துணிக்கடைகளை, நகைக்கடைகளை நகருக்கு அப்பால் மாற்ற வேண்டும்!

பிரம்மாண்டமான துணிக்கடைகள் நிறைந்த நகரம் சென்னை

டி. நகரில் உள்ள கடைகளுக்கு சீல் வைத்தது சரியா?

-எஸ். கருத்தமுத்து, திருநெல்வேலி.

தியாகராயர்நகரில் மட்டுமல்ல, சவுக்கார்ப் பேட்டை போன்ற ஏரியாக்களிலும் முறையன்றி கட்டப்பட்ட கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருடத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ மட்டும்தான் நடுத்தர குடும்பங்கள் துணி எடுக்க முடியும். திருமணம் போன்ற விசேச நாட்களில் மட்டுமே நகைக்கடைகளுக்கும் செல்வார்கள்.

நகைக்கடைகளை நகருக்கு மத்தியில் வைத்துவிட்டு, மக்கள் அன்றாடம் உபயோகிக்கிற காய்கறி சந்தையை நகருக்கு ஒதுக்குப்புறமாக வைப்பது என்ன நியாயம்?

சென்னை புதுப்பேட்டையில் இருக்கிற காய்லாங்கடை நடத்துகிறவர்களும்,  அந்தக் கடையில் வாங்குபவர்களும் மிக எளிய மக்கள், அந்தக் கடைகளை காலி செய்து தாம்பரத்தை தாண்டி போக சொல்லியிருக்கிறார்கள். காயலங்கடைக்கே உரிய கலையழகை ஒழித்து, அவர்களை அகதிகள் போல் மாற்றுகிற திட்டமல்லவா இது?

உண்மையில் தாம்பரத்தை தாண்டி வெளியில் கொண்டுபோக வேண்டிய கடைகள், சென்னை நகரத்தின் மத்தியில் இருக்கிற பிரம்மாண்டமான நகைக்கடைகளும், துணிக் கடைகளும்தான். இவைகளை இடமாற்றினாலே போதும். நகரத்தின் நெரிசல் குறையும்.

ஆனால் அரசு அதை செய்யாது. ஏனென்றால் சென்னை போன்ற பெருநகரங்களை பெரிய முதலாளிகளுக்கும், அவர்களிடம் வேலை செய்கிற உயர் அதிகாரிகளுக்கு மட்டுமான நகரமாக மாற்றி வருகிறார்கள்.

அதனால்தான் எளிய மக்களை அப்புறப்படுத்துவது நடக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் அதிகமான விலையேற்றதில் நிலங்கள் விற்கப்படுகிறது, வாடகை கட்டுக்கடங்காமல் உயர்த்தப்படுகிறது.

வாடகை பிரச்சினையின் காரணமாகவே பல குடும்பங்கள் நகரத்தை காலி செய்து அவர்களாகவே, புறநகர் பகுதிக்கு சென்றுவிடுகிறார்கள். இன்னும் கொஞ்சநாட்களில் சொந்த வீடு வைத்திருக்கிற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் ‘நல்ல விலை வந்தது’ என்று வீட்டை விற்றுவிட்டு புறநகர் பகுதிக்கு சென்று விடுவார்கள்.

இனி சென்னை போன்ற பெரு நகரங்களில், கூலி வேலை செய்பவர்களும், தொழிலாளர்களும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இல்லையென்றால், அவர்களை சார்ந்திருக்கிற, அண்ணாச்சி மளிகைக் கடை, நாயர் டீ க்கடை, பாயோட கறி க்கடை இவைகளையும் காண முடியாது.

இவர்களை விரட்டி விட்டு, பன்னாட்டு கம்பெனிகளும், பெரும் முதலாளிகளும், அவர்களின் அதிகாரிகளும் மட்டும்தான் இருப்பார்கள். அவர்களுக்காக மட்டுமே, நட்சத்திர விடுதிகளும், கேளிக்கை அரங்குகளும் இருக்கும்.

‘ஷாப்பிங் மால்கள்’ என்ற பெயரில் அழுக்கான உடை கொண்ட தொழிலாளர்களை அனுமதிக்காத கடைகள், அதிகம் கட்டணம் கொண்ட திரையரங்குகள் என்று அதன் அறிகுறிகள் இப்போதே ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் டிசம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

சந்திரபாபு, பின்லேடன், ஜாதியா? வர்க்கமா? விக்ரம்,கே.வி. மகாதேவன்

பானுமதியும் பாபாவும், பெண்களும் ஆண்களும், கொடிய மிருகம், சமச்சீர் கல்வி, வைரமுத்து

‘அட்சய திரிதியை‘ நகை வாங்கினால் நல்லது

உறவுகளை உரசிப்பார்க்கும் தங்கம்

6 thoughts on “துணிக்கடைகளை, நகைக்கடைகளை நகருக்கு அப்பால் மாற்ற வேண்டும்!

  1. சென்னையில் போக்கு வரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் இந்த T . நகர் துணிக்கடைகளும், நகைக்கடைகளுமே. இந்த ஒரு கட்டுரையிலே மதிமாறன் அவர்கள் பிராமணர்களை இழுக்க வில்லை. உங்களால் இது போன்ற நல்ல படைப்புகளும் தர முடியும்.

  2. சென்னையில் இது பற்றி நீங்கள் பேசியது நினைவிற்கு வருகிறது

  3. மிக அவசியமான கட்டுரை… என் குடும்பத்தினரே மற்ற உறவுகளும், தெரிந்தவர்களும் சேர்த்து குறைந்த பட்சம் 500 பேர் கிண்டி மற்றும் வேளச்சேரி தாண்டி போய்விட்டார்கள். இப்பொழுது இருப்பது வசதி படைத்த நாடர்களும் மார்வாடிகளும் மற்றும் ஜெயின்களும்தான். என்னளவில் நான் சாதி மறுப்பு உடையவன் என்றாலும் வன்னியார்கள் தலித்துகள் (இதில் ஏழை பிராமணர்களும், முஸ்லிம்களும் கூட அடக்கம்) பெரும்பாலும் கிண்டி மற்றும் அம்பத்துர் கடந்து அகதிகளை போல குறைந்த வருமானத்தை வைத்துகொண்டு அலைகிறார்கள். இது என் மனதில் உள்ள அப்பட்டமான உண்மை.

  4. இன்னுமொரு செய்தி சொந்த இருப்பிடத்தை விட்டு ஒடிய திருவல்லிக்கேணி அகதிகளில் நானும் ஒருவன்

Leave a Reply

%d bloggers like this: