சன் டீ.வி; தீபாவளி விவாதம் ‘விடுதலை’யின் அங்கீகாரம்

தீபாவளிப் பற்றி சன் நியுஸ் சேனிலில் ஒளிபரப்பான விவாதத்தில், நான் பேசிய கருத்துகளுக்கு, திராவிடர் கழகத்தின் ‘விடுதலை’ நாளிதழ் அளித்த அங்கீகாரம்.
*

அர்த்தம் அளிக்கின்றனவா பண்டிகைகள்?
-கருஞ்சட்டை

இது நாம் கொடுத்த தலைப்பு அல்ல; தனியார் தொலைக்காட்சி ஒன்று கொடுத்த தலைப்பு! இந்த அலசலில் பங்கேற்றவர்கள் நான்கு பேர்; மதிமாறன், பர்வீன் சுல்தானா, லேனா தமிழ்வாணன், சீனிவாச சாஸ்திரி.
திருவாளர் சீனிவாச சாஸ்திரியைப் பொறுத்த வரையில் தொடக்கம்முதல் கடைசிவரை புராணம், இதிகாசம், சாஸ்திரம், பகவான் கிருஷ்ணன் என்ற கோட்டுக்குள்ளேயே நின்று குஸ்தி போட்டார்.

ஒருங்கிணைப்பாளர் ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார். இப்படியெல்லாம் சொல்லுகிறீர்களே, நீங்கள் சொல்லுகிற இந்த அய்தீகம், புராணம் இவற்றின் அடிப்படையில் இவற்றை நம்பும் அடிப்படையில்தான் தீபாவளி கொண்டாடப்படு கிறதா? என்ற கேள்விக்கு சாஸ்திரிவாளிடம் ஒழுங்கான பதில் இல்லை. (அவர் என்ன செய்வார்? பாவம் சட்டியிலிருந்தால் அல்லவா கரண்டியில் வரும்).

நீங்கள் சொல்லும் புராணங்களையெல்லாம், நீங்கள் ஏன் மக்களிடம் எடுத்துச் சொல்லுவதில்லை? என்ற கேள்விக்கு சாஸ்திரிவாள் சொன்ன பதில்தான் சரியான ஜோக்!
நாங்கள் சொன்னா யார் கேட்பாள்? என்றாரே பார்க்கலாம்.

ஒரு துணியை வெட்டி தைத்து சட்டையாய்ப் போடக்கூடாது என்று சாஸ்திரத்தில் இருக்கு… என்று சொன்னவர், நானேகூட அதைப் பின்பற்றாமல், முழுக்கை சட்டையைப் போட்டுக்கிட்டுதான் வந்திருக்கேன் என்று சேம் சைடு கோல் அடித்தார்.

மதிமாறன் அடிப்படையில் கை வைத்தார். இந்தப் பண்டிகைகள் எல்லாம் வருணாசிரமத்தின் அடிப்படையில் புனையப்பட்டவைதான்.

எந்த மக்கள் பெரும்பான்மையாக இருந்து தீபாவளியைக் கொண்டாடுகிறார்களோ, அந்த மக்களையே இழிவுபடுத்துவதுதான் இந்தத் தீபாவளி என்று ஒரு சுளுக்குக் குத்துப் போட்டார்.

இராவணனைக் கொன்றதற்கும், வாலியைக் கொன்றதற்கும், சூர்ப்ப நகையை மானபங்கப்படுத் தியதற்கும் ஒரு லாஜிக் இருக்கு. சம்புகனை ராமன் பச்சைப் படுகொலை செய்ததற்கு என்ன நியாயம் இருக்கு? பச்சையான வருணாசிரமக் கண்ணோட்டம் தானே இந்தப் படுகொலையின் பின்னணி என்று பிடரியில் ஒரு தாக்குத் தாக்கினார்.

கடன் வாங்கியாவது இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் அவலம் ஏழைத் தொழிலாளிக்கு.
ஒரு நாள் கூத்துக்காக ஓராண்டு உழைப்பு விரயம்! போனஸ் வேறு தீபாவளிக்குக் கிடைத்து விடுகிறது. டாஸ்மாக் அதனைக் கறந்துவிடப் போகிறது.

அறிவு ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் கேடான பண்டிகை தீபாவளி.
தொழிலாளர் தினமான மே தினத்துக்கு இந்தப் போனசைத் தரக்கூடாதா? தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கலுக்கு அளிக்கக்கூடாதா?

கார்ப்பரேட் கம்பெனிகளின் விளம்பரங்கள் நுகர் வோர் கலாச்சாரத்தை ஊக்குவித்து ஓட்டாண்டிகளின் கைகளில் இருக்கிற நாலு காசையும் பிடுங்கிட ஒரு பண்டிகை தேவையா? என்று பொறுமையாக சரவெடி வெடித்தார் (தீபாவளியல்லவா!).

இந்தப் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் கேடாவதும், ஒரே நாளில் அளவுக்கு மீறிய பலகாரங்களைச் செய்து அந்த ஒரே நாளில் தின்று தீர்த்து உடலைக் கெடுத்துக் கொள்ளவும்வேண்டுமா? என்ற அறிவார்ந்த வேட்டுகளையும் போட்டார் தோழர் மதிமாறன்.

பேராசிரியர் பர்வீன் சுல்தானா, தீபாவளி என்பது பிசினஸின் மய்யப் புள்ளியாகிவிட்டது. வீட்டில் இப்பொழுது யார் பலகாரங்களைச் செய்கிறார்கள்? தீபாவளிக்குப் பல நாள்களுக்கு முன்பாகவே ஸ்வீட் விளம்பரங்கள்! கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் இனிப்புகள்தான் நம் வீட்டில்.

பிள்ளைகள் மருதாணி போட்டுக் கொள்வார்களே, அந்தக் கலாச்சாரம் எங்கே? எங்கே? வடநாட்டுக் காரன் வைத்திருக்கும் கடைகளுக்குச் சென்று கடைகளில் டிராயிங் – இதுதான் நம் கலாச்சாரமா?

ஒரு நாள் கூத்துக்கு வீண் ஆரவாரமும், செலவும் தான் கண்ட பலன் என்று பொரிந்து தள்ளினார்.

கல்கண்டு ஆசிரியர் லேனா தமிழ்வாணன், சுற்றி வளைத்துப் பேசினார். என்னதான் என்றாலும், அது ஒரு விழாக் கொண்டாட்டம், மகிழ்ச்சி, தீபாவளி என்றால் ஓர் எதிர்பார்ப்பு.

நான்கூட நினைத்தேன், நமது தமிழர் விழா பொங்கல்தானே! தீபாவளியை இப்படி கொண்டாடு கிறார்களே என்று நினைப்பதுண்டு என்று சொன்னார் (அந்த நினைப்பு சரியானதே, அதோடு நின்றிருந்தால் கொஞ்சம் கைதட்டிப் பாராட்டலாம்) நாமெல்லாம் தேசியவாதிகள் அல்லவா? அதனால்தான் தேசிய விழாவாக இருக்கும் தீபாவளியைக் கொண்டாடு கிறோம்.

பண்டிகை என்பது ஒரு மலர்மாலை போல. அதனைப் பூ வேறு, நார் வேறு என்று பிய்த்துப் போட்டுவிடலாமா? என்று தத்துவம் பேச முயன்றார்.
தேசியத் திருவிழா என்றாரே! இந்தியா என்பது ஒரு தேசம் அல்லவே! ஒரே தேசம் இருந்தால்தானே ஒரே தேசியம் இருக்கும்.

பல இனம், பல மொழி, பல பண்பாடுகள் நிறைந்த இந்தியா என்ற ஒரு துணைக் கண்டத்திற்கு எப்படி ஒரு பண்டிகை தேசியத் தன்மை கொண்டதாக இருக்க முடியும்?

வடநாட்டில் தீபாவளியன்று தீப விளக்குகளின் வரிசை என்றால் தமிழ்நாட்டில், கார்த்திகையில்தான் தீப விளக்குகள்; தீபவாளியில் கிடையாதே!
கேரளாவில் ஓணம்தான் முக்கிய விழா – தீபாவளிக்கு மவுசு கிடையாதே!

சமணர்கள் வர்த்தமானர் மறைந்த நாளைத்தானே தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள்.
அதுவும் தீபாவளி தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டது; நானூறு ஆண்டுகளுக்குமுன் நாயக்க மன்னர்கள் ஆட்சியில்தானே என்கிற ஏராளமான கேள்விகள் உண்டு.

400 ஆண்டு தீபாவளியில் கீதை அருளிய பகவான் கிருஷ்ணன் எங்கு வந்தான்?
கடைசியாக சீனிவாச சாஸ்திரிவாளுக்கு ஒன்றுண்டு. வீட்டில் பாத்ரூமில் குளித்துவிட்டு, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்கிறீரே, இது நியாயமா? அப்பட்டமான சாஸ்திர மீறல் அல்லவா!

-நன்றி – விடுதலை நாளிதழ் 22.10.2014

பார்க்க: http://youtu.be/PhgsLEdYM40

*

தமிழ் பண்பாடு: கலாச்சாரமா? ஆச்சாராமா?

8 thoughts on “சன் டீ.வி; தீபாவளி விவாதம் ‘விடுதலை’யின் அங்கீகாரம்

  1. “தேசியத் திருவிழா என்றாரே! இந்தியா என்பது ஒரு தேசம் அல்லவே! ஒரே தேசம் இருந்தால்தானே ஒரே தேசியம் இருக்கும்”.
    தங்களிடம் கடவுச்சீட்டு உள்ளதா நண்பரே?அப்படி இருப்பின் அது எந்த நாட்டினது?அது இந்தியனாட்டினது என்றால் இந்தியாவை ஒரே தேசமென நீங்கள் மதிக்கவில்லை என்பது உண்மையானால் முதலில் அதை திருப்பிகொடுத்துவிட்டு ரத்து செய்ய சொல்லுங்கள்.உங்கள் மனம் ஒவ்வாததை ஏற்றுகொள்ள வேண்டாம்.இந்தியன் எனும் அடையாளத்தை துறந்துவிடுங்கள்.மக்களவை தேர்தலில் கூட ஒட்டு போடாதீர்கள்.
    “கடைசியாக சீனிவாச சாஸ்திரிவாளுக்கு ஒன்றுண்டு. வீட்டில் பாத்ரூமில் குளித்துவிட்டு, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்கிறீரே, இது நியாயமா? அப்பட்டமான சாஸ்திர மீறல் அல்லவா!”
    “இராவணனைக் கொன்றதற்கும், வாலியைக் கொன்றதற்கும், சூர்ப்ப நகையை மானபங்கப்படுத் தியதற்கும் ஒரு லாஜிக் இருக்கு. சம்புகனை ராமன் பச்சைப் படுகொலை செய்ததற்கு என்ன நியாயம் இருக்கு? ”
    இது தங்களது இராமாயண புராண எதிர்பிற்கு மீறிய கருதல்லவா? பகுத்தறிவை மீறிய கருதல்லவா?
    ராமாயணமே பொய் என்று மேடைதோறும் கூவிகொண்டு இருப்பவர்களுக்கு அதில் லாஜிக் இருந்தால் என்ன ?இல்லாவிட்டால் என்ன?
    ஒருவேளை தங்கள் கூறுவதுபோல அதில் லாஜிக் இருந்திருந்தால் மட்டும் ராமாயணத்தை அப்படியே ஏற்றுகொள்வீர்களா ?
    ஒன்று தங்களது தரப்பில் உறுதியாக இருக்கவேண்டும்.அல்லது நிஜமோ கட்டுகதையோ எதுவாக இருந்தாலும் அதிலுள்ள நல்லவைகளை ஏற்கும் மனப்பக்குவம் இருக்கவேண்டும்.
    அப்படி ஏதும் இல்லாமல் சும்மா சாதி பார்த்து(மட்டும்) சாடுபவர்களது விவாதங்கள் இப்படிதான் இருக்கும்.
    “தொழிலாளர் தினமான மே தினத்துக்கு இந்தப் போனசைத் தரக்கூடாதா? தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கலுக்கு அளிக்கக்கூடாதா?”
    அடாடாடா ,என்ன ஒரு கருத்தாழமிக்க விவாதம்?
    மே தினத்தன்றும் பொங்கலன்றும் யாருமே குடிப்பது கிடையாதா?குடிப்பவனுக்கும் கூத்தடிப்பவனுக்கும் நாளேது? நட்சதிரமேது ?
    நமது உழைப்பாளிகளையும் தமிழர் திருநாளையும் சிறப்பிப்பது எனும் கலாசார அடிப்படையில் வேண்டுமானால் இதை ஏற்றுகொள்ளல்லாமே தவிர நீங்கள் குறிப்பிடும் நுகர்வோர் கலாசாரமெல்லாம் அதனால் மாறாது.
    “கடன் வாங்கியாவது இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் அவலம் ஏழைத் தொழிலாளிக்கு” எல்லா மதத்திலும் ஏழைகளின் நிலைமை இதே போன்றுதான் உள்ளது.அதுவும் பண்டிகை கொண்டாட்டமெல்லாம் தனிப்பட்ட மனிதனின் மனநிலை சம்பந்தப்பட்டது.பண்டிகைகால வரி என்று ஏதுமில்லை நண்பரே. இறையுணர்வு மேலோங்கி இருந்தவரையில் இதுபோன்ற கொண்டாட்டங்களில் பொருட்கள் முன்னிலை வகிக்கவில்லை.அந்த இறையுணர்வு குறைந்துவிட்ட இந்நாளில் தான் பண்டிகைகள் தங்களது அர்த்தங்களை இழந்து நுகர்வுகலாச்சார வசமாகிவிட்டது. அதற்க்கு போலி பகுத்தறிவும் ஒரு காரணம்.
    “பிள்ளைகள் மருதாணி போட்டுக் கொள்வார்களே, அந்தக் கலாச்சாரம் எங்கே? எங்கே? வடநாட்டுக் காரன் வைத்திருக்கும் கடைகளுக்குச் சென்று கடைகளில் டிராயிங் – இதுதான் நம் கலாச்சாரமா?”
    அதற்காக அன்றுமுதல் மருதாணி தழை பொரித்து அரைத்து போட்டுவிட்டவர்களின் வாரிசுகளை தேடிபோகமுடியுமா?அன்று யார் யார் என்னென்ன வேலையை செய்துகொண்டிருந்தார்களோ இன்றும் அவர்களது பரம்பரையை அதே வேலையை செய்ய சொல்லலாமா?
    அன்று அரை வேட்டிதான்,இன்று கோட்டு சூட்டெல்லாம் வந்துவிட்டது.
    அன்று தீபாவளிக்கும் பொங்கலுக்கும்தான் இட்டிலி .இன்று அப்படியா? அன்று சமையலில் நாட்டு தக்காளிதான் நாட்டு காய்கறிகள்தான்.ஆனால் இன்று ?

    மக்களது அறியாமையை அகற்றுவது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது சாதி வேற்றுமைகளை களைவது போன்ற பணிகளில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது.
    ஆனால் சாதிவேறியர்கலைபோல ஒரு குறிப்பிட்ட இனத்தவரை மட்டும் கேலி செய்வது, சாடுவது, சாதியை மட்டுமே காரணம் காட்டி அதிலுள்ள நல்லவைகளை முற்றாக மறுப்பது என்பதைத்தான் ஏற்றுக்கொள்ளமுடியாது.

    அதற்கும் மேலாக இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசுவது ஏற்றுகொள்ளதகாதது.

Leave a Reply

%d bloggers like this: