தேசத் துரோகி – குருத் துரோகி பாரதிதாசனும் தேசப்பக்த அறிஞர்களும்

20FRERODE1_TAMILAN_2346295g
என்னுடைய ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி’ புத்தகத்தில் ஓர் இடத்தில்கூட பாரதிக்கு மாற்று பாரதிதாசன் என்று குறிப்பிடவில்லை. அப்படியிருந்தும் அறிஞர்கள், அவர்களின் விவாத வசதிக்காக, ‘‘இவர்கள் பாராட்டுகிற பாரதிதாசனே, பாரதியை புகழ்ந்தும், அவரை இகழ்ந்து பேசியவர்களை இகழ்ந்தும் பேசி இருக்கிறார். அதற்கு இவர்கள் என்ன சொல்கிறார்கள்?’’ என்று மிகப்பெரிய ‘பாயின்டை’ எடுத்து விட்டு மடக்கி விட்ட பாணியில்.

பாரதியின் சிஷ்யனான பாரதிதாசன், பாரதியை தனிப்பட்ட முறையில் பாராட்டிப் பேசியதைத் தவிர, மற்றபடி பாரதியின் கருத்துகளை, தத்துவங்களைப் பின்தொடர்ந்து எழுதியிருக்கிறாரா? இல்லை.
குரு துரோகியாகி, குருநாதன் எழுத்துகளுக்குப் பதிலடி தந்திருக்கிறார்.

‘திராவிடம்’, ‘ திராவிடன்’ என்று எழுதுவதற்கே கை நடுங்கி, திராவிடர்கள்’ என்று பேசினால் ‘தேசத் துரோகிகள்’ என்று வசை பாடிய பாரதியின் சிஷ்யனான பாரதிதாசன், தன் இருப்பை பாரதிக்கு நேர் எதிரான திராவிட அரசியலில்தான் வைத்திருந்தார்.
பாரதியின் வார்த்தைகளில் சொல்வதானால் ஒரு தேசத் துரோகியாகத்தான் இருந்தார்.
இன்னும் சொல்லப் போனால், பாரதியின் எழுத்துக்களுக்கான மறுப்பை முதலில் எழுதியது பாரதிதாசன்தான்.

அறிஞர் பெருமக்கள், ‘ஆரியன்’,‘ஆரியம்’ என்பதை உயர்ந்தவர் & உயர்ந்தது, மேன்மையானது என்கிற பொருளில்தான் பாரதி பாடியிருக்கிறான். அது, பார்ப்பனர்களைக் குறிக்கிற சொல் அல்ல என்று வாதிடுகிறார்கள். ஆனால், சிஷ்யன் தன் குருநாதனுக்கும், அறிஞர்களுக்கும் சேர்த்தே இப்படிப் பதில் சொல்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களை தன்னிலும் மட்டமானவர்களாகப் பார்க்கும் பிற்படுத்தப்பட்டவர்களைக் குறிக்கிற இடத்தில்,
கொல்லா விரதம் கொண்டோர்
கொலை செய்யும் ஆரியர்தம்
சொல்லுக்கிசைந்தாரடி
என்று குறிப்பிடுகிறார்.
இதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் யாரும் ஆரியர்கள் அல்ல; பார்ப்பனர்கள்தான் ஆரியர்கள் என்று தெளிவாகச் சொல்கிறார்.

இன்னொரு இடத்தில்,
ஏமாற்றி மற்றவரை ஏட்டால் அதை மறைத்துத்
தாமட்டும் வாழச்சதை நாணா ஆரியத்தை
நம்புவார் நம்பட்டும் நாளைக்குணர்வார்கள்
அம்பலத்தில் வந்ததின்றே ஆரியரின் சூழ்ச்சியெல்லாம்
என்கிறார்.
அன்று ‘ஆரியர் என்கிற பார்ப்பனர்கள்தான் உயர்ந்தவர்கள்’ என்று பாரதி சொன்னதற்கும்,
இன்று ‘ ஆரியர் என்று பாரதி, பார்ப்பனர்களைக் குறிப்பிடவில்லை. உயர்ந்தவர்களை, மேன்மையானவர்களைச் சொல்கிறான்’ என்று அறிஞர்கள் சொல்வதற்கும் பதிலடிதானே இது.

‘இந்தியாவில் பிறந்தவர்கள் எல்லோரும் ஹிந்துக்கள்’ என்று எழுதிய பாரதிக்குப் பதிலாக,
ஏசு மதத்தாரும் முஸ்லீம்கள் எல்லாரும்
பேசில் திராவிடர் என் பிள்ளைகளே என்றுணர்க
என்று எழுதுகிறார் பாரதிதாசன்.
இந்தக் குரு துரோகம் எப்படி நேர்ந்தது?
*
01.01.2004 அன்று நான் எழுதியது. ‘பாரதி பக்தர்களின் கள்ளமவுனம்’ புத்தகத்திலிருந்து. அங்குசம் வெளியீடு.

பாரதி-தாசன்; பி.ஜே.பி, சி.பி.எம், ஆர்.எஸ்.எஸ், சி.பி.ஐ

‘பாரதி, பாரதிதாசன் ஒப்பீடு -சுற்றுலா பொருட்காட்சிதான் தமிழர் திருநாள்’

புதிய தலைமுறையின் ‘நவீன’ பார்ப்பனியம்

3 thoughts on “தேசத் துரோகி – குருத் துரோகி பாரதிதாசனும் தேசப்பக்த அறிஞர்களும்

  1. என்று ஓழியும் இந்த ஆரிய திராவிட வாதம்

  2. சார் நாம ஆயிரம் சொல்லி என்ன பிரயோஜனம் இருக்கு..இவங்களே பாரதிக்கு ”தாசன் ” என்று தானே வைச்சுகுறாங்க..இவங்களுக்கு அம்பேத்கர்தாசன்
    என்று வைத்துகொள்ள மனம் வருமா ?..ஒரு கவிஞ்சனாவது அம்பேத்கரை புகழ்ந்து பாடி எழுதி இருகாங்களா??…விடுங்க சார் பாரதி தாசனும் ஒரு பார்பன கூஜா தான் …

  3. 2004 ஆண்டு பதித்தது. புதிய சரக்கு ஒன்றும் இல்லையா?

    இப்படி சரக்கு இல்லாத போதேனும் கொஞ்சம் புதிய விஷயங்களை, புதிய ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் சிந்தனைகள் குறித்து எழுதலாமே. ஐம்பது, நூறு ஆண்டு சிந்தனைகளை சொற்களைப் பழித்தது போதும்; கொஞ்சம் இந்த நாளைக்கு ஏற்ற புதிய முயற்சிகள் செயல் திட்டம் பற்றி பதிவுகள் போடுவோமே!
    உதாரணமாக தலித் கோடீஸ்வரகள் சங்கம் என்று பேசப்பட்டதே (Dalit MillionairesClub) அதைப் பற்றி, அதன் தலைவர்கள் வெற்றி பெற்ற முயற்சிகள் அவர்களை ஒட்டி இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதல்கள் போன்றவை பதிவுகள் ஆகுமே.

Leave a Reply

%d bloggers like this: