தேர்தல் நோக்கம்

அடிமைகளை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட போலீஸ்
சுதந்திர இந்தியாவில் அது குணாம்சத்தை மாற்றிக் கொள்ளாமல் அப்படியே கைமாற்றிக் கொண்டது.
உப்புசத்தியாகிரத்தில் போராடிய எளிய மக்களை தடிகொண்டு அடித்தும் துப்பாக்கியால் சுட்டும் கட்டுப்படுத்திய போலீஸ், அதே போராட்டத்தில் காந்தி, ராஜாஜி முன் கைகட்டி அடிமையைப்போல் நடந்து கொண்டது.
இப்போதும்கூட புதியதாக வேலைக்குச் சேர்ந்த அதிகாரம் இல்லாத ஒரு கான்ஸ்டேபிளே, எந்த தவறும் செய்யாத மூட்டை தூக்கும் முதியவரை வயதிற்கும் கூட மரியாதை இல்லாமல், ‘டேய் இங்க வாடா..’ என அதட்டுவதும்
குடித்துவிட்டு audi காரில் வந்த ஒருவர் இன்ஸ்பெக்டரையே ‘டேய், அவனே, இவனே’ எனக் கெட்டவார்த்தையால் திட்டும்போதும் அவர் முன் கவுண்டமணி முன் நின்ற செந்திலைப்போல் கமுக்கமாக இருப்பதும் போலீசின் இயல்பான குணாம்சம்.
கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை சம்பவத்திற்கு இணையானது திருபுவனம் அஜித்குமார் படுகொலை.
இந்தக் கொடூரம் சோசியல் மீடியாவில் வைரலானதால்தான் நம்மில் பலர் கவனத்திற்கும் அரசின் கவனத்திற்குமே வந்தது என்பது மறுக்க முடியாது.
இப்போதெல்லாம் போலீஸ் எளியவர்களை பொது இடங்களில் அடிப்பது குறைந்திருக்கிறது. காரணம், அவர்கள் மாறிவிட்டார்க்ள என்று அர்த்தமல்ல, போலீஸ் பயப்படுவது சட்டத்திற்கு அல்ல. செல்போன் கேமராவிற்கு.
ஒரு அரசு போலீசை நியாயப்படுத்துவதும் அல்லது போலீஸ் தருகிற அறிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு பேசுவதும் போலீஸ்காரர்களின் வன்முறையை விடக் கொடூரமானது.
அதிமுக ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் சம்பவத்தில், அரசு, போலீஸ், நீதித்துறை இணைந்து அதைமட்டும்தான் செய்தார்கள்.
அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி போலீசின் குரலாகவே முழங்கினார்.
அதனால்தான் அது அதிமுக அரசு நடத்திய படுகொலையாக அடையாளமானது.
இன்றும் போலீஸகாரர்கள் நடத்திய திருபுவனம் அஜித்குமார் படுகொலையில்,
‘அரசு என்ன செய்ய வேண்டும்’ என்று அக்கறையுள்ளவர்களால் கோரிக்கை வைக்கப்படுகிறதோ அதையே தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது என்பது முக்கியமானது.
முதல்வரின் பேச்சும் அதையே உறுதி செய்கிறது.
திமுகவினரும் போலீசின் வன்முறையைக் கண்டிக்கவே செய்கிறார்கள்.
இப்படி இருக்க, இதை திமுகவிற்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பு என பாஜக+அதிமுக செயல்படுவது இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து நடக்க வேண்டும் என அவர்கள் விரும்புவதாகவே புரிந்து கொள்ள முடியும்.
அதுதான் அவர்களின் இயல்பும்.
மாறாகத் தன்னை நடுநிலையாளர்களாக அடையாளப்படுத்திக்கொள்பவர்களும் அதையே செய்கிறார்கள்.
அரசு என்ன செய்யவேண்டும் என இவர்கள் சொல்கிறார்களோ அதை அரசு முந்தி செய்யும்போதும் திமுகவிற்கு எதிராக கட்டமைக்கிற இந்தத் தீவிரம் தேர்தல் நோக்கம் கொண்டது.
நான் எழுதிய இதையும் ‘திமுகவிற்கு ஆதரவானது’ என்று சொல்வார்களேயானால் அவர்களுக்கு நான் சொல்வது,
உங்கள் செயல் பாஜக+அதிமுகவிற்கு ஆதரவானது-வே. மதிமாறன்.