சிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்

pagangods

து ஒரு நகரம். அந்த நகரத்தின் சிறப்பே அந்த சிவன் கோயில்தான். அது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். நகரின் பெரிய கோயில், பாடல் பெற்ற ஸ்தலம் என்றால், கர்ப்பகிரகத்திற்குள் நின்று கொண்டு பக்தர்களுக்கும் – கடவுளுக்கும் இடையில் தரகர்களாக இருக்கிற பார்ப்பனர்கள்தான் அந்தக் கோயிலிலும் கடவுளுக்கான தகவல் தொடர்பு கருவியாக இருந்தார்கள்.

பார்ப்பனருக்கு அடுத்த நிலையில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சைவப் பிள்ளைகள், நாட்டுக் கோட்டை செட்டியார்கள். உடையார்கள், முதலியார்கள் உட்பட இதர ஜாதி இந்துக்களான சூத்திரர்களும், அவர்களால் தீண்டப்படாதவர்களாக நடத்ப்படும் தலித் மக்களும் அருகருகே, நின்று உரசிக்கொண்டு சிவனை வழிபட்டு பிறகு கலைந்து, தங்கள் தங்கள் கிராமத்துக்குப் போக, பிதுங்கி வழியும் பேருந்தில் முண்டியடித்து ஏறி, ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து, தூங்கி விழுந்து ஊர் போய் சேர்ந்தார்கள்.

ஆம், பார்ப்பனர்களைத் தவிர வேறு ஜாதி-வேறுபாடுகள் அற்ற சமூகம்.

காட்சி மாறுகிறது உள்ளூர்த் திருவிழா, ஆய்வாளர்களின், அறிவாளிகளின், தமிழினவாதிகளின் வார்த்தையில் சொல்வதென்றால், சிறுதெய்வ வழிபாடு அல்லது தமிழ்த் தெய்வ வழிபாடு, தமிழனின் அடையாளம்.

ஊரே திருவிழா உற்சாகத்தில். ஆத்தா பல பேர் மீது இறங்குவதும், மலையேறுவதுமாக இருக்கிறாள். சாமி ஆடிக்கொண்டு இருக்கிறது அந்த ஊர். ‘சாமி’ வந்து ஆடும் அளவிற்கு ‘அருள்’ இல்லாதவர்கள், சாராயம் குடித்து ஆடிக் கொண்டிருந்தார்கள்.

ஜாதி இந்துக்களான சூத்திரத் தமிழர்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. வாய்க்கு வெளியே இரண்டு ஓரங்களிலும் பல்லை நீட்டியபடி, சீவி சிங்காரித்து ஊரைச் சுற்றி வருவதற்குத் தயாராக இருந்தாள் ஆத்தா. கையில் பறையை வைத்துக்கொண்டு ஆத்தாவின் வருகையை அறிவிப்பதற்காக பஞ்மத் தமிழர்கள், கோயிலில் இருந்து 30 அடி தள்ளி ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள்.

ஓர் ‘உயர்சாதி சூத்திர’னின் குரல் உரக்க,“டேய் நாய்களா, சாமி புறப்படத் தயாராயிடுச்சி, அங்க என்ன புடிங்கிக்கிட்டா இருக்கீங்க. அடிங்கடா மோளத்தை” என்று அதட்டியது. அதட்டல் கேட்டவுடன், பறையை அடிக்கத் தொடங்கினார்கள் பஞ்சமத் தமிழர்கள்.

“நிறுத்துங்கள்” என்ற கலகக் குரல் பறை சத்தத்தையும் தாண்டி இடியென இறங்கியது. கூட்டம் பேச்சிழந்தது. சாமியாடிக் கொண்டிருந்தவர்கள் கூட சட்டென்று நின்றார்கள். இம்முறை கற்பூரத்தை முழுங்காமலேயே ஆத்தா மலையேறி விட்டாள்.

‘நிறுத்துங்கள்’ என்ற அந்தக் கலகக் குரலுக்குச் சொந்தக்காரன் 30 வயது இளைஞன். இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தலித் குடியிருப்பிலிருந்து எழுதப் படிக்க கற்றுக் கொண்ட முதல் ஆள். பட்டதாரி இளைஞன். அவனைச் சுற்றி அய்ந்து இளைஞர்கள். தன் உறவினர்களின் சார்பாக, “இனி இவர்கள் பறையடிக்க நாங்கள் விட மாட்டோம்” என்றான் அந்த இளைஞன்.

“எங்க முன்னால கை நீட்டி சத்தமா பேசுற அளவுக்குத் திமிராப் போச்சா? ஏண்டா அடிக்க உடமாட்டிங்க?” என்றான் நகரத்து சிவன் கோயிலில் தலித்தை உரசிக் கொண்டு சாமி கும்பிட்ட ‘உயர் ஜாதிச் சூத்திரன்’

“அவுங்க பறையடிக்கணும்னா, எங்க தெருவழியா சாமி வரணும். ஆத்தாவை எங்க ஜனங்களும் கோயில் உள்ள போயி கும்பிடணும். அப்படியிருந்தா, ஆத்தா காதுகிழிய பக்கத்துல நின்னே பறையடிப்பாங்கடா”. பதில் ‘டா’ போட்டு கோபமானான் அந்த தலித் இளைஞன்.

அவ்வளவுதான், அந்த இளைஞன் உட்பட ஒட்டமொத்த தலித் மக்கள் மீதும் ஊரே வன்முறையில் இறங்கியது. தலித் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டன.

இம்முறையும் சூத்திரர்கள் சார்பாக போலீஸ் வந்தது. வன்முறைகலவரம் என்று வார்த்தை மாற்றப்பட்டது. சூத்திரர்களோடு சேர்ந்து கொண்டு, கலவரக்காரர்கள் என்று அறிவித்து தலித் மக்களை வேட்டையாடியது போலீஸ்.

சூத்திரர்களால் தாக்கப்பட்டு இரண்டு நாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தச் சமூகத்தில் படித்த ஒரே தலித் இளைஞனை போலீஸ் சுட்டுக் கொன்றது.

‘ஜாதிக் கலவரங்களைத் தூண்டிவிட்ட இளைஞன், போலீசாரை தாக்கிவிட்டு தப்பிஓட முயற்சிக்கும்போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்’ என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஒட்டுமொத்த தலித் மக்களுக்கும் இது ஒரு அச்சுறுத்தலாக, பாடம் புகட்டப்பட்டது.

தலித் இளைஞர்கள் ஊரைவிட்டே ஓடினார்கள். ஊரின் எல்லையில் கையில் வீச்சரிவாளோடு நிற்கும் அய்யனார் சிலையும், ‘தன்னை வெட்டத்தான் நிற்கிறதோ’ என்கிற பய உணர்வோடே ஓடினார்கள்.

ஊருக்குள்ளே ‘ஆத்தா’ சிரிக்கிறாளா, உக்கிரமாக இருக்கிறாளா என்பது புரியாதபடி – பல்லை வெளியே நீட்டி தமிழனின் அடையாளங்களின் சாட்சியாக நின்றாள். பச்சைத் தமிழனின் தொன்ம அடையாளம், பறைத் தமிழனின் பிணத்தின் மீது கொடிகட்டிப் பறந்தது.

kaaval_theivam“பார்ப்பனக் கடவுளுக்கு எதிராக பார்ப்பனரல்லாத கடவுளை முன்னிறுத்துவது. இந்து மத எதிர்ப்புணர்வில் இது ஒரு நுட்பம். சிறு தெய்வ வழிபாட்டு முறை தமிழர்களின் தொன்மம். கலாச்சார அடையாளம்” என்கிற குழப்பம் புதிய சிந்தனை போல் தமிழர்கள் மீது ஏவப்படுகிறது.

அப்படியா? இது புதிய சிந்தனையா? இந்த ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து மக்களுக்கு அறிமுகப்படுத்திய பிறகுதான் மக்கள் சிறுதெய்வ வழிபாட்டில் இறங்கப் போகிறார்களா?

இதுவரை மக்கள் நாத்திகர்களாக இருந்தார்களா?

இல்லை, எந்த நேரமும் பார்ப்பனக் கோயிலின் படிக்கட்டுக்களிலேயே படுத்துக் கிடந்தார்களா?

நடுத்தர மக்களின் புதிய பழக்கங்களை, ஒட்டு மொத்த தமிழர்களின் ‘பழக்கம்’ என்ற முடிவுக்கு வந்ததினால் வந்த வினையல்லவா இது. உழைக்கும் மக்களின் இழிவுக்கும், சிந்தனையின் தேக்க நிலைக்கும் சிறு தெய்வங்களும் ஒரு காரணமல்லவா? தலித் மக்களின் மீதான வன்முறை நடந்தபோதெல்லாம், இந்த அய்யனாரும் – ஆத்தாளும் சாட்சிகள் அல்லவா? இத்தனை ஆண்டுகளாய் தன்னை வருத்தி, (வழிபாட்டு முறை) தன் தெய்வங்களை வழிபட்டவர்களின் உயர்வுக்காக, விடுதலைக்காக என்ன செய்தார்கள், இந்த ‘இஷ்ட தெய்வங்கள்?’

“இப்படி மொன்னையாக விஷயங்களை அணுகாதீர்கள்? அவர்களின் வழிபாட்டு முறையில் உள்ள கலாச்சாரத்தையும், கலை வடிவத்தையும் உயர்த்திப் பிடிப்பதால், அதைப் பார்ப்பனீயத்திற்கு எதிராகப் பயன்படுத்த முடியும்.”

குழந்தையை உயிரோடு குழியில் புதைப்பது, பெண்களை குப்புறப்படுக்க வைத்து ஆணி செறுப்பால் மிதிப்பது, மூளை கலங்கும் அளவிற்கு மண்டையில் தேங்காய் உடைப்பது, கத்தியால் கீறிக் கொள்வது, பேய் ஓட்டுகிறேன் என்று மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பிரம்பால் அடித்துக் கொல்வது, நெருப்பு மிதிப்பது, அலகு குத்திக் கொள்வது என்று மக்களின் அறியாமையால் விளைந்த காட்டுமிராண்டித் தனங்களையா கலாச்சாரம் என்று உயர்த்திப் பிடிப்பது?

சமூகத்தைப் பின்நோக்கி நிலப்பிரபுத்துவத்திற்கு அழைத்துச் செல்வதா மாற்று அரசியல்? நடுத்தர வர்க்க குணாம்சத்தோடு இருக்கிற உங்களின் அறிவுஜீவித்தனத்திற்கு, பேராசிரியத் தனத்திற்கு, நகர் சார்ந்து வாழுகிற உங்கள் வாழ்க்கை முறைக்கு – மக்களின் இந்த அறியாமை, கலாச்சாரமாகத் தெரியும், கலைவடிவமாகத் தெரியும்.

இதனால் நீங்கள் டாக்டர் பட்டம் பெற்றதும், அதை ‘பாரம்பரிய கலை வடிவம்’ என்ற பெயர் வைத்து நீங்கள் கலைஞர்களாக, கவிஞர்களாக பெருமையானதைத் தவிர இந்த மக்களுக்கு மயிரளவுகூட பயன் இல்லை என்பதுதானே உண்மை.

வரலாற்று ஆய்வாளர்களே! வரலாற்றைப் பின்னோக்கி இழுக்காதீர்கள்.

இன்னும் சில கேள்விகள்

ஜாதிக்கொரு தெய்வம். ஒவ்வொரு ஜாதிக்கும் சமூகத்தில் என்ன மரியாதை, இழிவு இருக்கிறதோ அதுவே அவர்களின் தெய்வங்களுக்கும்.

பார்ப்பனர்கள்-பிற்படுத்தப்பட்டவர்களின், தலித்மக்களின்  தெய்வங்களை வணங்குவதில்லை. கருவறைக்குள் இருவரையும் அனுமதிப்பதில்லை.

பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மக்களின் தெய்வங்களை வணங்குவதில்லை. அவர்களின் கடவுளை விடவும், ‘நாங்கள் உயர்ந்தவர்கள்’ என்பதே ஜாதி இந்துக்களின் மனநிலை. கடவுளுக்கும் தீண்டாமை உண்டு.

தலித், பிற்படுத்தப்பட்டவர்களின் கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதியில்லை. கடவுளுக்கும் தீட்டு ஒட்டிக்கொள்ளும். இந்த அழுகிய அமைப்போடே தொடர்ந்து வழிபடுவதும், வழிபடச் சொல்வதும்தான்-பார்ப்பனீயத்திற்கு மாற்று அரசியலா?

‘இந்தக் கலாச்சாரம், கலையெல்லாம் உயர்வானதாக இருக்கட்டும். அதைவிட எங்களுக்கு இழிவிலிருந்து வெளியேற்றுவதுதான் முக்கியம்’ என்று மதம் மாறிப் போன இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களை- ‘இந்திய கலாச்சாரத்தில் இருந்து வெளியேறியவர்கள், அவர்களுக்கு இந்திய உணர்வில்லை’ என்ற சொல்லுகிற ஆர்.எஸ்.எஸ். காரர்களிடம் இருந்து நீங்கள் எப்படி வேறுபடுகிறீர்கள்?

குழந்தையைப் புதைத்தல், பெண்களை செறுப்பு போட்டு மிதித்தல் என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அது தமிழ்க் கலாச்சார அடையாளம் என்றால்-நெருப்பு மிதித்து, மொட்டையடித்து, முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி கலாச்சாரத்தைக் காப்பாற்ற நீங்கள் தாயரா? (பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழனவாதிகள்)

***

என்ன செய்வது?

அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் உரிமைகளாய் உயர்ந்து நிற்பது. சமஸ்கிருதமே வழபாட்டு மொழி என்கிற இடங்களில் தமிழ்தான் என்று எழுவது. கர்ப்பக்கிரகத்தில் நுழையக்கூடாது என்பதை எதிர்த்து நுழைவேன் என்று துணிவது.

சிறு தெய்வங்களின் வழிபாட்டு முறையிலேயே பார்ப்பனத் தெய்வங்களை வழிபட முயற்சிப்பது. மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, தில்லை நடராஜன், சிறீரங்கம் ரங்கனாதன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவண்ணாமலை அருணாசலேசுவரன் போன்ற கோயில்களில் பொங்கல் வைத்து, கடா வெட்டி, உறுமி பறையடித்து, சாமியாடி வழிபடுவோம். இதுதான் எங்கள் வழிபாட்டு முறை என்று முனைவது. பிறப்டுத்தப்பட்டவர்களின் கோயிலில், தலித் மக்கள் நுழைவதை தீவிரத்தன்மையோடு செயல்படுத்துவது.

ஆம், செய்ய வேண்டியது மாற்று அரசியல் அல்ல. எதிர்ப்பு அரசியல். கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்.

சக்கிலியர், பறையர், பள்ளர் என்று உழைப்பை மட்டுமே உடைமையாகக் கொண்ட மக்கள், அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் உரிமைகளாக உயர்ந்து நிற்பார்களேயானால், இந்து மதம் நிலைகுலைந்து போகும். தனது பழக்க வழக்கங்களைத் தொன்மையான கலாச்சார வழிபாட்டு முறையைகளைக் கூட கைவிட்டுவிடும். கண்டதேவியில் தலித் மக்கள், “இவ்வளவு பெரிய தேரை நீங்கள் மட்டும் இழுத்து கஷ்டப்படுகிறீர்களே, நாக்களும் ஒரு கை பிடிக்கிறோம்” என்று உதவிக்குப் போனபோதுதான், தேர் இழுக்கும் தனது புனித கலாச்சாரத்தையே தியாகம் செய்தார்கள் ஜாதி இந்துக்கள்.

கூத்திரம்பாக்கத்தில், “இவ்வளவு சக்தி வாய்ந்ததா உங்கள் தெய்வம் நாங்களும் வந்து கும்பிடுகிறோம்” என்று பக்தியோடு தலித் மக்கள் நுழைய முயன்றபோதுதான், கோயிலின் கதவுகள் மூடிக் கொண்டதும், பிற்படுத்தப்பட்டவர்கள் தங்கள் வழிபாட்டையே நிறித்துக்கொண்டதும், சங்கராச்சாரி பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக வந்து, தலித் மக்களிடம் “உங்களுக்குத் தனிக்கோயில் கட்டித் தருகிறோம்” என்று அநியாயம் பேசியதையும் மறந்துவிட முடியாது.

“இந்து தத்துவம்-சிறு தெய்வம்-பெரு தெய்வம் எல்லாம் தலித் மக்களுக்கு எதிரானது. அதனால், ஒட்டு மொத்தமாக மாறுங்கள் பவுத்தம்” என்றார் அண்ணல் அம்பேத்கர்.

‘கடவுள் இல்லை’ என்று பிரச்சாரம் செய்த தந்தை பெரியார்தான், “இழிவு நீங்க வேண்டுமானால், இந்து மதத்திலிருந்து இடத்தைக் காலி செய்யுங்கள். இஸ்லாத்திற்கு மாறுங்கள்” என்றார். சிறு தெய்வ வழிபாட்டு முறையைதான் ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று கண்டித்தார்.

மற்றபடி, பெருந்தெய்வம் x சிறுதெய்வம், அடிக்கட்டுமானம் x மேல் கட்டுமானம். மேல் நிலையாக்கம் x கீழ் நிலையாக்கம் என்று குழப்பி, தமிழ்க் கடவுள் முருகனுக்கு மொட்டை போட்டு அலகு குத்தி அரோகரா கூப்பாடு போட்டு, உடுக்கை சிலம்பு வைத்துப் பாட்டுப்பாடி, குழந்தையை மண்ணில் புதைத்து, கூழாங்கல்லை நட்டுவைத்து கும்மியடியுங்கள் என்று சொல்லவில்லை.

ஆம், சிறு தெய்வ வழிபாட்டு முறையில் நீங்கள் தமிழர்களை ஒன்று சேர்க்கலாம். ஆனால், அது இந்துமத வெறியர்களுக்கே லாபமாக முடியும். வழிபாட்டு முறையில், பக்தியோடு மக்களிடம் அய்க்கியமாவதற்கான அதிக வாய்ப்பு அவர்களுக்கே உண்டு.

அதனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள் அறிஞர்களே!

ஆகவே, கவிஞர்களே, கலைஞர்களே, தமிழின உணர்வாளர்களே, ஆய்வாளர்களே, பேராசிரியப் பெருமக்களே, உழைக்கும் மக்களுக்காக புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, புத்தம் புதிய தத்துவங்களோடு அவர்கள் வாழ்க்கை முறையை விளக்குபவர்களே, விடுமுறை நாட்களின் வீரர்களே!

உங்களிடம் பணிவோடு சொல்லிக் கொள்வது, உழைக்கும் தலித் மக்களுக்கு வேண்டியது அவர்களின் நேற்றைய இன்றைய வாழ்க்கை குறித்த விளக்கங்கள் அல்ல. விடுதலை.

*

ஜாதி, இந்து மத சார்ப்பு கொண்ட தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமல்ல; தன்னை பெரியாரிஸ்டாக அடையாளப்படுத்திக் கொண்டு இந்து மத சார்ப்பு கொண்டவர்களைப்போலவே சிறுதெய்வ வழிபாட்டு முறையை எளிய தமிழர்களின் பண்பாடாக அடையாளப்படுத்த முயற்சித்த பேராசிரியர் தொ. பரமசிவம் போன்றவர்களின் செயலைக் கண்டித்தும் தலித் முரசு, ஏப்ரல் 2003 இதழக்காக எழுதியது.

பெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா?


தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

12 thoughts on “சிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்”

 1. ஆம், சிறு தெய்வ வழிபாட்டு முறையில் நீங்கள் தமிழர்களை ஒன்று சேர்க்கலாம். ஆனால், அது இந்துமத வெறியர்களுக்கே லாபமாக முடியும். வழிபாட்டு முறையில், பக்தியோடு மக்களிடம் அய்க்கியமாவதற்கான அதிக வாய்ப்பு அவர்களுக்கே உண்டு.

  அதனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள் அறிஞர்களே!

  ஆகவே, கவிஞர்களே, கலைஞர்களே, தமிழின உணர்வாளர்களே, ஆய்வாளர்களே, பேராசிரியப் பெருமக்களே, உழைக்கும் மக்களுக்காக புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, புத்தம் புதிய தத்துவங்களோடு அவர்கள் வாழ்க்கை முறையை விளக்குபவர்களே, விடுமுறை நாட்களின் வீரர்களே! உங்களிடம் பணிவோடு சொல்லிக் கொள்வது, உழைக்கும் தலித் மக்களுக்கு வேண்டியது அவர்களின் நேற்றைய இன்றைய வாழ்க்கை குறித்த விளக்கங்கள் அல்ல. விடுதலை.//

  நச்சென்ற வார்த்தைகள்.
  மக்களை விடுதலை நோக்கி பயணிக்க வைக்க வேண்டிய முற்போக்காளர்கள் தன்னையும் ஒரு ஆய்வாளராக முன்னிருத்துவதற்க்கும், வரலாற்றை மீட்டெடுத்தல் எனும் பெயரில் பிற்போக்கு தனத்திற்க்கே அவர்களை பின்னோக்கி இழுக்கின்றனர்.

 2. நண்பர் வேந்தன் மற்றும் மதிமாறன் அவர்களுக்கு,

  கல்வி இன்று யாருக்கும் மறுக்கப் படுவதில்லை.

  ஒரு காலத்தில் யாருக்குக் கல்வி மறுக்கப்பட்டதோ அவர்களுக்கு இன்று கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் சலுகைகளை அரசாங்கம் வழங்கி வருகிறது. தீண்டாமையும்,ஜாதிப் பிரிவினைகளை இழிவாகப் பேசுவதும் இன்று தண்டனைக்குரிய குற்றங்கள்.

  ஜாதியின் பெயரால் ஒடுக்க நினைக்கிறவர்களுக்கு எதிராக தங்களைக் காத்துக்கொள்ள கல்வியறிவு என்கிற கேடயம் இன்று எல்லார் கையிலும் இருக்கிறது.

  உயர்ந்த ஜாதி என்று கருதப்ப் படுகிற ஜாதியினருக்கு ஆதரவாக செயல் படுகிற அரசாங்கம் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக தமிழ் நாட்டில் இல்லை.

  இன்றைக்கு எங்காவது தவறுகள் நடைபெறுமானால் அது தனி மனித காழ்ப்புணர்ச்சியால் மட்டுமே நடைபெறலாமே ஒழிய அதை ஜாதியின் பெயரால் அரங்கேற்றுகிற துணிவு யாருக்கும் இல்லை என்பதே என் கருத்து.

  உதாரணங்கள் இருந்தால் சொல்லுங்கள்.

  http://kgjawarlal.wordpress.com
  kgjawarlal@yahoo.com

 3. ஜவகர் ,
  சட்டங்கள் இருக்கிறது என்பது உண்மை தான் ஆனால் அந்த சட்டங்கள் பயன்படுத்த படுகிறதா என்பதுதான் கேள்வி. வன் கொடுமை சட்டத்தில் இதுவரை ஒரு வரும் தண்டிக்க பட்டதில்லை என்பது சாதியத்தின் வெற்றி.
  //கல்வி இன்று யாருக்கும் மறுக்கப் படுவதில்லை//
  அப்படியென்றால் கல்வி மறுக்கப்பட்டது என்பது உண்மை. அதனால் செய்ய வேண்டியது என்ன வென்றால் அந்த கால சுழலுக்கு நாம் மீண்டும் சென்று விட கூடாது என்பதை தான் இந்த கட்டுரை உணர்த்த முயல்கிறது. (கல்வி முற்றில்லும் மறுக்கப்படவில்லை என்பது உண்மை அல்ல )

  //உயர்ந்த ஜாதி என்று கருதப்ப் படுகிற ஜாதியினருக்கு ஆதரவாக செயல் படுகிற அரசாங்கம் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக தமிழ் நாட்டில் இல்லை.//

  இது ஒரு பொய் அல்லது ஒரு மாயை. அரசாங்கம் பார்பன அடிவருடிகளகவே எப்பொழுதும் செயல் பட்டுஇருக்கிறார்கள்.(இனொருமுறை கட்டுரையை படியுங்கள், அது உயர்ந்த சாதிகள் என்றானவர்கள் பற்றியதில்லை )

  மேலும் உதாரணகள் கட்டுரையலே உள்ளன.

 4. என் ஐயங்களை தெளிவு படுத்தியதற்கு நன்றி.

  சமூக அவலங்களை விமர்சிக்கும் உங்கள் பணி தொடரட்டும். நாளை மலர்கிற ஜாதி,மத பேதமற்ற சமுதாயத்தில் உங்கள் பங்களிப்பும் இருக்கும்.

  http://kgjawarlal.wordpress.com
  kgjawarlal@yahoo.com

 5. “..உழைக்கும் தலித் மக்களுக்கு வேண்டியது அவர்களின் நேற்றைய இன்றைய வாழ்க்கை குறித்த விளக்கங்கள் அல்ல. விடுதலை….”

  பொதுவாக மக்களுக்கு எதையாவது வணங்கியாக வேண்டும். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மூஸா எனும் இறைத்தூதரின் வரலாறு சில சில மாற்றங்களோடு சொல்லப்பட்டிருக்கிறது.

  அதில் பிர் அவ்ன் எனும் மன்னன் மக்களிடம் தானே கடவுள் என்றும் தன்னையே வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டான். அவனிடம் அடிமைகளாக இருந்த மக்களை அவனிடமிருந்து காப்பாற்றி ஓரிடத்தில் சேர்த்த பிறகு, மக்களிடம் மூஸா கூறுவார், “அந்த மலையில் ஒரு நெருப்பை நான் கண்ணுறுகிறேன், அதில் இறைவனிடமிருந்து ஏதேனும் செய்தி இருக்கலாம்.. நான் போய் இறைவனிடமிருந்து செய்தி வாங்கி வருகிறேன்..” என்று செல்ல முற்படும் போது,

  மக்கள் அனைவரும் மூஸா எனும் ஏக இறை தூதரிடம் கேட்பார்கள், “நீங்கள் சென்று விட்டு திரும்பும் வரை நாங்கள் வணங்குவதற்கு எதையாவது தந்து விட்டு போங்கள்..” என்பார்கள்

  காலம் காலமாக அடிமைகளாக இருந்த மக்களிடம் விடுதலையான பிறகும் கூட அந்த அடிமை உணர்வு யாரையாவது அல்லது எதையாவது வணங்கியே ஆக வேண்டும் என்ற உணர்வே மேலோங்கி இருந்தது.

  அரபு நாடுகளில் கூட முஹம்மது எனும் இறைதூதரின் வருகைக்கு முன்னர் மக்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது நான்கு கற்களை எடுத்து செல்வார்கள், மூன்று அடுப்பாக பயன்படுத்த மற்றொன்று தெய்வமாக வழிபட.

  இத்தகைய மனநிலையிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். இஸ்லாம் அனைவரையும் ஒரே தாய் மக்கள் என்றும் அறிமுகமாகி கொள்ளும் பொருட்டே அனைவரும் பல குலங்களாக கோத்திரங்களாக அறியப்படுகிறார்கள் என்றும் கூறுகிறது.

  எனக்கு தெரிந்து கிராமத்திலிருந்து நாகூருக்கு பிழைக்க வந்த சின்னமொட்டை என்ற தலித் வகுப்பை சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு நஜீர் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு பள்ளிவாசலில் எங்கள் தோலோடு தோலாக நின்று தொழுகையில் கலந்து கொண்டார்

  இன்று அவருக்கு திருமணம் முடிந்து ஆள் அடையாளமே தெரியாமல் வியாபாரம் செய்து குடும்பத்தை கவனித்து கொண்டு வருகிறார்.

  நஜீரின் மீது திணிக்கப்பட்ட ஜாதி இன்று அவரின் பிள்ளைக்கு சுத்தமாக தெரிய நியாயமில்லை. இஸ்லாம் ஜாதியை அழித்து விட்டிருந்தது.

  பௌத்தம் எந்த கடவுளையும் வணங்குவதற்கு அடையாளம் காட்டவில்லை.

  பெரியாரும், அம்பேத்காரும் பரப்புரை செய்த வழிகாட்டிய மதங்களின் பால் இணைத்துக் கொள்வதே விடுதலை தான்.

 6. Ismail engira nanbar inga enna paesi kondu irukkirargal enbathai pathi kavalai indri yaethetho solli kondu irukkirar.
  Nanbar thanthu kozhanthaikku Vada india-vil irukkira athey mathathai cherntha manapen edukka muyala mudiyuma avvalavu yaen avaral nagapattinathil irukkira athuvum yaen avar ooril irukkira oru naduthara varka pennai than yaedukka iyaluma … kuzambiya kuttaiyil meen pidikalam aal pidika muyala koodathu …
  2000 aandugalaga emmai sutri iruntha irul ippozhuthuthan vilaga thodangi irukkirathu … kalam marum katchigalum marum …. makkalum maruvargal …

  AAnal ulagai piditha irul eppozhuthu agalum ena theriya villai ….

 7. பாளையங்கோட்டையில் வெள்ளாளர்களால் அனுமதிக்க படாத மரவர்கள் தனி கொயில் கட்டி புது உலகம்மன்னு பேரு வச்சு தனியா திருவிழா கொண்ணடாடுராங்க………………….

 8. இப்ப தான் எல்லா ஜாதிகாரர்களும் எல்லா கோவில்களுக்குள்ளும் போய்ட்டு வர்றாங்களே தலித்துனு சொல்றத அவங்கவங்களே ரொம்ப பெருமையா நினச்சுட்ருக்ற நூற்றாண்டுக்கு வந்தாச்சு அதுக்கப்றமும் இன்னும் அதையே நாம பேச்சுக்காக பேசறோம் பெரியாரின் பேச்சு அடிப்படையா எடுத்துக்கோங்க
  ஆனா இன்னும் இன்றைய வெளிப்பாட்டை பத்தி பேசுங்க பட் உங்க கட்டுரை அருமை சிறுதெய்வ வழிபாட்லயும் இன்னைக்கு ரொம்ப முன்னேற்றம் இருக்க தான் செய்யுது ஆர் எஸ் எஸ்க்கு யாரும் சப்போட் பண்றதில்ல.. இன்னைக்கு சுதந்திர நாட்ல சுதந்திரமா தான் செயல்படறாங்க மக்கள்

 9. // ‘கடவுள் இல்லை’ என்று பிரச்சாரம் செய்த தந்தை பெரியார்தான், “இழிவு நீங்க வேண்டுமானால், இந்து மதத்திலிருந்து இடத்தைக் காலி செய்யுங்கள். இஸ்லாத்திற்கு மாறுங்கள்” என்றார். .//
  —————————————

  ஜாதி சாக்கடையில் சுகம் கண்டுவிட்ட பெரியாரிஸ்டுக்கள்:

  எவ்வளவு குட்டிக்கர்ணம் அடித்தாலும், சுவற்றில் முட்டினாலும் எந்த ஜென்மத்திலும் இந்துக்களால் ஜாதி சாக்கடையை வெளியேற முடியாதென்பதை தந்தை பெரியார் நன்கு உணர்ந்திருந்தார். 93 வயது வரை ஜாதியை ஒழிக்க இரவுபகலாக உழைத்தும், அவரால் ஒரு ஜாதியை கூட ஒழிக்க முடியவில்லை. ஒரு மேல்ஜாதி பெரியாரிஸ்ட் கூட கீழ்ஜாதிக்காரனுக்கு பெண் கொடுத்து சம்பந்தம் செய்யவில்லை. தப்பித்தவறி காதல் செய்து விட்டால், தண்டவாளத்தில் ரெண்டு துண்டாக தலித் கிடப்பான். பள்ளன், பறையன், சக்கிலியன், அருந்ததி என தலித்துக்குள்ளும் ஜாதி வெறி தலைவிரித்தாடுவதை மறுக்கமுடியாது.

  கிருத்துவத்திலும் பௌத்தத்திலும் ஜாதி வெறி அப்படியே இருக்கிறது. இஸ்லாத்தில் மட்டுமே ஜாதி சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தை தழுவிய ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரர், சத்திய வேதம் திருக்குரானை ஓதலாம், மனனம் செய்யலாம், இமாமாக முன்னின்று தொழுகை நடத்தலாம். அரபு நாடுகளில் ரோல்ஸ்ராய்ஸ் காரில் பள்ளிக்கு வரும் ஷேக்குகளும் இளவரசர்களும், சர்வசாதாரணமாக ஒரு இந்தியா பாக்கிஸ்தான் இமாமின் பின்னால் நின்று தொழுவதை காணலாம்.

  ஆகையால்தான் “இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு” என தந்தை பெரியார் அறிவித்தார்.

Leave a Reply