ஜாதி அதனினும் கொடிது

‘ஜாதிக்கு எதிராக பேசாதே, ஜாதிக் கொடுமைகளை கண்டு கொள்ளாதே, ஜாதிரீதியான வன்கொடுமைகளை காதால் கேட்காதே’ –  காந்தியின் ‘தத்து’வத்தின் மூலமாக காந்தியின் குரங்குகளை இப்படித்தான் புரிந்து கொள்ளமுடிகிறது.

காந்தியின் குரங்குகளைப் போல்தான் பல ‘முற்போக்காளர்களும்’ நடந்து கொள்கிறார்கள்.

‘ஜாதி அதனினும் கொடிது’ என்கிற இந்தக் கட்டுரையை தோழர் சாகுல் அமீதை ஆசிரியராக கொண்டு மாதமிருமுறை வெளிவருகிற ‘தமிழ் முழக்கம் வெல்லும்’ இதழுக்காக அதன் பொறுப்பாசிரியர் இனியத் தோழர் அன்புத்தென்னரசு கேட்டுக் கொண்டதற்காக எழுதியது.

***

தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பெயர்களில் இருந்து அவர்கள் பயன்படுத்துகிற வார்த்தைகள் வரை எந்த ஒரு மரியாதைக்குரிய அடையாளங்களையும் பயன்படுத்தக்கூடாது; எல்லாவகையிலும் தங்களை இழிவானவர்களாக அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டும்; என்று இந்து மதமும் அதன் உடன்பிறப்பான ஜாதியும் அவர்களை இப்படி அடக்கி அவமானப்படுத்தி வைத்திருந்தது.

‘அமாவாசை, பாவாடை, மண்ணாங்கட்டி’ இப்படிப்பட்ட பெயர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பெயர்களாகவே பயன்படுத்தப்பட்டது.

பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்காரர்கள், ஒருவரை ஒருவர் சந்திந்துக்கொள்ளும்போதும் பரஸ்பரம் மரியாதை செய்து கொள்ளும் முகமாக, ‘நமஸ்காரம்’ என்று அழைத்துக்கொண்டதும்,

தாழ்த்தப்பட்ட மக்கள், ஆதிக்க ஜாதிக்காரர்களை பார்க்கும்போது துண்டை இடுப்பில் கட்டி அல்லது கக்கத்தில் வைத்து பணிந்து அடிமைத் தனத்தை வெளிபடுத்தும் வார்த்தையாக, ‘கும்புடுறேன் சாமி’ என்கிற வார்த்தை பணிவுக்காக பயன்படுத்தப்பட்டது.

இந்த மோசமான சூழலில், இடுப்பில் இருந்த துண்டை உதறி தோளில் போட்டு,  ‘கும்புடுறேன் சாமி‘ என்கிற அடிமைத் தமிழையும் ‘நமஸ்காரம்’ என்கிற பார்ப்பன ஆதிக்க சமஸ்கிருதத்தையும் ஒழித்து, ‘வணக்கம்’ என்கிற கலகச் சொல்லை, சுயமரியாதை மிக்கச் சொல்லை அறிமுகப் படுத்தியது பெரியாரின் சுயமரியாதை இயக்கம்.

(தாழ்த்தப்பட்ட மக்கள், நாடார்கள், இசைவேளாளர்கள், நாவிதர்கள் தோளில் துண்டுபோட்டு ஆதிக்கஜாதிக்காரர்களுக்கு முன் கம்பீரமாக நிற்கும் போராட்டத்தை பெரியார் இயக்கம்தான் நடத்தியது. தோளில் துண்டுபோடுவதை சுயமரியாதையின் அடையாளமாக, ஆதிக்க ஜாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குறியீடாக பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் அதுவே திராவிட இயக்க அரசியல் தலைவர்களின் பழக்கமாகவும் மாறியது. அதனால்தான் பார்ப்பன பத்திரிகைகளும், பெரியார் இயக்க எதிர்ப்பாளர்களும் ‘தோளில் துண்டுபோடுகிற கலாச்சாரம்’ என்று அதை கேலி செய்கிறார்கள்.)

பெரியாரைவிட மிக சிறந்த மொழி அறிஞர்கள் எல்லாம் தனித்தமிழ் இயக்கம் நடத்தி, சமஸ்கிருத்திற்கு மாற்றாக பொதுப்புழக்கத்திற்கு தனித்தமிழ் சொற்களை கொண்டுவர முயற்சித்தார்கள்; ஆனாலும் அவர்கள் தோல்வியடைந்தார்கள். பெரியார்தான் வெற்றி பெற்றார்.

காரணம், தமிழ் அறிஞர்களின் நோக்கம் தமிழ் வளர்ச்சி. பெரியாரின் நோக்கம் தமிழனி்ன் வளர்ச்சி.

‘ஜாதிகள் ஒழியாத வரை அல்லது ஜாதி இழிவுகளிலிருந்து தமிழன் வெளிவராத வரை அவனுக்கு விடிவில்லை.’ என்ற உண்மையை பெரியார் தெளிவாக உணர்ந்திருந்தார். அதன் காரணத்தால்தான் காங்கிரசில் இருந்து வெளிவந்து தனி இயக்கம் கண்டார். நாட்டு விடுதலைக்காக பிரிட்டிஷ் அரசை எதிர்த்து தீவிரமாக போராடிய பெரியார்; அதைவிட முக்கியம் ஜாதி ஆதி்க்கத்தை, ஜாதியை, அதை பாதுகாக்கும் இந்து மதத்தையும் காங்கிரசையும் எதிர்ப்பது என முடிவு செய்து தன் இறுதி மூச்சுவரை அதற்காகவே உழைத்தார். அதன் பயனை சமூகம் அனுபவிக்கிறது.

***

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதைவிட, இந்திய பெருமுதலாளிகளை எதிர்த்துபோராடுவதைவிட இன்னும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கும் ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவதைவிட ஜாதியை, தீண்டாமையை எதிர்த்துபோராடுவது முக்கியமானது, தீவிரமானது என்று டாக்டர் அம்பேத்கர் ஏன் முடிவு செய்தார்?

‘அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்; அதனால்தான் அவர் அதை தீவிரமாக செய்தார்’ என்று, மிக மேம்போக்காக, சாதாரணமாக கருத்து சொல்பவர்கள்தான் அதிகம்.

இப்படி சொல்வது இரண்டுவகையில் மிகத் தவறானது. ஆபத்தானது.

1. அம்பேத்கர் வருவதற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனித்த பிரச்சினை இல்லை. அம்பேத்கர் தான் அதை பெரிதுபடுத்தினார் என்கிற வரலாற்று மோசடியாக அது பதிவாகும்.

2. அம்பேத்கரின் ஆய்வை, நேர்மையை, உலகம் வியக்கும் அவரின் அறிவை குறைத்து மதிப்பிடுவதாகவும் ஆகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்து சமூக அமைப்பில் தங்களுக்குள் எந்த ‘கொடுக்கல், வாங்கல்’ என்கிற உறவுகளை செய்து கொள்ளாத தங்களுக்குள் எந்தவகையிலும் ஒற்றுமையாக இல்லாத, தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத எல்லா ஜாதிக்காரர்களிடமும் இருக்கிற ஓரே ஒற்றுமை தாழ்த்தப்பட்ட மக்கள்மீது வன்முறையை செலுத்துவதிலும், தீண்டாமையை கடைப்பிடிப்பதிலும்தான்.

மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து, இன்றைய ‘ஜனநாயக’ காலம் வரை ‘மாற்றங்களை’ எல்லாம் ஏமாற்றி ‘கம்பீரமாக’ நடைபோடும் ஒரே மோசடி ஜாதியும் தீண்டாமையும்தான். இந்த விவகாரத்தில் இந்து சமூகம் தனக்குள் செய்து கொண்ட ஒரே மாற்றம், ஜாதி என்னும் சதிக்காக கிறிஸ்த்துவத்தோடு கைகோர்த்துக்கொண்டது அல்லது கிறிஸ்துவம் ஜாதியோடு கைகோர்த்துக் கொண்டது மட்டும்தான்.

ஆக, டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததினால் தீண்டாமையின் கொடுமையை தன் அனுபவத்தில் உணர்ந்திருந்தார் என்பது உண்மைதான். அதனால் மட்டுமே அந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் தந்தார் என்பது உண்மையில்லை. ‘தீண்டமை’ அப்படி ஒரு தீவிர பிரச்சினையாக இருந்தது என்பதினால்தான் அதற்கு எதிராக தீவிரமாக இயங்கினார்.

அவர் தாழ்த்தப்பட்டவராக இல்லாமல் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார். பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்காக  தன் அமைச்சர் பதவியை உதறி தள்ளியவர்தான் அண்ணல் அம்பேத்கர். அதன் அடிப்படையில்தான் தீண்டாமைக்கு எதிராக தீவிரமாக இயங்கினார்.

அண்ணல் அம்பேத்கரிடம் இருந்த இந்த நேர்மை, வேறு எந்த ஆய்வார்களிடமும் இல்லை. இந்தியாவில் இருந்த ஆய்வாளர்கள் மற்றும் இந்தியாவை பற்றி ஆராய்ந்த ஆய்வாளர்கள் யாரும் இந்தியாவின் மிகப் பெரிய மோசடியான ‘தீண்டாமையை’ குறித்து ஆய்வே செய்யவில்லை. அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர்:

“தீண்டாமையின் அடிமூலம் என்ன? இத்துறை முற்றிலும் ஆராயப்படவில்லை. சமூகவியல் ஆராய்ச்சியாளர் எவரும் இதில் எத்தகைய கவனம் செலுத்தவில்லை. சமூகவியலாளர்கள் இவ்வாறு என்றால், இந்தியாவையும் அதன மக்களையும் பற்றி எழுதியுள்ள எழுத்தளார்களும் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறித்து அவர்களது கண்ணோட்டத்தின்படி கண்டித்துவிட்டு அத்துடன் நிறுத்திக் கொண்டனர்” என்று அறிவுத்துறையினரின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார்.

ஜாதிய கொடுமைகளில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களை விடுவிக்க, தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத முற்போக்காளர்கள்தான் தீவிரமாக போராடவேண்டும். அதுபோலவே, தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தை தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத ஜாதிகளிடம்தான் தீவிரப்படுத்தவேண்டும்.

ஏனென்றால், தீண்டாமைக் குறித்து தாழ்த்தப்பட்ட மக்களிடம் பேசுவது மோசடியானது.  தீண்டாமையை பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களிடம் எந்த குற்றமும் இல்லை. அவர்கள் ‘யாரும் எங்களைத் தொடவேண்டாம். எங்களை ஊருக்கு வெளியே ஒதுக்கி வையுங்கள்’ என்று சொல்லவில்லை. ஆக, எவன் தீண்டாமையை கடைப்பிடிக்கிறானோ அவனிடத்தில்தானே அதற்கு எதிராக பேசமுடியும். ஜாதிக்கு எதிராக இப்படி இயங்கினால்தான் ஜாதியை ஒழிக்க முடியும்.

மாறாக, ‘தாழ்த்தப்பட்டவர் பிரச்சினையை தாழ்த்தப்பட்டவர்தான் பேசவேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள் பிரச்சினையை பிற்படுத்தப்பட்டவர்கள்தான் பேசவேண்டும்’ என்றால் தனித்தனி ஜாதி கட்சிகளும், ஜாதி சங்கங்களும், தீவிர ஜாதிய உணர்வும்தான் வளருமே தவிர, இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஜாதியையும், தீண்டாமையையும் ஒழிக்கவே முடியாது.

இப்படி ஜாதிக்கு எதிராக இயங்குவது தனக்கும், தான் சார்ந்த இயக்கத்திற்கும் எதிரானதாக, ஜாதி இந்துக்களின் விரோதத்தை சம்பாதிப்பதாக அமையும். ஆனால், அதுதான் சமூகத்திற்கு நன்மையாக அமையும். அப்படித்தான் தந்தை பெரியார் தனக்கும் தன் இயக்கத்திற்கும் பெருவாரியன மக்களிடம் விரோதம் செய்துகொண்டு, சமூகத்திற்கு நன்மை செய்தார். இதுபோன்ற நெருக்கடியான அரசியல் காலங்களில் அவரை விட்டு விலகிச் சென்றவர்கள் தனக்கு நன்மை செய்து கொண்டு, சமூகத்திற்கு தீமை செய்தார்கள். செய்கிறார்கள்.

***

‘இந்த விவரம் எல்லாம் சரிதான். ஜாதியும் , தீண்டமையும் எப்படி மற்ற ஒடுக்குமுறைகளைவிட மோசமானது?’ என்கிற கேள்வி வரலாம். ‘அது எப்படி?’ என்று அம்பேத்கரிய பார்வையில் புரிந்து கொள்வோம்.

உலகெங்கிலும் கருப்பர்கள் மீது வெள்ளையர்கள் ஆதிக்க செலுத்துவதற்கும் அடிமைகளாக நடத்துவதற்கும் காரணம் நிற வேறுபாடு. அதை கண்களால் உணரமுடிகிறது.

பெண்கள் மீது ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கும் அடிமைகளாக நடத்துவதற்கும் ஆண்-பெண் என்கிற பாலின வேறுபாட்டையும் உணர முடிகிறது.

அதுபோலவே மொழி அல்லது இனரீதியான அடிமைத்தனங்களையும் ஆதிக்கத்தையும் புரிந்துகொள்வதற்கு புறக்காரணங்கள் உணர்த்துகின்றன.

ஏழைகளுக்கு அல்லது தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கிற முதலாளித்துவத்தையும், வர்க்க வேறுபாட்டையும், பொருளாதார வேறுபாடுகளையும் புறக்காரணங்களால் உணர முடிகிறது.

இந்த ஆதிக்கங்களுக்கான அடிப்படை காரணங்கள் அனைத்தையும் நமது ஐம்புலன்களால் உணர முடிகிறது. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கடைப்பிடிக்கிற தீண்டாமைக்கான காரணங்களை கண்களாலோ, காதுகளாலோ நமது ஐம்புலன்களில் ஏதோஒரு உணர்வால்கூட உணர முடியாது. காரணம் அப்படி எதுவும் இல்லை.

ஆனால், இல்லாத ஒன்றுதான் இரண்டாயிரம் ஆண்டுகளாக கோடிக்கணக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை அவமானப்படுத்தி அடிமையாய் வைத்திருக்கிறது.

1935- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி  இந்தியா முழுக்க 425 தாழ்த்தப்பட்ட ஜாதிகளில் உள்ள 6 கோடி மக்கள் இது போன்ற மோசடிகளால் அவமானப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஜாதி இந்துவும் அல்லது தலித் அல்லாதவனும் கோடிக்ககணக்கான தாழ்த்தப்பட்ட மக்களைவிட தன்னை உயர்வானவனாக நினைக்கிறான். நடந்துகொள்கிறான். இப்படி நினைப்பதற்கும் அதன்படி நடந்துகொள்வதற்கும் நீதியாக அல்ல அநீதியாககூட ஒரே ஒரு புறக்காரணத்தை அவனால் சொல்லமுடியாது.

அதனால்தான் ‘ஜாதி பிறக்கும்போதே தீர்மானிக்கப்படுகிறது’ என்கிறது இந்து மதமும் பார்ப்பனியமும். ‘தமிழர் பண்பாடு’ என்று ஒன்றில்லாமல் அவர்அவர் ஜாதிய வழக்கமே தனித்தனி ‘பண்பாடாக’ மாறியிருக்கிறது. ‘தமிழர்’ என்று அணிதிரள்வதற்கும் தடையாக அதுவே முதன்மையான, முழுமையான காரணமாக இருக்கிறது.

புறக்காரணங்களால் உணர முடிகிற வேறுபாட்டின் மூலம் அநீதியாக கடைப்பிடிக்கிற ஆதிக்கமே மோசடியானது. எந்த வகையிலும் நிரூபிக்க முடியாத, ஒப்புக்கு அநீதியான காரணங்கள் கூட சொல்லமுடியாத தீண்டாமையை கடைப்பிடிப்பது மிக மோசடியானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கோடிக்கணக்கான மக்களை இன்றைய ‘நவீன’ உலகிலும் அவமானப்படுத்துகிற, துன்புறுத்துகிற தன்மை ‘மிகுந்த மோசடியானது’, என்கிற வழக்கமான சொற்களை சொல்வதுகூட அதன் தீவீரத்தை உணராத தன்மைதான். இதனால்தான் அண்ணல் அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிராக தீவரமாக போராடினார்.

‘ஜாதி’ என்கிற தீமை, உடன்பிறந்த வியாதியைப்போல், எல்லோருக்கும் பழகிவிட்ட ஒன்றாகவே இருக்கிறது. ‘அது அப்படித்தான் இருக்கும். அது ஒன்னும் புதுசு இல்லியே’ என்கிற பாணியில் அதுசாதாரணமாக பார்க்கப்படுகிறது.

ஜாதிய சமூக அமைப்பில், தீண்டாமைக்கு எதிராக, ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராடாத எந்த அமைப்பும் ‘நம்பிக்கைக்குரிய’ அமைப்பாக இருக்க முடியாது. இந்திய அரசியலில் அண்ணல் அம்பேத்கர்-தந்தை பெரியார் இவர்களின் அரசியல் எழுச்சிக்கு பிறகு இவர்களை புறக்கணித்துவிட்டு எழுந்த எந்த இயக்கமும் வெற்றிபெற்றதில்லை. வெற்றி என்பதை மக்களுக்கான நன்மை என்ற பொருளில் சொல்கிறேன்.

தொடர்புடையவை:

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி
*
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
இன்றுமுதல்….
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
‘அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..?’
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்

தமிழ் தேசியம்:  ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம் =பெரியார் எதிர்ப்பு
*
தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

4 thoughts on “ஜாதி அதனினும் கொடிது

 1. ஷேக் மைதினீன் தங்கம், இங்கே இன்னொரு முஸ்லிம் சகோதரரின் தமிழ் முழக்கம் வெல்லும் – என்ன இதெல்லாம்? அது எப்படி ஓரிறை கொள்கை காரர்களிடம் இறை மறுப்பு கொள்கை காரர்கள் கூட்டணி வைத்துக் கொள்ள முடியும்?

 2. நம் தமிழ் சமூகத்திற்கும், இந்தியச் சமூகத்திற்கும் சாதி என்கின்ற கலகக் குழந்தையை ஈன்று கலகமூட்டி இரத்தம் குடித்தது, இந்து மதம் என்கின்ற ஆரியக் கழிசடை மதம்! இந்து மதத்தின் இருப்பே இந்தக் கேடுகெட்ட சாதிகளின் மேல்தான்! அதனால் தான் இந்த சாதிகளைப் பாதுகாத்துப் பேணுவதில் இந்துமதம் கண்ணும் கருத்துமாக உள்ளது! இந்து மதம் என்ற நச்சு மரம் அழிய வேண்டுமானால் சாதி என்ற அதன் ஆணிவேர் வெட்டப் பட வேண்டும்! இந்து மதமும் சாதிப் படிநிலைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை! இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றுக்கு பாதிப்பு ஏற்படும் போது மற்றொன்றும் தானாகவே ஆட்டம் காணத் தொடங்கிவிடும்!
  கீழே தள்ளிய குதிரை கவனமாகக் குழியும் தோண்டிய கதையாக இந்துமதத்திற்கு மாற்றாக முன்னிறுத்தப்பட்ட கிறித்தவ மதம் வேறோரு அடையாளத்துடன் கூடிய மற்றுமொரு இந்து மதமாகவே இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது, ஆக… சாதிக்கு எதிரான போராட்டத்தில் இந்துமத்தோடு கிறித்தவ மதத்தையும் ஒரு கை பார்க்க வேண்டிய நிலைக்கு நம்மைத் தள்ளியிருக்கிறது இந்து மதம்! இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழ் மக்களூக்கு எதிரான மதங்களின் வரிசையில், சீக்கிரமே இசுலாமும் சேர்ந்து கொள்ளும் ஆபத்தும் காத்திருக்கிறது! இசுலாமிலும் இந்து மதச் சாக்கடையின் வீச்சு சுழன்றடிக்கத் தொடங்கி யிருக்கிறது! சீரழிந்து சின்னாபின்னமான கிறித்தவத்தின் கேடுகெட்ட நிலையை இசுலாம் விரைவில் அடைந்தாலும் ஆச்சரியப் பட முடியாது!
  இந்த நிலையில்… நம் மக்களின் நலனை விரும்பி, சாதியை எதிர்க்கும் முற்போக்காளர்களின் ஆற்றலும், எண்ணிக்கையும் மிகப் பலவீனமான நிலையிலேயே உள்ளது! வெகு மக்களுக்கு எதிரான, சில கடவுளை முன்னிறுத்தும் மோசடிப் பேர்வளிகளின் வலையிலே சிக்குண்டவர்களாகவே பெருவாரியான மக்கள் இருப்பதாலும், முற்போக்காளர்கள் மிகப் பெரிய எதிரியைச் சந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்! இந்த நிலையில் அண்ணல் அம்பேத்கர் கொள்கையையும் தந்தை பெரியாரின் கொள்கையையும் இந்த தலைமுறைக்கும் வரும் தலைமுறைக்கும் பரப்புரை செய்யும் மிகப் பெரிய கடமையும் அதற்கு முதல் நிலையாக நமக்கு உள்ளதென்றாலும் பொருளாதார ஆற்றல் பெரிதாக இல்லை! இருக்கும் ஒரு சிலரும், அதைச் சரிவரச் செய்யாமல், ஏனோ அது ஒரு தேக்க நிலையிலேயே உள்ளது.
  இடுப்பில் கட்டிய துண்டை தோழில் போடவைத்த திராவிட இயக்கத்தைப் பழிவாங்கத் துடிக்கும் பார்ப்பன ஓநாய்களின் மறைமுகத் தாக்குதல் சதியே துண்டுக் கலாச்சாரம் என்று பெயரிட்டு அதை பழிக்க நம்மக்களையேத் தூண்டிவிடும் சதிச் செயலாகும்!
  நண்பர் மதிமாறன் குறிப்பிட்டது போல, நம் அய்ம்புலன்களில் ஒரு புலனுக்கும் எட்டாத இந்த சாதி என்கின்ற அசிங்கத்தை கழுவ வேண்டுமென்றால், பகுத்தறிவு என்ற டெட்டாலைப் பயன்படுத்தினாலே இந்துமதம், கிறித்தவம், இசுலாம் என்ற நச்சுக் கிருமிகளைக் கொன்று சாதி என்ற நோயிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளமுடியும்! சாதியோ, சாதி உணர்வோ எனக்குத் தேவையில்லை என்று கருதும் ஒவ்வொரு நண்பரும் இந்த முடிவுக்கு உடனே வந்தாக வேண்டும்! இதுவே நம் முதல் கடமையும் கூட..! காசிமேடு மன்னாரு.
  நண்பர்களை வரவேற்கிறேன். காசிமேடு மன்னாரு.789வேர்டுபிரஸ்.காம்.

 3. பொங்கள் நல்வாழ்த்துகள் நண்பரே!.

  (பொங்கலுக்கு கிராமத்திற்கு செல்கிறேன் நண்பரே!,. அதனால் இப்போதே வாழ்த்தை சொல்லிவிட்டேன்.)

 4. ஷிவ் க்ஹெற என்னும் எழுத்தாளர் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பாக பேசுவதை
  கவனித்தீர்களா ?

  shive khera is the author of the book “YOU CAN WIN’
  It is a best seller

  முத்துவேல்

Leave a Reply

%d bloggers like this: