விரைவில்; ஆதிக்கங்களுக்கு எதிரான ‘அபசகுனம்’

mathi

 ‘ஆச்சாரம்’ என்பது சுபசகுனம்.

சுபசகுனத்தின் குறியீடுகள் எல்லாமே ஆதிக்கத்தை, ஆதிக்க ஜாதிகளின் நலனை குறிப்பவை மட்டுமல்ல; பெண்களை, எளிய உழைக்கும் மக்களின் பண்பாட்டை கேலி செய்கிறது. அவமானப்படுத்துகிறது.

‘அபசகுனம்’ இதன் குறியிடுகளே அதற்கு சாட்சி.

சகுனங்களால் கட்டமைக்கப்பட்ட சமூக அமைப்பில், பொது வெளியில் இயல்பான கலந்துரையாடலை ஒருவரால் ஒரு போதும் நடத்திவிட முடியாது. பேச்சு சுதந்திரத்தைக் கூட, சகுனங்களே தன் காட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

ஒரு விசயத்தை செய்வதற்கு முன் அதன் சாத்தியம், சாத்தியமின்மை இரண்டையும் பேசிதான் முடிவு செய்ய வேண்டும். அதுதான் அறிவுடைமை. ஆனால், இங்கு சாத்தியமின்மையை பற்றி பேசுவதோ அபசகுனம். அப்படி எத்தனையோ சிறப்பான விசயங்கள் முன் கூட்டி பேசி முடிவெடுக்காததால், அற்ப காரணங்களாலேயே முடிவுக்கு வந்து விடுகிறது. அதாங்க வௌங்காம போது. அதற்கு முழு பொறுப்பும் சுபசகுனத்தையே சேரும்.

‘வாய வைக்காதீங்க’ ‘அபசகுனமா பேசாதீங்க’ ‘வாய வைச்சிக்கிட்டு சும்மா இருங்க’ ‘வாய கழுவுங்க’ ‘போன காரியம் உருப்பட்டா மாதிரிதான்’ இது போன்ற வாக்கியங்கள் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான வெள்ளைக்காரனின் சட்டத்தை விட கொடுமையானது.

‘சகுனம்’ இதை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள், நம்புகிறவர்களை மட்டுமல்ல; அதற்கு எதிரான கண்ணோட்டம் கொண்டவர்களையும் அதை பொருட்படுத்தாதவர்களையும் கூட கட்டுப்படுத்துகிறது; கட்டுப்படுத்துகிறார்கள் சுபசகுன வாதிகள்.

‘என்ன இது அற்பத்தனமா இருக்கு..’ என்று கேட்டால், உடனே அறிவியல், உளவியல் விளக்கம் கொடுத்து நியாயப்படுத்துகிற ‘விஞ்ஞானிகளும்’ இருக்கிறார்கள்.

அதாவது அதுக்குப் பேரு பாசிட்டிவ் எனர்ஜியாம்.

‘நல்ல’ காரியத்திற்கு போகும்போது.. பொணம் எதிர வந்தா, பாசிட்டிவ் எனர்ஜி. பொம்பள குறுக்க வந்தா நெகட்டிவ் எனர்ஜியா?

பிணத்திற்கு தருகிற மரியாதையை பெண்களுக்குத் தருவதில்லை. விதவை, வாழவெட்டி, மலடி என்று அவமானப்படுத்துகிறது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜி.

நல்லயிருக்கு சகுனங்களின் அறிவியல், உளவியல்.

**

பண்பாட்டு ரீதியான அவமானம், ஒடுக்குமுறை; இவையே நமது பாரம்பரியமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

பாரம்பரியத்திற்கு பின்னால், பாரம்பரியம் போலவே நீண்ட அரசியலும் இருக்கிறது. அது,

சகுனம் X அபசகுனம்

பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, நிமிர்ந்தால் நடத்தைக் கேடு, மறுத்தால் மானக்கேடு, ஊருக்கு வெளியே சேரி, நீச மொழி, மாத விலக்கு தீட்டு, கோயில் கருவறை தீட்டாகி விடும், மாட்டுக்கறி, பன்றி இறைச்சி இப்படியாக இன்னும் பல தீட்டுகளாலேயே எளியவர்களை ‘அபசகுனமாக’ அடையாளப்படுத்துகிற பண்பாடே நமது பாராம்பரியம்.

இப்படி ‘சகுனமாக’முதலாளித்துவ வடிவிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆதிக்கத்திற்கு எதிராக, சகல துறைகளிலும் ‘கலகம்’ செய்யும் நோக்கத்தோடு நாங்கள் ‘அபசகுனம்’ என்ற பெயரில் அணிவகுத்திருக்கிறோம்.

‘நாங்கள்’ என்றால்.. மா. பாலசந்தர், தமிழ்டெனி, ம. குமணன், ந. வெங்கட்ராமன், வே. மதிமாறன்.

அபசகுனம்
சகுனங்களுக்கு எதிரான கலகம்
 *
வெளியீட்டகம்.
*

எங்களின் இந்த வெளியீட்டகத்தின் முதன்மையான பணி, ஆச்சாரங்களுக்குக் கேடு விளைவிப்பது.

பழையது என்று கழித்தாலும், புதியதாக திரும்பி வருகிற இன்றைய நவீன கலை இலக்கியவாதிகள், அரசியல் ஆய்வாளர்கள், ‘முற்போக்காளர்கள்’ வரை பரவியிருக்கிற ஜாதி, மத கண்ணோட்டத்தை, அவதூறுகளை அம்பலப்படுத்துவது.

அதற்காக, ‘அபசகுனம்’ பெயரிலேயே கலை, இலக்கிய இதழ், புத்தகங்கள், குறும்படங்கள் (Short Films) ஆவணப்படங்கள் (Documentaries) என்று அணிவகுக்க இருக்கிறோம்.

புத்தகங்களிலிருந்தே துவங்குகிறோம். பிறகே குறும்படங்கள், ஆவணப்படங்கள்.

பயணம் செய்வதும் அதைத் தொகுத்து, பயணக் கட்டுரைகள் கொண்டு வருவதும் வழக்கம். நாங்களும் ஒரு குழுவாக பயணம் செய்து அதை கட்டுரைகளாக மட்டுமில்லாமல் ஆவணப்படங்களாகவும் கொண்டு வர இருக்கிறோம்.

அதன் முதல் பணியாக வருகிற 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 2645 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கங்கையை, ஹரித்துவாருக்கு மேல் எவ்வளவு தூரம் போக முடியுமோ அங்கிருந்து; ஹரித்துவார், ஃபருக்காபாத், கான்பூர், அலகாபாத், காசி, முன்கீர், பகல்பூர் போன்ற நகரங்கள் வழியாக மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தர வனத்தை செழிப்பாகி கடலில் கலக்கும் இடம் வரை பயணிக்க இருக்கிறோம்.

கங்கை நதி உருவாக்கி இருக்கிற செழிப்பு, அழிவு, அரசியல், புனிதமாக்கப்பட்டதின் பின்னணி, புனிதமானதினாலேயே அது எவ்வாறு அசுத்தப்படுத்தப்படுகிறது, நதிக்கரையை ஒட்டிய காடுகள், காட்டுயிர்கள், எளிய மக்களின் வாழ்க்கை என்று கங்கையோடு ஒரு நீண்ட பயணம் செய்ய இருக்கிறோம். அந்தப் பயணத்தின் கூடுதல் சிறப்பாக ‘புத்த கயா’ வும்.

அபசகுனம் வெளியீட்டகம் நீண்ட காலத் திட்டத்தோடு, நிறைய வேலை திட்டங்களோடு பணியாற்ற இருக்கிறது.

**

கருத்து வேறுபாடுகள் இல்லாமல் மனிதர்கள் இருக்க முடியாது.

மாமியார்-மருமகள், காதலன்-காதலி, கணவன்–மனைவி, அண்ணன்–தம்பி, நண்பர்களுக்குள் இப்படி ‘கருத்தே’ இல்லாமல், கருத்து வேறுபாடுகள் உருவாகும்போது, கொள்கை சார்ந்த நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வராமலா இருக்கும்?

எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முற்றி, நாங்கள் பிரியாமல் இருந்தால், நீண்ட தூரம் பயணிப்போம்.

இல்லையேல்..

ஊத்தி மூடிட்டு போக வேண்டியதுதான்.

‘நல்லா வௌங்கும் உங்க வெளியீட்டகம்..’ என்று நினைக்கிறீர்களா?

‘அதான் அபசகுனமாச்சே…’ அப்படியும் நினைக்காதீங்க..

இதுதான் யதார்த்தம்.

தோழமையுடன்,
‘அபசகுனம்’
வெளியீட்டகம்
abasagunam@gmail.com

40 thoughts on “விரைவில்; ஆதிக்கங்களுக்கு எதிரான ‘அபசகுனம்’

 1. அபசகுனம் லோகோவை நானும் தம்பி பிரதாப்பும் உருவாக்கினோம். பிறகு அதை கூடுதல் அழகாக்கி தந்தார், ஓவியர் மணிவர்மா.

 2. உங்கள் பயணமும், நோக்கமும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

 3. வாழ்த்துகள்; அபசகுனம் வீடு தேடி வர என்ன செய்யவேண்டும் மதி?

 4. புனித யாத்திரைகள் என்ற பெயரில் வட இந்தியாவின் பல பகுதிகளை இந்துத்துவச் சின்னங்களாகவே தமிழ்ப் பத்திரிகைகள் இதுவரை காட்டியுள்ளன.
  ஆனால்,இந்துத்துவத்திற்கு முந்தைய பவுத்த சின்னங்கள் பல வட இந்தியாவில் உள்ளன..புத்தரின் கால் பதிந்த பல பகுதிகள்,புத்தரின் கொள்கை பரவிய பல இடங்கள் அங்கு உண்டு. எனக்குத்தெரிந்து அங்கு எவரும் சென்று வந்து பயணக் கட்டுரையாக எழுதியது இல்லை என்று நினைக்கிறேன்.(அண்ணா அவர்கள் ஒரு முறை சென்று வந்து சிறிய அளவில் எழுதியுள்ளார் என்பதும் என் நினைவு.ஆயின் அது போதாது.) விரிவாக பவுத்தத் தடங்களைப் பற்றிய பதிவுகள் தமிழில் வரவேண்டியது அவசியம்.அதில் ஒரு முயற்சியாக உங்களின் அபசகுனம் நிகழ்ந்தால் மகிழ்வேன்.வாழ்த்துகள்.
  இயற்கையின் அனுபவத்தை விளக்கி எழுதுங்கள்.

 5. நன்றி தோழர். PARANEETHARAN
  இதழ் வெளிவர நாட்களாகும். புத்தகங்கள் நீங்கள் வழக்கமாக வாங்குகிற கடைகளிலேயே கிடைக்கும்.எங்கள் முகவரியை தொடர்பு கொண்டால் உங்கள் வீடு தேடி வரும். தொடர்பு முகவரி புத்தக வெளியிட்டின் போது..

 6. தமிழர்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாழ்த்துகள்.

 7. //அதன் சாத்தியம், சாத்தியமின்மை இரண்டையும் பேசிதான் முடிவு செய்ய வேண்டும்//
  என்பதற்கேற்ப
  //எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முற்றி, நாங்கள் பிரியாமல் இருந்தால், நீண்ட தூரம் பயணிப்போம். இல்லையேல்.ஊத்தி மூடிட்டி போக வேண்டியதுதான்.//
  என சரியாக சிந்தித்திருப்பதே முக்கியமானது.
  “வெளங்கட்டும்” என்று வாழ்த்துகிறேன்.

 8. வாழ்த்துகள். நானும் இணைந்து கொள்ள விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?

 9. பெரியாரும் , அம்பேத்கரும் மக்கள் அவரவர்களுடைய அறிவை பயன்படுத்த பாடுபட்டார்கள். இந்த விதையை தன்னுள் கொண்ட அபசகுணத்தின் பயணம் வழக்கமான , கிண்டலான(புரட்டுகாரர்களுக்கு குத்தலான) நடையில் உறுதியாக பீடு நடைபோடும்(ஒளி பாய்ச்சும்).அடுத்தடுத்த அறிவிப்பை எதிர்பார்க்கிறேன்.

  -இளசெ(இ.ஜெயக்குமார்)

 10. //சேக்காளி “வெளங்கட்டும்” என்று வாழ்த்துகிறேன்.//
  கண்டிப்பாக வௌங்கிடுவோம். நன்றி.

 11. suresh
  //வாழ்த்துகள். நானும் இணைந்து கொள்ள விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?//
  தொடர்பு கொள்ளங்கள். வெளியீடுகள் வந்த பிறகு சந்திப்போம்.

 12. அருமையான நோக்கம். அருமையான தலைப்பு. இந்த குழுவில் உள்ள மற்ற நண்பர்களைப்பற்றி எனக்கு தெரியாது. மதிமாறன் அவர்கள் வெளியூர்களுக்கு செல்வதில் உள்ள ஆர்வம், இயற்கையை ரசிக்கும் ஆர்வம், மக்களின் வாழ்வியலை தெரிந்துகொள்ளும் ஆர்வம் பற்றி எனக்கு நிறைய அருகில் இருந்து ரசித்தவன். இந்த குழுவின் பயணங்கள் நிச்சயம் மதிமாறன் அவர்களுக்கு இனிப்பு சாப்பிடுவது போல் நிச்சயம் அமையும். பிற்போக்கு சமூகத்தை குணப்படுத்தும் கசப்பு மருந்தாக உங்கள் பயணங்கள், ஆவணப்படங்கள், புத்தகங்கள் அமைய வாழ்த்துக்கள்!

  //மாமியார்-மருமகள், காதலன்-காதலி, கணவன்–மனைவி, அண்ணன்–தம்பி, நண்பர்களுக்குள் இப்படி ‘கருத்தே’ இல்லாமல், கருத்து வேறுபாடுகள் உருவாகும்போது, கொள்கை சார்ந்த நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வராமலா இருக்கும்?
  எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முற்றி, நாங்கள் பிரியாமல் இருந்தால், நீண்ட தூரம் பயணிப்போம்.
  இல்லையேல்..
  ஊத்தி மூடிட்டி போக வேண்டியதுதான்.
  //

  அபசகுணத்தை இப்பவே ஆரம்பிச்சிட்டீங்க!! 🙂

 13. வேந்தன் //பிற்போக்கு சமூகத்தை குணப்படுத்தும் கசப்பு மருந்தாக உங்கள் பயணங்கள், ஆவணப்படங்கள், புத்தகங்கள் அமைய வாழ்த்துக்கள்!//
  என்னடா தம்பி.. மார்ச் மாதம், புனிதத்திற்கு எதிரான கங்கை பயணத்திற்கு நீ எங்ககூட வரமாட்டியா?

 14. வேந்தன் //இந்த குழுவில் உள்ள மற்ற நண்பர்களைப்பற்றி எனக்கு தெரியாது.//
  அவர்களும் என்னைபோல்தான்…நேரில் தெரிந்து கொள்வாய்.

 15. அண்ணன் மதிமாறன் மற்றும் அபசகுணம் குழுவினர்க்கு வாழ்த்துக்கள்!!

 16. அப சகுனத்தின் முதல் பயணத்தை கங்கையை ஒட்டி துவங்கும் உங்களது பயணம் ”நல்ல” சகுனமாக தெரிகிறது கங்கை புனிதமாக்கபட்டு மலினமாக்கபட்டதை வரலாற்று ஆய்வுகளோடு அறிய காத்திரிக்கிறோம்

 17. //முதல் பணியாக வருகிற 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 2645 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கங்கையை, ********* பயணிக்க இருக்கிறோம்.//
  Dear Mathimaran,
  Have a look at some ‘abasakuna’ photos in the below link before actually going to see them in person. I wish you bad luck of seeing those views yourself.
  http://www.chinasmack.com/2010/pictures/filthy-india-photos-chinese-netizen-reactions.html

 18. ஒவ்வொரு செய்தியையும் தோழர் அணுகுகிற விதம் பல முறை எனக்கு வியப்பை ஏற்படுத்தியதுண்டு. இப்போதெல்லாம் அது போல் வியப்பதில்லை. காரணம் செய்திகளை அவர் அணுகுகிற விதத்தில் அணுகுவது தான். என்னைப் போல் பல பேருக்கு வியப்பும் ஆச்சரியங்களும் விலக வேண்டியிருப்பதால் அபசகுணத்தின் வரவு இன்றியமையாததாகிறது.

  கங்கையில் தொடங்கி வங்கத்தில் முடிகிற பயணத்தின் போது இந்தி தெரிந்த ஒரு தோழரும் உடனிருப்பது அவசியம். அங்கே கண்டு வருவதைப் போலவே கேட்டு வருவதும் முக்கியம் என்பதால் தான் இந்தக் கோரிக்கை.

  தோழருடனான நட்பின் உரிமையில் இன்னொரு கோரிக்கையும் உண்டு. தெலங்கானாவின் பத்து மாவட்டங்களிலும் கூட அபசகுணத்தின் பயணம் நிகழ வேண்டும். திருப்பதிக்குப் போகின்ற தமிழர்கள் ஏதேனும் இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்தால் கூட எல்லாம் தெலங்கானா பிரச்சனையால் தான் என்று சொல்லுகிற அளவில் தான் இருக்கிறது தமிழர்களிடமுள்ள தெலங்கானா பற்றிய புரிதல். சகுணங்களை உடைக்க வருகிற அபசகுணத்தின் வெளியீடுகளுக்காகக் காத்திருக்கிறேன். நன்றி.

  தோழமையுடன்,
  விஜயகோபால்

 19. அன்பிற்கினிய விஜய்,
  இந்தி தெரிந்த தோழர் தமிழ் டெனி உடன்இருக்கிறார்.
  தெலங்கானாவின் பத்து மாவட்டங்களிலும் கூட அபசகுணத்தின் பயணம் நிச்சயம் நிகழும். உங்கள் ஒத்துழைப்போடு. உங்களின் அய்தாரபாத்திலிருந்தே அதை தொடங்குவோம்.
  நாம் போன மாதம் தொலைப்பேசியில் பேசியபடி.. நல்ல புத்தகங்கள் வருவதற்கு உங்கள் உதவியை மறந்துவிடாதீர்கள். தெலுங்கலிருந்து தமிழுக்கு கொண்டு வருவதுபோன்ற மொழி பெயர்ப்புகள் இருந்தால் சிறப்பு.
  புனிதத்திற்கு எதிரான பவுத்தத்தின் சுவடுகளைத் தேடிய கங்கை பயணத்தில் உங்கள் இணைப்பு உற்சாகமானதாக இருக்கும். முயற்சியுங்கள்.
  நன்றி.

 20. univerbuddy,

  Please do not share that link without fair warning. I happened to see that link on facebook and lost a night’s sleep and had very distrubing thoughts (I still continue to have them). Hope you would understand. Thanks.

 21. ”அபசகுணம்”

  தோழர் மதிமாறன் அவர்களுக்கும் ஏனைய தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

  மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருப்பதில் நானும் இருப்பதை இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.

  நன்றி!
  இரணியன்

 22. “அபசகுனம்” இனி ஆதிக்க குணங்களைக் சகல துறைகளிலும் உலகறிய அம்பலப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் தனி முத்திரை பதிப்பதை தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாத ஒன்று. அபசகுனத்தின் ஒவ்வொரு வெளியீட்டையும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
  – எழில்மாறன்.ல

Leave a Reply

%d bloggers like this: