அம்பேத்கர் திரைப்படம்: காணக் கிடைத்த விடுதலை ஒளி

-யாழன் ஆதி

கவிஞர் யாழன் ஆதி ‘தீராநதி’ இதழில் எழுதியதை இங்கு பிரசுரிக்கிறேன்.

*

டர்ந்த வனத்தில் பசியோடு அலைகின்ற சிங்கத்தைப் போல, சாதிய கோட்பாடுகளால் இறுகக் கட்டப்பட்ட ஒரு சமூகத்தில் சாதியை ஒழித்து மனித மாண்பை வலியுறுத்தும் போராட்டத்தை இடையறாது நடத்தி தன் குடும்பம், படிப்பு,  வாழ்க்கை அனைத்தையும் அர்ப்பணித்த ஒரு மாமனிதர் அம்பேத்கர்.

1928 ல் இந்தியாவின் சட்டவரைவியலுக்காக ஆங்கில அரசு அமைத்த சைமன் குழு காங்கிரஸால் புறக்கணிக்கப்பட்ட பிறகு இந்தியாவிலிருக்கும் அனைத்துத் தரப்பினையும் அழைத்துப்பேச இலண்டனில் வட்டமேசை மாநாட்டை 1930ம் ஆண்டு நவம்பர் 12 முதல் 1931 ஜனவரி  19 வரை நடத்தியது இங்கிலாந்து அரசு. அந்த மாநாட்டில் காங்கிரஸ் பேரியக்கம் கலந்துகொள்ளவில்லை.  ஆனால் அம்மாநாட்டில் ஆங்கில அரசால் அழைக்கப்பட்ட  இந்து மகாசபையின் தலைவர் டாக்டர் மூஞ்சே, இந்து மிதவாதக் கட்சித்தலைவர்களான ரைட்  ஆனரபில் சீனிவாச சாஸ்த்திரி, சர். தேஜ் பகதூர்  சாப்ரூ,   எம் .ஆர். ஜெயகர் தாழ்த்தப்பட்டோர்களின் பிரதிநிதிகளாக அம்பேத்கர், ரெட்டமலை சீனிவாசன் மற்றும் இசுலாமியர்கள் ,சீக்கியர்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அம்மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பி.எச்டி பட்டம் பெற்றவர் அம்பேத்கர் மட்டுமே. அவர் மூன்று கண்டங்களில் படித்தவர். அவருடைய படிப்பும் அறிவும் அவருக்கு மட்டுமே அவர் பயன்படுத்தியிருப்பாரே என்றால் அவர்தான் இந்தியாவின் முதல் செல்வந்தராகக் கூட அவருக்கு வாய்ப்பிருந்திருக்கும்.

ஆனால் யார் ஒருவர் தன்னுடைய திறமையையும் கல்வியையும் நேரத்தையும்  சமூக மக்களின் மேம்பாட்டுக்காக பயன் படுத்துகின்றார்களோ அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்னும் கருத்து அவருக்குள் இருந்ததால் அவர் தன்னுடைய அறிவை  தன் மக்களுக்காக பயன் படுத்தினார். அவர் ஒருவரின் போராட்டமும் அறிவுச் சார்ந்த செயல்பாடுகளும்தான் இன்று கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்டவர்களை ஓரளவு தலைநிமிர செய்திருக்கின்றது. இந்தியாவின் அறிவுலகத்திற்கு அம்பேத்கர்  ஓர் அடையாளமாக இருந்தார்.

வழக்கத்தைப் போலவே  இந்தியாவில் அம்பேத்கரும் மிகத்தாமதமாகவே புரிந்துக்கொள்ளப்பட்டு வருகின்றார். காலத்தின் நீண்ட வற்புறுத்தலாலும் தேவையினாலும் அம்பேத்கரின் பணியும் அவரின் எழுத்தும் இன்றைய அறிவாளர்களால் அரசியல் இயக்கங்களால் தேடப்படுக்கின்றன.  இந்தச் சூழலின் பின்புலத்தில்தான் அம்பேத்கர் திரைப்படத்தை நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு என்பது  இந்தியாவில் நிலவும் சாதிகளை ஒழிக்கும் வரலாறு. விசாவுக்காக காத்திருத்தல் என்று அம்பேத்கரால் எழுதப்பட்ட கட்டுரையில் அவர் குழந்தைப்பருவத்தில் அடைந்த சாதிய ஒடுக்குமுறைதான் அவர் படித்து முடித்த பிறகும் தொடர்ந்தது.  தன்  பணியினை  தன் வாழ்விலிருந்தே தருவித்துக் கொண்டவர் அவர்.

காந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த கருத்தியல் ரீதியான வேறுபாடு என்பது அனைவரும் அறிந்ததே. காந்தியின் தேசமாகயிருக்கும் இங்கிருந்து அம்பேத்கர் என்னும் ஆளுமையின் வரலாற்றை சரியாக பதிவாக்குவார்களா என்னும் அய்யம் அனைவருக்கும் இருந்தது. ஆனால் இயக்குனர்   ஜாபர் பட்டேல்  அந்த அய்யத்தினை த்ன்னுடைய சிறந்த இயக்கத்தால்  போக்கினார் என்பதுதான் உண்மை. ஃப்ரீ பிரஸ் ஜர்னலின் முன்னாள் ஆசிரியர்  அரு சாது, அம்பேத்கரியல் ஆய்வாளர்  ஒய்.டி . பாட்கே ஆகியோர் திரைக்கதை உருவாக்கத்தில் பங்காற்றியதுகூட இந்தப்படத்தின்  கூடுதல் பலமாகக் கருதப்பட்டது.

அம்பேத்கரின் நூற்றாண்டு நினைவாக (1891 – 1956) தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் இத்திரைப்படத்தைத் தயாரித்தது. இப்படத்திற்காக 1991 ம் ஆண்டு மகாராஷ்டிர அரசு 7.75 கோடிகளை வழங்கியது. ஆங்கிலத்தில் நேரிடையாக எடுக்கப்பட்ட இப்படம்  1999ல் ஆங்கிலத்திலும் 2000ல் இந்தியிலும்வெளியிடப்பட்டது, பிற இந்திய மொழிகளிலும் இப்படம்  மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 1999 ல் வெளிவந்த போது அப்படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. அவ்வாண்டின் சிறந்த நடிகராக மம்முட்டி தேர்ந்த்டுக்கப்பட்டார். ஆங்கிலத்தில் வந்த சிறந்த திரைப்படம் என்னும் விருதினைப் பெற்றது. படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றிய நிதின் சந்திரக்காந்த் தேசாய் சிறந்த கலை இயக்குனருக்கான  தேசிய விருதினைப் பெற்றார்.

யாழன் ஆதி

இத்தகையப் படம் தமிழில் வருவதற்குப் பட்டபாடே ஒரு படமாக இருக்கும்போல. 2000த்தில் இந்தியில் வந்த அம்பேத்கர் திரைப்படம் 2010 டிசம்பரில்தான் தமிழில் வருகின்றது. பத்தாண்டுகளுக்குப் பிறகு  பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழில் வெளிவந்திருக்கின்றது. பகுத்தறிவு மேலோங்கிய மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் அம்பேத்கரைப் பற்றிய புரிதல் அவருடைய நூற்றாண்டுக்குப் பிறகுதான் அதிகரிக்கின்றது. அதற்குமுன்பு வரை தலித் இயக்கங்களின் அரசியலாக மட்டுமே அம்பேத்கர் இருந்தார். ஆதிதிராவிட நலத்துறை என்றால் அதற்கு ஒரு ஆதிதிராவிடரையே அமைச்சராகப் போடும் போக்கினை இன்றைக்கும் திராவிட அரசியலில் நாம் காணலாம். அம்பேத்கர் மீதான பார்வையும் அப்படித்தான் இருந்தது. அவர் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் என்ற நிலையைத் தாண்டாமல் இருந்தது. பெரியார் அம்பேத்கரை தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்டதாக அறிவித்துக் கூட அவருக்குப் பின்வந்த திராவிட இயக்கதவர்கள் அதை மறைத்ததால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் புறக்கணிப்புக்கு அம்பேத்கர்  ஆளானார். அதனால் தான் அம்பேத்கர் சிலை இருக்கும் இடம் சேரி என்னும் அடையாளம் கிடைத்திருக்கின்றது. இந்த அரசியல் நிலை கூட அம்பேத்கர் திரைப்படம் தாமதமாக வந்ததற்கான காரணாமாக நாம் கருதலாம்.

எழுத்தாளர் வே. மதிமாறன்  மற்றும் அவருடைய தோழர்கள்  அம்பேத்கர் திரைப்படம் தமிழில் வரவில்லையே என யோசித்து 2010 மார்ச்சில் தொடங்கிய வேலைகள் இப்படம் வருவதற்கு ஆதார சுருதியாக இருந்திருக்கின்றன. சென்னையிலுள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக அலுவலகத்தில் அவர்கள் நிகழ்த்திய உரையாடலின் விளைவாக அப்படம் யாரிடத்தில் இருந்தது என்பதை அறிய முடிந்தது.

மம்முட்டி நடித்ததால் அதற்கு ஒரு சந்தை மதிப்பு இருக்கும் என்று நம்பிய விஸ்வாஸ் சுந்தர் என்னும் விநியோகிஸ்தர்   அம்பேத்கர்  திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளார். ஒப்பந்தப்படி மூன்று ஆண்டுகள் அவரிடம் அந்த உரிமை இருக்கும் அதற்குள் அவர் படத்தினை எத்தனை முறையேனும் திரையிட்டுக் கொள்ளலாம். ஆனால் படத்தை வாங்கிவந்த சுந்தர் அதனை வெளியே சொல்லாமலேயே கமுக்கமாக வைதிருந்திருக்கின்றார். ஒரு படத்தை மொழிமாற்றம் செய்ய அதிக பட்சமாக 5 லட்சங்கள் தேவைபடலாம். இது கூட இல்லாமலா ஒரு விநியோகஸ்தர் இருந்திருப்பார். இல்லையென்றால் நிலைமையை யாருக்கேனும் சொல்லியாவது இருந்திருக்கலாம்.

இத்தகைய செய்திகள் எல்லாம் மதிமாறன் உள்ளிட்டவர்களால் வெளியிடப்பட, பல தலித் இயக்கங்கள் போராட்டத்தில் இறங்கின. டாக்டர் சேதுராமனின் கட்சிக் கூட படத்தை வெளியிட வேண்டி தீர்மானம் நிறைவேற்றியது. இது குறித்து  தமிழக சட்டமன்றத்தில் செல்வப் பெருந்தகை  கேள்வி எழுப்பியபோது படத்தின் மொழி மாற்றத்திற்காய் பத்து லட்சம் தருவதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி 2007 ம் ஆண்டு மே 7ம் நாள் அறிவித்தார். அதற்குப் பிறகும் படம் வெளியாக வில்லை. காரணம் இன்னும் அதிகாமான பணத்தை  அபகரிக்க வேண்டும் என்னும் சுந்தரின் எண்ணம். படத்தை பல்வேறு தலித் தலைவர்களிடமும் விலைபேசியிருக்கின்றார். விலை படியாததால்  அது அப்படியே கிடப்பில் போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 2010 செப்டம்பரில் விஸ்வாஸ் சுந்தருக்கான மூன்றாண்டு ஒப்பந்த உரிமம் முடிகின்றது.

அதன்பிறகு சமூகநீதியில் அக்கறைக் கொண்ட வழக்கறிஞர் சு. சத்தியசந்திரன் அவர்கள் பிரிவு 226ன் படி சென்னை உயர்நீதிமன்றத்தில்  பொதுநல வழக்கொன்றைத் தொடுத்தார். அதன்படி அம்பேத்கர் திரைப்படத்தை தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம்   ஆங்கிலத்தில் எடுத்தது. அதை இந்தியிலும் மராத்தியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விற்காக உழைத்த ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாற்றை அந்த மக்கள் பார்க்கவேண்டியது அவர்கள் உரிமை.எனவே அப்படத்தை தமிழில்  வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கும்  தேசிய திரைப்பட  வளர்ச்சி நிறுவனத்திற்கும் நீதிமன்றம் ஆணையிடவேண்டும் என்று கேட்டிருந்தார். வழக்கு விசாரணைக்கு வருகையில் தமிழில் வெளியிடும் உரிமையை வழங்கிவிட்டதாக திரைப்பட வளர்ச்சி நிறுவனம்  கூறியது.  நிதிச் சிக்கல்  தீர 10 லட்சம் தமிழக அரசு வழங்கியது. எதிர்தரப்பில் இருந்து வரிவிலக்குக் கேட்டு ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிப் தர்மராவ். கே.கே. சசிதரன் ஆகியோர்  வரிவிலக்கு அளிப்பது குறித்து உடனே முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு கட்டளையிட்டனர். இறுதியில் கூடிய விரைவில் படத்தைத் திரையிட தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கு உத்திரவிட்டது.

படம் வெளியாவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் மிகவும் பாராட்டுதலுக்குரியவை. ஓர் இலக்கிய அமைப்பு இத்தகைய சமூக பங்களிப்பை செய்திருக்கின்றது  என்பது  முக்கியத்துவம் வாய்ந்தது. இயக்குனர் – எடிட்டர் லெனின் அவர்களின்  பங்களிப்பும் அப்படியானதுதான்.  தலித் இயக்கங்கள் செய்ய வேண்டிய ஒப்பற்ற பெரும்பணியை தன் கைக்காசைப் போட்டு அவர் செய்திருக்கின்றார்.

இப்படி  எத்தனையோ   பேரின் போராட்டங்களுக்குப் பிறகு   படம் திரைக்கு  டிசம்பர் 3ம் நாள் வந்தது. ஆனால் திரைப்படக் குப்பைகளை எல்லாம் விளம்பரத்தினால் வெற்றி பெறவைக்கின்றவர்கள் ஆகச்சிறப்பாக எடுக்கப்பட்ட படத்தை எந்த மக்கள் பார்க்கவேண்டுமோ அம்மக்களின் பார்க்க முடியாத  நேரங்களில்தான் திரையரங்குகளில் திரையிட்டனர்.  பெரும்பாலான திரையரங்குகளில் காலைக்காட்சியாகத்தான் படம் போடப்பட்டது. வேலைக்குச் செல்வோரால் படத்தைக் காண முடியவில்லை. எங்கள் ஊரிலும் (ஆம்பூர்) இதே  நிலைதான். படத்தை எடுத்துவிடுவதாக திரையரங்க உரிமையாளர் சொல்ல நாங்கள் டிக்கெட் விற்றுத்தருவதாகச் சொல்லி தோழர்கள் டிக்கெட்டுகளை வாங்கிவந்து வீடுவீடாக விற்று தியேட்டருக்கு  அனுப்பினார்கள். இரண்டு நாட்கள் அதிகமாக படம் ஓடியது.

அம்பேத்கர் படத்தின் தமிழ்பதிப்பு அருமையாக வந்திருந்தது. பத்து வருடத்திற்கு முன்பான படம் என்னும் எண்ணத்தைப் போக்கி படம் புதிதாக இருந்தது. பெரியார் படம் என்பது அவரின் அரசியல் போராட்டங்களை முன்வைக்காமல் அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்திருந்தது. ஆனால் அம்பேத்கர் படம் அவரின் அரசியலை, போராட்டத்தினை முன் வைத்தது. காந்திக்கு எதிரான கருத்துக்களை மிகத்தைரியமாக அவர் வாந்த காலத்திலேயே பேசியவர் அம்பேத்கர். அதை அப்படியே படத்தில் வைத்தது ஜாபர் பட்டேலின்  மன உறுதி. எரவாட சிறை உண்ணாவிரதம் தலித்துகளின் வாழ்வுரிமையை அழிக்கக் கூடியது  ஆகையால் காந்தியில் உண்ணாவிரதம் தேவையற்றது என்னும் உணர்வினைப் பார்வையாளனுக்கு காட்சியின் மூலமாக கடத்தியிருக்கின்றது இப்படம். காந்திக்கு எதிரான வசனங்கள்  கூர்மையானவையாக இருந்தன.

காந்திஜி அடிக்கடி உண்ணாவிரதம் என்னும் ஆயுதத்தைக் கையிலெடுக்காதீர்கள் , காந்தி எரிக்க வேண்டியது அவருக்குள் நிறைய இருக்கின்றது போன்ற வசனங்கள் இந்திய அரசியலின் இரண்டு துருவங்களாக அம்பேத்கரும் காந்தியும் இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.

தங்கள் வாழ்வின் வெளிச்சத்திற்கு வேரானவர்கள் யார் என்பது தெரியாமலே  எந்தவிதமான  சமூக அக்கறையும் இல்லாமல் வளர்ந்துகொண்டிருக்கும் தலைமுறைக்கு அம்பேத்கர் திரைப்படம் ஒரு பாடமாக அமைந்திருக்கின்றது. ஆனால் அவர்களைப் போய் அப்படம் சரியாகச் சேரவில்லை என்பதுதான் உண்மை.

தமிழக அரசு  அம்பேத்கர் படத்திற்கு முழு வரி விலக்கு அளித்து அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் அப்படத்தினைப் பார்ப்பதற்கு வழிவகை செய்யவேண்டும்.இல்லை என்றால் லெனின் சொல்வதைப் போல சமூக ஆர்வலர்கள்  இப்படத்து ஊர் ஊராகச் சென்று  மக்களுக்குத் திரையிட்டுக் காட்டவேண்டும்.

-தீராநதி,  சனவரி  2011.

தொடர்புடையவை:

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி

டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?
*
‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

4 thoughts on “அம்பேத்கர் திரைப்படம்: காணக் கிடைத்த விடுதலை ஒளி

Leave a Reply

%d bloggers like this: