நூல் வெளியீட்டு விழா-விருது வழங்கும் விழா
14-01-2014 அன்று சொன்னை டாக்டர் சந்தோஷ் நகரில் மக்கள் நல இளைஞர் சங்கம் சார்பாக தமிழர் திருநாள் விழாவை முன்னிட்டு Ambedkar Institute of Multimedia வில் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் – சொல்லப்படாத உண்மை & இசைவிமர்சனங்களுக்கு பின்னான அரசியல் புத்தக வெளியீட்டு விழா, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் விருதுகள் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களுக்கு சான்றிதழை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.
குறிப்பாக உறியடிக்கும் போட்டியும், இளைஞர்களின் நடன நிகழ்ச்சியும் அனைவரையும் ஈர்த்தது.
புத்தக வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. தன்னுடைய புத்தகம் அறிவு ஜீவிகளால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும், தன்னுடைய புத்தகம் அறிவு ஜீவிகள் மத்தியிலே வெளியிடுவதுதான் கவுரவம் என்ற அறிவு ஜீவி (?) எழுத்தாளர்கள் மத்தியில் சிறிய பகுதியில் புத்தக வாசிப்பை அதிகம் அறியப்படாத டாக்டர் சந்தோஷ் நகர் பகுதியில் துணிச்சலாக (லாப நோக்க கணக்கு பார்க்காமல்) புத்தகம் வெளியிட்டதற்காக நமது வாழ்த்துக்களை அங்குசம் பதிப்பகத்தாருக்கும், எழுத்தாளர் வே.மதிமாறன், புத்தக தொகுப்பாளர் மா. பாலசந்தர் அவர்களுக்கும் நன்றி.
புரட்சியாளர் அம்பேத்கர் விருது – ஐயா சக்தி தாசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சேத்துபட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்துக்களை தீவிரமாக முன்னெடுத்துசென்ற முன்னோடிகளில் ஒருவர். அரசு கொடுத்த விருதை விட இந்த பகுதி இளைஞர்கள் கொடுத்த விருதே உயர்வானது என்று பேசியது நெகிழ்ச்சியாகவும், தலித் இளைஞர்கள் எந்த இடத்தில் பிறழ்கிறார்கள் அவர்கள் அடுத்து என்ன செய்யவேண்டியது என்பது பற்றி அவரது வாழ்த்துரை அமைந்திருந்தது.
அங்குசம் டார்வின் தாசன் – திரு. அம்பேத் வெங்கடேஷ்புரட்சியாளர் அம்பேத்கர் விருது – எழுத்தாளர் வே.மதிமாறன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
2008ம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர்களால் ஒட்டப்படும் சுவரொட்டியில் கூட டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரி என்று இருக்கக்கூடாது என்றும் அச்சடிப்பதில் கூட டாக்டர் அம்பேத்கர் பெயரைக்கூட பயன்படுத்தக்கூடாது என்றும் பெயரைக்கூட தீண்டாமையாகக் கருதியது ஜனநாயக சக்திகள் அனைவரையும் அதிரவைத்தது. சட்டக்கல்லூரி பிரச்சனைக்கு பிறகு அம்பேத்கரை முன்னெடுப்பதற்கான தேவையை கருதி, அண்ணல் அம்பேத்கர் உருவம் பொறித்த டீ சட்டை கொண்டு வரும் முயற்சியில் முன்னின்று வழி நடத்தியவர் மதிமாறன்.
புரட்சியாளர் அம்பேத்கரின் உருவத்திற்கே தீண்டாமை இருக்கும் போது, அவரைப்பற்றி அவரது வரலாற்றை சொல்லும் ’டாக்டர் அம்பேத்கர்’ திரைப்படம் மட்டும் அவ்வளவு எளிதில் வெளியிடப்பட்டுவிடுமா என்ன? ’டாக்டர் அம்பேத்கர்’ திரைப்படம் முடக்கப்பட்டபோது படம் வெளிவர முதன்மையாக பங்காற்றினார். மேற்சொன்ன இரு நிகழ்வுகளிலும் உடன் பங்காற்றியவர்கள் தோழர், சசி, ஸ்ரீதர், லெமூரியன், நிதி, மன்னை முத்துக்குமார், சுவன், அருண், மருத்துவர் கிஷோர், கார்டூனிஸ்ட் பாலா, திருப்பூர் பாலா மற்றும் டாக்டர் சந்தோஷ் நகர் இளைஞர்கள்.
தமிழ் புத்தாண்டு என்பது எது? ஆபாசமாகவும் முட்டாள்தனமாகவும் சித்தரிக்கப்பட்ட அறிவுக்கு ஒவ்வாத வெறும் அறுபது ஆண்டுகளை மட்டுமே கொண்ட சித்திரை 1 தமிழ்புத்தாண்டா? தை 1 தமிழ் புத்தாண்டா? உழுபவனுக்கு நிலம் சொந்தமில்லாத சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களின் பொங்கல் கொண்டாட்டம் பற்றி பேசியது பொங்கல் பற்றிய புதிய மாற்று சிந்தனையை அவரது சிறப்புரை தந்தது.
தந்தை பெரியார் விருது – தோழர் மணிவர்மா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஓவியம் என்றாலே தான் கிறுக்குவதை மற்றவர்கள் கண்டுபிடிக்கக்கூடாது என்று நினைக்கும் ஓவியர்களை (?) பார்த்திருக்கிறோம். ஆனால் கலை என்பது யாருக்கானது என்ற அரசியல் புரிதல் உள்ளவர் இவர். தன் கைவண்ணத்தால், கருப்புசட்டை போட்ட பெரியாரையும், கண் கவரும் வண்ணத்தில் தன் கைவண்ணத்தால் நம்மிடம் முக நூலில் பதிப்பவர் ஓவியர் மணிவர்மா அவர்கள். நாம் ஓவியர் என்று சொன்னால் அவரே ஒப்புக்கொள்ளமாட்டார். ஒப்பு கொள்ளவேண்டியது கலைஞர்கள் அல்ல. மக்கள். ஆகவே நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறோம் நீர் ஒடுக்கப்படும் சுரண்டலுக்கு உள்ளான அனைவருக்குமான ஒருவரான ஓவியக் கலைஞர். ஏற்புரையில் மக்களின் இயல்பான வாழ்க்கையைப்பற்றியும், இளைஞர்களின் நடனம் குறித்து பாராட்டினார்.
திரு. அம்பேத் வெங்கடேஷ் அவர்கள் கருத்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்கள் : திரு. அம்பேத் வெங்கடேஷ், திரு. டார்வின் தாசன், எழும்பூர் பகுதி தோழர்கள் இருதய ராஜ், லெனின் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நன்றியுரை – சுவன்.
மாணவர்களை பயிற்றுவித்த அனுபவத்தையும், உறுதுணையாக நின்ற மற்ற தோழர்களுக்கும் குறிப்பாக முத்துசாமிக்கு நன்றி தெரிவித்தார். மல்டிமீடியாவை பயிற்றுவித்தது மட்டுமல்லாமல் வழிகாட்டியாக இருந்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிய சுவனுக்கு மதிமாறன் அவரது புத்தகங்களை பரிசாக அளித்தார்.
-இல. வேந்தன்.
திருப்பூர் புத்தகக் காட்சியில் எண் 78 ‘பெரியார் படிப்பகம்’ கடையில் புத்தகங்கள் கிடைக்கும்.
தொடர்புக்கு: ரமேஸ் பாபு – 9843 668999
தொடர்புடையவை:
தமிழர் திருநாள் விழா-புத்தக வெளியீட்டு விழா-விருதுகள் வழங்கும் விழா