மக்களின் மனநிலை மாற வேண்டும்

-முனைவர் வே. நெடுஞ்செழியன்ambedkar-wrapper6

மிழ்ச் சமுதாயச் சிந்தனையில் குறிப்பிடத் தக்க முயற்சியாக வெளிவந்துள்ள நூல் வே. மதிமாறனின் ‘நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கடிமை யாருமில்லை’. இந்தியாவின் ஒட்டு மொத்த சமத்துவத்துக்காகப் பாடுபட்ட – வருணாசிரமப் படிநிலை வேறுபாட்டைக் களைய அதன் தலைமையகமான பார்ப்பனீயத்திற்கு எதிராக – பார்ப்பனரல்லாத ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைக்கப் போராடிய – தந்தை பெரியாரையும் டாக்டர் அம்பேத்தகரையும் ஒன்றிணைத்து தலித் மக்கள் மற்றும் தலித் அல்லாத பிற சமூகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தம் ஒடுக்குமுறைக்கும் அவர்கள் மீதான வன்முறைகளுக்கும் காரணமாக விளங்குகிற இந்துமதப் பார்ப்பனீய முகத்திரையை அடையாளப் படுத்தும் முயற்சியாக இந்நூல் அமைந்துள்ளது.

குறிப்பாக, இந்நூல் – தலித் அல்லாத பிற சமுதாயத்தினருக்கு அம்பேத்கரின் தலித்தியம் கடந்த பொதுப் பார்வையைப் புரிய வைப்பதன் மூலம் அம்பேத்கரைப் பொதுத் தலைவராக அடையாளப் படுத்துவதும், அதன் பின்புலத்தில் தலித் மக்களைப் பொதுப் பார்வையில் இருந்து ஒதுக்கிப் பிரித்துப் பார்க்காது சமமாகப் பார்க்குமாறு வற்புறுத்துவதும் ஆகிய இருமுனைச் செயல்பாடுகளைக் கொண்டு விளங்குகிறது.

நூலின் தலைப்பை உற்றுநோக்கினாலேயே இந்நூல் யாருக்காக என்பது புலப்படும். ‘நான் யாருக்கும் அடிமையில்லை’ என்பதில் பார்ப்பனீயத் தலைமை மீதான கட்டுடைப்பையும், ‘எனக்கடிமை யாருமில்லை’ என்பதில் தலித் மக்கள் மீதான மேலாதிக்கம் மற்றும் ஒடுக்குமுறை மீதான கட்டுடைப்பையும் முன்னிறுத்துவது தெளிவு. அதற்கான காரணமாக, பொருளாதாரத்தால் தாழ்வுற்று வறுமை மிஞ்சி வாழ்கின்ற தலித் மற்றும் தலித் அல்லாத கடைக்கோடி மக்கள் அனைவருக்கும் அந்நிலைக்குக் காரணமான பொது எதிரி பார்ப்பனீய இந்துமதக் கருத்தாக்கமே என்பதைப் புரிய வைத்து முதலில் அவர்களுக்கிடையிலான இடைவெளியைப் போக்கி ஓரணியில் நிறுத்தவேண்டும் என்பதை நூல் முழுதும் காணமுடிகிறது.

நூலின் கண் மொத்தம் பதின்மூன்று கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முன்னுரையே ஒரு கட்டுரையாக – ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதும் பொய்’ என்ற தலைப்பில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை ஊடகங்கள் பயன்படுத்திய விதத்தை விசாரணை செய்கிறது. அவ் வன்முறையின் நதிமூலத்தை ஆராயும்போது உறுதியாகத் தெரியும் செய்தி – டாக்டர் அம்பேத்கர் என்ற பெயர் தலித் அல்லாத அனைத்துச் சமூகத்தினருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாத எரிச்சலூட்டுகிற பெயராக இருக்கிறது என்பதே.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் – பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான இடஓதுக்கீடு மற்றும் ஒட்டுமொத்த பெண்களுக்கான உரிமைகள் குறித்துச் சட்டங்கள் இயற்றியவர் – இந்தியாவின் சட்ட அமைச்சராக விளங்கியவர் என்ற அடையாளங்கள் அம்பேத்த்கருக்கு உண்டு. அதோடு புரட்சிகரமான சிந்தனையாளர், பேரறிவாளர் என்று உலக நாடுகளால் ஒப்புக்கொள்ளப்பெற்ற ஒருவரை இந்துமதப் பார்ப்பனீயம் எதிராகப் பார்த்தால் வியப்பில்லை. ஆனால், தலித் அல்லாத ஒட்டுமொத்த சமுதாயமும் அப்படிப் பார்த்தால், அது ஒட்டு மொத்த இந்தியாவின் பார்வைக் குறைபாடு என்றே சொல்ல வேண்டும். இதற்குப் பார்ப்பனீயம் இந்துமதத்தின் பேரால் வருணாசிரமக் கோட்பாட்டை நிலைக்க வைத்துத் தன் தலைமைத் தன்மையைக் காத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் பிரித்தாளும் சூழ்ச்சி என்று கூறலாம். அதனூடே பார்ப்பனீயத்தினால் வரையறுக்கப் பட்டுள்ள தனது கீழ் நிலையை மறைக்க அல்லது எதிர்க்கத் துணியாது, தனக்குக் கீழே ஓர் இனத்தை ஒடுக்கித் தனது மேலாண்மையைப் பறைசாற்றிக்கொள்ளும் அல்லது விரும்பும் பார்ப்பனரல்லாதோரின் மேலாதிக்க மனோபாவமும் முக்கிய காரணம் என்பது பெறப்படுகிறது.

பார்ப்பனரல்லாத பிற உழைக்கும் மக்களுக்கு எதிராகக் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்த இராஜாஜி அம்மக்களால் வெறுக்கப் படவில்லை. மாறாக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காவும் குரல்கொடுத்துப் போராடி அதற்காகவே சட்ட அமைச்சர் பதவியைத் துறந்த டாக்டர் அம்பேத்கர் அம்மக்களால் மதிக்கப் படவில்லை என்ற குற்றச்சாற்று ஆழ்ந்து சிந்திப்பதற்கு உரியது.

இதன் மூலம் உணரப்பெறும் உண்மை என்னவென்றால் பார்ப்பன, பிற்படுத்தப்பட்ட, பார்ப்பனரல்லாத உயர்சாதி வெறியர்கள் சந்திக்கிற மையப்புள்ளி ஒன்று உண்டென்றால், அது – தாழ்த்தப்பட்ட மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியும் விரோதமும்தான். இந்த உணர்வுதான் அம்பேத்கர் பெயரைக் கேள்விப்படும்போதும் அவர் சிலையைப் பார்க்கும் போதும் பொங்கி வழிகிறது எனும் ஆசிரியர் கூற்று டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி வன்முறைக் காட்சிப்படுத்தலின் பின்னே புதைந்து விட்ட உண்மையைத் தோண்டி விசாரணைக்குட்படுத்துகிறது.

தேசியத்திற்கெதிரான ஒரே அடையாளம் தலித் விரோதம் என்ற கட்டுரையில் 1929-இல் அம்பேத்கர் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி காட்டப்படுகிறது. சாலிஸ்கான் தொடர்வண்டி நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள மஹர்வாடா என்ற சிற்றூருக்கு அம்பேத்கரைத் தலித் மக்கள் அழைத்துச் செல்ல முற்பட்டபோது, குதிரை வண்டிக் காரன் அவருக்கு வண்டி ஓட்ட மறுத்துவிட்டான். வண்டியை மட்டும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு பயிற்சியில்லாத ஒரு தலித்திய நண்பர் ஓட்டிச் சென்றபோது, விபத்து ஏற்பட்டு அம்பேத்கருக்குக் காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது.

“அனைத்து தீண்டப்படாதவர்களைவிட, அவர் பாரட்லாவாக இருந்தாலும் சரி, தானே உயர்ந்தவன் என்று ஒரு வண்டிக்காரனான இந்து நினைத்திருந்தான்” என்று அம்பேத்கர் குறிப்பதிலிருந்து இந்து சமயத்தில் எந்த அளவு சாதியக் கட்டுமானம் இறுகிப் போயிருந்தது என்பதும் அதிலும் தலித்துகள் மீதான தீண்டாமை மனத்தின் அடியாழம் வரை வேர் பாய்ந்திருந்தது என்பதும் இதில் தேசியத் தலைவர்கள் முதல் சாதாரண வண்டியோட்டிகள் வரை வேறுபாடு இல்லை என்பதும் பெறப்படுகிறது. கூடுதலாக அம்பேத்கர் காலத்திய இப்போக்கு இன்றளவும் தொடர்கதையாகவே உள்ளது என்பதை உணர்த்துவதுதான் அம்பேத்கர் சிலை உடைப்பும் அம்பேத்கர் பெயர் புறக்கணிப்பும் என்பது நடைமுறை.

இத்தகைய சூழலில்தான் டாக்டர் அம்பேத்கர் தமது தீண்டப்படாதார் என்பவர் யார் என்ற நூலில் மிகவும் பிற்பட்டோராகிய குற்றப் பரம்பரையினருக்காவும் குரல்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள்ளேயே சாதிகளுக்குள் ஒற்றுமையோ, கொடுக்கல் வாங்கலோ கிடையாது. பார்ப்பனரல்லாத உயர் சாதி இந்துக்களின் பார்வையில் பிற சாதியினர் இழிவானவர்களாகவே மதிக்கின்ற மனோபாவம் காணப்படுகிறது. பறையன் என்ற சொல் தாழ்த்தப்பட்ட இனத்தில் சாதிப்பெயராக விளங்கும் நிலையில் உயர் சாதிக்காரர்கள் கள்ளர், வன்னியர் சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களை தொடுகிற பறையர் என்று பேசிக்கொள்வதை எடுத்துக்காட்டித் தங்களை ஒடுக்குகிற மேல்சாதிக் காரர் மீது எவ்வித எதிர்ப்பும் காட்டாத இவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்தவிதத்திலும் குறுக்கீடு செய்யாத தாழ்த்தப்பட்ட மக்கள் மீதே வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இந்த ஒரு விசயத்தில் மட்டும் உயர்சாதிக் காரர்கள் இவர்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கிறார்கள்.

அது போலவே தலித் உட்பிரிவு சாதிகளுக்குள் தலித் மக்களும் பிற சாதி இந்துக்களும் சேர்ந்து ஒடுக்கும் நிலையில் அருந்ததிய மக்கள் உள்ளமையை நடுவு நிலையோடு எடுத்துரைக்கிறார். இத்தகைய சாதியப் படிநிலை ஒடுக்குமுறைத் தேசியக் கொள்கையாகக் கொண்டாடும் இந்துமதம் எப்படிப் புனிதமானதாக இருக்கமுடியும் என்று வினாத் தொடுக்கிறார்.

ஒருதார மணம், விவாகரத்து உரிமை, ஜீவனாம்சம், மறுமணம், விதவை மறுமணம், சொத்தில் உரிமை, வன்கொடுமைகளுக்கு எதிரான – பால்ய விவாகத்திற்கு எதிரான – வரதட்சணைக் கொடுமைகளுக்கெதிரான தண்டனை போன்றவை டாக்டர் அம்பேத்கரால் சட்டம் ஆக்கப் பட்டிருக்கிறது. இவற்றை சட்டமாக்குவதற்கு டாக்டர் அம்பேத்கர் பட்ட அவமானங்கள் அதிகம் என்று ஒட்டுமொத்தப் பெண்களுக்காக அம்பேத்கர் ஆற்றிய அரும்பணிகளை எடுத்துரைக்கும் ஆசிரியர் உண்மையிலேயே பெண்கள் – குறிப்பாக பார்ப்பனப் பெண்கள் – இத்தகைய உரிமைகளைப் பெற்றுத் தந்ததற்காக டாக்டர் அம்பேத்கரையும் பெரியாரையும் பூஜையறையில் வைத்துப் போற்ற வேண்டும். இதற்குப் பெண்கள், தங்கள் மீது கட்டப்பட்டிருக்கும் பார்ப்பன ஆதிக்கம்,இந்துமதக் கருத்தாக்கம் அவற்றின் வழியே கோலோச்சும் ஆணாதிக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஒட்டுமொத்தப் பெண்களுக்கும் அம்பேத்கரின் செயல்களை எடுத்துக் கூறுகிறார்.

இந்து மதத்திற்கும் பார்ப்பனீயத்திற்குமான உறவை – இந்துமதத்திற்கும் தீண்டாமைக்குமான உறவை இந்நூல் அம்பேத்கர் வழிநின்று விரிவாகவே ஆராய்கின்றது. இந்து மதம் பழமையானது. வேதங்களும் ஆகமங்களும் பழமையானவை. அவை கடவுளின் செயல்கள். அவை மாறுதலுக்குரியவை அல்ல என்று கூறிக்கொள்ளும் இந்துமதத்தின் முகமூடியைப் பெரியாரைப் போலவே அம்பேத்கரும் கிழித்தெறிகிறார்.

பார்ப்பனப் பரப்புரையால் பல ஐரோப்பிய அறிஞர்களும் இந்து நாகரிகம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் இருந்து வந்துள்ளது என்று நம்புகின்ற போக்கை எடுத்துக்காட்டி உண்மையிலே தனக்குத் தேவை என்று வந்தால் தங்கள் தலைமையைக் காத்துக்கொள்வதற்காக இந்துமதப் பார்ப்பனீயர்கள் எத்தகைய மாற்றங்களையும் மேற்கொள்வர் என்பதைச் சான்றுகளுடன் உணர்த்துகிறார். பார்ப்பனரல்லாதோரின் கடவுளாக இருந்து முருகன் வருமானம் வாரித்தரும் கடவுளானவுடன் பார்ப்பனீயர்கள் அக்கடவுளின் பெயரை சுப்பிரமணியன், கந்தசாமி என்று மாற்றித் தங்கள் அரவணைப்புக்குள் சேர்த்துக் கொண்டனர். அதன் காரணமாக, திருச்செந்தூர் முருகன் கோவில் நுழைவாயிலில் அறுபது ஆண்டுகளுக்கு முன் “பள்ளன், பறையன், சாணான், சக்கிலி நுழையத் தடை” என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது என்கிறார். இந்துமதம் மாறாத் தன்மையது என்றால் அதன் ஆதிக் கடவுளர்களான இந்திரன், வருணன், பிரமன், மித்ரன் ஆகியோர் எங்கே போனார்கள் என்று அம்பேத்கர் வினவுகிறார். வருமானம் வருமானால் பார்ப்பனர்கள் இசுலாமிய பீர்களின் தர்க்காக்களில் கூடப் பணியாற்றுவர் என்பதையும் பம்பாய்க்கு அருகில் உள்ள ஒரு மலைத் தர்க்காவைச் சான்றாகக் காட்டுகிறார். பொய்யானவை என்றும் புனிதமானவை என்றும் பார்ப்பனால் சுட்டப்படும் வேதம் மூன்று குறைபாடுகளால் கறைபட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டும் அம்பேத்கர் வேள்வியில் பலியிடப்படும் உயிர்கள் எல்லாம் சொர்க்கம் செல்லும் எனில் தந்தையின் மோட்சத்துக்காகவே பிறந்த ஒருவன் தன் தந்தையை வேள்வியில் பலிகொடுக்காதது ஏன் என்ற பிரகஸ்பதியின் வினாவை முன்வைக்கிறார். அதே நேரம் பிரகஸ்பதியின் வினாவை எதிர்கொள்ள முற்படாது, மாறாக நீ ஏன் பெரிய பிரகஸ்பதியா? என இன்றளவும் கேலி செய்யும் போக்கே நிலவுகிறது என்பதை அவர் வழிநின்று ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

அவ்வாறே நான்கு கிருட்டினர்களில் இருந்து உருவாக்கப்பெற்ற கிருட்டினன் என்ற படிமம் முரண்களால் நிரப்பப்பெற்றும், அதனைக் வினாக்குள்ளாக்காது வழிபடும் மக்கள் மனோநிலையைச் சாடுகிறார். வருணாசிரமத்தை அறிவித்தவன் நானே என்று கீதையில் அறிவிக்கும் கிருட்டினன், மூன்று குணங்களை அடிப்படையாகக் கொண்டு நான்கு பிரிவுகளைப் படைத்தான் என்றால் மூன்றிலிருந்து நான்கு எப்படிச் சாத்தியம் என்ற வினா எழுப்பப்பட்டுள்ளது.

அவ்வாறே இராமன் ஏகப்பத்தினி விரதன் என்ற கற்பிதத்தின் மீது விசாரணை நடத்தி, வால்மீகியைச் சாட்சியாக வைத்து இராமன், நாளின் ஒரு பொழுதை அந்தப்புற மகளிரொடு கழித்தவன் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இராமன் விளைவித்த அறம் என்று சொன்னால் சம்புகன் என்ற பார்ப்பனரல்லாத ஒருவன் தவம் செய்தான் என்பதற்காக அவனைக் குற்றவாளியாக்கிக் கொன்றதுதான் என்பது வாலியை மறைந்திருந்து கொன்றதன் பின்புலத்தில் உள்ள சுக்கிரீவனுடான ஒப்பந்தமும், சீதை மீதான அவனின் ஐயமும், ஒரு மனிதப் பிறவிக்குத் தெய்வமுலாம் பூசப்பட்டிருக்கிறது என்பதே உண்மை என்பதை எடுத்துரைக்கிறது.

அம்பேத்கர் – இசுலாமியருக்கு எதிராக இருந்தார் என்று இந்துமதவாத இயக்கங்கள் கட்டியுரைப்பது பொய் என்று டாக்டர் ஆனந்த் தெல்தும்டே என்பவர் நிறுவியுள்ளார் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவர் கூறிய சான்றுகளையும் எடுத்துக் காட்டியிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அவ்வாறே மார்க்சியத்தைப் பௌத்தத்தோடு ஒப்பிட்டு உரிமை மீட்புகளுக்குப் வன்முறையை முன்வைக்கும் மார்க்சியத்தை விட அகிம்சையை வழியாக்கும் பௌத்தமே சரி என்ற அம்பேத்கரின் வழிநின்று கூறும் கருத்து இன்றையச் சூழ்நிலையில் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் இடமளிக்கிறது.

இடஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பனர்கள் “தகுதி திறமையைப் பார்த்துதான் ஒருவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்; சாதியைப் பார்க்கக் கூடாது” என்கின்றனர். அப்படியானால், அம்பேத்கர் – உலகமே போற்றும் தலைமையும் தகுதியும் வாய்ந்தவர் என்பதற்கான அவரின் கல்வித்தகுதியாக பெற்ற பட்டங்கள் பன்னாட்டவராலும் போற்றப்பட்ட சிறப்புகள் ஆகியவற்றையெல்லாம் எடுத்துக்கூறி, அவரைப் பார்ப்பனர்களால் சாதி கடந்து ஏற்க முடியுமா என்ற வினாவை எழுப்பும் ஆசிரியர், மாறாக சிலையுடைப்பும் கூண்டுக்குள் நிறுத்துதலும்தான் அம்பேத்கருக்கு வழங்கப்படுகிறது என்பதையும் தகுதி, திறமை, ஒழுக்கம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட மதத் தலைவர்களுக்கு முன்னே மண்டியிட்டிருக்கும் அவலத்தையும் சுட்டிக் காட்டுகிறார்.

அதே நேரம் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களில் தலித் அல்லாத பிற்பட்ட சமூகத்தினர் தோளோடு தோள் துணைநின்று உதவிய நிகழ்வுகளையும் வரிசைப் படுத்துகிறார். எனவே மக்களின் மனப்பான்மை மாறவேண்டும். அம்பேத்கர் தேசியத் தலைவராக அனைவராலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சியாக, முற்போக்கானவர்களும், சமுதாய மாற்றத்தை விரும்புபவர்களும், சாதியில்லை என்போரும் அம்பேத்கர் உருவம் பொறித்த ‘டி’ சட்டைகளை அணிந்து கொள்ள வேண்டும். தலித்திய எதிர்ப்புணர்வு குரோமோ சோம்களில் குடிகொண்டிருக்கும் வீடுகளில் அவர்களுள் ஒருவர் இந்த ‘டி’ சட்டை அணிந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற தம் ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார்.

இறுதியாக, தொடங்கிய இடமான டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி வன்முறையின் ஊடகப் பதிவிலேயே வந்து முடிகிறது. காட்சி மாறுகிறது. மேலவளவு சிற்றூரில் ஊராட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு நின்று வெற்றிபெற்ற ஒரே காரணத்தால் வெட்டிக் கொல்லப்பட்ட முருகேசன் என்பவர் கொல்லப்பட்ட விதம் குறித்து சாட்சிகள் நீதிமன்றத்தில் கூறிய வாசகங்கள் படங்களாக விரிகின்றன. இந்தச் சாதி வெறிதான் தமிழன் வீரமா என்ற வினா நூலைப் படித்து முடித்த பின்னரும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

(மதிப்புரையாளர்: முனைவர் வே. நெடுஞ்செழியன், பேராசிரியர், தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி, திருவண்ணாமலை )

நூல்: நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை

ஆசிரியர்: வே. மதிமாறன்

வெளியீடு: அங்குசம்

திருவொற்றியூர்

சென்னை – 600 019

பேச: 94443 37384

பக்கம்: 96

விலை: ரூ.45

நன்றி: தமிழ்ஓசை நாளிதழ் (8.3.2009)

2 thoughts on “மக்களின் மனநிலை மாற வேண்டும்

  1. பொதுவில் அம்பேத்கர் என்றால் எத்தனை அருவருப்பு என்பது இந்தப் பதிவுக்கான பின்னூட்ட எண்ணிக்கையிலேயே தெரிகிறது. ஊதுகிற சங்கை ஊதுவோம், கேட்க வேண்டும் அல்லது செவிப்பறை கிழிய வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: