‘சந்திரபாபுவோடு நடந்த சண்டையும் சமாதானமும்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -6

நேர்காணல்; வே. மதிமாறன்

msvinaction3.jpg

* சந்திரபாபுவோட குரல் தமிழில் வித்தியாசமான, எளிமையான குரல். அந்தக் குரலுக்குப் பொருத்தமா ‘சுலோ ரிதத்தில்’ நிறையப் பாட்டு போட்டு இருக்கீஙக… அவருக்கும் உங்களுக்கும் நல்ல நட்புன்னு…..

அவனை நான் முதல்ல பார்த்தது, 1945 லனு நினைக்கிறேன். அப்போ சென்ட்ரல் ஸ்டூடியோ கோவையில் இருந்தது. அங்க எஸ்.என். சுப்பையா நாயுடுகிட்ட உதவியாளரா இருந்தேன்.

“இவன் ஏதோ பாடுவான்னு சொல்றான், இவன் குரலை கொஞ்சம் டெஸ்ட் பண்ணேன்” னு சொன்னாரு சுப்பையா அண்ணன். பண்ணேன்.

“என்ன நல்லா பாடுனானா?” ன்னு கேட்டாரு.
“இவன் எங்க பாடுனான்? டயலாக்கை அப்படியே பேசுறான்” னு சொன்னேன்.

 என்னை மொறைச்சு பாத்துட்டுப் போனான். கொஞ்சம் வருஷம் கழிச்சு அவன் பெரிய நடிகனா ஆயிட்டான். நான் இசையமைப்பாளரா ஆயிட்டேன்.

டி.ஆர். ராமண்ணாவின் ‘குலேபகாவலி’ படத்துக்கு நான்தான் மியூசிக். அதுல சந்திரபாபவுக்கு ஒரு பாட்டு. நான் டியூனை போட்டுட்டு, ‘எப்படி?’ன்னு கேக்குறேன்.

அவன், “இதெல்லாம் ஒரு டியூனா? இதுக்கு ஆட்டமே வராது, பெரிய மெட்டு போட்டுட்டாரு, வேற போடச் சொல்லுங்கன்னு…” ராமண்ணாக்கிட்ட சொல்றான்.

நான் உடனே என் உதவியாளர்களை அந்த டியூனை இசையோட வாசிக்கச் சொல்லிட்டு, எழுந்து ஆடி காண்பிச்சேன்.
“இதுக்கு மேலே எப்படி ஆடுறதுன்னு சொல்லு”ன்னு கேட்டேன்.

அந்தப் பாட்டு ‘சொக்காப் போட்ட நவாப்பு…’ அதல இருந்து எனக்கும் அவனுக்கும் காதல் பிறந்துடுச்சி. நெருக்கமான நண்பர்களானோம். அவனுக்கு இசையறிவு உண்டு. உணர்வுபூர்வமான கலைஞன்.

* உங்கள் சம்பந்தப்பட்ட ஒரு செய்தி, நீங்கள் இருக்கும் போதே பலரால் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒருத்தரும் இதுவரை உங்களிடம் கேட்டதில்லை. நீங்களும், ‘ஆமாம்-இல்லை’ என்று சொன்னதுமில்லை. வேறு ஒன்றுமில்லை, பாரதியாரை உங்களுக்கு யார் என்றே தெரியாமல், ‘மெட்டுக்கு வார்த்தை இடிக்கிறது, கூப்பிடு அந்தப் பாடலாசிரியரை’ என்று நீங்கள் சொன்னதாகச் சொல்கிறார்களே, உண்மையா?

msvinaction2.jpg

பொய். அதுல பாதிதான் உண்மை.

கே.எஸ். கோபால கிருஷ்ணன் என்னை எப்பவும் ‘சிங்கம்’ னுதான் கூப்பிடுவாரு.

ஒருநாள், “சிங்கம், எழுதிகிட்டே பாட்டு பாடுற மாதிரி ஒரு டியூன் போட்டா எப்படி இருக்கும்?” னு கேட்டாரு.
“போடலாமே” ன்னு ஆர்மோனியத்தை எடுத்தேன்.
“சிங்கம் நான் சொல்றதை எழுது சிங்கம்” னு சொன்னாரு.
“சரி, சொல்லுங்க” ன்னு நான் பேப்பர்ல எழுத ஆரம்பிச்சேன்.

அவர் சொன்னாரு, நான் எழுதிகிட்டே வந்தேன்.
‘சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்ற வரி வந்தப்போ, ‘பாட்டி செத்து’ன்னு இருக்கா மாதிரி இருக்கு கூப்பிடுங்க பாடலாசிரியரை’ ன்னு என்னை மறந்து போய் சொன்னேன்.

தொழில் தீவிரத்துல வந்த வார்த்தை அது. பாரதியாரை தெரியாம சொன்ன வார்த்தையல்ல. அதுக்கு முன்னாடியே அவரோட ‘சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா…’ பாடலைப் போட்டவன் நான்.

* இளையராஜாவின் திருவாசகம் கேட்டீர்களா?

notes2.jpg

எனக்குத்தான் அதை முதலில் போட்டுக் காட்டினான். அதைக்கேட்டுட்டு, அவன் கையை கண்ணில் ஒற்றிக் கொண்டு, கையைப் பிடித்துக் கொண்டே, “நீ வயசுல சின்னவனா இருக்கிறதுனால கையைப் பிடிச்சுகிட்டு சொல்றேன். பெரியவனா இருந்தா…’ என்று சொன்னேன். அவன் நெகிழ்ந்து போனான். அதில் அவனின் உழைப்பு சாதாரணமானது அல்ல.
   (30-10-2005 தினகரன் இணைப்பிதழ் வசந்தத்தில் வெளியான பேட்டி)

alldirectors.jpg

மெல்லிசை மன்னர் வடை விற்ற தியேட்டர்,  சந்திரபாபு குடியரசு தலைவர் ராதகிருஷ்ணன் மடியில் உட்கார்ந்தது, மெல்லிசை மன்னரின் தற்கொலை முயற்சி, சிவாஜியின் தர்ம சங்கடம், எம்.ஜி.ஆரின் வருத்தம்,  சூரிய உதயத்தையே பார்க்காத நடிகரும், சூரிய அஸ்தமனத்தையே பார்க்காத கவிஞரும், சிவாஜி-எம்.ஜி.ஆர் தலைமையில் சோ வின் தொகுப்புரையோடு தன் குருவிற்கு மெல்லிசை மன்னர் நடத்திய பாராட்டு விழா, மூன்றே சுரத்தில் இசையமைத்தப் பாடல், ஒரு மரண வீட்டில் மெல்லிசை மன்னர் இசையமைத்த சோக பாடல்களோடு இறுதி ஊர்வலம் இப்படி ‘வசந்தம்’ இதழில் வெளிவராதா சுவாராஸ்யமான பல தகவல்களோடு, ‘மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனோடு சந்திப்பு – பாகம் இரண்டு’ சில நாட்கள் கழித்து….

One thought on “‘சந்திரபாபுவோடு நடந்த சண்டையும் சமாதானமும்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

  1. இதுல மெல்லிசை மன்னர் பயன்படுத்தியிருக்குற சொல்லைப் பாருங்க… காதல்… சந்திரபாபுவுக்கும் விஸ்வநாதனுக்கும் காதலான்னு கிராக்கி பேசலாம். அது அதுயில்ல. கற்றாரைக் கற்றாரே காமுறுவர்னு சொல்றாங்களே அதுல வர்ர காமம்.

    பாத்தீங்களா…. அவரு என்னவோ சொல்ல..ஒன்னு ரெண்டாகி..ரெண்டு மூனாகி….பாரதியார் விஷயத்துல அப்படிப் பேசீட்டாருன்னு வந்துருச்சு பாத்தீங்களா. நல்ல வேளை முழு உண்மைய கொண்டு வந்தாச்சு.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading