ஒரு குண்டுமணி குலுங்குதடி: எளிய தமிழனின் குரல் உன்னத பாவங்களோடு

Avatharam_B

தமிழ் சினிமாவில் ஒரு பாடகரின் குரல், நடிகருக்கு இவ்வளவு நெருக்கமாக நடிகரே பாடியது போல் அமைந்ததில் நடிகர் நாசர் முதல்முறையாக இயக்கி நடித்த அவதாரம் படத்தில் இடம் பெற்ற‘ஒரு குண்டுமணி குலுங்குதடி..’ இந்தப் பாடல்தான் முதன்மையானது.

பாடல்களை கேட்ட என் அனுபவதில்; டி.எம்.எஸ். – சிவாஜி, டி.எம்.எஸ். – எம்.ஜி.ஆர், ஜெமினி – பி.பி.ஸ்ரீனிவாஸ் இன்னும் வெற்றிகரமாக உலா வந்த பல குரல்களும்.. இந்த ஒரு பாடலில் நாசருக்கு இளையராஜா அவர்களின் குரலின் பொருத்தம்போல் அமைந்ததற்கு அடுத்துதான்.

‘தனதந்தானன…தந்தனனானா.. தந்தன தந்தன.. தந்தனா.. என்னண்ணணே.. அக்கா முன்னாடியெல்லாம் பாடச் சொல்றீங்க.. அட தாளம் வேற போட்டிங்க..’ என்ற பாட ஆரம்பித்தவுடன் சட்டென்று வருகிற ராஜாவின் அந்த சிரிப்பு அப்படியே நாசரை நிறுத்துகிறது.

‘சொல்லுற சொல்லுல’ என்றுதான் வரவேண்டும் ஆனால்..

‘சின்னம்மா சொல்லலுல சொல்லுல…’ என்று பாடுவதிலும் அதே டெம்போவில் ‘நல்லாயிருக்கா..’ என்று கேட்கிற உச்சரிப்பிலும் உள்ள அப்பாவித்தனம் பாடல் முழுக்க நிரம்பி வழிவது அழகோ அழகு.

தெருக்கூத்துக் கலைஞன் பாடுகிற நாட்டுப்புறப்பாடல் என்பதால் தெருக்கூத்து பாடலில் உள்ள கூறுகளை சேர்த்துக் கொண்டு அந்த எளிமை கெடாமல், அதை நுட்பமான இசையாக உயர்த்துகிற அவரின் இசைப்பேரறிவு. இடையிசை தன் பணியால் பாடலை கூடுதல் இனிமையாக்குகிறது.

‘காயாத கானகத்தே…’ தொடர்ந்து அதை ஆலாபனை செய்து ‘ஏய்..’ என்று அழுத்தம் கொடுத்து கம்பீரமாக உச்சரித்து, அந்த ஆலாபனையை முடிக்கும் இடம் அட்டகாசம்.

‘முருகனுக்கு.. இன்னாத்துக்கு.. அடவு கட்டும் பொயப்பு..’ இதில் ‘இன்னாத்துக்கு’ ‘பொயப்பு’ என்கிற இந்த உச்சரிப்பு தமிழகத்தின் வட மாவட்டங்களை குறிப்பாக வடஆற்காடு, காஞ்சிபுரம் வட்டார வழக்கைச் சேர்ந்தது.
தெருக்கூத்து கலையும் இந்த மாவட்டங்களில் மட்டும்தான். அதனாலேயே அந்த உச்சரிப்பை செய்திருக்கிறார்.

‘பொயப்பு’ – ‘இன்னாத்துக்கு’ என்கிற இந்த சொற்களை பேசுகிற எளிய சென்னை மக்களையும் அவர்கள் உச்சரிப்பையும் கேலி பேசுகிறவர்களை பார்த்து கிண்டல் செய்கிறது ராஜாவின் இந்த உன்னத உச்சரிப்பு.

இந்தப் பாடலை வேறு பாடகர்கள் பாடுவதுபோல் கற்பனை செய்து பார்பதற்குக் கூட பொருத்தமற்றதாக மாற்றியிருக்கிறது எளிய தமிழனின் குரலாக ஒலிக்கிற ராஜாவின் குரல்.

ஸ்லோ ரிதத்தில் சவகாசமாக ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல், கடைசி சில நொடிகளில் மேலே உயர்ந்து உச்சஸ்தாயியில் முடியும்போது, சர்வதேச தரத்தை சடாரென்று எட்டிப் பிடிக்கிறது.

பாடலைக் கேட்க..

பிப்பரவரி 19 அன்று face bookல் எழுதியது.

உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி

இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

4 thoughts on “ஒரு குண்டுமணி குலுங்குதடி: எளிய தமிழனின் குரல் உன்னத பாவங்களோடு

  1. Vinoth Kumar தென்றல் வந்து தீண்டும் போது ….இந்த பாடலும் நாசருக்கு ராஜா குரல் .100சதம் ஒத்து இருக்கும்
    February 19 at 12:34pm · Unlike · 3

    Ambeth K Samy arumai thozhar
    February 19 at 12:39pm · Unlike · 1

    Venkatesan Ks Super bro……..
    February 19 at 1:52pm · Unlike · 1

    Jeeva Sagapthan இளையராஜா சனங்களின் கலைஞன்
    February 19 at 2:04pm · Unlike · 2

    Periyar Socrates படம் வெளியான (1995) மூன்றாம் நாள் ஞாயிற்றுக் கிழமை சென்னை கமலா திரையரங்கில் மாலைக்காட்சி பார்த்தேன்.என்னுடன் அப்போது பணியாற்றிய நண்பன் முரளியும் வந்திருந்தான்.கூட்டம் நிரம்பி வழிய அந்தத் திரையரங்கின் அப்போதைய மேலாளர் நாங்கள் பணியாற்றிய நிறுவனத்தின் நண்பராதலால் இரண்டு டிக்கட் பெறமுடிந்தது.

    அநேகமாக இது dolphi digital ஒலிப்பதிவில் வந்த முதல் படமென்பது நினைவு.அப்போதுதான் கமலா திரையரங்கில் இந்த வசதி செய்திருந்தார்கள்.படத்தின் பின்னணி இசையும்,பாடல்களும் அபாரமாக அமைந்திருந்தன.திரையரங்கில் ஒரே ஆரவாரம்.நீங்கள் குறிப்பிட்ட இந்தப் பாடல் காட்சியை முதல்முறையாக அப்போது பார்த்தவுடனேயே நாசருக்கு ராஜாவின் குரல் கச்சிதமாய்ப் பொருந்தியது ஆச்சரியமாக இருந்தது.நாசரும் மிகச்சரியாக பாடலின் தொனி அறிந்து அம்சமாக நடைத்திருப்பார்.

    பின்னணி இசையில் ராஜாதான் மன்னதி மன்னன் என்பதற்கு அவதாரம் படத்திலும் ஒரு காட்சி உண்டு.கண் பார்வையற்ற ரேவதியை விரட்டி வருவார் பாலாசிங்.அந்த ஓட்டத்தில் ரேவதியின் கொலுசு கழன்று விழுந்துவிடும்.அந்தக் கொலுசை எடுத்து தன் வாயில் வைத்துக்கொண்டு பாலாசிங் தலையை மட்டும் குலுக்குவார்.கொலுசு சத்தம் சிலு… சிலு… சிலு… வென திரையரங்கையே அதிர வைக்கும்.
    படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது பாலாசிங் நின்றிருந்தார்.அவரது நடிப்பைப் பாராட்டிவிட்டு வந்தேன்.

    இதற்கு முன் ராஜாவின் குரல் ஜனகராஜுக்கு கச்சிதமாகப் பொருந்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
    பாலவன ரோஜாக்களில்
    `காதல் என்பது பொதுவுடமை’ http://www.youtube.com/watch?v=7KoDrRw-UEo
    என்ற பாடலையும்,
    புதுப்புது அர்த்தங்களில் `எடுத்து நான் விடவா
    http://www.youtube.com/watch?v=aONHtvWW3ZU
    என்ற பாடலையும்
    நாயகனில் `நிலா அது வானத்து மேலே’ http://www.youtube.com/watch?v=aGDY3SheBpw பாடலையும் கேட்டுப்பாருங்கள் .
    February 19 at 5:20pm · Unlike · 4

Leave a Reply

%d bloggers like this: