‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

https://i1.wp.com/3.bp.blogspot.com/_0XidROab6yk/R2-rHn8LJLI/AAAAAAAADIE/DJrvnXEMQZI/s400/periyar_340.jpg?w=474

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1

கவி, சிங்ப்பூர்.

மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை பிழையானது என்று பெ.மணியரசன் அவர்கள் பிழையாகக் கூறி வருகிறார்கள். மொழிப் பற்றி பெரியார் கொண்டுள்ள தெளிவான பார்வை பின்வருமாறு வெளிப்படுகிறது:

மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? என்று முதலில் கவனிக்க வேண்டும். ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருக்கிறது. மேலும் இச் சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும் பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும் சில வித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன. ஆனால், அவற்றை மொழி என்று கூறா விட்டாலும் ஒலிக் குறிப்பு என்று கூறலாம்.

இப்படி மொழிப் பற்றி வரையறை செய்த பெரியார், மேலும் கூறுகிறார், ஒருவரை பார்த்து, உங்கள் மொழி என்ன? என்று கேட்பதற்கு, நீங்கள் எந்த மொழியில் உங்கள் கருத்தைப் பரிமாறிக் கொள்கிறீர்கள்? என்றுதானே பொருள். ஆக, மேலே தெரிவித்ததிலிருந்து மொழி என்பது ஒருவருக்கொருவர் தம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உபயோகப்படுத்தும் சாதனம் என்று நன்கு விளங்குகிறது.

இப்படி பெரியார் விளக்கிய பிறகு மீண்டும் அவரைப் பார்த்து குதர்க்கமாக கேள்வி கேட்க விரும்புபவர்களுக்கு மீண்டும்  விளக்கம் கூறுகிறார்,

மக்களிடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சாதனம் மொழி என்றால் அம்மக்களிடையே பல மொழிகள் வழங்கப்படக் காரணம் என்னவென்று நீங்கள் கேட்கலாம். பல மொழிகள் வழங்க வேண்டுமென்று யாரும் விரும்பியதில்லை என்றும், தற்போது வழங்கப்பட்டு வரும் எம்மொழியும் கற்பனை செய்யப்பட்டதல்ல வென்றும் உங்களுக்கு விளக்கிக் காட்ட விரும்புகிறேன்

என்றால்லாம் கூறிய பெரியார் சில உதாரணங்களையும் கூறுகிறார், “யாழ்ப்பாணத்தான், அவர்கள் அப்பொழுதே வந்துவிட்டார்கள் என்று கூறுவதை, திருநெல்வேலியான், அவா அப்பமே வந்தா என்பான். கிராமத்தான், அவியயா அப்படியே வந்தாங்கோ என்பான். இப்படி ஒரு மொழி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகப் பேசப்படக் காரணம் என்ன? அவர்கள் ஒருவருக்கொருவர் சுலபத்தில் கலந்து கொள்ள வசதியான போக்குவரத்துச் சாதனங்கள் இல்லாமையும், அவர்களைப் பிரித்து வைக்கும் மலைகள், ஆறுகள், சமுத்திரங்கள் உள்ளமையும் ஆகிய இவைகள்தான் காரணம் என்று பகுத்தறிவு கொண்டு விளக்கிக் காட்டியுள்ளார்.

இதோடு விட்டுவிட வில்லை  பெரியார். அறிவியல் பூர்வமாகவும் விளக்குகிறார்,

மற்றும் மொழியானது அந்தந்த நாட்டுச் சீதோஷ்ணத் திற்கேற்பவும் அவரவர்களுக்கு வேண்டிய வாழ்க்கைப் பழக்க, வழக்க, பண்பு, குறிப்புகளுக்கேற்பவும் அமைந்துள்ளன. சில மொழிகள் அதிக சக்தி செலவிடாமல் சுலபமாய் பேசக் கூடிய ரீதியிலும், சில அதிக சக்தியைச் செலவிட்டுச் சிரமத்தோடு பேசக்கூடிய ரீதியிலும் அமைந்திருக்க காண்கிறோம். உதாரணமாக வடமொழியிலுள்ள போன்ற சப்தங்கள் அடிவயிற்றிலிருந்து ஆழ் து³Èத்துக் கொண்டு வருவது போல் ஒலிக்கிறது.

உதாரணமாக ஆங்கிலேயனை எடுத்துக் கொள்வோம். அவன் சாதாரணமாகக் குளிர் தேசத்தில் வாழ்பவன். குளிரானது அவனுக்கு ‘ஹா’ என்கிற பெரும் காற்றைத் தள்ளிக் கொண்டு உச்சரிக்க வேண்டிய சப்தத்தை இயற்கையாக உண்டாக்கச் சுலபமாக அம் மொழியும் ஏன் அது போன்ற வட மொழியும் பேச முடிகிறது. ஆனால் என்னதான் அவன் தமிழில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், சுத்தமான தமிழில் இலக்கணக் குற்றமில்லாமல் பேசினாலும் , ‘ள இந்த சப்தங்களைச் சரியாக உச்சரிக்க முடிவதில்லை. இந்த சப்தத்திற்கு அவருக்குப் பழக்கமான அந்தச் சீதோஷ்ணம் சரிப்படாமற் போவதுதான் காரணம். அந்தச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைக்கப்பட்ட அவர் நாக்கு, இந்த சப்தத்தை உச்சரிப்பதற்கேற்பச் சுலபத்தில் திரும்ப முடியவில்லை என்பது தான் காரணம்.

‘ழ’, ‘ள’ என்ற எழுத்துக்களின் ஒலி அமைப்பையும் உச்சரிப்பு முறையையும் விளக்கிய பெரியாருக்கு மொழிப் பற்றிய பார்வை இல்லை என்று தமிழ் நன்கு கற்றறிந்த  பெ. மணியரசன் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

ஒரு மொழிக்குச் சிறப்பு எவ்வாறு அமைகிறது என்பதை பற்றியும் கூறுகிறார் பெரியார்,

இனியும் கவனிக்கும் பட்சத்தில் ஒரு மொழியில் சுலபமாக விளக்கக் கூடும் ஒரு கருத்தை, மற்றொரு மொழியில் விளக்குவது வெகு கஷ்டமாயிருக்கும். அதாவது அந்தக் கருத்தை வெளியிடுவதற்கு வேண்டிய வார்த்தைகள் அம்மொழியில் இருக்காது. காரணம் என்ன? அந்த மொழி பேசும் மக்களிடத்து அந்தக்  கருத்து இருந்ததில்லை என்பது தான்.

இத்தோடு பெரியார் விட்டுவிட வில்லை. மேலும் ஒரு அழுத்தம் கொடுக்கிறார். அதாவது, “அந்தக் கருத்து அவர்களிடம் ஏற்பட வேண்டிய அவசியமோ, தேவையோ இருந்ததில்லை என்பதுதான் காரணம்” என்று வலியுறுத்துகிறார்.

இந்த இடத்தில் ஜாதி என்ற வட மொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்து விட்டால் அதற்குச் சரியான தமிழ்ச் சொல் ஒன்று கூறுங்கங்ளேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தையில்லையே! ஆதலால் நம் மக்களிடையே ஆதியில் ஜாதிப் பிரிவினை இல்லை என்பதும் இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் ஜாதி பேத உணர்ச்சி அற்றுப் போகுமா, இல்லையா? கூறுங்களேன். இதே போல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம், சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள், வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால்  நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப பாருங்கள் என்று கூறியுள்ளதையும் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும்.

எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம் மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துக்களைப் பொறுத்துதான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துக்களைக் கொண்டு பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட அறிவைக் கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள சில பிரபலமான புத்தகங்களை வாங்கிப் படித்தால் அவற்றில் காணப்படும் கருத்துக்களைக் கொண்டே அம்மக்களின் நாகரிகத்தின் முன்னேற்றத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலும் அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு மொழியை ஏற்பதும் தள்ளுவதும் கூட, பெரும்பாலும் அந்தந்த மொழியின் பாற்பட்ட முன்னேற்றக் கருத்துக்களைப் பொறுத்து தான் இருக்கிறது. ஒரு மொழியின் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் மற்றொரு காரணமும் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கெவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாக கற்றுக் கொள்ளப் படுவதற்கு எழுத்துக்கள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசிய மாகும்.

ஒரு மொழி சிறப்புத் தன்மையடைவதற்கு அடிப்படையான விசயங்களை பெரியார் இவ்வாறு தெளிபடுத்தியுள்ளதை பெ. மணியரசன் ஊன்றிப் படிக்க வேண்டும்.

தொடரும்

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க