மோகனாம்பாளும் நானும்

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில், ஒரு திரைப்படம் மீண்டும் மீண்டும் பார்க்கப் பட்டிருக்கிறது. இப்போதும் பார்க்கப்படுகிறது.
மிக அதிமாக பார்க்கப்பட்ட சினிமா, தமிழறிஞர் இசை வல்லுநர் இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில்1968 ஆம் ஆண்டு வெளியான தில்லானா மோகனாம்பாள்

இந்தப் படத்தின் சிறப்பை பலகோணங்களில் விரிவாகப் பேசமுடியும்.

  1. திரைக்கதை சிறப்பு 2. காதபாத்திரங்களின் வடிவமைப்பு 3. எப்போதும் பார்த்தாலும் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிற வண்ணம் 4. அந்த வண்ணத்தை அள்ளித் தெளித்த கலை மற்றும் காஸ்டியும் சிறப்பு. நேர்த்தியான மேக்கப்.
  2. கே.வி. மகாதேவனின் பாடல்கள் 6. பாடல் காட்சி படமாக்கிய நுட்பம் 7. பாடல் காட்சிகளில் சிவாஜி பாலையா பத்மினி மனோரமா action – reaction.
    ஒரே ஒரு frameல் வருகிற துணை நடிகர்களின் நேர்த்தி.
  3. ஒவ்வொரு பாடல்களுக்குள்ளும் ஒரு கதை சொல்லும் அழகு.

உதாரணமாக,
மோகனாம்பாளின் நாட்டியத்தைப் பார்ப்பதற்குச் சிக்கல் சண்முகசுந்தரம் குழுவைச் சேர்ந்தவர்கள், ரகசியமாக ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் என எல்லோரும் ஆஜராகி இருப்பார்கள்.

தன் காதலன் சண்முகசுந்தரம் மறைந்திருந்து பார்க்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட மோகனாம்பாள் மகிழ்ச்சியும் பெருமையும் கலந்த உணர்வுகளோடு பாடலுடன் கூடிய ஆடலை நிகழ்த்துவாள்.

மோகனாம்பாளின் ஒவ்வொரு அசைவிலும் அவள் உடல் மொழியிலும் தன் காதலன் தனக்காகவே வந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட பூரிப்பும் கர்வமும் கலந்து இருக்கும். அந்த பாவங்களில் அழகும் நளினமும் கர்வமுடன் கூடிய காதலும்.

ஜனரஞ்சகமான ஆனால் கிளாச்சிகள் அசைவுகள், அட்டகாசமான ஸ்டைல்.
பத்மினி நாட்டியத்தின் நுட்பங்களை நன்கு தெரிந்தவர். ஆனாலும் அதை எளிமையாக்கி நாட்டிய நுணுக்கங்கள் தெரியாத எளிய ரசிகர்களையும் ரசிக்க வைத்தவர். இந்தப் பாடலில் அதை மிகச் சிறப்பாகச் செய்திருப்பார்.

“எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்..” என்று துவங்குதற்கு முன்பு, முடியும் ‘ஜதி’ யின் போதே, இயக்குநர் ஏ.பி. நாகராஜன், சண்முகசுந்தரத்தைத் தனியாக தூணூக்குப் பின் நகர்த்தி ‘க்ளோசப்’பிறகு தயார் செய்துவிடுவார்.
மீண்டும் “எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்..” இப்போது சண்முகசுந்தரத்திற்கு க்ளோசப்.

‘இந்தப் பெண் என்னை நினைத்துத் தான் பாடுகிறாள். எனக்காகத் தான் ஆடுகிறாள். இந்தப் பேரழகியால் நான் காதலிக்கப் படுகிறேன்’ என்கிற பெருமிதம் பூரித்து வழிய, சிவாஜி கணேசன் ஒரு உலக நடிகன் என்பதை நிரூபித்திருப்பார்.

ஒரு பெரிய சபையில் எல்லோருக்காகவும் நிகழ்த்தப்படுகிற தன் கலையை, யாருக்கும் தெரியாமல் அப்படியே தன் காதலனுக்குச் சமர்ப்பணமாக்குகிற நுட்பம். அதுதான் இந்தப் பாடலின் அழகு.

மானாட.. மலராட.. மதியாட.. நதியாட.. என்ற வரியின் தொடர்ச்சியாக “எனை நாடி இதுவேளை துணையாக ஓடி வருவாய்..” என்ற வரியின்போது தன்னை மறந்து சிவாஜி, தன் முன் அமர்ந்திருக்கும் பாலையா தோள் மீது கை வைப்பார்.

பாலையா அந்த விரல்களைப் பார்த்தவுடனேயே சிவாஜி கணேசனின் முகத்தைப் பார்த்தது போன்ற அதிர்ச்சியை வெளிப்படுத்துவார்.

தவில் வாசிப்பவருக்கு நாதஸ்வரம் வாசிப்பவரின் விரல்கள், அவரின் முகத்தை விட அதிக பரிச்சியம் அல்லவா?
தவில் வாசிப்பவராக வரும் பாலையா, அதனால்தான் நாதஸ்வரம் வாசிப்பவராக வரும் சிவாஜியின் விரல்களைப் பார்த்தவுடன் அப்படித் திடுக்கிடுவார்.

  1. சண்முகசுந்தரம் வழியாக தில்லானா மோகனாம்பாளை பார்ப்பது. 9. மோகனாம்பாள் வழியாக 10. ஜில் ஜில் ரமாமணி பாத்திர படைப்பின் உன்னதம்.
  2. ஜில்லாக வரும் மனோரமா எனும் உலக நடிகையின் பேராற்றல்

12 இந்தப்படத்தை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிற சமூகநீதி அரசியல்.

மோகனாம்பாளை சுற்றிக் கட்டப்பட்ட கற்பொழுக்கம். மன்னரே காலடியில் வீழ்ந்தாலும் அதைத் தட்டி விட்டுப் போகிற குணம்.
மோகனாம்பாளை எப்போதும் சந்தேகப்பட்டு கோபத்தோடு அவளை வார்த்தைகளால் துன்புறுத்துகிற காதலன் சண்முகசுந்தரம்.

நாட்டியம், நாதசுர, தவில் கலைஞர்கள் மீது கால காலமாகச் சுமத்தப்பட்ட தேவதாசி முறைக்கு எதிரான கலகக் குரல் அந்த கற்பொழுக்கமும் சந்தேகமும்.
அந்தப் பாத்திரங்களின் உளவியல் அதுதான்.

கற்புக்கரசி மோகனா சந்தேகப் பேர்வழி சண்முகசுந்தரம். இங்கே கற்பும் சந்தேகப்படுதலும் அடிமைத்தனமல்ல. சுயமரியாதை.
மோகனா, சண்முகசுந்தரம் பாத்திரப் படைப்பு முழுக்க முழுக்க சுயமரியாதையின் உச்சம்.

வரலாற்று ரீதியான பதிலடியாக, வைத்தி கதாபாத்திரத்தை வில்லனாக, பிம்ப்பாக ‘எனக்கு இரண்டெழுத்தில் இன்னொரு பெயர் இருக்கு. இரண்டெழுத்தும் ஒரே எழுத்துதான்’ என வசனம் வைத்த துணிச்சல்.

  1. பரதநாட்டியத்திற்குத் தோதாக எப்போதும் தவில், நாதஸ்வரத்தை வைக்க மாட்டார்கள். மிருதங்கம், ஜதி தான் பிரதானமாக இருக்கும்.

நாதஸ்வரம், தவில் வைத்தால் அது தரம் குறைந்தது என்ற கண்ணோட்டம் உண்டு. இன்னும் சரியாகச் சொன்னால் இரண்டையும் கரகாட்டத்திற்குத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ஏன் பரதநாட்டியத்திலிருந்து தவிலும் நாதஸ்வரமும் அப்புறப்படுத்தப்பட்டது?
பரதநாட்டியத்தை இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆடியபோது தவிலும் நாதஸ்வரமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

ஆரியர்கள் பரதநாட்டியத்தைக் கைபற்றிய பிறகு அவர்கள் செய்த முதல் காரியம் நாதஸ்வரத்தையும் தவிலையும் அப்புறப்படுத்தியதுதான்.

அதே தாளம், ராகம், அதே ஏழு சுவரங்கள் அப்படியே எல்லாத் தரமும் இருந்தும் ஏன் அப்புறப்படுத்தினார்கள்?
கர்நாடக சங்கீத அம்சங்கள் முழுமையாக நிறைந்த நாதஸ்வரத்தையும் தவிலையும் அவர்கள் தீவிரமாக ரசிப்பார்களே தவிர, ஒரு போதும் அதை வாசிக்க மாட்டார்கள்.

இவை இரண்டும் கல்யாண ஊர்வலம், சாமி ஊர்வலம் என்று தெருக்களிலும் வாசித்து எளிய மக்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது என்பதினாலும்,
இரண்டையும் வாசிப்பதற்கு அதிகமான உடல் உழைப்பும், சக்தியும் செலவழிக்க வேண்டும் என்ற இன்னொரு முக்கியக் காரணமும்.

தில்லானா மோகனாம்பாளில் பரதநாட்டியத்திற்கு இணையாக நாதஸ்வரத்தையும் தவிலையும் முன்னுறுத்தியில் இருக்கிறது, ஏ.பி. நாகராஜனின் அரசியல் கண்ணோட்டம்.

பரத நாட்டியம், கர்நாடக இசையில் ஆரியர்கள் செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்தபோதும்; தில்லானா மோகனம்பாள் படத்தில் சிவாஜி குருப், பத்மினி குருப் இரண்டிலும் அவர்கள் ஒரு கதாபாத்திரம்கூட இல்லை.

படத்தில் தொடர்ந்து சிண்டு முடித்து வில்லத்தனம் செய்கிற ‘வைத்தி’ கதாபாத்திரத்திரம் ஆரிய அடையாளம் கொண்டது. அதுவும் ஒரு ஆரியப் பின்புலம் கொண்டவரையே நடிக்க வைத்துக் காட்டியதிலும் இருக்கிறது, இயக்குநர் ஏ.பி. நாகராஜனிடம் பெரியாரின் தாக்கம்.

பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே தன்னைப் புறக்கணித்தவர்களிடமும் எதிர்த்தவர்களிடமும் கூட ஒளியைப்போல் ஊடுருவினார் என்பதற்குத் தில்லானா மோகனாம்பாள் படமும் சாட்சி. ஏ.பி. நாகராஜன் பெரியார் எதிர்ப்பு மா.பெ.சியின் கூட்டாளி.

  1. இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தாலும்,
    தமிழறிஞர் நாடக மேதை சங்கரதாஸ் சுவாமிகள் நாடக சபா எழுத்தில் நிகழ்த்தப்படுகிற எளிய மக்களுக்கான கலையைக் கலைஞரை கேலியாக, தரம் குறைந்ததாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
  2. மொத்தக் குற்றச் சுமையையும் மோகனாம்பாளின் தாயார் வடிவாம்பாள் மீது சுமத்தியது படத்தின் அடிப்படைக் கருத்திற்கே எதிராக அமைந்தது.
  3. 1968 ஆம் ஆண்டுக்குப் பின் வந்த தமிழ் சினிமாவில் தில்லானா மோகனாம்பாளின் தாக்கம்.

கரகாட்டக்காரன், தில்லானா மோகனாம்பாளின் கிராமிய வடிவம். சங்கமம்; கரகாட்டக்காரன், தில்லானா மோகனாம்பாளின் கதம்பம்.

தில்லானா மோகனாம்பாள் பற்றி விரிவாகச் சுவாரஸ்யமாகக் காட்சிகளின் விளக்கங்களோடு பேசலாம்.
அதற்குரிய சபை, நிகழ்ச்சியை நவீனமாக நடத்துகிற ஆற்றல் பெற்ற நிறுவனம் தயார் என்றால், நான் எப்போதும் ரெடி-வே. மதிமாறன்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading