தமிழ் தேசியம்: ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

தமிழ் தேசியம் பேசுபவர்கள் மீது உங்களுக்கு என்ன அவ்வளவு வெறுப்பு? ஏதாவது அவர்களை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்?

மா. தமிழ்வாணன்.

ழம் பெருமை பேசுவதின் மூலம்தான் தமிழ்த் தேசியத்தை பரிந்துரைக்கிறார்கள். இந்தியத் தேசியத்திற்குள் எந்த மாநில மக்களும் நலமாக இல்லை என்பதை சொல்வதற்கு பதில், அல்லது இந்திய தேசியத்தை விமர்சிப்பதை விட, மற்ற மாநில மக்களை எதிரிகளாக சித்தரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். சரியான செயல் திட்டத்தோடு, கொள்கை விளக்கங்களை தருவதில்லை. தனிநாடுக்கான சமீபத்திய தேவை, அதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி விளக்குவதில்லை.

‘தமிழன் கடாரம் கொண்டான். கொடாரம் கொண்டான்… ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டவன் இன்று நாடெற்று தவிக்கிறான்…’ என்பது போன்ற சென்டிமென்ட்டான, உணர்ச்சிகரமான வசனங்கள்தான் அதிகம் இடம் பெறுகிறன. அரசியல் ரீதியான அனுகுமுறை மிக குறைவாக இருக்கிறது.

ராஜராஜ சோழன் போன்ற மக்கள் வீரோதியை, தேவதாசி முறையை கொண்டு வந்து பெண்களை இழிவு படுத்தியவனை,  வட இந்தியப் பார்ப்பனர்களை தமிழகத்தில் கொண்டு வந்து இறக்கி, பார்ப்பனியத்தை  வலுப்பெறுச்செய்தவனை, பல புத்தக்கோயில்களை இடித்தவனை, சைவ சமயத்திற்கு விளக்குப் பிடித்தவனை ‘தமிழ் மன்னர்களின் தலைசிறந்தவன், இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டவன்’ என்று கூச்சமில்லாமல் பெருமை கொள்கிறார்கள். இதில் பல ஜாதிக்காரர்கள் இவனை தங்கள் ஜாதிக்காரன் என்று பெருமை பொங்க உரிமை கொண்டாடுகிறார்கள். இதில் சில அறிவாளிகளும் அடக்கம்.

மற்ற நாட்டுக்காரன் தமிழ்நாட்டை கைப்பாற்றி ஆண்டால் அது ஆதிக்கம். தமிழ் மன்னன் மற்ற நாட்டை கைப்பற்றி ஆண்டால் அது வீரமா? சேட்டு இங்கு வந்து வட்டிக்கடை வைத்து தமிழர்களை கொள்ளையடிக்கிறான். அது சுரண்டல். சரிதான்.

ஆனால் செட்டியார் பர்மாவுக்கு போய் பரிதாபத்திற்குரிய அந்த மக்களை வட்டிக் கடை வைத்துக் கொள்ளையடித்து, அந்த நாட்டு இயற்கை வளங்களை சூறையாடி, ‘பர்மா தேக்குல கட்டுன வீடு’ என்று பகட்டா வாழ்ந்தால், அது திரைக்கடல் ஓடி திரவியம் தேடியதா?

ஆதிக்கம், சுரண்டல் இவைகைளை சேட்டு பண்ணா என்ன? செட்டியார் பண்ணா என்ன? எல்லா பயலும் ஒணணுதான்.

தமிழன் என்ற பொது அடையாளத்தில் சுற்றி வந்தாலும் – தமிழ், தமிழன், தனிநாடு என்று பேசுபவர்களில் எனக்கு தெரிந்த பல பேர் ஜாதி வெறியர்களாக இருக்கிறார்கள். அல்லது ஜாதி வெறி நடவடிக்கைகளை, தாழ்த்தப்பட்டமக்கள் மீது நடக்கிற வன்கொடுமைகளை கண்டிக்க மறுக்கிறார்கள்.

எவ்வளவு சத்தமாக பேசினாலும் கடைசியில் இவர்கள் சரணாகதி அடைவது பார்ப்பனியத்திடம்தான். பார்ப்பனியத்தின் நுட்பமான, வலுவான சுயஜாதி அடையாளத்தில் போய் ஒளிந்து கொள்கிறார்கள். ‘அந்த ஜாதிக்காரன் தமிழன் அல்ல. தெலுங்கன். தங்கள் ஜாதிதான் மூத்தக்குடி. அந்தக் காலத்தில் நாடாண்டது எங்கள் ஜாதிதான்.’ என்று பெருச்சாளியாய் வெளியே வருகிறார்கள்.

இதில் ஆதிக்கஜாதி வெறியர்களில் இருந்து, தாழ்த்தப்பட்ட ஜாதி உணர்வாளர்கள் வரை இப்படித்தான் இருக்கிறார்கள். இப்படி பேசுகிறவர்கள் கடைசியாக தமிழ்நாட்டின் ஒப்பற்ற தனிபெரும் தலைவரான, தமிழர்களின் சுயமரியாதைக்காக தன் வாழ்க்கையையே அர்பணித்துகொண்ட மாபெரும் சிந்தனையாளரான தந்தை பெரியார் மீது அவதூறு சுமத்தி, அவரை தமிழ், தமிழர்களுக்கு எதிரானவர்களாக சித்திரிக்கிறார்கள்.

இன்னும் சிலர், பெரியார் இயக்க தொண்டர்கள் மீது சவாரி செய்து கொண்டிருப்பதால், நேரடியாக பெரியாரை பற்றி விமர்சிக்காமல் தந்திரமாக, ‘திராவிட இயக்கம் இந்த நாட்டை கெடுத்துவிட்டது. திராவிடன் என்று சொல்வது மோசடியானது’ என்று சுற்றி வளைத்து பெரியாரை சீண்டுகிறார்கள்.

இப்படி பெரியாரை  அவதூறு செய்கிறவர்கள் அவருக்கு மாற்றாக யாரை முன் நிறுத்துகிறார்கள் என்று பார்த்தால், தங்கள் ஜாதியை சேர்ந்த ஒருவரை மாபெரும் தலைவராக, பெரியாருக்கு மாற்றாக சொல்கிறார்கள். ‘அவரை பெரியார் இருட்டடிப்பு செய்து விட்டார். அவருடைய தத்துவங்களை திருடிவிட்டார்’ என்றும் பழி சுத்துகிறார்கள்.

‘தமிழ், தமிழன், தொல்குடி, பெருங்குடி’ என்று பேசினாலும், இவர்களின் உள்ளுணர்வு ஜாதி பாசத்தில்தான் இருக்கிறது. இவர்களின் அரசியல் நிலைபாட்டை தீர்மானிப்பது, அவர்களின் சுயஜாதி வெறிதான். அதுதான் பார்ப்பனியம். இந்த உணர்வுதான் பார்ப்பனியத்தை வாழ வைக்கிறது.

ஒவ்வொரு ஜாதிக்காரருக்கும் இந்த சுயஜாதி பற்று இருக்கும் வரை, பார்ப்பனியத்தை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அசைக்க முடியாது. 3 சதவீதம் மட்டும் இருக்கும் பார்ப்பனர்களால் மட்டும் எப்படி பார்ப்பனியத்தை இத்தனை ஆண்டுகள் உயிர்ப்போடு வாழ வைக்க முடியும்? அதுக்குத்தான் இருக்கிறதே பார்ப்பனரல்லாதவர்களிடம் சுயஜாதி பாசம்.

*

02-07-2009 அன்று எழுதியது.

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

46 thoughts on “தமிழ் தேசியம்: ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

 1. முற்றிலும் உண்மை. இந்திய தேசியத்தில் சிதைந்து கொண்டிருப்பது, தமிழ் மட்டுமல்ல, அனைத்து தேசிய மொழிகளும், அவற்றின் பண்பாடுகளும் கலாச்சாரங்களும் தான். தமிழ் தேசியம் பேசும் பலரும் இன வெறியர்களாகவே இருக்கிறார்கள். இதில் சாதியம் பெரும்பாண்மை.

 2. அருமை அருமை.

  த.தே வாதிகள் பெரும்பாலும் கனவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நல்ல கற்பனாவாதிகள் இவர்கள். குறிப்பாக நதி நீர் பிரச்சினை இவ்வளவு சிக்கல்களை அடைய இங்கிருக்கும் த.தே வாதிகளும், அங்கிருக்கும் மொழி வெறியர்களுமே காரணம். ஒரு சாதாரண கன்னட விவசாயி மெய்யாகவே அப்பாவி; மட்டுமல்லாமல் இங்கே உள்ள தமிழ் விவசாயிகளை அடிக்கும் அதே உலகமயம் தான் அவனையும் அடிக்கிறது. என்ன செய்திருக்க வேண்டும்? அவனையும் வென்றெடுத்திருக்க வேண்டும். செய்திருந்தால் நமது பிரச்சினைக்கு அவன் உள்ளிருந்தே ஆதரவு வழங்கச் செய்திருக்கலாம். கன்னட மொழி வெறி அரசியல்வாதிகளை தனிமைப் படுத்தியிருக்கலாம்- அதை விடுத்து சவடால் அரசியல் பேசிப் பேசி கன்னட உழைக்கும் வர்க்கத்தையும் கூட எதிரிகள் போல சித்தரிக்கும் முயற்சியில் ஓரளவு வென்றிருக்கிறார்கள்.

  இதே பின்புலத்தில் நதி நீர் பிரச்சினை குறித்தும் எழுதுமாறு வேண்டுகிறேன்.

 3. சுயஜாதிப்பாசத்தோடு வர்க்கமும் சேர்ந்து கொள்கிறது, அதனால் தான் பார்ப்பன வருடி மற்றும் பல தமிழ் கரும்பு விவசாயிகளை ஏமாற்றி வயிறு வளர்த்த மகாலிங்கத்துக்கு பரிசு பாராட்டும் கொடுக்க முடிகிறது.

  பகுத்தறிவு பேசும் பலரும் கூட கன்னட, மலையாள, பீகார் உழைக்கும் மக்களையும் வெறியர்களையும் திட்டமிட்டே காண மறுக்கிறார்கள்.

  அப்படியே தமிழ்த்தேசியம் பேசுகிறவரிடம் தெளிவில்லை என்ற கட்டுரையின் லின்க் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  கலகம்

 4. தமிழ்தேசியம் பற்றிய ஆள் அடி அவதூறாகவே தெரிகிறது, தமிழ்தேசியம் அதற்கான தேவைகளை அல்லது அவை ஏன் தேவையில்லை என்று சொல்லியிருந்தாலாவது பரவாயில்லை… வே.மதிமாறன் அவர்கள் இவ்வளவு மேலோட்டாமக எழுதுவாரென எதிர்பார்க்கவில்லை

 5. சொல்வதெல்லாம் உண்மை…
  உண்மையைத் தவிர வேறில்லை… தொடர்க…

 6. குழலிக்கு கசக்க காரணம் குழலி தமிழ்க்கம்பெனியைச் சார்ந்தவர்…

 7. இவை எனது ஐயங்கள்

  கன்னட உழைக்கும் விவசாயியை பற்றி சிந்திக்கும் திறனற்று இந்த சமூகத்தை வளர்த்தெடுத்தது யார்?

  கன்னட இனவெறியர்கள் தமிழனை அடிப்பதற்கு இங்குள்ள தமிழ் தேசிய வாதிகள்தான் காரணமா?

  தமிழ்தேசியவாதிகளை பொருட்டாகவே கருதாத அரசியல் இங்கு நடக்கும் பொழுது இவர்களது ஆளுமையின் வீச்சு கன்னட இனவெறியர்களை உசுபேத்தும் அளவுக்கு இருக்கிறதா?

  தமிழர்கள் ஈழத்தின் அளவுக்கு புறக்கணிக்க படவில்லையாயினும்,
  மற்ற தேசிய இனங்களை போலவே தமிழ் தேசிய இனத்தை மதிக்காத இந்திய பார்ப்பன தேசியத்துக்கு எதிராக உழைக்கும் மக்கள் அணிதிரள, தமிழகத்திற்கு தமிழ்தேசியம் என்னும் சொல்லாடலோடு, உணர்வுபூர்வமாக அல்லாமல் சாதி ஒழிப்பை செயல்திட்டமாகவும், அடிப்படை கொள்கையாகவும் கொண்ட பொதுவுடமை சிந்தனை மற்றும் பெரியாரிய சிந்தனையோடு கூடிய தமிழ்தேசியக் கருத்தாக்கங்களை உருவாக்க முயற்சி செய்தால் தவறா?

  இந்திய தேசியத்தை எதிர்க்க வேண்டும்?

  தமிழ் தேசியவாதிகளிடம் குறை இருக்கிறது……பகுத்தறிவுவாதிகள் உழைக்கும் மக்களை அணிதிரட்ட களமிறங்கலாம்தானே…

 8. ராஜராஜனின் சிலைக்காக வருந்துகிறார்
  ராஜராஜனின் சிலையின் உள்ளே
  நரம்புகள் உண்டா? நாளங்கள் உண்டா?
  சிலையாகுமுன்னர் ஜீவித்திருந்த
  இம்மன்னன்
  எதைச் செய்து கிழித்துவிட்டானாம்?
  ஈழம் கொண்டானாம்…
  சாவகம் வென்றானாம்…
  காலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமலை
  பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
  மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்
  கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்
  பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக
  குடும்பவிளக்கின் கொழுந்துகளை எல்லாம்
  மண்ணில் தேய்த்த மா பாதகன் இவன்
  தஞ்சை நகரில் தேவடியார் தெருக்களுக்குக்
  கால்கோள் விழாச்செய்த காமுகன்
  இம் மன்னன்.
  மக்களாட்சியின் மகத்துவத்தைச்
  சிலையான பின்னும் கற்பழிக்கிறான்

  ராஜராஜ சோழன் பற்றிய இன்குலாப் கவிதையின் பகுதி மேற்கண்டது

  http://kundavai.wordpress.com/2007/03/20/apocalypto-300-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/

 9. உண்மை.சரியாகச் சொன்னீர்கள்.நன்றி

 10. காமெடி பீஸு போய் வேலையை பாரு

 11. தமிழ் தேசியம் என்ற உங்க புரிதலுக்கு ராஜ ராஜன் வரை போய் ம.க.இ.க பாணியில விமர்சிச்சு மிக மேலோட்டமான மலிவான பதிவை மதிமாறனிடம் சற்றும் எதிர்பார்க்க வில்லை…

 12. மதிமாறன்!
  முன்பே பல பதிவுகள் செய்துள்ளேன். எனக்கு முற்றுமாக சாதியுணர்வில்லை. நீங்கள் சொன்ன எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆன ஆள் நானல்ல. ஆனாலும், எனக்கு தமிழ்த்தேசியம் வேண்டும். அதற்கான ஆயிரம் காரணங்கள் உள்ளன. உங்களுக்கும் தெரியும். ஏன் இந்த வரட்டு நிலைப்பாடு?

  பெரியார் தமிழ்த்தேசியம் பேசினால் அது சரி. தமிழன் பேசினால் அது தவரறா?

  நானும் சொல்கிறேன் திராவிடன் என்று சொல்லாதே. தமிழன் என்று சொல் என்று. தெலுங்கனோ, கன்னடனோ, மலையாளியோ தன்னை திராவிடன் என்று சொல்லிக்கொள்வதில்லை. அதனால் தான், பெரியாரே, திராவிட நாட்டைக் கைவிட்டு தமிழ்தேசம் கேட்டார். உங்களுக்கு மறதியா?

  எனது 26 வருட கால நன்பன். குடும்ப நன்பன். அண்ணன் தம்பி போன்ற உறவு. நாயுடு. தமிழுக்கு செம்மொழித் தகுதியை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதிரந்தேன். இதை என்னவென்று சொல்வது?

  தமிழை உச்சரிக்கத் தெரியாத ஆரியன் திரமிள என்றான். அதுதான் திராவிடன் என்று காலப்போக்கில் திரிந்தது. தமிழிலிருந்து இம்மொழிகள் பிரிந்ததால் இவை திராவிட மொழிக்குடும்பம் ஆனது.

  தெலுங்கு, கடன்னடம், மளையாளம் எல்லாம் உருவாக்கியவன் ஆரியனே. நம்மைப்பிரிக்க அவன் செய்த செயல்களே அவை. எனவே, இம்மக்களெல்லாம் தமிழரே என்பது எனது கருத்து.

  எனவே தமிழகத்தில் வாழும் அனைவரும் தமிழரே! திராவிடம் எதற்கு?

  எல்லோரிடமும் அரசியல் உண்டு மதிமாறன்! உங்களிடமும் உண்டு.

  உங்களை விவாதத்திற்கு ஏற்கனவே அழைத்துள்ளேன். உங்களிடம் பதிலுமில்லை, உங்கள் கருத்தில் மாற்றமுமில்லை!

  இது பகுத்தறிவுக்கு அழகா?

  பெரியாரிசமும் தோற்று விட்டதாகவே கருதுகிறேன்.

 13. // தெலுங்கு, கடன்னடம், மளையாளம் எல்லாம் உருவாக்கியவன் ஆரியஇது குறித்து மீண்டும் ஆலோசனை அவசியம். கால்டுவெல் பகுப்பு சரிதான் என எண்ணுகிறேன்.

  தமிழ் மீடியத்தில் படித்த தமிழன் என்றாலும், அந்த ஊர்களில் பணி புரியும் வாய்ப்பு .ஏற்பட்டதால் தெலுங்கு தெரியும். ஓரளவு, கன்னடமும் மலையாளமும் தெரியும். அம்மொழிகளில் சொற்றொடர் அமைப்பு தமிழ் போல உள்ளது; வார்த்தைகள் தமிழ், வடமொழி, உள்ளூர் தோற்றம் என கலந்து உள்ள.ன.
  இது ஆரியக் கிரியை இல்லை என்று தோன்றுகிறது.

  இவ்வளவு பரந்த நிலத்திலே, ஒவ்வொரு பகுதியிலும் சிறு சிறு மாறுபாடுகள் பேச்சு வழக்கில் வருவது இயல்பே.

  வடமொழி அழிந்து விட்டதால், ( அதாவது பேசுபவர் ஒருவரும் இல்லை என்பதால்,) தங்கள் மொழி வடமொழியில் இருந்து வந்தது என்று சொல்லிக் கொள்கிறார்கள்; தமிழிலிருந்து தோன்றியவை என சொல்ல தயங்குகிறார்கள்.
  பெரியாரும் தமிழின் தொன்மையை ஒப்புக்கொண்டவர் தான்: கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மொழி என்றதால் தான் தமிழை காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னார். னே. நம்மைப்பிரிக்க அவன் செய்த செயல்களே அவை. //

 14. தமிழ் மன்னர்கள் செய்ததெல்லாம் பெருமைமிக்கன என்பது பகுத்தறிவுள்ள தமிழனின் எண்ணமல்ல. அதேநேரம், அலெக்ஸாண்டரை The Great என்று வரலாறு ஏன் அழைக்கிறது? அவர் செய்யாத அட்டூழியமா? அந்த வகையில் தமிழரின் வீர மரபைப் பற்றி பேசினால் அது தவறா?

  திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது ஆதிகாலச் சொல். அக்காலத்தில் வியாபாரம் தான் திரைகடலோட வைத்தது. யவனருடனும், சீனருடனும் பெரும் வணிக செயல்பாடுகள் இருந்தன. திரைகடலோட வேண்டியது சுரண்ட என்பது, பழங்காலத்தைப் பொருத்தவரை உண்மையல்ல. செட்டியார் செய்ததைப் பேசி, இப்படி ஒரு குருகிய வாதம், ஒரு பெரியாரின் சீடனிடமிருந்தா?

  “கொள்வதும் மிகைகொளாது, கொடுப்பதும் குறைகொடாது” என்பது புரனாநூறு சொல்லும் வியாபார முறை.

  நீங்கள் குறை சொல்லும் தமிழ்த்தேசியவாதிகளை பெயரிட்டு, அவரவர்களிடம் உள்ள குறைகளைத் தனித்தனியாக விமர்சனம் செய்ததுண்டா? ஏன் செய்யவில்லை?

  பொத்தாம் பொதுவாகத் திட்டி உங்களைக் காத்துக் கொள்கின்றீர்கள்.

  உண்மையிலேயே நீங்கள் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர் தான். உண்மை அது தான்.

  பகுத்தறிவு என்பது நேர்மைக்கு அப்பாற்பட்ட விடயமுமல்ல, பாரப்பானைத் திட்டமட்டும் உருவான கோட்பாடுமல்ல.

  உங்கள் பதிவுகளுக்கு கருத்து சொல்லும் எங்களுக்கு அங்கங்கே உரிய பதில் தரும் நேர்மை உங்களிடம் இல்லையே. இது உங்கள் தளம் தானே? அதைச் செய்தாலென்ன?

  உங்களின் பயமும், பலகீனமும் தானே கரணம்.

  தமிழனுக்கு எத்துணை துயரங்கள் பாருங்கள்! எத்துனை உட்பகை பாருங்கள்!!

  பாரப்பான் உட்பட எல்லோருக்குமான, சம உரிமையுள்ள தமிழ்த்தேசம் தான் எங்களது இலக்கு!

 15. // தெலுங்கு, கன்னடம் , மலையாளம் எல்லாம் உருவாக்கியவன் ஆரிய னே. நம்மைப்பிரிக்க அவன் செய்த செயல்களே அவை. //

  இது குறித்து மீண்டும் ஆலோசனை அவசியம். கால்டுவெல் பகுப்பு சரிதான் என எண்ணுகிறேன்.

  தமிழ் மீடியத்தில் படித்த தமிழன் என்றாலும், அந்த ஊர்களில் பணி புரியும் வாய்ப்பு .ஏற்பட்டதால் தெலுங்கு தெரியும். ஓரளவு, கன்னடமும் மலையாளமும் தெரியும். அம்மொழிகளில் சொற்றொடர் அமைப்பு தமிழ் போல உள்ளது; வார்த்தைகள் தமிழ், வடமொழி, உள்ளூர் தோற்றம் என கலந்து உள்ள.ன.
  இது ஆரியக் கிரியை இல்லை என்று தோன்றுகிறது.

  இவ்வளவு பரந்த நிலத்திலே, ஒவ்வொரு பகுதியிலும் சிறு சிறு மாறுபாடுகள் பேச்சு வழக்கில் வருவது இயல்பே.

  வடமொழி அழிந்து விட்டதால், ( அதாவது பேசுபவர் ஒருவரும் இல்லை என்பதால்,) தங்கள் மொழி வடமொழியில் இருந்து வந்தது என்று சொல்லிக் கொள்கிறார்கள்; தமிழிலிருந்து தோன்றியவை என சொல்ல தயங்குகிறார்கள்.
  பெரியாரும் தமிழின் தொன்மையை ஒப்புக்கொண்டவர் தான்: கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மொழி என்றதால் தான் தமிழை காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னார்.

 16. மகிழ்நனின் பொதுவானக் கருத்து போல, முல்லைப் பெரியாரு அணையை உடைக்கச் சொல்கிறான் மலையாளி. அது உடைந்தாலும், உடனடியாக மக்கள் பாதிப்படைய வாயப்புகள் இல்லாத மலையாக இருந்தும், அகோர சீடி செய்து மக்களை உசுப்பேத்துகிறான். தமிழ்ப்பகுதிகளை கேரளத் தொடர்வண்டிக் கோட்டத்தில் இணைத்து வைத்திருக்கிறான். நெய்வேலி மின்சாரம் அவனுக்கு செல்லும் போது, தண்ணீருக்கு கப்பம் கேட்கிறான், சோம்பேரி மலையாளி. தமிழன் அடி வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் விதியா?

  அதே கதைதான் கர்நாடகத்திலும், ஆந்திராவிலும். ஆனால், தமிழன் தனது மக்களிடம் எதார்த்தத்தைச் சொன்னால், அது கொடுமையா?

  30 கி. மீ மட்டுமே ஆந்திராவில் ஓடும் பாலாற்றில் நூற்றுக்கணாக்கான தடுப்பனைகளைக் கட்டியும், இப்போது பெரிய அணையைக் கட்டி, தமிழகத்திற்கு தண்ணீரே வரவிடாமல் செய்து, 300 கி. மீ. ஓடும் தமிழகத்திற்கு துரோகம் செய்யலாமா? இதுபற்றி தமிழனுக்கு சொல்வது தவறா?

  பாரப்பானைப் போல மலையாளி இல்லாத இடமே இல்லை. இவர்களால் ஈழம் அடைந்த இன்னல்களைச் சொல்வது தவறா?

  ஐயகோ, தமிழனின் நிலையைப் பாரீர்! யாருக்கும் பரிவில்லை!

  நல்லவன் வாழ்வதில்லை! வல்லவன் வாழ்வான்!!

  மதிமாறன், உங்களைப் போன்றவர்களால் தான் பாஸிஸ்டுகள் தோன்றுகின்றனரோ என்று எண்ண வைக்கிறது. ஒரு மக்களின் நேர்மையான தேவைகளை, அறிவு ஜீவிகள் திரித்துக் கொச்சைப் படுத்துவதால் தான், நல்லவர்களும் பாசிச சக்தியாகின்றனரோ?

 17. //மதிமாறன், உங்களைப் போன்றவர்களால் தான் பாஸிஸ்டுகள் தோன்றுகின்றனரோ என்று எண்ண வைக்கிறது. ஒரு மக்களின் நேர்மையான தேவைகளை, அறிவு ஜீவிகள் திரித்துக் கொச்சைப் படுத்துவதால் தான், நல்லவர்களும் பாசிச சக்தியாகின்றனரோ?
  //
  வழிமொழிகிறேன்

 18. தோழர் மதிமாறன் அவர்களுக்கு

  நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை சற்று தெளிவாகவோ, விளக்கமாகவோ எடுத்துச் சொல்ல முற்பட்டிருக்கலாம். கட்டுரையின் தலைப்பு சரியில்லை. பதிவுகளில் சொல்ல வரும் சங்கதி புரியிவல்லை. ஏதாவது விளக்கம் கேட்டால் உங்களிடம் பதில் இருப்பதில்லை.

  பெரியாரின் பிம்பத்தை ஒழிக என்று ஒத்துப்பாடுவதால் ஏதோ எமக்குள் ஓர் நெருடல்.

  ஏற்கனவே ஒரு கட்டுரையில் பெரியாரை விட பனகல் சிறந்தவர் என்னும் இரண்டு வரி வார்த்தையை போகிற போக்கில் தூவிச் சென்றிருக்கிறீர்கள். இதுபோன்ற இரண்டை வரி வார்த்தைகளில் சரியாக ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாமல் அவதூறு போல் தோற்றுவிக்கும் உங்கள் எழுத்துக்களின் நிலைப்பாடுகள் தற்போது எமக்குள் பெரிய கேள்வியை எழுப்புகின்றது. எம்முடைய வாதத்திற்கு மதிப்பளித்து எமக்கு தேவையான விளக்கங்களை முன் வைப்பீர்கள் என்று நம்புகிறோம் தோழரே!

  உங்கள் பதில் தான் என்ன?

  தோழமையுடன்
  தமிழச்சி
  http://tamizachiyin-periyar.com/
  http://tamizachi.com/

 19. நெற்குப்பை தம்பி அவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்.

  தமிழின் வட்டார வழக்குகளாக இருந்த மொழியை சமஸ்கிருதம் திட்டமிட்டுக் கலந்து அதற்கு முதல் இலக்கன நூலாக வடமொழில் எழுதியுள்ளார்கள் என்று அறிகிறேன். கன்னடம், தெலுங்கு, மலையாளம் எல்லாமே இவ்வாறுதான். ஈழத்தமிழும் ஒரு வட்டார வழக்குதான். அது தான் மலையாளத்திற்கு முன்னான தமிழுமாகும்.

  சாலை போட்டபின்தான் சாலைவிதிகள் வரும். ஒரு மொழிக்கு இலக்கியங்கள் வந்தபின்தான் இலக்கணங்கள் வரும். ஆனால், இம்மொழிகளுக்கு இலக்கனங்கள் தான் முதலில் எழுதப்பட்டன. அதுவும் வடமொழியில்.

  எனவே, ஆரியர்கள் தாங்கள் குடியேறிய பகுதிகளின் அடையாளங்களை அழிப்பதிலேயே குறியாயிருந்தனர். அவர்கள் சிறுபாண்மையினர். வந்தாருங்குடி. எனவே, இந்த அடையாள அழிப்பு அவர்களுக்கான ஒரு பாதுகாப்பு. எங்கும் எதிலும் சமஸ்கிருதம் கலந்திருந்தால் நாம் அவர்கள்தான் இங்கு முன்னோர்கள் என்று நம்பவேண்டிவரும்.

  நீங்களே நினைத்துப் பாருங்கள். பாரப்பான் வௌ்ளையாய் இருந்ததனால் தான், நாம் (கால்டுவெல்லும் தான்) அவர்களின் இந்த சித்து விளையாட்டுக்களை கண்டறிந்து உடைக்க முடிந்தது. அவர்கள் கருப்பாயிருந்திருந்தால் உண்மை இவ்வளவு ஏளிதில் வௌிப்பிட்டிருக்காது.

  தமிழையும் திட்டமிட்டுக் கெடுக்க, ஒவ்வோரு தமிழ் சொல்லுக்கும் ஒரு சமஸ்கிருத சொல் என்று “மணிப்பிரவாள” நடையை உருவாக்கி இருந்தனர். அதை உடைத்தது, கால்டுவெல்லின் அடியொற்றி, மறைமலை, பாவாணர், பரிதிமாற்கலைஞர் போன்றோரே!

  இப்போதும் தமிழில் 20% சமஸ்கிருத சொற்கள் உண்டு.

  ஆக, இந்த மொழிகளை உருவாக்கியவர்கள் ஆரியர்களே! பெரும்பாலும் அவர்களது கைங்கர்யத்தால் உருவானவை தான் இவை.

  பிரப்பின் அடிப்படையில் நம்மைப் பிரித்தது போல, (சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன்) மொழியாலும் தமிழனைப் பித்தாண்டவர்கள் அவர்களே!

 20. இன்னொரு செய்தி!

  சமஸ்கிருதத்திலிருந்து தான் தமிழ் வந்தது என்றும், இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய், சமஸ்கிருதம் தான் என்றும் அவர்கள் கதையைக் கட்டி இருந்தார்கள். இதை, கடைக்கால தமழிர்கள் நம்பியதாகவே நான் கருதுகிறேன். கால்டுவெல்லுக்குப் பிறகுதான் உண்மை வௌி வந்தது.

  நான் சிறுவனாக இருந்த போது ஒரு கடவுள் சினிமாவில், அகத்தியர் (அகஸ்தியர்) ஒரு கமண்டலத்திலிருந்து நீர் தௌித்து, தமிழ் உருவாகட்டும் என்பார். அதாவது அகஸ்தியர் ஒரு ஆரிய ருஷி. அவரால் உருவாக்கப்பட்டது தான் தமிழ் என்று பொருள்.

  ஜெர்மன் “மேக்ஸ் முல்லர்” (மொழி வல்லுனர்) சமஸ்கிருதம் தான் மூத்தது என்றார். அவர் சாகும் போது தான் தமிழ் மூத்தது என்ற உண்மையை ஒத்துக் கொண்டார். கால்டுவெல் அவரோடு விவாதித்து நிருவினார் என்று கேள்வி.

  இன்னும் தோண்டப்பட வேண்டிய வரலாறுகள் ஏறாளம்!

 21. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னதற்கு வேறு காரணமும் உண்டு. தமிழில் சங்க காலத்திற்குப் பின்புள்ள இலக்கியங்கள் பெரும்பாலும் கடவுள் பெருமை பாடுவதாகவும், அதுவும் அசிங்கங்களுக்கு தெய்வீகத் தன்மை கொடுக்கப் பட்டதாலும் தான், அவர் தமிழைக் காண்டுமிராண்டி மொழி என்றார்.

  சங்க இலக்கியங்களையும், திருக்குறளயும் வைத்து பிறகு தனது கருத்தைத் திருத்திக் கொண்டார் என்று கேள்வி.

 22. ////தமிழன் என்ற பொது அடையாளத்தில் சுற்றி வந்தாலும் – தமிழ், தமிழன், தனிநாடு என்று பேசுபவர்களில் எனக்கு தெரிந்த பல பேர் ஜாதி வெறியர்களாக இருக்கிறார்கள். அல்லது ஜாதி வெறி நடவடிக்கைகளை, தாழ்த்தப்பட்டமக்கள் மீது நடக்கிற வன்கொடுமைகளை கண்டிக்க மறுக்கிறார்கள்.

  எவ்வளவு சத்தமாக பேசினாலும் கடைசியில் இவர்கள் சரணாகதி அடைவது பார்ப்பனியத்திடம்தான். பார்ப்பனியத்தின் நுட்பமான, வலுவான சுயஜாதி அடையாளத்தில் போய் ஒளிந்து கொள்கிறார்கள். ‘அந்த ஜாதிக்காரன் தமிழன் அல்ல. தெலுங்கன். தங்கள் ஜாதிதான் மூத்தக்குடி. அந்தக் காலத்தில் நாடாண்டது எங்கள் ஜாதிதான்.’ என்று பெருச்சாளியாய் வெளியே வருகிறார்கள்.////

  இதற்கும் பெ.தி.க. தோழர்களுக்கும் தொடர்பிருக்கிறதா?

 23. தோழர் மதிமாறன்,
  திக தலைவர் வீரமணியை கடுமையாக விமர்சிக்க தெரிந்த சிலர், டாக்டர் ராமதாஸ் போன்ற தீவிரமான வன்னியர் ஜாதி உணர்வாளரை விமர்சிக்க மறுக்கிறார்கள். ஈழப் பிரச்சினையில் அவர் செய்த துரோகத்தை மூடி மறைக்கிறார்கள்.

  தீவிர பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் இருக்கிற இந்த வன்னியர் ஜாதி வெறியர்களைக் குறித்து நீங்கள் விமர்சிக்க வேண்டும்.

 24. என் கேள்விக்கு விரிவான விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். சரி எல்லாவற்றையும் ஒத்துக் கொள்கிறேன்.

  தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் மட்டுமா சாதி பார்க்கிறார்கள்? பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் கூடதான் சாதி பார்க்கிறார்கள்.
  ராமதாசை விமர்சிக்க மறுக்கும் பெரியாரிஸ்டுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 25. மலையாளிகளின்ஆதிக்கம் பற்றி பேசுகி டாக்டர் பாண்டியன் போன்றவர்கள் தேவர், வன்னியர் போன்ற ஆதிக்க சாதிகள் தலித்துகளுக்கு எதிராக வன்முறை செய்யும்போது எங்கே போயிருந்தனர்?

  இவர் வாயில் மலத்தை தினித்து ஆதிக்க சாதிகள் கொடுமை செய்தால் இவர் அப்பேர்தும்ம் இப்படித்தான் தமிழன் பெருமை பேசுவாரா?

 26. ”எஙகளுக்கு சாதியுணர்வு இல்லைங்கோ, நாங்கெல்லாம் சாதி பார்ப்பதில்லைங்கோ” என்ற கொள்கையில் இயங்கும் ”லாவகமாக நழுவும் தமிழ்தேசிய சங்கத்தில்” நீங்களும் ஒரு உறுப்பினர் என்பது உங்கள் பதிப்பில் தெரிகிறது.
  தன்னளவில் மட்டும் சாதியை மறுப்பது சாதிமறுப்பின் அம்சம் அல்ல.
  தன் சுயசாதியினர் மற்ற சமூகத்தினரை ஒடுக்கும் போது கள்ளமெளனம் காக்காமல் ஒடுக்க பட்ட மக்களுக்கு ஆதரவாய் நிற்பதே உண்மையான சாதி மறுப்பின் அம்சம்.
  உங்கள் மெளனம் சாதிப்பதின் காரணம் ஆதிக்க சாதியினரின் ஆதரவை (ஓட்டுகட்சிகள் ஒட்டுகளை பார்பதுபோல்) இழக்க வேண்டிய விருப்பமினமையே.

  //தெலுங்கு, கடன்னடம், மளையாளம் எல்லாம் உருவாக்கியவன் ஆரியனே. நம்மைப்பிரிக்க அவன் செய்த செயல்களே அவை. எனவே, இம்மக்களெல்லாம் தமிழரே என்பது எனது கருத்து.//
  ஒரு மார்கழி மாதக் குளிர் இரவில், கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்டத் தமிழர்களை, குழந்தைகளோடு கொளுத்திக் குளிர் காய்ந்தார்கள்.
  குளப்பாடி பொதுக்குளத்தில் குளித்த தாழ்த்தப்பட்ட தமிழ் குழந்தைகளை மின்சாரம் பாய்ச்சிக் கொன்றார்கள்.
  மேலளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட, ஏழு தாழ்த்தப் பட்டத் தமிழர்களின் கழுத்தை அறுத்துக் கொன்றார்கள்.
  திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டத் தமிழர்களை பீ தின்ன வைத்தார்கள்.
  இக்கொடுமைகளையெல்லாம் செய்தது வெள்ளைகாரனோ, பிரென்சுகாரனோ, டச்சுகாரனோ, போர்த்துகீசியனோ, கன்னடனோ, மலையாளியோ, தெலுங்கனோ அல்ல….. தமிழர்கள்…

  //இது பகுத்தறிவுக்கு அழகா?//

  பாதிக்கபட்ட/இன்றும் தமிழர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உங்கள் பதில் என்ன?????

  இது தான் தமிழ்தேசியத்திற்கு அழகா????

  //பெரியாரிசமும் தோற்று விட்டதாகவே கருதுகிறேன்//

  எப்படியோ உங்களை முற்போக்காக காட்டிகொண்டு, தமிழ்தேசியவாதிகளின் பெரியார் மீதுள்ள காழ்புணர்ச்சியை நீங்களும் நாசூக்காக காட்டிவிட்டீர்கள்.

  தமிழ் தேசியம் பேசும் நீங்கள் யாராக இருந்தாலும், ஒடுக்கபட்ட மக்களின் மீதுள்ள ஒடுக்குமுறைகளை மறைத்து, அப்பிரச்சனையை புறங்கையால் ஒதுக்கி, சமூகநீதியை சீர்குலைக்கும் காரணியை மறைத்து தமிழராய் ஒன்று படுவோம், தமிழ் தேசியம் வெல்வொம் என்று வெற்று சவடால் விட்டீர்களேயானால், நாங்கள் சொல்கிறோம் ”உங்கள் தேசியப் பிரச்சனை எங்கள் தூசிக்கு சமம்”.
  வேண்டுமானால் உங்கள் சாதிக்கு தனிதேசிய கோரிக்கை முன்வையுங்கள்.
  ஓ…அது முடியாததால் தான் தமிழர் என்கிற பொதுபெயரில் அடையாளம் காட்ட விரும்புகிறீரோ???

  இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கு நான் எதிரியல்ல.
  ஆனால் விடுதலைக்கு பின் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை மாறிவிடுமா?
  ஒடுக்கு முறைகள் மாறிவிடுமா?
  தீண்டாமை மாறிவிடுமா? – அண்ணல் அம்பேத்கர்

  இந்த கூற்று எல்லா தேசிய பிரச்சனைகளுக்கும் பொருந்தும்..

  //அலெக்ஸாண்டரை The Great என்று வரலாறு ஏன் அழைக்கிறது? அவர் செய்யாத அட்டூழியமா? அந்த வகையில் தமிழரின் வீர மரபைப் பற்றி பேசினால் அது தவறா?//

  காந்திய கூடத்தான் ”மகாத்மா” “நம் தேசதந்தை” என்று வரலாறு அழைக்கிறது.
  அதுக்குன்னு ஹரே ராம்,ஹேராம்,காந்தினு பெருமை பேச முடியுமா??

  நீங்கள் பேசினாலும் பேசுவீர்கள்.

  //பொத்தாம் பொதுவாகத் திட்டி உங்களைக் காத்துக் கொள்கின்றீர்கள்.//

  பொத்தாம் பொதுவாக தமிழன் என்று பேசி உங்கள் சாதியை நீங்கள் தான் உங்கள் லுங்கியில் வைத்து காத்துக் கொள்கின்றீர். சுயசாதிகாரர்கள் செய்யும் கொடுமைகளை உங்கள் லுங்கியில் மறைத்து கொண்டு தமிழ்தேசியம் பேசுகிறீர்கள்.

  //பாரப்பான் உட்பட எல்லோருக்குமான, சம உரிமையுள்ள தமிழ்த்தேசம் தான் எங்களது இலக்கு//

  தாரளமாக பார்பானுக்கு சமஉரிமை கொடுன்கோ சாமி! ஆனா இந்த கண்டதேவி தேரை நம்ம தமிழர்கள் இழுக்க மற்ற தமிழர்கள் அனுமதி கொடுக்க மாட்றாங்க. ஏனா கயிற தொட்டா தீட்டாம்.
  அதை கொஞ்சம் பாருங்களேன். பிறகு பார்ப்பனுக்கு சம உரிமை பத்தி பேசுங்களேன்..

  உங்கள் தோழன்,
  வேந்தன்..

 27. @ Dr. Pandiyan

  ”எஙகளுக்கு சாதியுணர்வு இல்லைங்கோ, நாங்கெல்லாம் சாதி பார்ப்பதில்லைங்கோ” என்ற கொள்கையில் இயங்கும் ”லாவகமாக நழுவும் தமிழ்தேசிய சங்கத்தில்” நீங்களும் ஒரு உறுப்பினர் என்பது உங்கள் பதிப்பில் தெரிகிறது.
  தன்னளவில் மட்டும் சாதியை மறுப்பது சாதிமறுப்பின் அம்சம் அல்ல.
  தன் சுயசாதியினர் மற்ற சமூகத்தினரை ஒடுக்கும் போது கள்ளமெளனம் காக்காமல் ஒடுக்க பட்ட மக்களுக்கு ஆதரவாய் நிற்பதே உண்மையான சாதி மறுப்பின் அம்சம்.
  உங்கள் மெளனம் சாதிப்பதின் காரணம் ஆதிக்க சாதியினரின் ஆதரவை (ஓட்டுகட்சிகள் ஒட்டுகளை பார்பதுபோல்) இழக்க வேண்டிய விருப்பமினமையே.

  //தெலுங்கு, கடன்னடம், மளையாளம் எல்லாம் உருவாக்கியவன் ஆரியனே. நம்மைப்பிரிக்க அவன் செய்த செயல்களே அவை. எனவே, இம்மக்களெல்லாம் தமிழரே என்பது எனது கருத்து.//
  ஒரு மார்கழி மாதக் குளிர் இரவில், கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்டத் தமிழர்களை, குழந்தைகளோடு கொளுத்திக் குளிர் காய்ந்தார்கள்.
  குளப்பாடி பொதுக்குளத்தில் குளித்த தாழ்த்தப்பட்ட தமிழ் குழந்தைகளை மின்சாரம் பாய்ச்சிக் கொன்றார்கள்.
  மேலளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட, ஏழு தாழ்த்தப் பட்டத் தமிழர்களின் கழுத்தை அறுத்துக் கொன்றார்கள்.
  திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டத் தமிழர்களை பீ தின்ன வைத்தார்கள்.
  இக்கொடுமைகளையெல்லாம் செய்தது வெள்ளைகாரனோ, பிரென்சுகாரனோ, டச்சுகாரனோ, போர்த்துகீசியனோ, கன்னடனோ, மலையாளியோ, தெலுங்கனோ அல்ல….. தமிழர்கள்…

  //இது பகுத்தறிவுக்கு அழகா?//

  பாதிக்கபட்ட/இன்றும் தமிழர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உங்கள் பதில் என்ன?????

  இது தான் தமிழ்தேசியத்திற்கு அழகா????

  //பெரியாரிசமும் தோற்று விட்டதாகவே கருதுகிறேன்//

  எப்படியோ உங்களை முற்போக்காக காட்டிகொண்டு, தமிழ்தேசியவாதிகளின் பெரியார் மீதுள்ள காழ்புணர்ச்சியை நீங்களும் நாசூக்காக காட்டிவிட்டீர்கள்.

  தமிழ் தேசியம் பேசும் நீங்கள் யாராக இருந்தாலும், ஒடுக்கபட்ட மக்களின் மீதுள்ள ஒடுக்குமுறைகளை மறைத்து, அப்பிரச்சனையை புறங்கையால் ஒதுக்கி, சமூகநீதியை சீர்குலைக்கும் காரணியை மறைத்து தமிழராய் ஒன்று படுவோம், தமிழ் தேசியம் வெல்வொம் என்று வெற்று சவடால் விட்டீர்களேயானால், நாங்கள் சொல்கிறோம் ”உங்கள் தேசியப் பிரச்சனை எங்கள் தூசிக்கு சமம்”.
  வேண்டுமானால் உங்கள் சாதிக்கு தனிதேசிய கோரிக்கை முன்வையுங்கள்.
  ஓ…அது முடியாததால் தான் தமிழர் என்கிற பொதுபெயரில் அடையாளம் காட்ட விரும்புகிறீரோ???

  இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கு நான் எதிரியல்ல.
  ஆனால் விடுதலைக்கு பின் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை மாறிவிடுமா?
  ஒடுக்கு முறைகள் மாறிவிடுமா?
  தீண்டாமை மாறிவிடுமா? – அண்ணல் அம்பேத்கர்

  இந்த கூற்று எல்லா தேசிய பிரச்சனைகளுக்கும் பொருந்தும்..

  //அலெக்ஸாண்டரை The Great என்று வரலாறு ஏன் அழைக்கிறது? அவர் செய்யாத அட்டூழியமா? அந்த வகையில் தமிழரின் வீர மரபைப் பற்றி பேசினால் அது தவறா?//

  காந்திய கூடத்தான் ”மகாத்மா” “நம் தேசதந்தை” என்று வரலாறு அழைக்கிறது.
  அதுக்குன்னு ஹரே ராம்,ஹேராம்,காந்தினு பெருமை பேச முடியுமா??

  நீங்கள் பேசினாலும் பேசுவீர்கள்.

  //பொத்தாம் பொதுவாகத் திட்டி உங்களைக் காத்துக் கொள்கின்றீர்கள்.//

  பொத்தாம் பொதுவாக தமிழன் என்று பேசி உங்கள் சாதியை நீங்கள் தான் உங்கள் லுங்கியில் வைத்து காத்துக் கொள்கின்றீர். சுயசாதிகாரர்கள் செய்யும் கொடுமைகளை உங்கள் லுங்கியில் மறைத்து கொண்டு தமிழ்தேசியம் பேசுகிறீர்கள்.

  //பாரப்பான் உட்பட எல்லோருக்குமான, சம உரிமையுள்ள தமிழ்த்தேசம் தான் எங்களது இலக்கு//

  தாரளமாக பார்பானுக்கு சமஉரிமை கொடுன்கோ சாமி! ஆனா இந்த கண்டதேவி தேரை நம்ம தமிழர்கள் இழுக்க மற்ற தமிழர்கள் அனுமதி கொடுக்க மாட்றாங்க. ஏனா கயிற தொட்டா தீட்டாம்.
  அதை கொஞ்சம் பாருங்களேன். பிறகு பார்ப்பனுக்கு சம உரிமை பத்தி பேசுங்களேன்..

  உங்கள் தோழன்,
  வேந்தன்..

 28. //நான் சிறுவனாக இருந்த போது ஒரு கடவுள் சினிமாவில், அகத்தியர் (அகஸ்தியர்) ஒரு கமண்டலத்திலிருந்து நீர் தௌித்து, தமிழ் உருவாகட்டும் என்பார். அதாவது அகஸ்தியர் ஒரு ஆரிய ருஷி. அவரால் உருவாக்கப்பட்டது தான் தமிழ் என்று பொருள்.//

  உங்க சின்ன வயசுல பார்த்த சினிமாவுல, தமிழ்மொழிய தப்பா காட்றாங்கன்னு கொதிக்கிற நீங்க, இன்றுதொட்டும் நிஜ வாழ்க்கையில் எத்தனையோ தலித் பெண்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் கற்பழிக்கப்படுகின்றார்கள். அதை எதிர்த்து ஒரு Action கூட எடுக்கலையே ஏன்???
  ஒரு வேளை இதையும் சினிமாவுல பார்த்திருந்தால் தான் கொதித்தெழுந்திருப்பீர்களோ!!!

 29. //தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் மட்டுமா சாதி பார்க்கிறார்கள்? பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் கூடதான் சாதி பார்க்கிறார்கள்.
  ராமதாசை விமர்சிக்க மறுக்கும் பெரியாரிஸ்டுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?//

  தன் சாதியபிமானம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சாதி வெறியர்களே..
  நேர்மையாக சாதிமறுப்பு பற்றி பேசினால் தான் அவர்கள் பெரியாரிஸ்டுகள்..
  இல்லையேல் அவர்கள் ஃபூலிஷ்கள்..

 30. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை சற்று தெளிவாகவோ, விளக்கமாகவோ எடுத்துச் சொல்ல முற்பட்டிருக்கலாம். கட்டுரையின் தலைப்பு சரியில்லை.//

  தமிழ்தேசியத்தின் அகமுழக்கம் ”ஒழிக பெரியார், வாழ்க பார்பனியம்”.

  வாழ்க பார்பனியம் என்று சொன்னவுடன் வாயடைக்க வேண்டாம்..

  உதாரணம் “பெரியாரிசமும் தோற்று விட்டதாகவே கருதுகிறேன்”.

  ”பாரப்பான் உட்பட எல்லோருக்குமான, சம உரிமையுள்ள தமிழ்த்தேசம் தான் எங்களது இலக்கு” என்ற வாக்குமூலங்கள்
  நம்மிடையே பதித்த ஒரு தமிழ்தேசியவாதியுனடையது.

  உங்கள் தோழன்,
  வேந்தன்..

 31. பாரப்பானைப் போல மலையாளி இல்லாத இடமே இல்லை. இவர்களால் ஈழம் அடைந்த இன்னல்களைச் சொல்வது தவறா?//

  சரி அந்த இடத்தில் ஒரு தமிழன் இருந்தால் அதை செய்ய மாட்டானா???
  கருணாநிதி,ப.சிதம்பரம் இவர்களெல்லாம் யார்???
  கேட்டால் அவர்களை தமிழின துரோகிகள் என்பீர்.

  //உங்களைப் போன்றவர்களால் தான் பாஸிஸ்டுகள் தோன்றுகின்றனரோ என்று எண்ண வைக்கிறது. ஒரு மக்களின் நேர்மையான தேவைகளை, அறிவு ஜீவிகள் திரித்துக் கொச்சைப் படுத்துவதால் தான், நல்லவர்களும் பாசிச சக்தியாகின்றனரோ?//

  துரோகிகளும், சந்தர்ப்ப வாதிகளும், பாசிஸ்டுகளும் எல்லா தரப்பிலும் உள்ளனர்.

  ஆனால் அவர்களின் முகத்தை மட்டும் காட்டி, உழைக்கும் மக்கள் அனைவரையும் எதிரிகளாக காட்டும் உங்களை போன்ற தமிழ் பற்றாளர்கள் தான், உங்கள் பற்றை மற்றவர் மீது வெறியாய் மாற்றுவதால் தான், நல்லவர்களும் பாசிச சக்தியாகின்றனர்.

  உங்களை போன்றோரும், நெடுமாறன் போன்றோரின் செயலுக்கும் மதிமாறன் அவர்களை கைகாட்டினால் எப்படி???

  உங்கள் தோழன்,
  வேந்தன்..

 32. அன்பு மதிமாறன்,
  தமிழ் தேசியமும் பெரியாரிசமும் வேறுவேறு அல்ல.
  புரிந்து கொள்ளுங்கள்.
  நமக்குள்ளேயே இப்படி பிரிந்து கிடக்கும்போது அடுத்தவரை குறை சொல்ல நமக்கு அருகதை இல்லை.

 33. தமிழ் தேசியமும் பெரியாரிசமும் வேறுவேறு அல்ல.
  புரிந்து கொள்ளுங்கள்.
  நமக்குள்ளேயே இப்படி பிரிந்து கிடக்கும்போது அடுத்தவரை குறை சொல்ல நமக்கு அருகதை இல்லை.//

  பெரியார் சொன்ன தமிழ் தேசியம் (வலதுசாரி) அல்ல இது..
  நமக்குள்ளே சாதி பிரிவினையை கடைபிடிக்கும் போது, அடுத்த மாநிலத்தவனின் பிரிவினைபுத்தியை பற்றி பேசும் தமிழ்தேசியம் பேசுபவர்களுக்கு அருகதை இல்லை.

 34. ////தமிழ் தேசியம் – ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்////

  என்று நீங்கள் வைத்த தலைப்பு எவ்வளவு பொருத்தமானது. உண்மையானது என்பதை டாக்டர் பாண்டியன் என்கிற தமிழ் தேசியவாதி நிரூபித்திருக்கிறார்.

  பாண்டியன் ஒருவரது உணர்வு மட்டுமல்ல. இப்படித்தான் இருக்கிறார்கள் பெரும்பாலும் தமிழ் தேசியவாதிகள். வெளிபடையாக விவாதித்தால், இப்படித்தான் அம்மணமாக நிற்பார்கள்.

  பெரியாரை விமர்சிக்கிற இவர்கள், தீவிர சாதி உணர்வாளர்களான, தலித் விரோதம் கொண்ட முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களை விமர்சிக்க மாட்டார்கள். அவர் பெரியாரையே மிககேவலமாக பேசியவர்தான்.

  பெரியார் தொண்டர்கள் இந்த தமிழ் தேசியவாதிகளின் சதிக்கு பலியாகாமல், பெரியார் கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்.

 35. சில வன்னியர்களும் முதலியார்களும் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் செய்கிற தமிழ் தேசிய தமாசுகளை பற்றி நீங்கள் எழுத வேண்டும்.

  பாபாசாகேப் அம்பேத்கரை ஒரு அறிஞராக கூட மதிக்காத முதலியார் பெரியாரிஸ்ட் ஒருவர், உங்கள் மீது கொண்ட காழ்புணர்ச்சியில் தன்னுடைய அல்லகைகளை வைத்துக் கொண்டு இணையத்தில் உங்களுக்கு எதிரான அவதூறுகள் பரப்பி வருகிறார்கள்.

  இப்போது பார்ப்பனர்களை விடவும் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் இருக்கிற சாதி வெறியர்களும், தலித் விரோதிகளும்தான் உங்கள் மீது கடும் வெறுப்பில் இருக்கிறார்கள்.

  இன்னும் தமிழ் தேசியத்தின் பேரில் உங்கள் மீது படை எடுத்துவருவார்கள் பல சாதி வெறியார்கள்.

 36. உங்கள் மீது இய்க்குனர் சீமான் மிகுந்த மரியாதையாக இருக்கிறார். நான் அவரிடம் பேசும்போது கூட உங்களைப் பற்றி மரியாதையாக குறிப்பிட்டார்.

  மும்பையில் உங்கள் புத்தக விழாவில் அவர் கலந்து கொள்ளக் கூடாது என்கிற நோக்கில் உங்களுககு அவருக்கும் சிண்டு முடியும் நோக்கில் பல அவதூறுகளை பரப்புகிறார்கள் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் இருக்கிற ஜாதி வெறியார்கள்.

  நீங்கள் தமிழ் தேசியவாதிகளை விமர்சனம் பண்ணி எழுதியதே சீமானை குறிவைத்துதான் என்று அவதூறு பரப்புகிறார்கள்.

  அப்படியானால் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, முட்டாள் என்று பெரியார் சொன்னார். அதை பெரியாரிஸ்டுகள் தீவிரமாக நம்புகிறார்கள. பிரச்சாரம் செய்கிறார்கள்.

  அப்படியானல் விடுதலைப் புலிகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான், அதற்காக அவர்களையும் அதன் தலைவரையும் பெரியாரிஸ்டுகள்- முட்டாள்கள், காட்டுமிரண்டிகள் என்று சொல்கிறார்கள் என்று அர்த்தமாகுமா?

  இதுபோன்ற அவதூறுகளை பரப்பும் முட்டாள்கள் இருக்கும் வரை, பார்ப்பனர்களுக்கு பிரச்சினை இல்லை.

  இதுபோல் முட்டாள் தனமாக பேசி பேசிதான் ஈழ மக்களையும், விடுதலைப் புலிகளையும், அதன் தலைவரையும் இவர்கள் ஏமாற்றினார்கள்.

  இந்த பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் மறைந்து இருக்கிற இந்த முட்டாள் ஜாதி வெறியர்களை, காழ்ப்புணர்ச்சிகாரர்களை அம்பலப்படுத்தி நீங்கள் எழுத வேண்டும்.
  அப்போதுதான் பெரியார் பெயருக்கு இவர்கள் ஏற்படுத்துகிற இழுக்கை துடைக்க முடியும்.

 37. இந்திய விடுதலை நாளை ஒரு கருப்பு தினமாக ஐயா அவர்கள் அறிவித்தார்கள் என்பது ஜாதி ஒழியாமல் விடுதலை என்பது உண்மையான விடுதலை அல்ல என்ற உண்மையால் என்பது அனைவரும் அறிந்தது.
  பார்ப்பனர்கள் என்ன விடுதலையை எதிர்பார்த்தார்களோ அதை பெற்று விட்டாகள்.
  ஆனால் அய்யாவின் கனவு இன்னும் கனவாகவே உள்ளது.
  இந்திய தேசியத்தில் சாதியை ஒழிக்கக்கூடிய சாத்தியகூறுகள் இருக்கிறதா?
  தமிழ் தேசியத்தில் அதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.
  தமிழ்தேசிய வாதிகளிடத்தில் சுய சாதிப்பற்று இருக்கிறதா இல்லையா என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒன்றுதான் என்பதோடு, உங்களுக்கு தமிழ்தேசிய பற்று எந்த அளவிற்கு இருக்கிறது என்பதும் ஆராய்ந்து பார்க்கவேண்டிய ஒன்று!
  தமிழ்தேசியவாதிகளை ஒரு குறுகிய எல்லைக்குள் சுருக்கி விட்டீர்களோ என்றே எண்ணத்தோன்றுகிறது.
  உங்கள் கொள்கை சரியானதுதான் என்றால் இன்று தமிழ்தேசிய வாதிகள் இந்திய தேசியத்தை எதிர்த்து போராடுகிறார்கள் என்றால் உங்கள் போராட்டத்தால் தமிழ் தேசியத்தில் சாதியை எதிர்த்து போராடும் போராளியாகவே நீங்கள் இருப்பீர்கள்.
  வாழ்த்துகள்.

 38. தமிழுனர்வை மேலும் நீர்த்து போகாமல் செய்த விஜய T. ராஜேந்தர் வாழ்க!

  நயனதாராவிடமிருந்து தங்கள் புதல்வனும்/தமிழ்நாடும் தப்பித்துள்ளது; இது ஒரு பெரிய தமிழக அரசியல் போட்டியை
  தவிர்த்து உள்ளது.- இதன் மூலமாக தமிழுனர்வை மேலும் நீர்த்து போகாமல் செய்த தங்களுக்கு மொட்டை அடித்து வேண்டுதல் செய்வதாக தமிழ் கடவுள் பழனி முருகனிடம் வேண்டியுள்ளோம் . ஆகையால் அந்நாளில் செந்தமிழ் திரைப்பட உலகத்தினர் அனைவரும்,அண்டைமாநில நடிகைகளுடன் பழனியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்- பகுத்தறிவு தமிழர் பேரவை.

 39. தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா?

  அண்டைமாநிலங்களி ல் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்களை சீண்டிவிட்டது யார்? /சிந்திக்க வைத்தது
  எது??? வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
  வாழ்க அறம் வளர்த்த தமிழகம்!
  வாழ்க இன உணர்வு!

  ஹி… ஹி…ஹி…
  என் அருமை திராவிடத் தமிழா!!!
  நாங்க உங்க வீட்டிற்கு வரும் போது எனக்கு என்ன கொடுப்பாய் என கேட்பதும் ; நீ எங்கள் வீட்டிற்கு வரும்போது என்ன கொண்டு வந்தாய் என்பதும் எப்போதும் திராவிடர்களாகிய நாங்கள் கடை பிடிப்பது தானே??? இப்பொழுது ஏன் நீ சிந்திக்க ஆரம்பித்து விட்டாய்???

 40. தில்லி தழிழ்ச் சங்கம் நடத்தும் இசைப் போட்டிகள்

  புது தில்லி, டிச.24: தில்லித் தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர் விழா போட்டிகளை நடத்தவுள்ளது. நாளை டிச.25 காலை 10 மணிக்கு 6,7,8ம் வகுப்புகளுக்கும், காலை 11 மணிக்கு 9,10 ஆம் வகுப்புகளும், பகல் 12 மணிக்கு 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கும் என்று இசைப்போட்டிகளை நடத்தவுள்ளதாக சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலுக்கு… பி.ராகவன் நாயுடு : 9891816605, எம்.ஆறுமுகம்:9868530644, பி.ராமமூர்த்தி: 9968328116, ஏ.வெங்கடேசன்: 9313006908 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  கருத்துகள்:

  தமிழ்ச் சங்கமா? நாயுடுகள் சங்கமமா?? தமிழ் இசை எப்படி வளரும்??? ஹி….ஹி….ஹி…. அதனால் தாங்கோ செயற்கை முறையில் அண்டை மாநில மக்களின் உதவியுடன் தமிழ் இசையை உருவாக்கி கேட்டு/ரசித்து இன்புறுகிறோம்! – செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!.

  Pl c link:
  http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&artid=527395&SectionID=164&MainSectionID=164&SectionName=Latest%20News&SEO=

 41. பெரியார் தமிழ்த்தேசியம் பேசினால் அது சரி. தமிழன் பேசினால் அது தவரறா?- Dr. V. Pandian….
  நன்றாகச் சொன்னீர்கள். எத்தனை பேருக்கு புரியபோகிறது???

  தமிழன் நெல்லுக்காக இரைத்த நீர் எத்தனை சதவிகிதம் தமிழனை சேர்க்கிறது என்று கேட்ட ஒரே தலைவன் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே?? என்ன செய்வது – எல்லாருக்கும் பேராசை- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரிய மறுக்கிறார்களே???

  கணக்கெடுக்க தயாரா திராவிடம் பேசுவோர்???
  DK/ DMK – கட்சிகளை TK/TMK என்று மாற்ற அடம்
  பிடித்தால் இருக்கும் மற்றவர்களும் சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். வாழ்க வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய, வள்ளலார் பிறந்த தமிழ் நாடு. தமிழா இன உணர்வு கொள்.

 42. பார்ப்பனியத்தை நம் நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்றால் அதற்கான ஒரே தீர்வு மார்க்சியம் தான்,
  ஆனால் உழைக்கும் மக்களை ஒன்று சேர்த்து போராட வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மார்க்சியத்தை திரித்து போலியாக பேசி மக்களை ஏமாற்றி ஓட்டு பொறுக்கும் வேளையில் இறங்கிவிட்டார்கள் ,

  ராமதாசு போன்ற பச்சோந்திகள் தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறிக்கொண்டும் தன்னை ஆண்ட சாதி என்றும் கூறிக்கொள்கிறார்கள், திராவிடன் என்று கூறிக்கொள்ளும் கருனாநிதி இந்து மத சாமியார்களை மேடைகளில் தன பக்கத்தில் அமர வைக்கிறார்,

  இது போன்று திராவிடம், தமிழ் தேசியம் என கூறிக்கொண்டு பல அமைப்புகள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்,

  தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி மணியரசன் கும்பலோ மற்ற மாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக வரும் இந்தியர்களை அடித்து விரட்டுகிரார்கள்,

  இது போன்ற ஓட்டு பொறுக்கிகளும் தமிழ் தேசிய வாதிகளும் இருக்கும் வரை பார்ப்பனியத்தை ஒன்றும் செய்ய முடியாது

  இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு உழைக்கும் மக்கள் சாதி மத பேதமின்றி புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணி திரள வேண்டும் தேர்தல் பாதையை புறக்கணித்து புரட்சி பாதைக்கு வரவேண்டும், இதுதான் இதற்க்கு சரியான தீர்வாகும்.

 43. // இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு உழைக்கும் மக்கள் சாதி மத பேதமின்றி புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணி திரள வேண்டும் //
  —————————

  அப்படியா… ஜாதி சான்றிதழில், உங்கள் ஜாதியென்ன?. உங்க ஜாதி பெண்ணை தலித் காதலித்தால் “சமத்துவம் வாழ்க, காதல் வாழ்க”னு வாழ்த்துவீரா இல்ல தலித்த வெட்டி தண்டவாளத்தில் எறிவீரா?.

  ஆகையால்தான் “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என தந்தை பெரியார் அறிவித்தார்.. புரிஞ்சுச்சா..

Leave a Reply

%d bloggers like this: