிய வர்ணனையை வால்மீகி அழுத்தம்திருத்தமாகவே கூறியிருக்கிறார். ராமரையோ தசரதரையோ பற்றிய வர்ணனைகளில் கூட வைதிக ஆதரவு என்பது ராவணன் விஷயத்தில் சொல்லப்பட்ட அளவு ஹைலைட் செய்யப்படவில்லை.)

Leave a Reply

%d bloggers like this: