‘உடுமைலை நாராயணக்கவி, என்னை ஓங்கி அறைஞ்சார்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -5

நேர்காணல்; வே. மதிமாறன்

msvv.jpg

* கண்டசாலாவின் குரல் தனித்த ஆளுமை மிக்கது. அவரின் குரலுக்கு மயங்கிய ஆந்திரமக்கள் ‘தன் உடமைகளைக் கூட அவருக்கு எழுதி வைக்கிற அளவுக்கு இருந்தார்கள்’ என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அவரைச் சுத்தமாக பயன்படுத்திக் கொள்ளவில்லையே?

இசையமைப்பாளர் சுப்பராமன் இசைக்குழுவில் உதவியாளரா இருந்தப்ப, தேவதாஸ் படத்துல வர ‘உலகே மாயம், வாழ்வே மாயம்’ பாடலை நான்தான் போட்டேன். அந்தப் பாட்டை கண்டசாலா, ‘உல்கே மாயம், வால்வே மாயம்’ ன்னுதான் பாடியிருப்பாரு.

நானும் அவரோட எவ்வளவோ போராடி பார்த்தேன்.  என்னால முடியில.

அவரு தப்பாப் பாடுனதுக்கு என்னை ஓங்கி அறைஞ்சாரு, அந்தப் பாட்டை எழுதுன உடுமைலை நாராயணக்கவி.

“என்னடா பாடுறாரு அந்த ஆளு” ன்னு கேட்டு அடிச்சாரு.
“அவருக்கு அப்படிதாங்க வருது” ன்னு சொன்னேன்.
“எவனுக்கு ஒழுங்கா வார்த்தை வருதோ அவனை பாடவைக்க வேண்டியதுதானேடா” ன்னு திரும்பவும் அடிச்சாரு. அப்போ நான் சின்ன பையன்.

தெலுங்கு மக்கள், மலையாள மக்கள், இந்திகாரங்க அவுங்க மொழியை தப்பா பாடுனா சும்மா விடமாட்டாங்க. நம்ம ஊர்ல, ‘பிரியமான பெண்ணைக் காதலிக்கிறேன்’னு பாடறதுக்கு ‘பெரியம்மா பெண்ணைக் காதலிக்கிறே’ ன்னு பாடிட்டுப் போயிடுறாங்க.

* நீங்கள் லயித்து உருவாக்கிய மெட்டு, தள்ளுபடி செய்யப்பட்டு பிறகு வேறு படத்துக்கு பயன்படுத்திப் பிரபலமாகி இருக்கிறதா?

msv.gif

நான் டியூன் போடும்போது, என் கூட என் உதவியாளர்கள், சங்கர்-கணேஷ், கோவர்த்தனம் எல்லாம் இருப்பாங்க.

அப்படித்தான் ‘உயர்ந்த மனிதன்’ படத்துக்கு போட்ட ஒரு டியூனை பயன்படுத்தாம, அதை ‘சிவகாமியின் செல்வன்’ படத்துக்கு பயன்படுத்த முடிவு பண்ணி பாட்டெல்லாம் எழுதி ரெக்காடிங்குக்கு தயாரானபோது, அந்த படத்தோட வசனகர்த்தாவான ஏ.எல். நாராயணன் முன்னாலேயே ரெக்காடிங் தியேட்டருக்கு போயிட்டாரு.

போனவரு அங்கிருந்து எனக்கொரு போன் பண்ணாரு, “விசு, நீங்க போட்ட அந்த டியூனை இங்க சங்கர்-கணேஷ் ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க” ன்னு ரொம்ப பதட்டமா பேசுனாரு.

நான், “சரி அத அப்படியே விட்டுறுங்க” ன்னு சொல்லிட்டு, அந்த டியூனை மாத்தி ‘சிவகாமியின் செல்வன்’ படத்துக்கு வேற போட்டேன்.

உயர்ந்த மனிதன் படத்துல என்னோட உதவியாளரா வேலைபார்த்த சங்கர்-கணேஷ் பயன்படுத்திக் கிட்ட என்னோட டியூன் இதுதான்,

‘இனியவளே… என்று பாடிவந்தேன்…’
*எம்.ஜி.ஆர். உடனான உங்கள் இசை அனுபவம்?

notes1.jpg

அத கேட்டா உங்களுக்கு பைத்தியம் பிடிச்சுடும்.

“விசு, இந்த டியூன் ரொம்ப நல்லா இருக்கு. ரெக்காட் பண்ணிடு” ன்னு சொல்வார்.

ரெக்காட் பண்ணிட்டு வந்தா, “அந்தப் பாட்டை அப்படியே மாத்திட்டு, வேற டியூன் பேடு” ன்னு சொல்லுவாரு.

நேற்று இன்று நாளை படத்துக்காக ஒரு பாட்டுக்கு 100 டியூன் போட வச்சாரு. அப்போ அது வேதனையா இருந்தது. இப்போ அது சாதனையா இருக்கு. அவருக்கு நல்ல இசை ரசனை உண்டு.

-தொடரும்

3 thoughts on “‘உடுமைலை நாராயணக்கவி, என்னை ஓங்கி அறைஞ்சார்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

  1. பழைய பின்னூட்டங்கள்:

    ajeevan (06:40:43) :

    நல்ல கலந்துரையாடல்…………
    இது போன்றவை பலருக்கு பலனளிக்கும்!

    பாராட்டுகளும் நன்றியும் மதிமாறன்

    2 03 2008
    gragavanblog (09:03:16) :

    இனியவளே என்று பாடி வந்தேன் பாடல் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றது. அப்படியானால் சங்கர் கணேஷ் பயன்படுத்தியது வேறொரு மெட்டாக இருக்க வேண்டும். எது எந்தப் படத்துக்கு என்று தெரியவில்லை.

    கண்டசாலாவை பாட வைக்காதது நல்லதே. நானும் ஒன்றிரண்டு கேட்டிருக்கிறேன். தமிழில் கேட்பது கொடுமையாக இருக்கும். தமிழில் இருந்து தெலுங்குக்குப் போன பல மெல்லிசை மன்னரின் மெட்டுகளைக் குதறியும் தள்ளியிருக்கின்றார். குறிப்பாக பா வரிசைப் படங்களின் பாடல்களை.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading