மார்க்சியத்திற்கு-முஸ்லீம்களுக்கு எதிரானவரா அம்பேத்கர்?
டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது – 5
–
‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’-டாக்டர் அம்பேத்கர்- 6
–என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன் -7
– ‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை -8
தொடர் – 9
‘இந்தியாவிற்கு என்று அரசியல் வரலாறோ, முறையான வரலாறோ இல்லை’ என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். ஆனால் டாக்டர் அம்பேத்கர் இதை முற்றிலுமாக மறுக்கிறார். இந்திய வரலாறு என்பது ‘புத்த மதத்துக்கும் பார்ப்பனியத்திற்கும் இடையிலான போராட்டம்தான்’ என்கிறார்.
‘மதராஸ் பகுத்தறிவு சங்கம்’ 1944 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் நாள் சென்னையில் ‘இந்தியாவில் பகுத்தறிவு வாதம்’ என்ற தலைப்பில் பேச டாக்டர் அம்பேத்கரை அழைத்திருக்கிறார்கள். சென்னை பிராட்வேயில் உள்ள ‘பிரபாத்’ திரையரங்கில் நடந்த அந்தக் கூட்டத்தில்:
“இந்திய வரலாற்றைப் பயில்கிறவர்கள் ஒரு உண்மையைக் கணக்கில் கொள்ள வேண்டும். …………………………………………..
அந்த அடிப்படை உண்மை என்னவென்றால் பண்டைக்கால இந்தியாவில் புத்த மதத்துக்கும் பிராமணியத்துக்கும் இடையில் ஒரு பெரும் போராட்டம் நடந்து வந்தது. இப்போராட்டம்தான் இந்திய வரலாற்றை நிர்ணயம் செய்தது. ………………………..
தத்துவவியல் பேராசிரியர்கள திரும்பத் திரும்பச் சொல்வது பற்றிய சச்சரவு இது. கோட்பாடு பற்றிய புரட்சியாக மட்டுமன்றி அரசியல், சமூகத் தத்துவயியல் புரட்சியாகவும் இது விளங்கியது. ………………………………………….
வேதங்கள் பிரகடனப்படுத்தியதே உண்மை என்று பிராமணக் கோட்பாடு கூறுகிறது. இதுதான் பிராமணியத்தின் மிக முக்கியமான கோட்பாடு. புத்த மதத்தினர் புரட்சி வீரர்கள், பிராமணர்களோ எதிர்ப் புரட்சிக்காரர்கள். இதுதான் புத்த மத்தினருக்கும் பிராமணியத்துக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.” என்று பேசியிருக்கிறார் டாக்டர் அம்பேத்கர்.
இந்து மதத்தை அல்லது பார்ப்பனிய மதத்தை புள்ளி அளவுக்குக்கூட டாக்டர் அம்பேத்கர் ஒத்துக் கொள்ளவில்லை. எந்த வகையிலும் இந்து மத்தோடு சமரசம் இல்லாமல், அதை முற்றிலும் அம்பலப்படுத்தினார். ஜாதி, தீண்டாமை போன்றவற்றிற்கு இந்துமதம்தான் காரணம் என்பதே இந்து மதத்திற்கெதிரான அவருடைய கோபம்.
தீண்டாமையில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை என்பது, இந்து மதத்தைவிட்டு வெளியேறி மதம் மாறுவதினால்தான் நடக்கும் என்று உறுதியாக நம்பினார் அம்பேத்கர். அதற்காக அவர் தாழ்த்தப்பட்ட மக்களை கிறிஸ்தவ மதத்திற்கோ அல்லது இஸ்லாம் மதத்திற்கோ மாற சொல்லவில்லை.
காரணம் இந்த இரண்டு மதங்களும், இந்து மதத்தை, பார்ப்பனியத்தை, சாதிய அமைப்பை எதிர்த்து உருவானதில்லை. (இதில் கிறித்துவத்தில் புத்தமதத்தின் தாக்கம் அல்லது தழுவல் நிறைய இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்) அது வேறு சூழலில் வேறு ஒரு தேவைகளுக்காக உருவானவை. புத்த மதம் ஒன்றுதான் இந்து மதத்தை, பார்ப்பனியத்தை, சாதியை எதிர்த்து உருவானது. புத்தர் ஒருவர்தான் பார்ப்பனியத்தை சமரசம் இல்லாமல் எதிர்த்தவர். பவுத்தம்தான் தீண்டாமைக்கு எதிரானது, மோசடிகளுக்கு இடம் தராதது என்று அம்பேத்கர் உறுதியாக நம்பினார். புத்தரை தனது சிறுவயது முதலே அதாவது ஆரம்பப்பள்ளிக் காலங்களிலிருந்தே தீவிரமாக கற்றுவந்திருக்கிறார் அம்பேத்கர்.
பவுத்தத்தை ஒரு மதம் என்கிற அடிப்படையிலும் அதை விரும்பினார். மனிதர்களுக்கு மதம் வேண்டும் என்றும் அந்த மதம் மூடநம்பிக்கைகள் இல்லாத, ஏற்றத் தாழ்வுகள் இல்லாத மதமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்:
“மதத்தை அலட்சியமாக நினைக்கும் இளைஞர்கள் எனக்கு மிக மிக வருத்தத்தைத தருகிறார்கள். யாரோ சொன்னது போல் மதம் ஓர் அபினியல்ல. என்னிடமிருக்கும் நல்ல பண்புகளுக்கும் என் கல்வியால் சமுதாயத்திற்குக் கிடைத்த நல்ல பயன்களுக்கும் என் மத உணர்வுகளே காரணம். மதம் எனக்குத் தேவை. அதே சமயம், மதம் என்னும் பெயரில் கபட வேடம் போடுவதும் எனக்குப் பிடிக்காது”
1938 ஆம் ஆண்டு பிப்பரவரி 12 நாள் பம்பாய் மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர் மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் தன் தலைமை உரையில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்.
அதனால்தான் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் புத்த மதத்திற்கு மாறினார். புத்தரின் மேல் கொண்ட மிகுந்த ஈடுபாட்டினால் பவுத்தத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டார். பவுத்தம் வலியுறுத்திய மறுபிறப்பைக் கூட விமர்சனம் அன்றி ஏற்றுக் கொண்டார் டாக்டர் அம்பேத்கர். புதுடில்லி மாகபோதி கழகத்தின் சார்பில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் நாள் புத்த விஹாரில் பேசும்போது:
“மறுபிறப்பில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. மறுபிறப்பு என்பது தடுக்கமுடியாது என்பதை விஞ்ஞானிகளுக்கு என்னால் நிரூபித்துக் காட்டமுடியும். என்னுடைய கருத்தில் இயற்கை சக்திகள் மாறியிருக்கின்றனவே தவிர மனிதன் மாறவில்லை.” என்று பேசியிருக்கிறார்.
அண்ணல் அம்பேத்கர் ஒருவரையே தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள், அம்பேத்கர் வலியுறுத்திய ‘தீண்டாமைக்கு எதிராக பவுத்ததிற்கு மாறுவது’ என்பதை பின்பற்றவில்லை. இத்தனைக்கும் பவுத்ததிற்கு மாறுவதல் ‘இடஓதுக்கீடு பாதிக்கப்படாது’ என்கிற பாதுகாப்பு இருந்தும் கூட அம்பேத்கர் இறுதியாகவும் உறுதியாகவும் சொன்ன கருத்துக்கு அவர் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் அக்கறைகாட்டவில்லை. தான் மதம் மாறும்போது கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் தன்னோடு வருவார்கள் என்று எதிர்பார்த்தார் அண்ணல். ஆனால் 50, 000 பேரே அதில் கலந்து கொண்டனர். பவுத்ததிற்கு மாறுவதற்கு ஆர்வம் காட்டாதது, தனிப்பட்டமுறையில் தலித்மக்களின் நிலையாக மட்டுமில்லை. தலித் இயக்கங்களின் நிலையே இன்றைக்கும் இப்படித்தான் இருக்கிறது.
பார்ப்பனியத்தை, வேத மதத்தை எதிர்த்து வீறுகொண்டு எழுந்து அதை வெற்றிக் கொண்ட பவுத்தம், அதன் பிறகு பார்ப்பனியத்தின் நேர்மையற்றதன்மை, சதி போன்றவற்றால் நேர்மையான புத்தமதம் பார்ப்பனியத்திடம் தோல்வியுற்றது. பார்ப்பனியத்தால் இந்திய அளவில் முற்றிலும் அழிக்கப்பட்டது பவுத்தம். அப்படி அழிக்கப்பட்ட அந்த மதத்தை உயிர்பிக்கிற அம்பேத்கரின் முயற்சியும் பெருமளவில் வெற்றிபெறாமல் போனது.
புத்தரை அம்பேத்கர் எந்த அளவிற்கு நேசித்தார், என்பதற்கு எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் என்றால், ‘காரல் மார்க்சோடு புத்தரை ஒப்பிட்டு, மார்க்ஸ் சொன்னதை 2500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொல்லியிருக்கிறார். மார்க்கியத்தைவிடவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பவுத்தம்தான் பொருத்தமானது. தேவையானது’ என்று வலியுறுத்தினார்.
மார்க்சியம் குறித்தான டாக்டர் அம்பேத்கரின் பார்வை ‘அது வன்முறையை வலியுறுத்துகிறது. எந்த ஒரு விஷயத்திற்கும் வன்முறை தீர்வாகாது. பவுத்தம், வன்முறைக்கு பதில் அகிம்சையை போதிக்கிறது. மன்னன் அசோகன் அப்படித்தான் போரை கைவிட்டு புத்தரின் வழிக்கு மாறினான். மார்க்சிஸ்டுகள் கிறிஸ்துவ மதத்தை வெறுப்போடு பார்ப்பது போல் புத்த மதத்தை பார்க்கக் கூடாது, என்றார்.
“ரஷ்யர்கள் தங்களுடைய பொது உடைமை பற்றிப் பெருமைப் படுகிறார்கள். ஆனால் புத்தர், சர்வாதிகாரம் இல்லாமலே பிக்கு சங்கத்தில் பொது உடைமையை நிறுவினார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.” என்று எழுதினார்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு மாற்றாக புத்தரின் அகிம்சைகோட்பாட்டை கம்யூனிஸ்டுகள் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தினார். ‘மார்க்சியம் என்பது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்தான்’ என்று தெளிவாக வரையறுத்தார் டாக்டர் அம்பேத்கர். ஆனால் அதை ஒத்துக் கொள்ளமுடியாது என்பதுதான் அவரின் வாதம்.
தங்களை மார்க்சிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்கிற பலர் மார்க்சியத்தை திரித்து மார்க்சியம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அல்ல’ என்று தங்களின் ‘வசதிக்கேற்ப’ வளைத்துக் கொள்கிற ‘அறிஞர்’களோடு ஒப்பிடும்போது, டாக்டர் அம்பேத்கரின் நேர்மை மரியாதைக்குரியது.
“ரஷ்யாவில் பொது உடைமை சர்வாதிகாரம் மிகச் சிறப்பான சாதனைகள் புரிந்திருப்பதாகப் பெருமையாகப் கூறப்படுகிறது. இதை மறுக்க முடியாது. அதனால்தான் ரஷ்ய சர்வாதிகாரம் எல்லா பிற்பட்ட நாடுகளுக்கும் நல்லது என்று கூறுகிறேன். ஆனால் இது சர்வாதிகாரம் நிரந்தரமாக இருக்க வேண்டும் எனறு கூறுவதாகாது. …………………………………
நாம் ரஷ்யப் புரட்சியை வரவேற்கிறோம்; ஏனென்றால் சமத்துவத்தை ஏற்படுத்துவது அதன் நோக்கமாக உள்ளது. ஆனால் சமத்துவத்தை ஏற்படுத்தும்போது சமூகம், சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்து விட முடியாது என்பதை எவ்வளவு வலியுறுத்தினாலும் தகும். புத்தரின் வழியைப் பின்பற்றினால்தான் இந்த மூன்றும் சேர்ந்து இருக்க முடியும் என்று தோன்றுகிறது.”
என்று புத்தரா காரல்மார்க்சா? என்ற நூலை இப்படித்தான் முடித்திருக்கிறார் அம்பேத்கர்.
ஆனாலும், பவுத்த நாடுகள் கம்யூனிசப் பாதைக்கு மாறுவதை ‘சரியில்லாத அறிகுறியாகவே’ அச்சம் தெரிவிக்கிறார். 1956 மே மாதம் 12 நாள் டாக்டர் அம்பேத்கர் எழுதிய கட்டுரையில்:
“உலகை அழிக்கும், குறிப்பாக அதன் தென்கிழக்கு ஆசியப் பகுதியைப் பாதிக்கும் மூன்றாவது அம்சம் ஒன்றும் உள்ளது. காரல் மார்க்சும் அவர் ஈன்றெடுத்த கம்யூனிசமும்தான் அந்த மூன்றாவது அம்சம். இதன் தாக்கம் கடுமையாக உள்ளது.”
“தென்கிழக்கு ஆசியாவிலுள்ள பவுத்தமத நாடுகளின் மனப் போக்கு கம்யூனிசத்தின் பக்கம் சாய்ந்திருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. பவுத்தம் மதம் என்பது என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதே இதன் பொருள். என்னைப் பொறுத்த வரையில் பவுத்தம் மார்க்சுக்கும் அவரது கம்யூனிசத்துக்கும் ஒரு மாபெரும் சவால் என்று கூறுவேன்.
ரஷ்ய பாணி கம்யூனிசம் ரத்தக் களறியான ஒரு புரட்சியின் மூலம் அதனைச் சாதிக்க முயல்கிறது. பவுத்த கம்யூனிசமோ, ரத்தம் சிந்தாத மனப்புரட்சியின் வாயிலாக அதனைக் கொண்டு வருகிறது.”
மார்க்சியத்தைப் பற்றி டாக்டர் அம்பேத்கரின் எண்ணம் இதுவாக இருப்பதால், மார்க்சிஸ்டுகள் டாக்டர் அம்பேத்கரை எதிர்ப்பதோ அல்லது புறக்கணிப்பதோ கூடாது. அப்படிச் செய்வது தவறான ஒன்று.
மார்க்சியம் குறித்த அம்பேத்கரின் பார்வை மார்க்சிஸ்டுகளுக்கு முரண்பாடானதாக இருந்தாலும் அது ஆபத்தானதல்ல. மார்க்சியத்திற்கு மாற்றாக முதலாளித்துவத்தையோ, பார்ப்பன பாரதியைப்போன்றவர்கள் பரிந்துரைக்கிற வேதத்தையோ அல்லது அதை போன்ற மார்க்சியத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு தத்துவத்தையோ, டாக்டர் அம்பேத்கர் பரிந்துரைக்கவில்லை.
கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக் கொள்கிற, ஆதரிக்கிற அல்லது மார்க்சியத்திற்கு எதிராக இல்லாத பவுத்தத்தைதான் பரிந்துரைக்கிறார்.
மார்க்கியத்தைக் குறித்த டாக்டர் அம்பேத்கரின் கருத்து நேரடியாக எதிராக இருந்தாலும், அவருடைய செயல் மார்க்சியத்திற்கு எதிரானதல்ல. இன்னும் நெருக்கிச் சொன்னால், மார்க்சிஸ்ட்டுகள் செய்திருக்க வேண்டிய அல்லது செய்ய தவறிய பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு போன்றவற்றை டாக்டர் அம்பேத்கர் ஒரு மார்க்சிஸ்ட்டை போல் செய்திருக்கிறார். இதை பெரியாரின் கோபத்தோடு பொருத்திப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்:
“ரஷ்யாவிலே கம்யூனிஸ்ட் இருக்கிறார்கள் என்றால் கோயில்களை எல்லாம் இடித்தான். பாதிரிகளை வெட்டினான். இங்கே இருக்கும் கம்யூனிஸ்ட் என்ன செய்கிறான்? பொறுக்கித் தின்கிறான்.”
“நாளைக்கே காங்கிரசுக்காரன் வந்து விட்டால், நாளை மறுதினம் பார்ப்பான் வந்து விட்டால், இல்லை இந்த கம்யூனிஸ்ட்டே வந்துவிட்டான் என்றால், அவன் காசுக்கென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வானே! அவனல்ல சத்த போடணும், எனக்கு பதிலா”
நெருப்பாய் சுடுகிற பெரியாரின் இந்த நியாயமான கோபம் அவரின் இறுதிசொற்பொழிவில்.
ஆக, கம்யூனிஸ்டுகள் பார்ப்பனியத்திற்கு, இந்து மத்திற்கு, சாதியத்திற்கு எதிராக டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் இயங்குவது, மார்க்சியத்திற்கு எதிரானதல்ல. அதுதான் சரியானதும் கூட.
மற்றப்படி கம்யூனிசத்திற்கு எதிராக, பவுத்தத்தை ஆதரித்து கருத்து சொல்லியிருக்கிறர் என்பதற்காக, டாக்டர் அம்பேத்கரை முற்றிலுமாக புறக்கணிப்பது கம்யூனிஸ்டுகளுக்கு அழகல்ல. அது பார்ப்பனர்களுக்குத்தான் அழகு.
***
டாக்டர் அம்பேத்கர் மீது சொல்லப்படுகிற பெரிய அவதூறு ‘அவர் முஸ்லீம்களுக்கு எதிராக இருந்தார்’ என்பது. இது அவதூறுதான்.
இந்து அமைப்புகள், பார்ப்பன ‘அறிவாளிகள்’ பரப்பிய பரப்புகிற பச்சை பொய் அது. பார்ப்பனியம் குறித்து அம்பேத்கர் கேட்டக் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற பார்ப்பனர்கள், அவரை பற்றி இப்படி அவதூறு பரப்புவதின மூலம் ஆறுதல் அடைந்தார்கள்.
பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் கொஞ்சமும் வெட்கமில்லாமல், இந்து மதத்தை பெரும் அளவு சேதப்படுத்திய அண்ணல் அம்பேத்கர் படத்தை தங்களின் பிரச்சாரங்களுக்குத் பயன்படுத்துகிறார்கள். அதன் நோக்கம், தாழ்த்தப்பட்ட மக்கள் டாக்டர் அம்பேத்கரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பதால், அவர் படத்தை பயன்படுத்துவதின் மூலம், தங்கள் கட்சிகளுக்கு அந்த மக்களை அடியாட்களாக பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளலாம், என்கிற தந்திரம்தான் காரணம்.
அதன் தொடர்ச்சியாகத்தான் டாக்டர் அம்பேத்கர் முஸ்லீம்களுக்கு எதிராக இருந்தார் என்று சொல்வதும். அப்படி பொய் பிரச்சாரம் செய்வதின் மூலம், தாழ்த்தப்பட்ட மக்களை முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களில் கொண்டு போய இறக்கலாம் என்கிற ஒரு பரந்த எண்ணம்தான்.
2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாரதிய ஜனதா கட்சியின் உத்திரபிரதேச மாநிலத் தலைவராக இருந்த வினய் கட்டியார் 14 நாட்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள 30 மாவட்டங்களுக்கு பிரச்சார யாத்திரை சென்றார். அப்போது அவருடைய பொய்பிரச்சாரத்தில் பெரும்பங்கு வகித்தது, டாக்டர் அம்பேத்கர் முஸ்லீம்களுக்கு எதிரானவர் என்பதே.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அறிஞர் டாக்டர் ஆனந்த் தெல்தும்ப்டே, ‘முஸ்லீம்களுக்கு எதிராக அண்ணல் அம்பேத்கர் இருந்தார் என்பது பொய்’ என்று அம்பேத்கரின் எழுத்துக்களில் இருந்து வரிக்குவரி எடுத்துக்காட்டி அவதூறுகளை தகர்தெறிந்தார். அந்த நூலின் பெயர் ‘முஸ்லீம்கள் குறித்து அம்பேத்கர்-கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்’. தமிழில் புதிய ஜனநாயகம் வெளியீடாக வந்திருக்கிறது. (புதிய ஜனநாயகம், 110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே. சாலை, கோடம்பாக்கம், சென்னை- 600 024.) இது அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
ஆக, டாக்டர் அம்பேத்கர், முஸ்லீம்களுக்கு எதிராக ஒரு போதும் இருந்ததில்லை. அவர் ஜாதி வெறி கொண்ட இந்துக்களுக்குத்தான் எதிராக இருந்திருக்கிறார்.
இந்து மதவெறி அமைப்புகள் அண்ணல் அம்பேத்கரைப் பற்றி அவதூறுகள் செய்வதின் மூலம் அவமானப்படுத்துவதைவிட அண்ணலின் படங்களை, அவர் பெயரை பயன்டுபடுத்துவதுதான் அவருக்கு அவர்கள் செய்கிற மாபெரும் அவமானம்.
இதற்கு நேர் எதிராக அம்பேத்கரின் படங்களை பெயரை பயன்படுத்த வேண்டிய பிற்படுத்தப்பட்டவர்கள், அவர் பெயரை புறக்கணித்து, அவர் சிலையை சேதப்படுத்தி அவமானப்படுத்துகிறார்கள்.
இதுதான் இந்து உளவியல்.
–தொடரும்
தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.
தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்?///
நியாயமான கேள்வி…. மேலை நாட்டு புரட்சியாளர் முகங்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்வாது வசதியானது தானே… விரைவில் இம்மானுவேல் சேகரன் பற்றிய விரிவான கட்டுரையை உங்களிடம் எதிர்பாரிறேன்..
இந்து மதவெறி அமைப்புகள் அண்ணல் அம்பேத்கரைப் பற்றி அவதூறுகள் செய்வதின் மூலம் அவமானப்படுத்துவதைவிட அண்ணலின் படங்களை, அவர் பெயரை பயன்டுபடுத்துவதுதான் அவருக்கு அவர்கள் செய்கிற மாபெரும் அவமானம்.
இதற்கு நேர் எதிராக அம்பேத்கரின் படங்களை பெயரை பயன்படுத்த வேண்டிய பிற்படுத்தப்பட்டவர்கள், அவர் பெயரை புறக்கணித்து, அவர் சிலையை சேதப்படுத்தி அவமானப்படுத்துகிறார்கள்.
இதுதான் இந்து உளவியல்.////
அண்ணல் மீது இருந்த அவதுறுகளுக்கு நல்ல பதில்
அவர்களிடம் இருந்து நாம் அண்ணல் அவர்களை மீட்போம்
தொடர் சான்றுகளுடன் அமைந்திருப்பது சிறப்பு. ஆனால் அந்தச் சான்றுகளுக்கான ஆதாரம் எங்கிருந்து, எந்த நூலிலிருந்து என்பதையும் அந்தச் சான்றுகளுக்கு கீழே குறிப்பிட்டால் தொடர் இன்னும் சிறப்பாக அமையும்.
பரிசீலிக்க வேண்டுகிறேன்.
நன்றி
Mathimaran,
When I saw the heading, I thought you are going to talk about what Ambedkar said about muslims. You have tacked on one small para at the end – mentioning a book, and there isn’t much info about what he actually said about muslims. Perhaps you should change the heading…
Hope to see more about the book soon…
புத்த மதத்தை பார்ப்பனியம் விழுங்கி வெகுநாட்களாகிறது. பார்ப்பனியம் கிறித்தவத்தையும் விட்டு வைக்கவில்லை. எங்கள் ஊரில் சாதி கிறித்தவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கும் ஓயாத சண்டை. சண்டையில் சர்ச் தற்போது பூட்டப்பட்டு உள்ளது.
அம்பேத்கார் புத்த மதத்தை கையில் எடுத்ததற்கு பதில் இஸ்லாத்தின் பக்கம் தனது பார்வையை செலுத்தியிருந்தார் என்று சொன்னால் இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் என்றோ விடுதலையாகி இருப்பர்.
“….அதன் நோக்கம், தாழ்த்தப்பட்ட மக்கள் டாக்டர் அம்பேத்கரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பதால், அவர் படத்தை பயன்படுத்துவதின் மூலம், தங்கள் கட்சிகளுக்கு அந்த மக்களை அடியாட்களாக பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளலாம், என்கிற தந்திரம்தான் காரணம்..”
– முஸ்லீம்கள் இத்தகைய தலித் பெண்களை அவர்கள் ஏற்றுக் கொண்ட மதத்தை விட உயர்வாக வைத்திருந்தார்கள் என்பது எனது கருத்து. உதாரணமாக, எங்கள் ஊரான நாகூரில், தலித் ஏழை பெண்கள் முஸ்லீம்கள் வீட்டில் பணி புரிவார்கள், அப்போது முஸ்லீம் பிள்ளைகளுக்கு தலித் பெண்கள் தட்டில் வைத்து சோறு ஊட்டி விடுவார்கள்.
இப்படி ஒரு உயர் சாதிக்காரர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு சோறு ஊட்டி விட சொல்வார்களா..?
என்னுடைய கவலை தாழ்த்தப்பட்டவர்கள் இத்தகைய தந்திரத்திற்கு பலர் பலியாகி விட்டார்கள் என்பது தான்.
//பார்ப்பனியத்தின் நேர்மையற்றதன்மை, சதி போன்றவற்றால் நேர்மையான புத்தமதம் பார்ப்பனியத்திடம் தோல்வியுற்றது.//
பார்ப்பனீயத்திடம் புத்தமதம் தோல்வியுற்றாலும், நாம் தோல்வியுறாமல் பார்த்துக் கொள்வோம்.
கடந்த 8 தொடர்களும் அம்பேத்கரின் கருத்துகளை உள்ளடக்கி இருந்ததை போல் தந்தை பெரியாரை பற்றியும் நெடுந்தொடர் ஒன்றை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
தந்தை பெரியாரின் எழுத்துகள் நாட்டுடமையாகாமல் இருக்கும் இவ்வேளையில் அவ்வாறான ஒரு தொடர் வந்தால், அது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி.