சட்டக் கல்லூரி சண்டையும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் வன்முறையும்

atrocity

சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை தொலைக்காட்சியில் பார்த்தீர்களா? ஐயோ என்ன கொடுமை? அதைப் பார்த்த அன்று முழுவதும் என்னால் சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை.

-எஸ். சௌமியா

அது சென்னை சட்டக் கல்லூரி அல்ல. சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி.

அந்தக் காட்சியை நானும் பார்த்தேன். நிஜமாகவே நடக்கிற எந்த சண்டையையும் இப்படி காட்சியாக்கி திட்மிட்டு தொகுத்து, பின்னுரைகளோடு ஒளிப்பரப்பினால், பார்ப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும்.

நானும் அதைப் பார்த்த மாத்திரத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். அந்தக் காட்சி என்னை பதட்டப்படவைத்தது. மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.

கட்டையாலும், தடியாலும், குச்சியாலும் தாக்குகிற இந்தக் காட்சியே நம்மை இவ்வளவு திகில் அடைய வைக்கிறதே, மேலவளவு என்ற கிராமத்தில், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு நின்று வெற்றி பெற்றார் என்கிற ஒரே காரணத்திற்காக, ஓடுகிற பஸ்சில் ஆதிக்க ஜாதி வெறியர்களால் வித விதமாக வெட்டி கொலை செய்யப்பட்டார் ஒருபாவமும் அறியாத முருகேசன்.

அந்தக் கொலை வழக்கில் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புரையின் சிறிய பகுதியை உங்களுக்குத் தருகிறேன்;

1. “ஈனப்பயலான உனக்கு எதற்கு தலைவர் பதவி, எதற்கு நஷ்ட ஈடு?” என்றபடி, தான் பதுக்கி வைத்திருந்த (அருவாள்) ஆயுதத்தால் அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் வெட்டினார். பேருந்திலிருந்த பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினார்கள். அழகர்சாமி முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையோடு மேற்கு நோக்கி ஓடினார்” (சாட்சி கிருஷ்ணன்).

2. “மார்க்கண்டன் முருகேசனின் வயிற்றில் குத்தினார். அய்யாவு முருகேசனின் வலது உள்ளங்கையை வெட்டினார். அழகர்சாமியோ முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு வடமேற்கு திசை நோக்கி ஓடினார்” (சாட்சி ஏகாதெசி).

3. “முருகேசனின் துண்டிக்கப்பட்ட தலை, பேருந்தின் படிக்கட்டில் வந்து விழுவதைப் பார்த்தேன். அழகர்சாமி அந்தத் தலையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்” (சாட்சி மாயவர்).

4. “சக்கரமூர்த்தி முருகேசனின் கைகளை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனை சரமாரியாக வெட்டினார்” (சாட்சி கல்யாணி).

5. “அழகர்சாமி முருகேசனை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனின் இடது கன்னத்தை வெட்டினார்; பாரதிதாசன் முருகேசனின் இடது கையை வெட்டினார்; நாகேஷ் முருகேசனின் இடது மணிக்கட்டை வெட்டினார். கதிர்வேல், தங்கமணி, கணேசன், மணி ஆகியோரும் முருகேசனின் வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் வெட்டினார்கள். அழகர்சாமி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். முதல் வெட்டு முருகேசனின் வலது தோளில் விழுந்தது. பின்னர் முருகேசன் இழுக்கப்பட்டு மற்ற அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டினார்கள், குத்தினார்கள்” (சாட்சி பழனி).

6. “அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் அருவாளால் வெட்டினார். பேருந்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினார்கள். அப்போது மேலும் சில அம்பலக்கார சாதியினர் அங்கு வந்து, ஆதி திராவிடர்களைத் தாக்கினார்கள். இத்தாக்குதல்களினால் முருகேசன், மூக்கன், ராஜா, பூபதி, செல்லத்துரை, சேவகமூர்த்தி ஆகியோர் செத்துவிட்டனர். நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, முருகேசனின் தலையில்லா உடல் பேருந்திலிருந்து வெளியே வீசி எறியப்பட்டது” (சாட்சி கணேசன்)

மனிதாபிமானம் கொண்ட எந்த ஜாதிக்காரர் இதைப் படித்தாலும் ஆத்திரமும், அழுகையும் இல்லாமல் படிக்க முடியுமா?

இதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகிறதே….
இந்தக் கொலைகளையும் காட்சியாகத் தந்திருந்தால்…..

இந்த ஜாதிவெறிதான் தமிழனின் வீரமா?

தமிழனை பல்லவன் ஆண்டு இருக்கிறான். விஜயநகர மன்னர்கள் ஆண்டு இருக்கிறார்கள். மொகலாயர்கள் ஆண்டு இருக்கிறார்கள். வெள்ளையன் ஆண்டு இருக்கிறான் தமிழர்கள் அல்லாத பல நாட்டு மன்னர்கள் தமிழர்கள் மீது பல ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தியிருக்கிறார்கள், சுரண்டி இருக்கிறார்கள்
‘குற்றப்பரம்பரையினர்’ என்று ஒரு குறிப்பிட்ட ஜாதியை தமிழ்நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்கள் உட்பட பலரும் கேவலப்படுத்தி அவமானப்படுத்தி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.

அவர்களை எதிர்த்து வராத வீரம், ஒரு தாழ்த்தப்பட்டவர் பஞ்சாயத்துத் தலைவராக வரும்போது வருகிறதே? இந்த மோசமான மனநிலைக்கு பெயர் தான் தமிழனின் வீரமா?

ஜாதி படிநிலையில் தனக்கு மேல் உள்ளவர்கள் தன்னை அவமரியாதை செய்வதை, பொருட்படுத்தாமல் இருப்பதும், தனக்கு கீழ் உள்ளவர்கள் மேல் நிலைக்கு வருவதை பொறுத்துக் கொள்ளாமல் இருப்பதும்தான் ஜாதி இந்துவின் உளவியல். இப்படித்தான் ஜாதி சிஸ்டம் உயர்ஜாதிக்காரர்களுக்கு அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களுக்கு எந்தப் பிரச்சினை இல்லாமல், ஜாதி ரீதியான சமூக அந்தஸ்த்தோடு இயங்குகிறது.

இடைநிலை ஜாதிகளுக்கு ‘சூத்திரன், வேசி மகன்’ என்ற பட்டங்கள் இருந்தாலும் அதைக் குறித்தான எந்த சொரணையும் இல்லாமல், பார்ப்பனியத்தின் மீது எந்த கீறலும் விழாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தனது காழ்ப்புணர்சியின் மூலமாக ஜாதி மேலாதிக்கத்தை, பார்ப்பனியத்தை பிற்படுத்தப்பட்ட ஜாதிகள்தான் மிகவும்  பத்திரமாக பாதுகாக்கிறது

 

murugesan_3401

மேலவளவு முருகேசனின் மனைவி பிணமான தன் கணவனுடன்

டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை பார்த்தே உங்களால் ஒருநாள் முழுக்க சாப்பிட முடியவில்லை என்கிறீர்கள். மேலவளவு முருகேசன் கொலையைக் காட்சியாக்கிக் காட்டியிருந்தால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் உணவை மறந்துதான் வாழ்ந்து இருக்க வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி சண்டை காட்சிகளை திரும்ப, திரும்ப தொலைக்காட்சியில் காட்டப் படுவதால் மக்களிடம் தேவையற்ற பதற்றமும், கலவரமும்தான் ஏற்படும். வர்த்தக மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்புவதை அரசு தடைசெய்யவேண்டும்.

***

இந்தச் சண்டை நடக்கும்போது அதை தடுக்கு முயற்சிகாமல் காவல் துறையினர் வேடிக்கைப் பார்த்தது சட்டபடியும் குற்றம். அதை தடுக்க வேண்டும் என்ற எந்த முயற்சியும் செய்யாமல் விரட்டி, விரட்டி படம் எடுத்த போட்டோக் கிராப்பர்கள், கேமராமேன்கள், பத்திரிகையாளர்கள் செய்தது தர்மபடி குற்றம்

தனிமனிதராக இந்தச் சண்டைய தடுக்க முயற்சித்த கேண்டின் பொறுப்பாளருக்கு இருந்த இந்த உணர்வும், தைரியமும் – காவல் துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இல்லாதது வெட்கப்படக்கூடியது. மிகுந்த வன்முறை நிறைந்தது.

கண்முன்னே ஒருவன், புதைக்குழியில் சிக்கி ‘காப்பாற்றுங்கள்’ என்ற கூக்குரலிட்டபடி மரணதத்தோடு போராடுகிறான். பத்திரிகை, தொலைக்காட்சி கேமராமேன்கள் அவரை காப்பாற்றுவார்களா? மரணம் வரை படம் எடுப்பார்களா?

அதுபோன்ற காட்சிகள் கிடைப்பது அரிது. அதனால் மரணம் வரை படம் எடுப்பார்கள். பார்வையாளர்களை பரபரப்பாக்கி பல முறை பார்க்க வைக்கிற காட்சி அது. தொழிலில் ஒரு நல்ல பெயர் கிடைக்கும். முதலாளியின் பாராட்டையும் பெற முடியும். முன்கூட்டியே அந்த நபர் புதைக்குழியில் மாட்டிக் கொள்ளபோவது தெரிந்தால், நன்றாக மார்க்கெட்டிங் செய்து,This program sponsor by என்றும் ஒளிபரப்பலாம்.

அது மனித தர்மமாக இல்லாமல் இருக்கலாம். அதுதான் தொழில் தர்மம். தொழில் அதிபதிர்களுக்கு லாபம் தருகிற தர்மம். அதுவேதான் பத்திரிகை தர்மமும்.

15 thoughts on “சட்டக் கல்லூரி சண்டையும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் வன்முறையும்

 1. கேட்பதற்க்கே இப்படி இருக்கிறதே அந்த ஊர் மக்களின் நிலமையை கண்டால் என்ன வென்று சொல்வது இந்த பயத்தின் காரணமாக அனைவரும் தேர்தலில் போட்டியிடுவதை தவித்திருப்பார்கள்!போட்டியிட்டாலும் மிரட்டியே வைத்து இருந்திருப்பார்கள்!!

  அதன் ஒரு தொடர்ச்சிதான் சட்டகல்லூரியும் நடத்தியிருக்கிறார்கள்…முதலில் தண்டிக்கப்படவேண்டியவர்கள் இந்த ஜாதி வெறியர்களைத்தான்.

 2. 5. “அழகர்சாமி முருகேசனை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனின் இடது கன்னத்தை வெட்டினார்; பாரதிதாசன் முருகேசனின் இடது கையை வெட்டினார்; நாகேஷ் முருகேசனின் இடது மணிக்கட்டை வெட்டினார். கதிர்வேல், தங்கமணி, கணேசன், மணி ஆகியோரும் முருகேசனின் வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் வெட்டினார்கள். அழகர்சாமி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். முதல் வெட்டு முருகேசனின் வலது தோளில் விழுந்தது. பின்னர் முருகேசன் இழுக்கப்பட்டு மற்ற அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டினார்கள், குத்தினார்கள்” (சாட்சி பழனி). ///

  என்ன கொடுமை இது …
  அவங்க மனிதர்கள் இல்லை.. நாம் இலங்கை பத்தி பேசி கொண்டு இருக்கிறோம் ஆனால் தமிழகத்தில் நடக்கும் கொடுமை பத்தி பேச மறுக்கிறோம்,,,,,
  நான் இலங்கை பத்தி பேச வேண்டம் நு கூறவில்லை
  இங்கயும் நடக்கும் கொடுமை பத்தி பேசலாமே….
  அணைத்து மனிதனுக்கு ஒரு உயிர் தான்…..

 3. வந்தேரிகளான ஆரியர்களின் வருகைக்கு பின்னர் தான் ஜாதி உருவானது.மதமும் அப்படித்தான்.தந்தை பெரியார் சொல்வது போல் தமிழன் காட்டு மிராண்டியாக இருக்கும் வரை இந்த அவலம் தொடரும்.வளர்ந்த நாடுகளில் மூட நம்பிக்கைகள் அழிக்கப்பட்டது போல் தமிழ் நாட்டில் கடவுள், ஜாதி மற்றும் அற்ப மதம் அழிக்கப்பட வேண்டும்.தமிழன் காட்டு மிராண்டியாக இல்லாமல் தமிழனாக மாற வேண்டும்.அப்போது தான் இது போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

 4. திரு. வே.மதிமாறன்

  ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் இந்த சம்பவம் குறித்து எனது கருத்தை இங்கு சொல்கிறேன்.

  கேரளாவில் மதம்பிடித்த யானை ஒன்று பாகனை அரைமணி நேரத்துக்கும் மேலாக தூக்கி பந்தாடி கொன்ற கொடூர காட்சிகளை ஓராண்டுக்கு முன்பு நீங்கள் தொலைகாட்சிகளில் பார்த்திருக்க கூடும்.

  இந்த சம்பவத்தை வியர்க்க வியர்க்க ஓடி ஓடி அதே நேரத்தில் பதட்டத்துடன் பயத்துடன் உயிரை பணையம் வைத்து ஒளிபதிவு செய்த செய்தியாளர்களை நீங்கள் எந்த விதத்தில் குற்றம் சொல்லக்கூடும்?. அதே போல திரும்ப திரும்ப ஒளிபரப்பிய தொலைகாட்சிகளை நீங்கள் எந்த விதத்தில் குற்றம் சொல்ல முடியும்?

  ஒருவேளை சட்டக்கல்லூரி சம்பவம் செய்தியாளர்களால் படம்பிடிக்கபடவில்லை என்றால் நிச்சயமாக இந்த அளவுக்கு பிரபலமாகி இருக்காது. சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதிக்கொண்டார்கள் 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. இவ்வளவு தான் செய்தி. இது எந்தவிதத்திலும படிப்பவர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் மாணவர்கள் மோதல் என்றால் என்ன என்பதை தமிழக மக்கள் கண்கூடாக இப்போது தான் பார்த்து பதர நேர்ந்தது.

  அடுத்து நீஙகள் சொன்னது போல தலித்துகளுக்கு எதிரான கொடூரங்களை பல பத்திரிக்கையாளர்கள் ஒளிப்பதிவு ஆதாரத்துடன் வெளியுலகுக்கு தெரியப்படுத்தி நீதிக்கு வித்திட்டிருக்கிறார்கள். ஒளிபரப்பபடாத ஆயிரம் வன்முறைகளை குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த ஆயிரம் வன்முறைகளும் ஒளிபரப்பியிருந்தால் நிச்சயமாக இன்று சாதியகொடுமைகள் ஒழிக்கப்பட்டிருக்கும்.

  இரக்க குணம் உள்ள மனித சமுதாயத்திடம் நிச்சயம் சாதி தோற்றுப்போயிருக்கும்.

  மூன்று மாணவர்கள் அடிபடுவதை பார்த்து மனித மனங்கள் பதறுவது சாதி ஆதிக்கம் என நீங்கள் வலியுருத்தினால் நிச்சயம் அது தவறானது.

  தேசிய கீதம் பாடும் போது. மௌன அஞ்சலி செலுத்தும்போது அத்துனைபேரும் அமைதியாக இருப்பார்கள். புகைபட நிருபர்கள் மட்டும் தங்கள் கடமையை செய்துகொண்டிருப்பார்கள். இதை எந்த நாட்டு சட்டமும் தருமமும் குற்றமாகவோ தவறாகவோ சொல்வதில்லை ஏன்? அந்த நிமிடங்களில் நிருபர்கள் தங்கள் பணியை செய்யவில்லை என்றால் அந்த நிமிடம் இருண்ட நிமிடம் அல்லது இல்லாத நிமிடமாக தான் இருக்கும்.

  சாதியை மறக்க சாதிசான்றிதழை ஒழியுங்கள். தயவு செய்து சாதிய அடிப்படையிலான சலுகைகள் இட ஒதுக்கீடுகள் இவற்றை ஒழியுங்கள். சாதியை பயன்படுத்துவது தேசதுரோகம் என அறிவியுங்கள்.

  சாதியை விட கொடுமையானது போதை. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் அத்திரத்தல் தாக்குவது இயல்பு. ஆனால் தொடர்ந்து வெறி கொண்டு தாக்குவது நிச்சயம் மனிததன்மையே அல்ல.

  இன்றைய மாணவர்களிடம் அதிகரித்துவரும் பான்பராக், ஃகான்சு புகையிலை, மது, சிகரெட் இதெல்லாம் மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை தூண்டி விடுகின்றன. நிச்சயம் சுய நினைவோடு சுய உணர்வோடு இப்படி கொடூர தாக்குதல் எந்த மனிதனும் செய்ய மாட்டான். இங்கு நான் பார்த்த சட்டக்கல்லூரி தாக்குதலை மட்டும் குறிப்பிடவில்லை. நீங்கள் குறிப்பிடும் இது போன்ற ஒளிபரப்பப்படாத தாக்குதல்களையும் தான்.

  மனிதநேயம் வளர்க்க முயற்சி எடுக்கள். மனிநேயம் சாவது சாதிய கொடுமைகளை விட கொடூரமானது.

 5. //
  ஒருவேளை சட்டக்கல்லூரி சம்பவம் செய்தியாளர்களால் படம்பிடிக்கபடவில்லை என்றால் நிச்சயமாக இந்த அளவுக்கு பிரபலமாகி இருக்காது. சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதிக்கொண்டார்கள் 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. இவ்வளவு தான் செய்தி.
  //

  ஆமாம், செய்தி, செய்தி என்ற அளவுடன் நின்றிருக்கும். மாவட்டங்கள் வரை பரவிய வன்முறைக்கான சமிக்ஞையாக மாறியிருக்காது.

 6. *மாவட்டங்கள் – தென்மாவட்டங்கள் என்று திருத்தி வாசிக்கவும்.

 7. ஆதிக்கச் சாதிகளை ஆதரிப்பதில் தி.மு.க ஆட்சி, அ.இ.அ.மு.கவுடன்
  போட்டி போடுவதால் வந்த பலனாகவே இதைக் கருதுகிறேன்.

 8. ஒரு விபத்தையோ, தாக்குதலையோ தடுக்க அல்லது பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற காவல்துறையினர்தான் வரவேண்டும் என்ற அவசியமில்லை. அவர்களை மட்டுமே நாம்பினால் நாம் பிணத்தைதான் தூக்கிச்செல்லவேண்டும். யாரையும் காப்பாற்ற முடியாது.

  ஊடகவியலராக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கவேண்டும். தடுக்கவேண்டும். தடுக்கமுடியும்.

  இதே தமிழகத்தில் சென்னை கடற்கரைச் சாலையில் ஊடகவியலார் அடிவாங்கி கதறி அழுததை யாரும் எளிதில் மறந்திருக்கமாட்டார்கள். அப்போதும் இந்த காவல்துறை வேடிக்கைதான் பார்த்தது.

  அப்போது சக ஊடகவியலார்கள் நிகழ்வுகளை படம்பிடிக்காமல் (ஒரு சிலர் அதையும் படம்பிடித்தனர்) அவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதுபோல்தான் ஊடகவியலாரும் பொதுமக்களும் ஒன்றுசேர்ந்து மாணவர்கள் தாக்கப்படும்போது தடுத்திருந்தால் அவர்களை நிச்சயம் பாராட்டியிருக்கலாம்.

  இதே தனியார் தொலைக்காட்சியினர் சுனாமி கோரத்தை தொடர்ந்து காட்டியதால் தன்னுடைய “ரேட்டிங்” அதிகரித்துவிட்டதாக மகிழ்ந்து தமிழகக் கடலோரத்தில் வீசிய பிணவாடையை மறக்கும் வகையில் “பார்ட்டி“ வைத்து கொண்டாடியவர்கள் என்பதை அனைவரும் அறியவேண்டும்.

  “எல்லாமே வேடிக்கைதான் தனக்கு நடக்காமல் பிறருக்கு நடக்கும் வரை” என்ற வாசகம் நம்ம ஊர் தானிகளில் (ஆட்டோ) எழுதி வைத்திருப்பது நினைவுக்கு வருகிறது.

 9. //சாதியை மறக்க சாதி சான்றிதழை ஒழியுங்கள். தயவு செய்து சாதிய அடிப்படையிலான சலுகைகள் இட ஒதுக்கீடுகள் இவற்றை ஒழியுங்கள்//

  அப்படிப் போடு அருவாள ! இந்த சாதி சான்றிதழை ஒழிச்சிபுட்டா, அப்புறம் எந்த ஈனப் பயலும் பள்ளிக்கூட பக்கமோ கல்லூரிப் பக்கமோ வரமுடியாது. அவனுங்க வரலன்னா பள்ளி, கல்லூரிகள்ள வகுப்புவாத சண்டையும் வராது. ரிசெர்வேஷன் சீட்டுக்கு படிப்புலேயும் தேர்தல்லேயும் ஆப்பு வச்சுடலாம். கிராமங்களிளும் நகரங்களிலும் பீ வார ஆள் தேடத்தேவை இருக்காது. படிக்க முடியாத அந்தனை ஈன பயலுகளும் பீ வாரத்தான வரனும். அப்புரம் என்ன சேர சோழ காலத்து மனு நீதிய வாய்க்கா வரப்பு ஏன் கூவம் வரையில் கூட பாயவிடலாம்.

  எப்பா இவாளுங்கள விட்டா இராஜாஜியையே தூக்கி லப்பக்குன்னு சாப்பிடுவானுங்க போலருக்கே.

  சாதி சன்றிதழ் இன்னும் குறைந்தது 2000 வருடத்திற்கு வேண்டும். தலித் சமூகம் அதிலும் தலித் பெண்களின் படிப்பறிவு 100 சதவிகித எட்டிய பின்னும் ரிசெர்வேஷன் வேண்டும்.

  ஆ ஊன்னா வந்துடுவானுங்க சாதி சான்றிதழை ஊ…..வதிற்கு.

  காஞ்சிபிலிம்ஸ் – பாரீஸ் தமிழ் சங்கம் – பாரீஸ் தலித்தமிழ் சங்கம்

 10. //கேரளாவில் மதம்பிடித்த யானை ஒன்று பாகனை அரைமணி நேரத்துக்கும் மேலாக தூக்கி பந்தாடி கொன்ற கொடூர காட்சிகளை ஓராண்டுக்கு முன்பு நீங்கள் தொலைகாட்சிகளில் பார்த்திருக்க கூடும். //

  யானைக்கு மதம்பிடித்து தாக்கியது ஒரு விபத்து. ஆனால் இங்கு நடந்தேறியது எதிர்வன்முறை. தொலைக்காட்சிகள் தங்களுடைய வியாபாரத்திற்காகதான் மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறார்களே தவிர வேறு காரணிகள் இல்லை. உண்மையான சமூக அக்கறை இருந்தால் இந்த எதிர்வன்முறைக்கான காரண காரியங்களை ஆராய்ந்து ஓரு சிறப்பு பார்வையாக ஒளிபரப்பட்டும். நயன்தாரா, த்ரிஷா திரைத்துறைக்கு வந்தகதையெல்லாம் ஆராய்ந்து சிறப்பு நிகழ்சியாக காசு பார்த்தவர்களுக்கு இது ஒன்றும் சிரமமான காரியமில்லைய்யே.

  மண்னிக்கவும் அறிவகம்.

  நட்புடன் நித்தில்

 11. வன்முறையை கையில் எடுத்தவனெல்லாம் குற்றவாளியில்லை, மாறாக அந்த வன்முறையை கையிலெடுக்க தூண்டியவன்தான் முழுமுதல் குற்றவாளி.

  முதல் குற்றவாளியாக சன் செய்தியைத்தான் சொல்லவேண்டும் ஒரு சார்பு நிலையைகாட்டி அனைத்து மக்களிடமும் ஒரு அப்பாவி இந்த அடி அடிக்கிறாங்களே என்ற தோற்றத்தை உண்டாக்கிவிட்டார்கள்,அவர் நேர்மையாக இருந்திருந்தால் அவன் கத்தியுடன் திரிந்ததையும்,காட்டியிருக்கவேண்டும்.

  சட்டமேதைக்கே இந்த நிலமை, சரி இப்போதுதான் பெயர் போடாமல் மறுக்கிறார்கள் அவர்கள் படித்து முடித்த பிறகு வாங்கும் certificate டில் இருக்கும் பெயரை என்ன செய்வார்களாம்???

 12. ஐயா, அறிவகம் என்ற பத்திரிகையாளரே! நீங்கள் எழுதியதை ஒரு துளிகூட என்னால் ஆதரிக்க முடியவில்லை. இன்று சமூக அவலத்தின் மூலமே பத்திரிகைகள், தொலைக்காட்டிகள், சினிமாக்கள் தான். லாபம் ஒன்று தான் அவர்களின் குறி.

  மேல் சாதிக்காரன் கீழ் சாதிக்காரனை அடிப்பது போல் காண்பித்தால் அதனால் பலன் உண்டாகும். ஆனால், அபூர்வமான இந்த நிகழ்ச்சியைக் காண்பிப்பதால் எதிர் விளைவுகள் தான் உண்டாகும். இது தெரியாதா உமக்கு! தெரியும், தெரிந்தே இப்படி எழுதுவது தானய்யா உம்மது ஆதிக்க மனப்பாண்மை.

  சாதிச்சான்றிதழ் வேண்டாமா? இதைவிட மிக, மிக அயோக்கயத்தனமான ஒரு பரிந்துரை இருக்கமுடியுமா?

  தேவர் சமூகம் திருந்த வேண்டும். இவர்களையெல்லாம் தனது காலில் விழவைத்து மகிழ்ந்த கன்னட, பார்ப்பன ஜெயலலிதாவுக்கு இவர்கள் பல்லக்கு தூக்குவார்கள். ஆனால், இவர்களாலும், பார்ப்பனீயத்தாலும் ஒடுக்கப்பட்ட சமூகம் தனது ஜனநாயக உரிமையை ஜனநாயக ரீதியாக பொற்றாலும் மூர்க்கமாக கொலை செய்வார்கள்!

  இன்று அனுஆயுதங்களால் தான் மூன்றாம் உலக யுத்தம் வரவில்லை. Arms for Peace. ஆகவே, தலித்துகளே! வன்மூறைதான் உங்களது பாதுகாப்பு. உங்கள் மீது அடுத்தவனுக்கு இருக்கும் அச்சம் தான் உங்களது பாதுகாப்பு. இது தான் உலக நியதி.

  இந்த உலகம் நேர்மையானது அல்ல. அமெரிக்கன் எண்ணெய்க்காக ஈராக்கை அழித்தான்.

  தங்களது சுயநலத்திற்காக இந்து ராம் என்ற ‘அறிவாளி’ ஈழ விடுதலையை ‘சிங்களவனைவிட’ கடுமையாக எதிர்க்கிறான். நம் உப்பைத் தின்றுகொண்டே! நமது ரத்தத்தை உரிஞ்சிக்கொண்டே!

  இவை ஒரு சில ‘சாம்ப்பிள்கள்’ தாம்.

  ஆக, நாம் மட்டும் ஏனையா ஞாயமாக, நேர்மையாக வாழவேண்டும்? அப்படி நீ வாழ்ந்தால் நீ ஒரு கேவலமான ஏமாளி! அழிக்கப்படுவாய்.

 13. // அதுபோல்தான் ஊடகவியலாரும் பொதுமக்களும் ஒன்றுசேர்ந்து மாணவர்கள் தாக்கப்படும்போது தடுத்திருந்தால் அவர்களை நிச்சயம் பாராட்டியிருக்கலாம்.//

  தென் இந்திய சினிமாக்களில் எத்தனையோ சண்டை காட்சிகள் வருகின்றன. அத்தனையையும் பார்த்துக்கொண்டு எந்த ரசிகனும் சுத்தி நிக்கிற யாருமே விலக்கு பிடிக்கல்லயே என்று யாராவது யோசித்ததுண்டா? இல்லை எந்த சினிமா விமர்சகராவது எழுதியதுண்டா? இல்லைதானே?

  சினிமா அதிக பவர்புல் மீடியா. நல்ல சினிமா உலகத்துக்கு பாடம் புகட்டும். தவறான சினிமா தவறுகளை பிஞ்சிலிருந்தே குழந்தைகள் மனதில் பதிய வழி வகுக்கும்.

  இதுபோலத்தான் சாக்கடை அரசியலும். வன்முறை தெரியாத வன்முறை. தன் சுயநலத்துக்கு அடுத்தவரை பலியெடுக்கும்.
  சாதி – இனம் -மதம் இப்படி……………. ?

  இந்த நிகழ்வுகள் தொலைக்காட்சியில் வந்ததால் சராசரி மக்களுக்கு கூட அன்று என்ன நடந்தது என தெரிந்தது. ஊடகங்கங்கள் என்ன சொன்னாலும் பார்க்கிறவனுக்கும் அறிவு வேணும்.

  எழுதிறவர் எல்லோரும் சரரியாத்தான் எழுதுறார் என்று யாரும் நம்பக்கூடாது. உங்கள் கருத்தை எதிர்த்தால் அந்த கருத்தை வேதிமாறன் ஐயா , நீங்களே நீக்குகிறீர்கள்? எனது பல கருத்துகளை அப்படி செய்திருக்கிறீர்கள். இது கூட ஊடக தர்மமல்ல.

  நான் வாழும் சுவிசில் யாரும் யாரையும் ஊடகங்களில் பொறுப்பாக திட்டலாம். சனநாயகம் தோன்றிய முதல் நாடு சுவிற்சர்லாந்து. மக்களின் ஆணைணயின்றி ஒரு மரத்தைக் கூட வெட்ட அரசுக்கு உரிமையில்லை.

  அங்கே அரசும் கட்சிகளும் வன்முறைகளை தூண்டிவிட்டு அரசியல் வளர்க்கின்றன. சாதி இல்லை என சொல்லும் அனைவரும் சாதியை சொல்லி யாரையாவது திட்டியே அதை இல்லாதொழிக்க முற்படுகிறீர்கள். அதை உங்களைப் போன்றவர்கள் தவிர்த்தாலே சற்று குறையுமே?

  உலகத்தை திருத்துவதற்கு முன் நாம் திருந்த வேண்டும்.
  அது உலகத்தின் பெரும் பகுதியின் மாற்றம். அது மனித மனத்திலிருந்து உருவாகவேண்டும்.

  நன்றி

 14. அடித்தால் திருப்பி அடி!!!!!!
  ஆகவே, தலித்துகளே! வன்மூறைதான் உங்களது பாதுகாப்பு. உங்கள் மீது அடுத்தவனுக்கு இருக்கும் அச்சம் தான் உங்களது பாதுகாப்பு. இது தான் உலக நியதி.

Leave a Reply

%d bloggers like this: