‘இந்தியா முழுமைக்கும் பெரியாரின் சிந்தனைகள் தேவை’

logo1
விடியல்: தமிழகத்தில் இந்து அமைப்புகளின் ஆதிக்கம் வளராமல் இருந்ததற்கு பெரியாரின் கருத்துகள் முக்கிய பங்காற்றின என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் “பெரியார் கருத்துகளின் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருகிறது, இனி பெரியார் பிறந்த பூமி என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்க முடியாது” என்று இந்து அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன் எதார்த்தம் என்ன?

மதிமாறன்: பெரியாரின் காலம் முடிந்துவிட்டது என்று இவர்கள் சொல்வதே பெரியார் இன்றும் உள்ளார் என்பதற்கான சாட்சிதான். அவரின் காலம் முடிந்துவிட்டது என்றால் எதற்காக இன்னும் அவரை குறித்து இவர்கள் பேச வேண்டும்? இந்து அமைப்புகளை அவர் இன்றும் உறுத்திக் கொண்டிருக்கிறார்.
அவர்கள் கட்டமைக்க முடியாத அளவிற்று நெருக்கடிகளை கொடுத்து கொண்டிருக்கிறார் என்பதனால்தான் பெரியாரின் காலம் முடிந்துவிட்டது என்று இவர்கள் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் கருத்துகள் இன்னும் வலுவோடு இருக்கின்றன என்பதற்கு இவர்களே சாட்சியாக இருக்கிறார்கள்.

விடியல்: பெரியாரை ஒரு கடவுள் மறுப்பாளர் என்று சித்தரிக்கும் வேலைகளும் நடக்கின்றன. கடவுள் மறுப்பாளர் என்ற ஒரு வரையறைக்குள் பெரியாரை சுருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

மதிமாறன்: பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர்தான். ஆனால், சõதி அமைப்பின் காரணமாக அவர் கடவுளை மறுத்தார். முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கூட கடவுள் இருக்கிறது. பெரியாரின் கடவுள் எதிர்ப்பு முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாதிப்பாக இல்லாதபோது ஏன் இந்துக்களுக்கு மட்டும் அது பிரச்சனையாக இருக்கிறது? பெரியார் சாதி கட்டமைப்பை எதிர்த்ததால்தான் இவர்கள் மட்டும் பெரியாரை எதிர்க்கிறார்கள்.

பெரியார் என்பவர் உருவாவதற்கு கடவுள் மறுப்பு பிரதான காரணம் கிடையாது. இதனை பெரியாரின் காங்கிரசுக்கு முன் இருந்த வாழ்க்கையிலும் காங்கிரசில் இருந்த காலத்திலும் அதனை விட்டும் வெளியேறிய காலத்திலும் நாம் காணலாம். ஆதிக்க சாதி எதிர்ப்பு குணாம்சம் அவரிடம் இயல்பாகவே இருந்தது.

ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்றவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக பெரியார் காங்கிரசை விட்டு வெளியே வரவில்லை. ஆனால், அவர்கள் சாதி உணர்வோடு இருக்கிறார்கள், சாதி வெறியோடு இருக்கிறார்கள், பார்ப்பனர் அல்லாதவர்களின் கல்வி, வேலைவாய்ப்புகளை தடை செய்கிறார்கள் என்று கூறியே வெளியே வந்தார்.

இந்து சமூக அமைப்பில் சாதி கட்டமைப்பின் அடிப்படையிலேயே கடவுள் நம்பிக்கை இருப்பதால் அதனை எதிர்க்கிறார். அவருடைய போராட்டங்களில் முதன்மையானது சாதி எதிர்ப்பு போராட்டங்களே. இந்திய சமூக அமைப்பில் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவரின் அடிப்படை நோக்கம்.

விடியல்: தமிழகத்தில் பெரியாருக்கு எதிரான கீழ்த்தரமான விமர்சனங்கள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளன. ஆனால், பெரியாரை பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்களிடமிருந்து இதற்கான எதிர்ப்புகள் பெரிய அளவில் வெளிப்படுத்தப்படவில்லை. இவர்கள் பெரியாரின் கொள்கைகளை முன்னெடுத்து செல்வார்களா என்ற சந்தேகம் எழுகிறதே?

மதிமாறன்: என்னை பொறுத்தவரை திராவிடர் கழகம், திராவிட விடுதலை கழகம் போன்ற இயக்கங்களை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்துதான் வருகிறார்கள். ஆனால், அரசியல் கட்சிகள் இதனை செய்யவில்லை என்று வேண்டுமானால் கூறலாம். இதுவரை அவர்கள் பெரியாரின் கொள்கைகளை கொண்டு செல்லவில்லை என்பதுதான் உண்மை. அப்படியிருக்க இப்போது அதனை செய்வார்கள் என்பதை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

ஓரளவு பெரியார் கருத்துகளுடன் உள்ள நபர் என்று கலைஞர் கருணாநிதியை மட்டும்தான் கூற முடியும். ஆனால், தி.மு.க.வின் நிலைபாடாக இது மாறவில்லை. கலைஞருடன் அது தேங்கி நிற்பதாகவே நான் உணர்கிறேன். கலைஞர் கொண்டுள்ள பெரியாரின் கருத்துகளுக்கு அவர் கட்சியிலேயே பெரிய அளவில் ஆதரவு இல்லாதுதான் அவர் அமைதியாக இருப்பதற்கான காரணமாக இருக்க முடியும்.

சுதந்திரமான கருத்துகளை சொல்ல முற்படும்போது இதுவே அவருக்கு தடையாக அமைகிறது என்று எனக்கு தோன்றுகிறது. கலைஞரை தாண்டி இந்த கருத்துகள் செல்லாதது ஒரு அரசியல் தேக்க நிலையை காட்டுகிறது.

பெரியாரை குறித்து மட்டுமல்ல, அண்ணாவை குறித்து கூட இன்றைய தி.மு.க.வினர் முறையாக அறியவில்லை. அவர்களின் வாழும் தலைவரான கருணாநிதி குறித்த புரிந்துணர்வு இல்லாததே இந்த நெருக்கடிக்கு காரணம். அவர்கள் பெரியாருக்கு அருகில் வரவில்லை என்பதில் நமக்கு வருத்தம் இல்லை. ஆனால், அவர்கள் கலைஞர் அருகிலேயே வரவில்லையே என்பதுதான் வருத்தமாக உள்ளது.

ஆனால், திராவிடர் கழகம் போன்ற பெரியார் இயக்கங்கள் தங்கள் பணிகளில் தீவிரமாகவே உள்ளனர். கொளத்தூர் மணி போன்றவர்கள் பெரியார் மற்றும் அம்பேத்கரை இணைத்துக் கொண்டு செல்வதை நான் ஆரோக்கியமானதாகவே பார்க்கிறேன்.

விடியல்: வளரும் தலைமுறையிடம் பெரியாரின் கொள்கைகளை கொண்டு செல்வதற்கான வேகம் எந்தளவிற்கு உள்ளது?

மதிமாறன்: தனி நபர்களின் முயற்சி இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த முயற்சிகள் இன்று பெரிய வட்டத்தை அடைந்துள்ளன. அமைப்புகளும் இந்த வேலையை செய்து வருகின்றன. ஆளும் வர்க்கத்தினர் இந்த வேலையை செய்வார்கள் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. தமிழகத்தில் உள்ள முற்போக்காளர்களின் அடிப்படை மற்றும் முழுமையான தகுதி அவர்கள் தங்களை பெரியார் இயக்கவாதியாக மாற்றிக் கொள்வதுதான். இதுதான் அடுத்த கட்டத்திற்கு நம்மை கொண்டு செல்லும்.

இன்றைய சூழலில் பெரியார் குறித்த புரிதல் சிறுபான்மை மக்களிடம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். மதம் சார்ந்து தங்களை முன்னிலை படுத்துவதும் மதம் சார்ந்து தொடர்புகளை ஏற்படுத்துவதும் அரசியல் ரீதியாக எந்த பலனையும் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்காது. சமீப ஆண்டுகளில் முஸ்லிம்களின் மத்தியில் ஏராளமான அமைப்புகள் தோன்றியுள்ளன. ஆனால், இதே காலக்கட்டத்தில்தான் முஸ்லிம்களுக்கு எதிரõன வன்முறைகளும் அதிகரித்துள்ளன.

இஸ்லாமிய அமைப்புகள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை இந்து அமைப்புகள் பார்க்கிறார்கள். அதன் அடிப்படையில் தங்கள் அரசியல் காய்களை நகர்த்துகிறார்கள். ஜனநாயக மற்றும் இந்து தீவிரவாதத்தை எதிர்ப்பவர்களுடன் இஸ்லாமியர்கள் கைகோர்க்க வேண்டும். இதன் மூலம்தான் இந்து தீவிரவாதத்தை எதிர்கொள்ள முடியும்.

இன்றைய சூழலில் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பெரியார் தேவைப்படுகிறார். அவரின் கொள்கைகளை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.
பேட்டி: ரியாஸ்
(‘விடியல் வெள்ளி’ செப்டம்பர் 2015 இதழில் வெளியான பேட்டி)

One thought on “‘இந்தியா முழுமைக்கும் பெரியாரின் சிந்தனைகள் தேவை’

 1. /// இஸ்லாமிய அமைப்புகள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை இந்து அமைப்புகள் பார்க்கிறார்கள். அதன் அடிப்படையில் தங்கள் அரசியல் காய்களை நகர்த்துகிறார்கள். ஜனநாயக மற்றும் இந்து தீவிரவாதத்தை எதிர்ப்பவர்களுடன் இஸ்லாமியர்கள் கைகோர்க்க வேண்டும். இதன் மூலம்தான் இந்து தீவிரவாதத்தை எதிர்கொள்ள முடியும். ///
  —————————–

  https://upload.wikimedia.org/wikipedia/commons/2/2c/Periyar_with_Jinnah_and_Ambedkar.JPG

  மேலேயுள்ள போட்டோவை பார்த்தால், இந்து வெறியனுக்கு வேட்டி நனைந்துவிடும்.

  எனக்கு ஒரு சின்ன ஆசை. மேலேயுள்ள படத்தை கலர் பிரிண்டில் போட்டு பெரிய போஸ்டராக திரு.வீரமணியின் தலைமையில் பெரியார் திடலில் வெளியிட வேண்டும். இந்த விழாவுக்கு, கலைஞர், அனைத்து இஸ்லாமிய தலைவர்களையும் தலித் தலைவர்களையும் அழைக்க வேண்டும். ஒவ்வொரு தமிழக முஸ்லிம் வீட்டு சுவரிலும், பிரேம் போட்ட இந்த கலர் போட்டோ தொங்கும்.

  சுவரை வைத்துத்தான் சித்திரம் வரையமுடியும். ஏழை தலித் மற்றும் இஸ்லாமிய வியாபாரிகள் மலிவான விலையில் இந்த போட்டோக்களை வாங்கி விற்று பயனடையலாம். ஒரு போட்டோ நூறு ரூபாய் என வைத்தாலும், ஒரு கோடி போட்டோவுக்கு 100 கோடி ரூபாய் வரை தமிழகத்தில் மார்க்கெட் உள்ளது.

Leave a Reply

%d bloggers like this: