தமிழகரசின் பள்ளி நேர மாற்றம்; மாணவர்களை மயக்கமடைய செய்யும்

14

சென்னை பெருங்குடி அருகே கந்தன்சாவடியில் அரசு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் பலியானார்கள். இதை பொதுநல வழக்காக எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன் காரணமாக தமிழக அரசு நேற்று உயர்நீதி மன்றத்தில், ‘பள்ளி துவங்கும் நேரம் காலை 7.30 மணிக்கு மாற்றப்படும்; வரும் ஜூன் மாதம் துவங்கி அடுத்த கல்வியாண்டு முதல் அமலாகும் என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு, கூட்ட நெரிசலை குறைப்பதற்கும், மாணவர்களைத் தவிர ‘மற்றவர்’ நிம்மதியாக பயணம் செய்வதற்கும் ஏற்ற வகையில் இருக்கிறது.

அதாவது ‘மாணவர்களுக்கு தண்டனை.’ என்கிற பாணியில் அமைந்திருக்கிறது. பஸ்சில் நசுங்கி சாகும் மாணவர்களை பாதுக்காக்க வந்த அரசு, பள்ளிகளுக்கு செல்வதையே ஒரு தண்டனைபோல் அறிவித்திருக்கிறது.

இந்த நேர மாற்றம், அரசு பஸ்சில் வருகிற குழந்தைகளை கணக்கில் வைத்துதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 15 லிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வருகிற குழந்தைகள்தான் சென்னை நகரத்திற்குள் உள்ள பள்ளிகளுக்கு பஸ்சில் வருகிறார்கள். காரணம், சென்னை நகரத்தின் செயற்கை வாடகை உயர்வின் காரணமாக நகரத்திலிருந்து தொழிலாளர்களும், நடுத்தர மக்களும் அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

சென்னையில் சொந்த வீடு வைத்திருந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர், ‘நல்ல விலைக்கு கேட்டாங்க கொடுத்துட்டேன்’ என்று சென்னையின் புறநகர் பகுதியில் குடியேறிவிட்டார்கள்.

ஆகவே, நீண்ட தூரத்திலிருந்து பள்ளிக்கு வருகிற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

காலை 8.30 மற்றும் 9.00 மணி என்று இப்போது உள்ள பள்ளியின் நேரத்திற்கே, தொலைவில் இருந்து வரும் மாணவர்கள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வரும் தொலைதூர மாணவர்கள், வீட்டிலிருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட வேண்டியிருக்கிறது.

அதனால் அவர்கள் காலை உணவை 6.00 மணியிலிருந்து 6.15 முன் முடிக்க வேண்டியதாகிறது. இப்போது காலை 7-30 மணிக்கு என்று மாற்றியமைத்தால் குழந்தைகள் காலை உணவையே சாப்பிட முடியாத நிலை ஏற்படும்.

குழந்தைகளுக்கு இரண்டு வேளை உணவை தயாரிக்க தாய்மார்கள் காலை 4 மணிக்கும் முன்னதாகவே எழுந்திருக்க வேண்டும். ‘தன் குழந்தை சாப்பிட்டால் போதும்’ என்ற எண்ணம் உள்ளவர்களான தாய்மர்கள் அதை ஒரு சுமையாக கருதமாட்டார்கள் என்றாலும்; குழந்தைகளால் காலை 5.15 மணிக்கெல்லாம் எப்படி உணவை சாப்பிட இயலும்?

அதனால், காலை – மதியம் என்று இரண்டு வேளைக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வரவேண்டிய பாரமும் ஏற்படும். காலை உணவை நிம்மதியாக பள்ளியில் வைத்து சாப்பிடடவும் முடியாது. அதற்கான நேரமும் கிடைக்காது. அது ஏதோ தடை செய்யப்பட்ட, ‘ரகசிய உணவு’ என்கிற முறையில்தான் அவர்கள் அதை மறைத்து வைத்து சாப்பி வேண்டிவரும். அதனால் குழந்தைகள் காலை உணவை தவிர்த்துவிடுவார்கள்.

காலை உணவை மாணவர்கள் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால், அவர்கள் உடல் பலவீனமடைய கூடும்.

ஏனென்றால், மூன்று வேளை உணவுகளில் காலை உணவே மிக முக்கியமானது. இரவு உண்ட உணவிற்கும் காலை உண்பதற்கும் நேர இடைவெளி அதிகம்.

வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு மிக அவசியம். காலை உணவை சாப்பிட்டால்தான், நாள் முழுவதும் சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பெரியவர்களுக்கே இந்த அறிவுரையை மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படியானல் குழந்தைகளின் நிலை?

இனி காலை 7.30 மணிக்கு பள்ளி; என்கிற இந்த நேரமாற்றம் பள்ளிக்குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் அறிவிற்கும் கேடு விளைவிக்கும். அவர்களிடம் கவனிப்பில் குறைபாடு, பள்ளியின் பசியால் மயக்கம் போன்றவை சகஜமாக நேரிடும்.

நெரிசலை தவிர்ப்பதற்கும், மாணவர்களை காப்பதற்கும் இதுவல்ல தீர்வு? இதுகுறித்து முன்பே நான் எழுதிய கட்டுரைகள்…

பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்

வாகன விபத்து-நெரிசல்: அரசுப் பள்ளி மாணவர்களா audi car மாணவர்களா?

ஆகையால், கல்வியாளர்களும், சமூக அக்கறை கொண்டவர்களும், பெற்றோர்களும் தமிழக அரசின் பள்ளி நேர மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

அதற்கு முன் உயர்நீதி மன்றம் தமிழக அரசின் இந்த பரிந்துரையை தள்ளுபடி செய்து அறிவித்தால், அது குழந்தைகளின் நலத்திற்கும், எதிர்கால சமூகத்திற்கும் செய்கிற பெரிய நன்மையைாக அமையும்.

தொடர்புடையவை:

பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்

வாகன விபத்து-நெரிசல்: அரசுப் பள்ளி மாணவர்களா audi car மாணவர்களா?

9 thoughts on “தமிழகரசின் பள்ளி நேர மாற்றம்; மாணவர்களை மயக்கமடைய செய்யும்

 1. 9 லிருந்து 10 மணிக்குள் 20 நிமிட சிறிய உணவு இடைவேளை விடலாம்.

 2. நீங்கள் பெரிதும் மதிக்கும் தமிழர் தலைவர் வீரமணி இந்த அறிவிப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டு தமிழ் நாட்டு அரசை பாராட்டுகிறார்.இதற் கு உங்கள் பதில் ?

  பள்ளிகள் காலை 7.30 மணிக்கும், கல்லூரிகள் 8 மணிக்குத் தொடங்கவும் ஆணையிட அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

  இது உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டிய அவசர அவசியத் திட்டமாகும். இதை வரவேற்கிறோம்; கூட்ட நெரிசல் குறைந்து மாணவர்கள் பத்திரமாகப் பயணம் செய்யும் வாய்ப்பு ஏற்படுமே!

  இதே ஆட்சி (அ.தி.மு.க.) முன்பிருந்தபோது, இப்படி ஒரு முறை இருந்ததை நாடாளுமன்ற தேர்தல்கள் முடிவுக்களுக்குப் பின் ஏனோ, மாற்றி அமைத்தனர்! அப்போதே நாம் தேவையற்ற மாற்றம்; பழையபடி அதிகாலையில் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்று எழுதினோம்.

  பெரியார் கல்வி நிறுவனங்களில்….

  பெரியார் கல்வி நிறுவனங்கள் மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை பல நடைபெறுகின்றன. அவை காலை 7.30 மணிக்கே (திருச்சி, தஞ்சை மற்றும் இதர ஊர்களில்) துவங்கியே நடைபெற்று வந்தன – வருகின்றன; சுமார் 30 ஆண்டுகளாக மதியம் 2 மணி 3 மணி அளவிலேயே முடிந்து, கல்லூரிகளில் வேறு கூடுதல் படிப்பு படிக்கவும் அதன் மூலம் மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.

  மேலும் அதிகாலை வேளைகளில் மாணவர்களின் ஈர்ப்புத் திறன் மிகவும் பசுமையாக (Fresh) இருந்து வெயில் ஏற ஏற வரைகோடு (Graph) கீழ் நோக்கிய போவது யதார்த்தனமான உண்மையே!

  இதில் வசதிக் குறைவு அதிகம் ஏதும் இல்லை. பழக்கம் – கால நிர்வாகம் (Time Management) செய்து பழக்கமற்ற சிலருக்கு சங்கடம் போல், பழகும் வரைக்கும் தெரியும். பிறகு சரியாகப் போகும்.

  வட இந்தியாவிலும், வெளி நாடுகளிலும்

  வெளிநாடுகளிலும் சரி, வட நாட்டிலும் சரி, கடுங்குளிர் இருந்தும்கூட – பிள்ளைகள் 7 மணிக்கெல்லாம் அவர்கள் பள்ளிப் பேருந்து களில் ஏறிச் சென்று கல்வி கற்க முயலுவது கண்கூடு. நம் நாடு பெரிதும் வெப்ப நாடு. இதில் விடியற்காலை – வைகறைத்துயில் எழுந்து, கடமை முடிப்பதே அருமையான முன்னேற்றத் திற்கு வழி வகுக்கும் சிறப்பான முறையாகும்.

 3. அருமையான, அற்புதமான, மிக ஆழமான கட்டுரை. இந்தக் கருத்து அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் செல்லட்டும். பள்ளி நேரத்தை 10.00-4.00 என மாற்றுவதே மிகச் சிறந்தது என்பது என் கருத்து.

 4. தற்போதும் பெரும்பாலான தொழிற் படிப்பு கல்வி நிலையங்கள்(கல்லூரி நிலையில்) 7.30 – 8.00 தொடக்க நேர அட்டவணையினையே பின்பற்றுகின்றன. மற்றும் உற்பத்தி வகை தொழிற்கூடங்களும் 3 ஷிப்ட் முறைக்கு ஏதுவாக 7.15 – 15.15 – 23.15 – 7.15 நேர முறையினை பின்பற்றுகின்றன.

  இரண்டு வகை நேர அட்டவணைகளிலும் சிரமங்கள் இருந்தாலும், தற்போதய பள்ளி நேர அட்டவணை ஓரளவிற்கு கூடுதல் சிறந்தது.

  காலை 7.30 – 8.00 மணி என்பவை பெரும்பாலும் உறைவிடப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பொருந்தி வரும். அல்லது பள்ளிப்பேருந்து வசதி கொண்ட நகரியங்கள் போன்றவற்றில் ஒத்துவரும்.
  தில்லி போன்ற இடங்களிலும் இரு வேறு வகை நேர அட்டவணை ( பருவ கால நிலை மாற்றத்திற்கேற்ப ) கடைபிடிக்கப்படுகிறது.

  7.30 – 8.00 நேரமானது மேலும் சில மாணவர்களுக்கு அதிகாலை கிரகிப்பு குறைபாடு, காலை குளிர் தாங்குதிறன் குறை (தமிழ்நாட்டு தட்ப வெப்பத்துடன் மட்டும் ஒப்பு நோக்கவும்), இரவு நேர படிப்பாளிகள் என பல வகை உள்ளனர். அது போன்ற வகையினருக்கு மிகுந்த சிக்கலை அளிக்ககூடிய நடைமுறை ஆகும்.

  தற்போதய நேர அட்டவணையானது இரு வகையினருக்கும் பொதுவாக சமரசமான வகையில் உள்ளது.

  மற்ற ஒரு சிக்கல், பெற்றோர் இருவரும் வேலைக்குப்போகும் குடும்பங்களில் உள்ள சிறார்கள் மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாவார்கள்.

 5. சொல்லும் தீர்வு நல்ல தீர்வுதான். செயல்படுத்தமாட்டார்கள் ஆட்சியாளர்கள

 6. இருந்தாலும் நீங்கள் அநியாயத்துக்கு ஆதங்கப்படுகிறீர்கள் போங்கள். இப்போது தமிழக அரசு புதிதாக அமல்படுத்தஉள்ள பள்ளி நேரம் உண்மையில் பள்ளி மாணவ மாணவியருக்கு பலவிதங்களில் பயனளிக்ககுடியதே.
  முதலில் பள்ளி செல்வோருக்கு நெரிசல் இல்லாத பயணம் சாத்தியமாகும்.மேலும் பள்ளிசெல்வோர் அதிகாலையிலேயே எழும் நல்ல பழக்கத்திற்கு பழக்கமாவார்கள்.அதிகாலையில் நேரத்தில் எழ வேண்டுமாவதால் இரவும் நேரத்திலேயே படுக்கைக்கு செல்வார்கள்.இதனால் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் குறைந்து இருக்கும் நேரத்தை படிப்பதில் செலவிடுவார்கள்.இவர்களுக்காக இவர்களது பெற்றோரும் இந்த நல்ல பழக்கத்திற்கு ஆட்படுவார்கள்.
  மேலும் காலை உணவை நேரத்திலேயே உண்பதால் இரவு உணவிற்கும் காலை உணவிற்கும் இடைப்பட்ட நேரம் குறையும்.
  அரசின் தற்போதைய புதிய நடைமுறையில் பள்ளிக்கு வரும் நேரத்தை காலை 7:30ஆகவும் வகுப்புகள் துவங்கும் நேரம் 8:00 ஆகவும் மாற்றலாம்.இதனால் வீட்டில் காலை உணவு உண்ணாதவர்கள் இந்த இடைவெளியில் உணவு உண்ணலாம்.(ரகசிய உணவு பிரச்சனையை இதன் முலம் தவிர்க்கமுடியும்).
  ஆகையால், கல்வியாளர்களும், சமூக அக்கறை கொண்டவர்களும், பெற்றோர்களும் தமிழக அரசின் பள்ளி நேர மாற்றத்திற்கு ஒத்துழைப்பு தெரிவிக்க வேண்டும்.

 7. பள்ளியில் படிப்பவர்களுக்காக கூடுதலாக பஸ் வசதி செய்வதை விட்டுவிட்டு பள்ளி துவங்கும் நேரத்தை மாற்றினால் எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடுமா?

  வாயில் இருக்கும் பல்லில் வலி வந்தால் வேறு வழியாகவா சாப்பிடமுடியும்?

Leave a Reply

%d bloggers like this: