டாக்டர் அம்பேத்கர் திரைப்பட வெளியீடு பற்றிய குற்றச்சாட்டும்; தமுஎசவின் விளக்கமும்
அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும் என்ற தலைப்பில் தோழர் மதியவன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மதியவனின் குற்றச்சாட்டை மறுத்து, அதே கட்டுரையில் தமுஎசவின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அ. உமர் பாரூக், பின்னூட்டமாக தனது மறுப்பை எழுதியருந்தார். தோழர்அ. உமர் பாரூக்கின் விளக்கத்திற்கு அல்லது மறுப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவரின் பின்னூட்டத்தை தனி கட்டுரையாக வெளியிடுகிறேன்.
-வே. மதிமாறன்
*
தேனி மாவட்டத்தில் தமுஎச அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிட்டது குறித்து உங்கள் கட்டுரை வாசித்தேன். ஒரு செய்தியை பரபரப்பாக்கி விற்றுத்தீர்க்கும் துப்பறியும் பத்திரிக்கையின் தன்மையோடு அக்கட்டுரையின் உண்மை இருந்தது.
திரையரங்குகள் அதன் முதலாளிகளால் பெரிய நிறுவனங்களிடம் அடகு வைக்கப்பட்ட பிறகு, அம்பேத்கர் படத்தை வெளியிட விரும்பாத மத்திய அரசு, தேசிய திரைப்படக் கழகம் என்று திரையிடலுக்கு எதிரான சூழலை உங்கள் கட்டுரை விவரித்துள்ளது.
தலித் தோழர்களின் இடைவிடாத முயற்சியும் சரியாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒருபுறம் அரசின் விருப்பமின்மை, மறுபுறம் திரையரங்கு தராத முதலாளிகள், இடையில் திரையிட முயன்று தோல்வியைத்தழுவிய தலித் அமைப்புகள் என்ற சூழலில் எப்படி தமுஎச அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிட்டது? கட்டுரையில் தேனி தமுஎச வின் பெரு முயற்சிகள் வெறுமனே புறந்தள்ளப் பட்டிருக்கின்றன.
அரையாண்டுத் தேர்வு காரணமாக அம்பேத்கர் திரையிடலை தள்ளிப்போட்டது என்பது உண்மையிலேயே காமெடிதான். ஏனெனில் நீங்கள் கட்டுரையில் இப்படி தள்ளிப்போட்ட செய்தி தமுஎச விற்கே தெரியாது. படப்பெட்டி திரைப்படக்கழகத்தால் அனுப்ப படாததே தாமதத்திற்கு காரணம்.
டிசம்பரில் குறிக்கப்பட்ட தேதியில் படப்பெட்டி கிடைக்கவில்லை. அதன் பிறகு மார்ச்சில் 1,2,3 தேதிகளில் படப்பெட்டியை வாங்குவதற்கு தமுஎச எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்னவென்பதை கட்டுரையாளர் குறிப்பிடவில்லை. பல அமைப்புகள் பல ஆண்டுகளாக போராடி கிடைக்காத திரையரங்கமும், படப்பெட்டியும் முயற்சியற்று கிடைத்ததாக நீங்கள் நம்புவீர்களாயின் உங்கள் புரிதலுக்கு வாழ்த்துக்கள்.
திரையரங்க உரிமையாளர்கள் அம்பேத்கர் படத்தை வெளியிட மறுத்த பின்பு தேனி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு டிசம்பரில் அனுமதி பெற்றுத்தந்தது. படப்பெட்டி வராததால் அது தள்ளிப்போடப்பட்டது. ( தேசிய திரைப்படக்கழகம் தமிழில் ஒரே ஒரு படப்பெட்டியைத்தான் தயார் செய்து வைத்திருந்தது பற்றி தெரியுமா தோழர்?)
பின்பு தொடர் முயற்சிகளுக்குப் பிறகு மார்ச்சில் 1,2,3 தேதிகளில் மூன்று காட்சிகளுக்கு மட்டுமாக திரைப்படக்கழகம் அனுமதியளித்து தேனிக்கு அனுப்பியது. திரையரங்கில் பல விநியோக நிறுவனங்களால் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த படங்களை நிறுத்திவிட்டு இந்த மூன்று காட்சிகளை திரையிட்டது தமுஎச. தேனியில் அரசு அதிகாரியை வழிமறித்து நடத்தப்பட்ட போராட்டம் நியாயமானது தான். அது நடைபெற்றிருக்க வேண்டிய இடம் அரசு அலுவலகமாக இருந்திருந்தால் போராட்டத்தின் தன்மை மாறியிருக்கும்.
தேனி திரையரங்கில் நடைபெற்ற போராட்டம் ஒரு வழியாக கிழித்தெறியப்பட்ட திரையரங்க பேனரோடு, தலித் அமைப்புக்களின் கொடிகள் திரையரங்க வாசலின் உயரத்தில் வலுக்கட்டாயமாக கட்டப்பட்டு அமைதியாக முடிவுற்றது. மார்ச் 1 அன்று தேனியில் திரையிட்ட முதல் காட்சியிலேயே இந்த சம்பவம் நடந்ததால் பின்பு திரையிடப்பட வேண்டிய போடி, கம்பம் திரையரங்க உரிமையாளர்கள் படம் வேளியிடுவது குறித்து மறுபடி யோசிக்க ஆரம்பித்தனர்.
மறுபடியும் தமுஎசவின் தொடர் முயற்சியில் திட்டமிட்டவாறே திரையிடப்பட்டது. ஒரு வேளை போராட்டத்திற்கு பயந்து இரு திரையரங்க உரிமையாளர்களும் அனுமதி மறுத்திருந்தால் தமுஎச முழு ஆண்டுத்தேர்வுக்கு போய்விட்டதாக தகவல் வெளிவந்திருக்கும். நல்ல வேளை அது நடக்கவில்லை.
போடியில் தலித் தோழர்கள் அரசை எதிர்த்து ஒரு அடையாள போராட்டத்தை நடத்தி விட்டு படம் வெளியிட துணைநின்றனர். கம்பத்தில் தலித் அமைப்புக்களின் சார்பாக தமுஎச நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அம்பேத்கர் படத்தை திரையிடுவதில் உள்ள அனைத்துவிதமான தடைகளை உணர்ந்த தலித் தோழர்கள் தமிழகத்தின் பல ஊர்களில் திரையிட்ட தமுஎசவின் முயற்சிகளை பாராட்டக்கூட வேண்டாம். புரிந்துகொண்டால் போதும்.
கடைசியாக ஒரு தகவல் . . மார்ச் 6 ஆம் தேதி அன்று படப்பெட்டி டெல்லிக்கு அனுப்பப்பட்டு விடும் என்ற தகவல் மார்ச் 3 ஆம் தேதிவரை திரைப்படக்கழகம் தமுஎசவிற்கும் சொல்லவில்லை. தஞ்சாவூரில் நடைபெற்ற தமுஎச வின் மாநிலக்குழுக்கூட்டத்தில் அம்பேத்கர் திரைப்பட பெட்டியை சென்னை திரைப்படக்கழக அலுவலகத்திற்கு திருப்பிக்கொண்டுவரும் முயற்சிகளுக்கான ஆலோசனை நடைபெற்றது. தேசிய திரைப்படக்கழகத்தை கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அம்பேத்கர் திரைப்படத்தை அடர்தகடாக வெளிக்கொண்டு வரும் முயற்சியில் திரைப்படக்கழகத்தோடு தமுஎச பேசி வருகிறது.
நன்றி.
அ.உமர் பாரூக்
மாநிலக்குழு உறுப்பினர்
தமுஎச
கம்பம், தேனி மாவட்டம்.
தொடர்புடையவை:
அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி * ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா? * 60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ… * டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்? * ‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம் * ‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’
கண்டதே காட்சி,,, கொண்டதே கோலம்,,, என்ற நிலையில் தோழர் மதியவனின் கட்டுரை படு காமெடியாக இருக்கிறது. திடீரென்று உள்ளே வந்து வெல்லட்டும் வெல்லட்டும் போட்டுவிட்டு படம் பார்க்கச் சென்றுவிடுவது போன்று அவ்வளவு சுலபமாக அமைந்துவிடவில்லை அம்பேத்கர் திரைப்படத்தை திரையிட தமுஎகச எடுத்துகொண்ட முயற்சிகள்.,,
///
ஓவியா
தமுஎகச
மாவட்ட செயற்குழு
தேனி
“கண்டதே காட்சி… கொண்டதே கோலம்…” புகழ்-தோழர் ஓவியாவிற்கு…
த.மு.எ.ச வின் முயற்சியைப் பற்றியோ அல்லது போராட்டக்குழுவின் போராட்டத்தைப் பற்றிய விமர்சனமாகவோ, எந்தவித விசயமும் இல்லாத தோழர் ஓவியாவின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்றாலும், இந்தப் பின்னூட்டத்திற்கே அவரின் பொறுப்பெல்லாம் போட்டு அசத்தியிருப்பதால். தோழர் ஓவியா எழுத்தாளர் என்ற முறையில் அவருக்கு மதிப்புக் கொடுத்து, அவரின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்கிறேன்.
நமது கட்டுரை படு காமெடியாக இருப்பதாக கூறியிருக்கிறார். அது உண்மைதான்! நமது கட்டுரையின் காமெடி டிராக்கே த.மு.எ.ச தானே.
அம்பேத்கர் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு செல்ல , போராட்டக்குழுவின் போராட்டத்தை” சுலபமானது!” என்று வர்ணித்துள்ள தோழர் ஓவியாவிற்கு, போராட்டத்தின் போது நாங்கெல்லாம் “govt employees ” என்று மண்டையைச் சொறிந்துவிட்டு ,ஓடிப்போன த.மு.எ.ச தோழர்களைத் தெரியவில்லை!
அந்த சிறப்புக் காட்சியின் போது கூட 100 டிக்கெட்டுகளுக்கு மேல் விலைக்கு வாங்கி, அதை இலவசமாக கொடுத்து மக்களைத் திரட்டியதில் போராட்டக் குழுவின் பங்கு என்ன என்பதும் தோழர் ஒவியாவிற்குத் தெரியவில்லை! (மதிப்பிற்குரிய தோழர் தேனி சீருடையானையும் , தோழர் சாமூண்டீஸ்வரியையும் கேட்டால் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.)
குடும்பமாக வந்த மக்களைத் திரையரங்கிற்குள் அனுப்பிவிட்டு, இளைஞர்களைத் திரட்டி வருவாய்த்துறை அதிகாரியை போராட்டக் குழு முற்றுகையிட்டபோது கூட தோழர் ஓவியா திரையரங்கைவிட்டு எட்டிப் பார்க்கவில்லை என்றால், வருவாய்த்துறை அதிகாரி திருப்பி அனுப்பப்பட்டதும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
இப்படி எதுவுமே தெரியாமல், பேப்பர் பேனாவுடன் திரையரங்கிற்கு உள்ளேயே குடிகொண்டிருந்த தோழர் ஓவியாவிற்கு, போராட்டக் குழு திடீரென வந்ததாகத்தான் தெரிந்திருக்கும். அப்பொழுது, “தோழர் ஓவியா கண்டதே காட்சி… போராட்டக் குழு கொண்டதே கோலம்..”. என அறியாமையில் சிலவரிகளை வடித்திருக்கலாம் தவறில்லை (எழுத்தாளர்கள் இல்லையா…?). அதற்காகப் போராட்டக் குழுவின் போராட்டங்களை கட்டுரையில் விளக்கிய பிறகும், சுலபமாக , “வெல்லட்டும் வெல்லட்டும் போட்டுவிட்டு படம்பார்க்கச் சென்றுவிட்டதாக” தோழர் ஓவியா கூறியிருப்பது, த.மு.எ.ச நுணலும் என்பதைத்தான் காட்டுகிறது.
இருந்தாலும் தோழர் ஓவியா ஒருவர்தான், படத்தை வெளியிட்டதாகக் கூறாமல், “திரையிட்டதாக” எழுதியிருக்கிறார். அந்தமட்டில் தோழர் ஓவியாயாவின் தெளிவான இந்த ஒருவார்த்தை ஒட்டுமொத்த த.மு.எ.ச வே பயன்படுத்தாத திரு வார்த்தை! நன்றி தோழர்.
-தோழமையுடன் மதியவன்
http://mathimaran.wordpress.com/2011/03/30/article-384/