குரலிசை நாயகன் டி.எம்.சவுந்தரராஜனின் நினைவாக…

TMSசிவாஜி கணேசன் வெவ்வேறு உணர்வுகளுக்கு ஏற்ப எப்படி தன் முகபாவங்களை, உடல்அசைவுகளை; உணர்வுபூர்வமாக, இயல்பாக, மிகையாக வெளிப்படுத்தினாரோ அதுபோல், பாடல்களில் பல பாவங்களை தன் குரலால்; உணர்வுபூர்வமாக, இயல்பாக, மிகையாக நடித்துக் காட்டியவர் டி.எம்.எஸ்.

குரலிசை நாயகன் டி.எம்.சவுந்தரராஜனின் நினைவாக…

தங்கம் இதழில் வாசகர் கேள்விகளுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய பதில்களை மீண்டும் வெளியிடுகிறேன். விரிவாக பிரிதொரு சமயம் எழுதுகிறேன்.

*

டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாடத் தெரியாது: இளையராஜா அப்படியா சொன்னார்?

சிறந்த பாடகரான டி.எம்.சௌந்தரராஜனுக்கு பாவத்தோடு பாடத்தெரியாது என்று இளையராஜா சொன்னதால்தான் நீங்கள் அவரை சிறந்த பாடகராக குறிப்பிடவில்லையா?

என். இராமநாதன், திருநெல்வேலி.

இது தவறான தகவல். இளையராஜா அப்படி குறிப்பிடவில்லை. ’ஆண்குரல் என்றால் அது டி.எம்.எஸ் குரல்தான்’ என்று அவரை பாராட்டி எஸ்.பி. பாலசுப்பிரமணித்திடமே இளையராஜா குறிப்பிட்டு பேசியதை நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன்.

வெண்கல பாத்திரத்திம் இன்னொரு வெண்கல பாத்திரத்தோடு மோதிக்கொண்டால், ‘கணீர்’ என்ற ஓசையை தொடர்ந்து, அதன் பிறகு ஒரு வசீகர ஒலி எழுமே, அதுபோன்ற கம்பீரம் டி.எம்.எஸ்., குரல். இன்னும் சரியாக சொன்னால், நாம் எதிர்பாராத நேரத்தில் நம் காதருகே ஒரு வண்டு வேகமாக வந்து போகும் போது எழுப்புகிற உன்னத ஒலி டி.எம்.எஸ்., குரல். ‘நினைந்து நினைந்தென் நெஞ்சம் உருகுதே..’ போன்ற பாடல்களில் அதை உணரலாம்.

எவ்வளவு மேல போய் High Pitch ல பாடுனாலும் அந்தக் குரலின் கம்பீரம் குறையாது, ரிங்காரமிடும். Normal Pitch ல பாடும்போது அவர் குரலில் உள்ள Base, நாம் பாடல் கேட்கும் அறை முழுக்க நிரம்பி வழியும். அவ்வளவு இனிமையாக இருக்கும். ( மதன மாளிகையில்..’ மயக்கம் என்ன…’ ‘அழகிய தமிழ்மகள் இவள்..’ ‘உள்ளம் என்றொரு கோயிலிலே..’)

அவர் பாடிய பாடல்களை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. திருவிளையாடல் படத்தில், பாலமுரளிகிருஷ்ணா பாடிய ‘ஒரு நாள் போதுமா?’ பாடலைவிட, டி.எம்.எஸ். பாடிய ‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலில், படத்தில் வரும் காட்சியைப்போலவே, டி.எம்.எஸ்தான் ஜொலிக்கிறார்.

அவருடைய Voice Range அப்படியொரு சிறப்பு மிக்கது. அதுவே அவருக்கு Low Pitch ல் பாடுவதில் பிரச்சினையாகவும் இருந்திருக்கிறது. இதைத்தான் இளையாராஜா குறிபிட்டிருக்கிறார்.

அப்போது, சிவாஜிக்கு டி.எம்.எஸ்தான் பாடவேண்டும் என்பது விதி. ரிஷிமூலம் திரைப்படத்தில், நடுத்தர வயது தம்பதிகளுக்குள் romanse. இரவு படுக்கையறையில், தூங்கும் மகன் சத்தம் கேட்டு எழுந்து விடாமல், அவர்கள் இருவரும் பாடுவது போன்ற சூழல், ‘நேரமிது.. நேரமிது.. நெஞ்சில் ஒரு பாட்டெழுத..’

டி.எம்.எஸை மெல்ல சத்தம் குறைவாக பாட வைக்க இளையராஜா முயற்சித்திருக்கிறார். கடைசி வரை அவரால் முடியவில்லை. இனிமையாக பாடிய,  T.M.Sஆல், குறைந்த ஒலியில் பாட இயலவில்லை.

இப்போதுகூட, ‘நேரமிது.. நேரமிது.. நெஞ்சில் ஒரு பாட்டெழுத..’ பாடலை கேட்டுப் பாருங்கள்.

தூங்குற பையன் எழுந்து, ‘ஏப்பா.. இப்படி தூங்கும்போது பாட்டு பாடி அம்மாவ தொல்லை பண்ற..’ என்று கேட்கும் அளவிற்கு பாடியிருப்பார்.

*

எம்.ஜி.ஆர், சிவாஜி; டி.எம்.எஸ்குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா?

டி.எம்.எஸ், எம்.ஜி.ஆருக்கு பாடும்போது, மிகச் சாதரணமாக பாடியதாகவும், சிவாஜிக்கு பாடியபோது கஷ்டப்பட்டு, அடிவயிற்றிலிருந்து பாடியதாகவும் சொல்கிறார்களே?

என். முகமது, சேலம்.

“அப்படியெல்லாம் கெடையாது. நாங்க என்ன கொடுக்குறமோ அததான் பாடினார்.” என்று எம்.எஸ்.வியே சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். பாடல்களில் கமகம், சங்கதி, ஹை பிச் இந்த வகைகளில் பாடல்கள் அமையாது. பாடல்கள் அப்படி அமைந்தால், நுணுக்கமான பாவங்கள்காட்டி நடிக்க வேண்டிவரும். அது எம்.ஜி.ஆருக்கு அறவே பிடிக்காத விசயம்.

துள்ளல் இசையோடு, வேகமான டெம்போக்களில். FLAT NOTES களில்தான் அவர் பாடல்கள் அமையும். அதை பாடுவது பாடகர்களுக்கு சுலபம். (‘அழகிய தமிழ் மகள் இவள்..’ நெஞ்சம் உண்டு.. நேர்மை உண்டு..’ ஒரு பெண்ணைப் பார்த்து..’ பாரப்பா பழனியப்பா..’ நான் ஆணையிட்டால்..’).

அதனால்தான் எம்.ஜி.ஆர், பாடல் காட்சிகளில் முகபாவனைகளைவிட, அதிகம் கைகளை பயன்படுத்தினார். கைகளை சுழட்டி, சுழட்டி நடிக்கும் பாணியே இதுபோன்ற பாடல்களால்தான் அவருக்கு உருவானது.

அதற்கு நேர் மாறாக, சிவாஜிக்கு அமைந்த பாடல்கள் சங்கதி, கமகம், ச,ரி,க,ம,ப,த,நி என்று சுரங்களை சொல்லியும், தா, தை என்று ஜதிகளோடும். ஹை பிச், லோயர் பிச், நார்மல் பிச் என்று எல்லா வகையிலும் பல இசை நுணுக்கங்கள் அமைந்ததாக இருக்கும். அவர் நுணுக்கமாக நடிக்கக் கூடியவர் என்பதால் இசையமைப்பாளர்கள் அதுபோன்ற பாடல்களை உருவாக்கினார்கள். (‘பாட்டும் நானே…’ ‘எங்கே நிம்மதி..’)

அதனால்தான் டி.எம்.எஸ் பாடியதில் எம்.ஜி.ஆர்., சிவாஜி வித்தியாசத்தை உணர முடிந்தது.

அநேகமாக பாடல் காட்சிகளில் அதிக க்ளோசப்பில் நடித்த நடிகர் சிவாஜியாகத்தான் இருப்பார். சில நேரங்களில் ஒரிஜனலாக பாடிய, டி.எம்.எஸை விட இவர் ரொம்ப சிரமப்பட்டு பாடியது போலவும் மிகைப்படுத்திவிடுவார்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் 2011  சனவரி 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

எஸ். ஜானகியின் சுயமரியாதை!

‘சொன்னது நீதானா?..’ ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்..’ எப்போதும் ‘நெஞ்சம் மறப்பதில்லை..’

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

One thought on “குரலிசை நாயகன் டி.எம்.சவுந்தரராஜனின் நினைவாக…

Leave a Reply

%d bloggers like this: