அழகான பொண்டாட்டியும் அரசியல் பிரச்சினைகளும்
சிலரும் சில அமைப்புகளும் அணு உலை எதிர்ப்பு, சுற்றுச் சூழல் பிரச்சினையை மட்டும் பேசுகிறார்கள். இன்னும் சிலரோ இலங்கை பிரச்சினையைத் தவிர வேறு எதை குறித்தும் பேச மறுக்கிறார்கள் பெரியார், அம்பேத்கர் போன்ற ஒப்பற்ற தலைவர்களைகூட விமர்ச்சிக்கிறார்களே ஏன்?
-நீ. கதிர்வேலு
‘ஜாதி கொடுமை, பெண்கள் மீதான வன்முறை, கொலை, கொள்ளை, மோசடி இவை எல்லாத்தையும் விட உலகத்திலேயே மிக கொடுமையானது, கேவலமானது மிகப் பெரிய தப்பு; அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசை படறதாங்க… அந்த தப்ப செய்றவனை மன்னிக்கவே கூடாது’
என்று ஒருவன் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தான் என்றால், அவனுக்கு ரொம்ப அழகான பொண்டாட்டி இருக்கான்னு அர்த்தம்.
அவனுடைய இந்த நல்லொழுக்க போதனை தன் சொந்த ‘பாதுகாப்பி’ லிருந்தே எழுகிறது…
அதுபோல், ‘உலகத்திலேயே மிக கொடுமையானது குழந்தை தொழிலாளர் முறைதாங்க..’என்பவர் அதற்காக நிதி பெறுபவராக இருப்பார். ‘அத விட சுற்றுச் சூழல் சீர்கேடுதாங்க மிகக் கொடுமையானது’ என்பவரோ டாலர்களின் கவனிப்பில் சேவை செய்பவராக இருப்பார். இயற்கை வேளாண்மையை மட்டுமே ஒருவர் பொழுதன்னைக்கும் பேசுறாரு என்றால், அவருக்கு பொழப்பே அதனால்தான்.
இதுபோலவே இலங்கை பிரச்சினையை ஒன்றை தவிர வேறு எதையும் பேசாதவர்கள்; ஜாதி எதிர்ப்பு உட்பட பல பிரச்சினைகளையும் பேசுபவர்களை இழிவாக விமர்சிப்பவர்கள்; வெளிநாடு வாழ் மிக குறிப்பாக அமெரிக்கா, கனடா, அய்ரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற பணக்கார நாடுகளில் வாழும் தமிழர்களின் அன்பையும் அரவணைப்பையும் பெற்றவர்களாகவும் பெறத் துடிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
அப்படி வெளிநாட்டில் இருந்து ‘உதவி’ செய்கிறவர்களுக்கு பெரியாரை பிடிக்கவில்லை என்றால், பெரியாரை தமிழன விரோதி என்று சொல்லவும் தயங்க மாட்டார்கள்.
இதுபோன்ற அணுகுமுறையால் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், சில அமைப்புகள்;
பிரபலமானார்கள், தலைவரானார்கள், தலைவர்கள் பொங்கி எழுந்தார்கள், காற்றில் கத்தி சுத்தினார்கள்;
ஈழ மக்களோ படுகொலை செய்யப்பட்டார்கள்.
இவ்வளவு தமிழர்களை பலிகொடுத்த பிறகும் கூட பக்கம் பக்கமாக வசனம் பேசுகிற பந்தா அரசியல் ஓய்த பாடில்லை.
விடுதலைப் புலிகள் மீதும் ஈழ மக்கள் மீதும் இலங்கை அரசு கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்கு முன், தமிழனின் வீரம் பற்றி சவடாலாக பேசியவர்கள், ஈழ மக்களின் படுகொலைக்கு பின் தங்கள் பேச்சை ஒப்பாரியாக்கி புலம்புகிறார்கள்.
தமிழக தமிழர்களிடம் அப்போதும் இவர்கள் அரசியல் பேசவில்லை இப்போதும் அரசியல் பேசுவதில்லை. ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழக தமிழர்களிடம் அரசியல் அணுகுமுறையை கையாண்டிருந்தால் தமிழக தமிழர்கள் ஈழத் தமி்ழர்களின் படுகொலைகளை தடுத்து நிறுத்துகிற அளவிற்கு வீதிகளில் போராடி இருப்பார்கள்.
வெறும் உணர்வு ரீதியான சவடால் பேச்சுகளின் காரணமாக, இவர்கள் பேசிய பிரச்சினைகள் பின்னுக்குப் போய், பேசியவர்கள்தான் பிரபலமானர்கள்.
ஆக, மேற்சொன்ன எல்லா பிரச்சினைகளும் மிக முக்கியமானதுதான், ஆனால் தனி தனியான பிரச்சினைகள் அல்ல, ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
ஒட்டுமொத்த சமூக மாற்ற அரசியல் கண்ணோட்டத்தோடு, மக்களை அரசியல் படுத்தி; இந்த பிரச்சினைகளை அணுகினால்தான்; இவைகளில் மாற்றம் ஏற்படுத்த முடியும். அப்படித்தான் இதுவரை நடந்த மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், பெரியார் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டமும், குலக்கல்வி எதிர்ப்பு போராட்டமும் அப்படி நிகழ்த்தப்பட்டவையே.
மாறாக தனி தனி பிரச்சனையாக தொடர்பற்று பார்த்தால், அப்படிப் பார்ப்பவர்கள் வசதியாவார்கள், பிரபலமாவார்கள். எடுத்துக் கொண்ட பிரச்சினை முன்பைவிட தீவிரமாக விஸ்வரூபம் கொண்டு நிற்கும். போராட்டம் மட்டுமல்ல, மக்களும் தோற்றுப் போவார்கள்.
தொடர்புடையவை:
‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்
இலங்கையில் விழா;மனோவின் பொறுப்பும்;பாரதி பக்தர்களின் கள்ளத்தனமும் கோமாளித்தனமும்
ராஜபக்சேவை தடுத்து திருப்பிய லண்டன் வாழ் தழிர்கள்.. ஆனால் நம்மால்..?
‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?
மிகச் சரியான படப்பிடிப்பு. ஈழத்தமிழர்,விடுதலைப்புலிகள் என்று வாயாடியவர்கள் தமக்கென ஒரு கும்பலைச் சேர்த்துக்கொண்டதுதான் மிச்சம்.எள்ளளவும் இவர்களால் ஈழத்தமிழினத்துக்குப் பயன் இல்லை.ஆனால், புலம் பெயர்ந்த அப்பாவி ஈழத்தமிழர்களோ இவர்களை நம்புவதை எண்ணி வருந்தாமல் இருக்கமுடியவில்லை.இன்னொரு பக்கம் ஒரு அய்யம் என்னவென்றால்,ஈழத்தமிழர்கள் தமிழகத்தமிழர்களைவிட சினிமா மோகத்தால் ஈர்க்கப்படுகிறவர்களாவும்,ஹீரோயிசத்தை நம்புகிறவர்களாகவும் இருக்கிறார்களோ என்ற எண்ணத்தோன்றுகிறது.அவர்களுக்கு எதார்த்த அரசியல் அறிவு போதவில்லை.நம்மை விட பேச்சுக் கச்சேரிப் பிரியர்களாகவே உள்ளனர்.அதனால்தான் சீமான் போன்றவர்களை அவர்கள் நம்புகிற இழிநிலை உள்ளது.தமிழன் உணர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி,அறிவை மானத்தை முன்னுக்கு வைத்துப் பார்க்காதவரை உருப்படுவது கடினம்தான்.
இந்தபந்தா அரசியல் ஓய்த பாடும்மில்லை. இந்த பந்தாவுக்கு அரசியலுக்கு மயங்காதவர்களும் இல்லை.
The first para of this answer- LInes by Periyar in “PEN ENN ADIMAIANNAL”